உங்களை எது துயர் மிகுந்தவராக்குகின்றது ?

மே 14 – 2013 – பெங்களூரு - இந்தியா -- பகுதி ஒன்று




சிறந்த விஞ்ஞானியான தே ஹூர் என்பவர் நமது  ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தார். அவர்  சிறந்த இயற்பியல் நிபுணர். அவர் பிரபஞ்சம் மூன்று ஆற்றல்களால் இணைக்கப் பட்டிருக்கின்றது என்று கூறினார். மூன்றிற்குப் பதில் இரண்டு மட்டுமே இருந்திருந்தால் இவ்வுலகம் அழிந்திருக்கும். இந்த மூன்று ஆற்றல்களின் இணைப்பே இவ்வுலகத்தை நிலை பெற்றிருக்கச் செய்கின்றன.

இதை அவர் ஒரு வரைபடம் மூலம் விளக்கிக் காட்டினார். ஒரு மேற்கூரை மின் விசிறி மூன்று சிறகுகளின் மூலம் இயங்குவதைப் போன்று இவ்வுலகம் மூன்று ஆற்றல்களால் சமநிலையில் இயங்குகின்றது. ஒரு காற்றாலையின் மூன்று அலகுகளில் ஒன்று மேல் நோக்கிச் செல்லும்போது மற்ற இரண்டு அலகுகள் கீழ் நோக்கிச் செல்கின்றன.அது சுழலும் போது கீழுள்ளவை மேலேயும், மேலுள்ள அலகு கீழேயும் மாறி மாறிச் சுழன்று சமநிலையில் வைக்கின்றன.அது போன்று மூன்று ஆற்றல்கள் செயல்படும் போது தான், எதுவும் தொடர்ந்து செயல்பட முடியும்.இல்லையெனில் முடியாது. ஒரு பெண்டுலம் கடிகாரத்தில் இரண்டு முட்கள் நகருகின்றன. அதற்கு சாவி சுழற்சி கொடுக்க வேண்டும். அச்சுழர்ச்சி தீர்ந்தவுடன், கடிகாரம் நின்று விடும்,செயல்படாது. ஆனால் இம்மூன்று ஆற்றல்கள் ஒன்றுகொன்று சம தூரத்தில் செயல்பட்டு இப்பிரபஞ்சத்தை சமநிலையில்  வைக்கின்றன. மூன்று ஆற்றல்களின் செயல்பாட்டினால் தான் உலகம் சமநிலையில் இத்தனை காலமாக இருந்து வருகின்றது என்று கூறினார்.

பகவான் கிருஷ்ணர் இதையே பகவத்கீதையில் கூறியிருக்கிறார். "சத்வ, தமஸ், ரஜஸ், ஆகிய மூன்று குணங்களும் என்னிடம் இருந்தே பிறந்தன.ஆனால் நான் அவற்றுக்கு அப்பாற்பட்டவன், அவற்றினால் பாதிக்கப்படாதவன் என்று கூறுகிறார்.அடுத்த செய்யுளில், "த்ரிபிர்குணா மையிர்பாவையிரேப்ஹிஹ்சர்வமிதம் ஜகத் மோஹிதம்ந பீஜநதி மமேப்யாஹ்பரமம்வ்யயம் "(7.3) என்கிறார்.

அவர் கூறுவது” இந்த உலகமே மூன்று குணங்களால் பாதிக்கப் பட்டிருக்கின்றது. ஒருவன் இந்த மூன்று குணங்களில் சிறைப்பட்டு என்னை உணர்ந்து கொள்ளமுடியாமல் இருப்பது அறிவீனம். மோகத்தில் வீழ்ந்து விட்டவனுக்கு என் உண்மையான ஸ்வரூபத்தை அறிய முடியாது." பற்று என்பது வரையறுக்கப்பட்ட தொலைநோக்கு ஆற்றல். ஒரு தாய் தனது  குழந்தையிடம் மிகுந்த பற்றுக்கொள்ளும் போது அக்குழந்தையைப் பற்றிய தொலைநோக்கு கட்டுப்படுகின்றது. இதுவே அன்பிற்கும் பற்றிற்கும் உள்ள வித்தியாசம் . 

பற்று என்பது வலியையே ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சியைத் தருவது போன்ற உறுதியை அளித்தாலும், உண்மையில் மகிழ்ச்சியையும்  தருவதில்லை. மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்னும் ஆசையில், துன்பத்தை அடைவதே பற்று எனப்படுவதாகும். கிருஷ்ணர் கூறுகிறார்," நான் முடிவில்லாதவன் (அவ்யய), நிலைபேறுடையவன். இதைத்தான் மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. பற்றிலிருந்து தான் எல்லாத் துயரங்களும் தோன்றுகின்றன. உணரும் எல்லா உணர்ச்சிகளும் இந்த மூன்று குணங்களிலிருந்து தோன்றுவது தான். ஆனால், நாம் எல்லாவற்றையும் துறந்து விட வேண்டும் என்று பொருள்படுமா? இல்லை!! இந்த மூன்று குணங்களுமே முக்கியமானவை.

அவர் அடுத்த பகுதியில், மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கின்றார். பல நேரங்களில் மனிதர்கள் இந்த உலகத்தை (அவர்களது சூழ்நிலையை) குறை கூறிக் கொண்டு அவற்றிலிருந்து விலகி ஓடிவிட விரும்புகின்றனர். அவர்கள், 'இந்த உலகம் தீயது; மாசு படிந்தது; ஊழல் நிறைந்தது' என்று நினைக்கின்றனர். இது போன்ற மனிதர்கள் பகவத் கீதையினை ஒரு போதும் படித்திருக்க மாட்டார்கள். அப்படியே படித்திருந்தாலும் அதன் சாரத்தினை சரியாகப் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். பகவான் கிருஷ்ணர் சொல்கின்றார், "இந்த மூன்று குணங்களும் வந்து வந்து போகும். ஆனால் நான் அவற்றால் பாதிக்கப்பட மாட்டேன். நான் நிரந்தரமானவன்; சலனம் அற்றவன். நான் எப்போதும் இருப்பது போன்றே இருப்பவன். ஆகவே, துன்பம் உங்களை எந்த வகையிலும் குறைவடைந்து விட செய்யாது. அதே போல் மகிழ்ச்சி என்பது உங்களை விரிவடைய செய்ய முடியாது. நீங்கள் நிலையானவர். நிரந்தரமானவர். துன்பமான நேரம், மகிழ்ச்சியான நேரம் ஆகிய இரண்டிலுமே சலனமற்று இருப்பவர். அவற்றால் தீண்டப்படாதவர். அதே போல், கோபம் போன்ற பல உணர்ச்சிகள் உங்களிடம் உண்டாகலாம். கோபம் ஒரு புயல் போல் உங்களிடம் உருவாகி பிறகு மறையலாம். ஆனால் நீங்கள் எப்போதும் இருப்பது போலவே இருப்பீர்கள். நீங்கள் எந்த இழப்பையும் உணர மாட்டீர்கள். இதனால் உங்கள் உடல் சிறிது வலியையும் துன்பத்தையும் அனுபவிக்கலாம்.உங்களுக்குள் இருக்கும் சைதன்ய சக்தி என்பது துன்பத்தினால் குறைவதுமில்லை, மகிழ்ச்சியினால் விரிவடைவதுமில்லை. இந்த சைதன்ய சக்தியே கிருஷ்ண பகவான் எனப்படுவது. 


கிருஷ்ணா பகவான் 'நான், எனது, என்னிடம் 'என்றெல்லாம் தன்னை குறிப்பிடுகின்றார். நீங்கள் இறைவன்,குரு தத்துவம் (நுண்ணிய தெய்வீகக் கூறு) மற்றும் ஆத்மத் தத்துவம் ஆகியவற்றின் இடையே வேறுபாடு பார்க்கக்கூடாது. அனைத்தும் ஒன்றே. இங்கே அர்ஜுனனிடம் பேசுகையில் கிருஷ்ணர் 'நான், எனது, என்னிடம்' என்றெல்லாம் குறிப்பிட்டுப் பேசுகின்றார்.அந்த 'நான்' என்பது கிருஷ்ண பகவானை மட்டும் குறிக்கவில்லை, நம் ஆன்மாவைக் குறிப்பிடுகின்றது. பரமாத்மாவை (இறைவனை) குறிப்பிடுகின்றது. இங்கே பேசுவது தனி மனிதனில்லை. இந்த ஞானத்தை அளிப்பது தெய்வீக சக்தி. இந்த ஞானத்தை அர்ஜுனன் வழியாகக் கேட்பதுவும் அதே தெய்வீகச்சக்தி தான். இதனை வேறொரு விதமாகவும் புரிந்து கொள்ளலாம். நீங்கள் நிரந்தரமானவர். அதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் தான் துன்பம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சி புயல்களினால் அலைக்கழிக்கப்படுகின்றீர்கள். ஏனென்றால் நீங்கள் பந்தத்தில் சிக்கியுள்ளீர்கள்.உங்கள் குழந்தைகள், கணவன் அல்லது மனைவி,  நண்பர்கள், பணம், பொருள் அல்லது வேறு எதன் மீதான பந்தமாகவும் இருக்கலாம்.  


பந்தத்தில் சிக்கியுள்ள காரணத்தால் நீங்கள் உங்கள் உண்மைத் தன்மையினை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இது போன்ற நேரங்களில்,வேறெதையும் கவனிக்க இயலாத அளவிற்கு உங்கள் சூழ்நிலை மட்டுமே பெரிதாகத் தெரியும்.உதாரணமாக, பணத்தின் மீது அதீத பற்றுதல் கொண்ட ஒருவனது மனம் வேறு எதைப் பற்றியும் நினைக்க முடியாது. அவனால் தனது உறவுகள், நண்பர்கள், குடும்பம், தனது உடல் ஆரோக்கியம், நலன் பற்றிக் கூட நினைக்க முடியாது.பந்தத்தில் சிக்கிவிட்ட காரணத்தால் இது போன்றவர்கள் இறுதியில் அனைத்தையும் இழக்கின்றனர்.


பணத்திற்காக சொந்த சகோதரர்கள் சண்டை போடுகின்றனர். பிள்ளைகள் பெற்றவர்களுடன் சண்டை போடுகின்றனர். மதத்தின் மீதான பற்றுதல் கூட துன்பத்தை தருகின்றது. அனைத்து துன்பங்களும் பற்றுதலினால் உண்டாகின்றன. கிருஷ்ண பகவான் சொல்கின்றார், பற்றுதல்களினால் ஏமாற்றப் படுபவர்கள் என் உண்மையான தன்மையினை அறிந்து கொள்ளமாட்டார்கள். நான் நிரந்தரமானவன், சலனம்றவன் என்பதை மறந்து விடுகின்றனர். நான் எதன் காரணமாகவும் குறைவடைவதோ, விரிவடைவதோ இல்லை. அனைத்திற்கும் பின்னே இருக்கும் மேலான சக்தி நான். ஆனால் மக்கள் இதை உணரவில்லை.அப்படியென்றால்,இறைவனை அடைய வேண்டுமென்றால் இல்லறத்தில் இருக்கக் கூடாது என்றோ உறவுகளில் ஈடுபடக்கூடாது என்றோ அர்த்தமா? இல்லை. நீங்கள் உங்கள் பொறுப்புகளை உதறிவிட்டு ஓடவேண்டிய அவசியமில்லை. உங்கள் முன் நிகழ்கின்ற அனைத்துமே மூன்று குணங்களின் பாதிப்பினால் நிகழ்கின்றன என்பதை புரிந்து கொண்டால் மட்டும் போதும்.

கிருஷ்ணர் சொல்கின்றார், "நீங்கள் அந்த மூன்று குணங்களை சபித்தலும் கூடாது.ஏனென்றால் அவை தெய்வீகமானவை. என்னிலிருந்து பிறந்தவை. பிரபஞ்சமும் அதிலிருக்கும் அனைத்தும் என்னிலிருந்து பிறந்தவை என்று அறிந்த பிறகு அவற்றை நீங்கள் எப்படி சபிக்க முடியும்? உதாரணமாக, ஒரு படத்தை பழித்தால், உண்மையில் அந்த படத்தை உருவாக்கிய கலைஞனை பழிக்கின்றீர்கள். இயற்கையை போற்றுதல்,இறைவனைப் போற்றுவதாகும். ஏனென்றால் இயற்கை இறைவனிடமிருந்து பிறந்தது. இறைவனுள் நிலைத்திருப்பது.