உன் ஆசைகளைப் பற்றி தெரிந்து கொள்

25 மே 2013 - பெங்களூர்                                


கே: ஆசைப்படுவதை விட்டு விட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதே சமயம் மோட்சம் அடைய ஆசைப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இது நம் ஆசையை அதிகரிக்காதா?

குருதேவர்: ஆம். வாழ்க்கையில் ஒரு பெரிய இலக்கை அடைய ஆசைப் படலாம். சிறுசிறு பொருட்களின் மேல் ஆசை வைக்க வேண்டாம். அவை உனக்கு பிரச்சினைகளை கொடுக்கும். ஆசைப்பட வேண்டும் என்றால் உலகில் சிறந்தவைகளை அடைய ஆசைப்படு. இவ்வுலகமே உன்னுடையதாக வேண்டும் என்று ஆசைப்படு. உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படு.

ஆசைகள் ஒரு பெரிய நோக்கத்தை அடைவதற்காக இருந்தால்,அதனால் உனக்கு கெடுதல் வராது. நீ உண்மைக்காக ஆசைப்படும் போது, உண்மைக்காக உன் வாழ்வை அர்ப்பணிக்கும் போது, மனம் தூய்மையாகவும் அமைதியாகவும் இருக்கும். சிறு சிறு ஆசைகள் உன் மன அமைதியைக் குலைத்து விடும். மன அமைதி குலைந்தால் வலி ஏற்படும். ஆனால் பெரிய ஆசை உனக்கு மன அமைதியை அளிக்கும்.

கே: குருதேவா! “ஓம்” என்றால் என்ன? அதைத் துவங்கியது யார்?

குருதேவர்: “ஓம்” என்பது இயற்கையின் படைப்பின் சாரம். ஒரு விதையிலிருந்து மரம் வருவது போல், “ஓம்” லிருந்து இவ்வுலகம் வந்தது. ஒரு விதையில் ஒரு பெரிய மரம் மறைந்திருக்கிறது. சரியா? ஒரு மாம்பழத்தின் கொட்டையிலிருந்து ஒரு பெரிய மாமரம் வளர்கிறது. அதனால் சில மந்திரங்களை “மந்திர விதை” என்று சமஸ்கிருத மொழியில் அழைக்கிறார்கள். “ஓம்” என்பது பரம மந்திரமாகும். பரமம் என்றால் எல்லாவற்றிலும் சிறந்தது என்று அர்த்தம். “ஓம்” என்பது மந்திர விதைகளுக்கெல்லாம் விதையாக இருக்கும் சிறந்த மந்திர விதையாகும். “ஓம்” படைப்பின் துவக்கத்திலிருந்தே, (அல்லது துவக்கமே இல்லாத படைபில்) இருக்கும் ஒரு மந்திரம்.

கே: தங்களைப் போன்ற குரு கிடைக்கப்பெற்ற நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் நாங்கள் தவறு இழைத்தாலும் பொருட்படுத்தாமல் எங்களை ஏற்றுக் கொண்டதற்கு என்ன காரணம்?

குருதேவர்: நீங்கள் நோயால் துன்புறும் போது மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள். ஆனால் சிலர் நோய் வந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. அவர்களுக்கு என்ன சொல்ல முடியும்? நீங்கள் தவறு செய்திருந்தாலும் பரவாயில்லை.அதை மறந்து சத்சங்கத்துக்கு வாருங்கள். தவறு செய்வது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தானாகவே மறைந்து விடும். பலருக்கு ஏற்கனவே அப்படி நடக்கிறது. இல்லையா?

கே: “சுதர்சன கிரியா” விடாமல் செய்தால் நாம் பூரணத்துவம் அடைய முடியுமா?

குருதேவர்: கண்டிப்பாக முடியும். ஆனால் கிரியா செய்தால் மட்டும் போதாது. சத்சங்கத்தில் சொல்லப்படும் ஞானம் பற்றிய உண்மைகளைக் கேட்க வேண்டும். நல்ல லோசனைகளைப் பின்பற்ற வேண்டும். அறிவுபூர்வமாக தெரிந்து கொள்வதும், அதை அன்றாட வாழ்க்கையில் பின் பற்றுவதும் அவசியம்.

கே: இறப்புக்குப் பின் என்னிடம் மிஞ்சுவது என்ன? ஆத்மா மட்டுமா? அல்லது மனமும் இருக்குமா?

குருதேவர்: மனதின் ஆழத்தில் பதிந்திருக்கும் பயம், ஆசை, வெறுப்பு முதலியவைகளும் உன்னோடு வரும்.. அதனால் தான் நாம் தியானம் செய்வது அவசியமாகிறது. தியானம் செய்யும் போது, மனதில் பதிந்திருக்கும் தேவையற்ற நினைவுகள் அழிந்து விடும்.

கே: ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாக இருக்கிறார்கள்? ஒரே மாதிரி ஏன் இருப்பதில்லை?

குருதேவர்: ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்? உனக்கு காலை,மதியம், இரவு எல்லா வேளையும் உருளைக்கிழங்கை சமைத்து உண்பதற்கு கொடுத்தால் அதை நீ விரும்புவாயா? நீ அணியும் உடைகளில் பல நிறங்கள் இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? ஒரே உடையை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் அணிய வேண்டும் (படை வீரர்களின் சீருடை போல) என்று சொன்னால் உனக்கு எப்படி இருக்கும்? பிடிக்குமா? பிடிக்காது. இல்லையா? அதனால் தான் உலகில் பல்வேறு விதமானவர்கள் இருக்கிறார்கள். இயற்கை பல்வேறு நிறங்களை, உருவங்களை விரும்புகிறது.

கே: குருதேவா! நீங்கள் சைனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்று வந்த அனுபவத்தை சொல்லுங்கள்.

குருதேவர்: மங்கோலியாவில் நன்றாக இருந்தது. சத்சங்கத்தில் 10000 பேர்கள் வந்திருந்தார்கள். மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் திரும்பி வரும்போது, விமான நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் ஒவ்வொருவராக கட்டுப்பாட்டுடன், என்னிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக வந்தார்கள். மங்கோலிய மக்கள் மிகவும் ஆசையாக இருக்கிறார்கள்.

சைனாவில் வாழும் கலையினரிடம் இருக்கும் உற்சாகத்தைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்தார்கள். பலர் சத்சங்கத்துக்கும் வாழும் கலைப் பயிற்சி வகுப்புக்கும் வர விரும்பினார்கள். சைனாவில் ஒரே சமயத்தில் 50 பேருக்கு மேல் வகுப்பு எடுக்க அனுமதிப்பதில்லை. பொதுக் கூட்டங்களிலும் 500 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். (ஆனால் வாழும் கலை நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வருவதால் அவர்களை எப்படிக் கட்டுப்பாடு செய்வது என்று பயந்து அனுமதி மறுக்கிறார்கள்.)

சைனாவில் பொது இடங்களில் மக்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டுப்பற்று போற்றத் தக்கது. ரகசிய போலீஸ் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். பலமானவர்கள். குறிப்பிட்ட ஹோட்டல்களில் தான் வெளிநாட்டவர்கள் தங்க அனுமதிக்கிறார்கள். ஹோட்டல்களில் பல ரகசிய போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் மேலாளர்கள் போல் பணிபுரிகிறார்கள். இவர்கள் ஹோட்டலில் தங்குபவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் யாரைச் சந்திக்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள் என்று கவனமாக இருக்கிறார்கள். நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி செய்தால் நம் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். என்ன நடக்கிறது?. யார் யாரைப் பார்த்துப் பேசுகிறார்கள்? எங்கே செல்கிறார்கள்? என்று தொடர்ந்து கண்காணிப்பதால் மக்கள் சில இடையூறுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. நிகழ்ச்சி நடத்த சுதந்திரம் இல்லை. ஆனால் அவர்களுக்கு ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்கிறது.