உண்மையல்லாத, உண்மை நிலை

14 - மே, 2013 - பெங்களூர் - இந்தியா - பகுதி இரண்டு


பகவன் கிருஷ்ணர் கூறுகிறார்," இந்த மூன்று குணங்களுமே என்னிடமிருந்து வந்தவை தாம். ஆனால்  இவற்றை மாயையின் காரணமாக வெற்றி கொள்வது எளிதல்ல. அந்த மாயையும் என்னிடமிருந்து வந்தது தான்." மாயை என்பது மிகப் பறந்தது. எங்கு சென்றாலும் அதன் செல்வாக்கின் கீழ் நீங்கள் இருப்பதை உணருவீர்கள். மாயையின் ஒரு வலையிலிருந்து நீங்கள் விடுவித்துக் கொண்டது போன்று உணர்ந்தாலும், மற்றொன்றில் சிக்குண்டு விடுவீர்கள்.

ஒரு சமயம் என்னிடம் ஒருவன் வந்து," குருதேவ்! என்னை ஆசீர்வதியுங்கள். நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். இது நான்காவது முறை.ஏற்கனவே மூன்று திருமணங்கள் தோல்வி அடைந்து விவாகரத்தில் முடிந்து விட்டன. இம்முறையாவது நல்ல பெண் அமைய ஆசீர்வதியுங்கள் என்றார். பாருங்கள்! ஒன்று அல்லது இரண்டு முறை என்றால் பரவாயில்லை. மூன்று முறையும் திருமணங்கள் தோல்வி அடைந்தால், உங்களிடம் ஏதோ தவறு இருக்கின்றது. அது என்ன என்று கவனித்து சரி செய்து கொள்ளுங்கள் என்றேன்.

அமெரிக்காவில் ஒரு பெண்மணி " எவ்வாறு திருமண வாழ்கையை சரியாக நடத்துவது" என்பது பற்றி பல கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கில் டாலர்களை செலுத்தி அதில் மக்கள் பங்கேற்கிறார்கள். இதை நடத்தும் பெண்மணியே எட்டு முறை விவாகரத்து செய்து கொண்டவர். (சிரிப்பு) ஒருவர் என்னிடம் கேட்டார் "இப்பெண்ணே எட்டு முறை விவாகரத்து ஆனவர். இவர் எப்படி திருமண வாழ்கையை நீடித்து நடத்திச் செல்ல மற்றவர்களுக்குக் கற்றுத் தர முடியும்?" அதற்கு நான், "இல்லை! இவர் தாம் இதைச் செய்ய சரியானவர்! தனது எட்டுத் திருமணங்களில் நிறைய கற்றுக் கொண்டிருப்பார். என்னென்ன தவறுகளினால் திருமணங்கள் முறிந்து விடும் என்று இவரால் கற்றுக் கொடுக்க முடியும். திருமண வாழ்க்கையில், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைக் கற்றுக்கொடுக்க சரியானவர் இவரே" என்றேன்.

நாம்  மற்றவர்களையோ, இவ்வுலகத்தையோ, நமது சூழ்நிலையையோ குறை கூறுகிறோம், பின்னர் குற்ற உணர்வினால் வருந்துகிறோம்.எல்லாமே இந்த இறைமையின், தரிசனமான இந்த மூன்று குணங்களினாலேயே ஏற்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே, தமோகுணம் (சோம்பல் மற்றும் எதிர்மறை குணம்) இறைமையின் உருவமாகக் கருதப் படுகிறது. இவ்வாறு உலகின் எந்தப் பகுதியிலும் கருதப்படவில்லை. உலகின் மற்றெல்லாப் பகுதிகளிலும், எதிர்மறை குணம்  என்பது இறைமைக்கு முற்றிலும் மாறுபட்ட அரக்கக் குணமாகவே கருதப்படுகிறது. ஆனால் இத்தகைய நம்பிக்கை இந்தியாவில் இல்லை.


தமோகுணமும் இறைவனிடமிருந்து, அவருடைய ஆளுமையிலுள்ளதாகவே கருதுகிறோம். அதனால் தான் பயமுறுத்தும் உருவத்தில் காளி தெய்வம், இறையின் வடிவமாக கருதப்படுகிறாள். ஏன் அப்படி? ஏனென்றால், அது ஒரு திரைப்படத்தின் இயக்குனரை போன்றது, திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரைச் சார்ந்தது. படத்தின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் ஆகிய அனைவரும் அவருக்குச் சமமே. அவர்களது சம்பளத்தில் வித்தியாசங்கள் இருந்தாலும், அனைவருமே முக்கியம், திரைப்படம்  சரியாக உருவாகத் தேவையானவர்கள்.

அது போன்றே, படைத்தவர், இவ்வுலகை மூன்று குணங்களை உபயோகித்து படைத்தார். ஆகவே, கிருஷ்ணர் இம்மூன்று குணங்களும் தன்னுடையவை என்கிறார். (அவருடைய தெய்வீக சக்தியின் விரிவாக்கமானவை) அவர்," இந்த மூன்று குணங்களும் என் மூலமாகவே செயல் படுகின்றன. என் மூலமாகவே நீங்கள் அவற்றைக் கடந்து செல்ல முடியும். நீங்கள் தானாக அவற்றைக் கடக்க முடியாது. என் அருளின்றி மாயையைக் கடந்து செல்ல முடியாது" என்றும் அர்ஜுனனுக்கு கூறுகின்றார். துர்காசப்தபதியை ஜெபிக்கும் போது( துர்காசப்தபதி என்பது மார்கண்டேய புராணத்தில் தெய்வத்தாயைத் துதிக்கும் தேவிமஹாத்மியத்தில் உள்ள 700 பாடல்கள்) அதில் ஒரு பாடல் கூறுகின்றது,

"யா தேவி சர்வ பூதேஷு ப்ராந்திர் உபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
 நமஸ்தஸ்யை  நமோனமஹா"  (பொருள்: ஓ! தெய்வீகத் தாயே! ப்ராந்தி உயிரினங்கள்
அனைத்திலும் மருட்சிக்குக் காரணமான உன்னைத் தலை வணங்குகிறேன்.)இதன் அர்த்தம் என்னவென்றால்,நம்முள் குடிகொண்டிருக்கும் மாயை தெய்வீகத் தாயே. சிலருக்கு எல்லோரும் தனக்கெதிராக இருப்பது போன்ற பிரமை ஏற்படும். சாதனையாளர்களுக்குக் கூட இவ்வாறு தோன்றும். உலகில் ஒருவருக்கெதிராகச் செயல்பட யாருக்கு நேரம் இருக்கிறது? ஒவ்வொருவரும் தன்னுடைய வேலைகளிலும், தன்னைப் பற்றி சிந்திப்பதிலும் மும்முரமாக இருக்கிறார்கள். ஆயினும் பிரமை உள்ள இவர்கள்  தனக்கெதிராகவே மற்றவர்கள் இருப்பதாக எண்ணிக் மருண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே மருட்சி என்பதும் தெய்வீகத்தின் ,தெய்வீகத் தாயின் ஒரு தோற்றமே.

இவ்வாறு கூறுவதற்கு மிகுந்த துணிச்சல் தேவை. யாரொருவர், தைரியமானவரோ, எல்லா மெய்மைகளையும் ஆய்ந்து அறிந்தவரோ அவராலேயே இவ்வாறு கூற முடியும். இம்மாய உலகிற்கு அப்பாற்பட்டு படைப்பின் செயல்பாட்டின் ஒவ்வொரு அடிப்படை நிலை தெய்வீக சக்தியையும், அனுபவித்து உணர்ந்தவருக்கே இத்தகைய ஆழ்ந்த கருத்தினைக் கூற முடியும். எல்லோராலும் செய்யக்கூடிய விஷயமல்ல இது. ஆகவே தான் கிருஷ்ணர் 'பகவான்' என்று அழைக்கபடுகிறார் (இந்தியாவில் கடவுளுக்கு முன்நீட்டுச் சொல்).

மக்கள் எவ்வாறு ஸ்ரீ ராமனை, புருஷோத்தமன் (தர்மத்திற்கும் நேர்மைக்கும் தலை சிறந்தவர்) என்று அழைக்கிறார்களோ அது போன்று ஸ்ரீ கிருஷ்ணர் யோகேஸ்வரன் (யோக நிலையின் பூரணத்துவம் வாய்ந்தவர்) என்று அழைக்கப்படுகிறார். அவர்கள் ஏன் பகவான் என்று அழைக்கப் படுகிறார்கள்? ஏனெனில் அவர்கள் பஞ்சபூதங்களுக்கும், மாயைக்கும் அப்பாற்பட்ட ஆழ்ந்த தத்துவ ஞானத்தை (தெய்வீககோட்பாடுகள்) அறிந்தவர்கள். 

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்," மூன்று குணங்களும், மாயையும் தெய்வீக குணங்கள். அவையனைத்தையும் மதிக்க வேண்டும் ஏனெனில் அவை தெய்வீகத்தின் ஒரு வடிவம்."
எவ்வாறு படைப்பினைக் காக்கும் தெய்வீக சக்தி மதிக்கப்படுகிறதோ அவ்வாறே கலைக்கும் தெய்வீக சக்தியும் மதிக்கப்பட வேண்டும்.இரண்டுமே சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. சிவன் அழிக்கும் சக்தியாக வணங்கப்படுகிறார். பிரம்மா படைக்கும் பணியை செய்துள்ளார். ஆனால் சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவை விட அதிகமாக வணங்கப் படுகிறார்கள்.

ஆக, இம்மூன்று குணங்களும் தெய்வீகமானவை, மாயை வெல்வது மிகக் கடினம்.இதுதான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவது.

மிக ஆழ்ந்த ஞானமுள்ளவராலேயே இவ்வாறு கூற முடியும். சாதரணமான யாரவது இவ்வாறு கூறினால், மக்கள் அதை கருத்தாழமுள்ளதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்." ஒ! ஏதோ உளறுகிறான்'' என்றே கூறுவார்கள். மாயையை கடப்பது எவ்வளவு கடினம் என்று நாமும் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். ஆன்மீக வழியில் செல்லும் ஒரு பற்றுறுதியாளரும் இதை உணர்ந்திருப்பார். இங்கே குருவான ஸ்ரீ கிருஷ்ணரும் அதையே ஏற்றுக் கொள்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனனிடம் "இது உனக்குக் கடினமானது என்று எனக்குத் தெரியும்" என்கிறார். அர்ஜுனனின் நிலைமையை ஸ்ரீ கிருஷ்ணர் நன்றாகப் புரிந்து கொண்டார். சீடனின் நிலைமையை நன்றகப் புரிந்து கொண்டு, பின்னர் வழிநடத்த வேண்டியது குருவின் கடமை. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் மனப்போராட்டத்தை நன்குணர்ந்து அதை உண்மையென ஏற்றுக் கொள்கிறார்.

வழக்கமாக ஏதேனும் வெற்றிகொள்ள முயலும் போது அதை குறைகூறி  இகழ்ந்து கடக்கிறார்கள். அதை வெற்றி கொள்வது இயலாத காரியமாகிறது. ஒருவரிடமிருந்து விலக வேண்டுமென்றால், அவரை விமரிசனம் செய்து கொண்டிருந்தால் உங்களால் விலகவே முடியாது. அவர்களிடமே சிக்குண்டு இருப்பீர்கள். நீங்கள் புகழுபவரை விட, இகழுபவரையே அதிகம் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஒருவரைப் புகழ்ந்து விட்டு அத்துடன் அவரை மறந்து விடுவீர்கள். நீங்கள் வெறுப்பவர்கள் உங்கள் மனதிலேயே தங்கி விடுவார்கள். அத்தகையவர்கள் வாடகை கட்டுப்பாட்டு அதிகாரி வந்தாலும் கூட வாடகை  தராமலேயே உங்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.( சிரிப்பு)

ஆகவே யாரை நீங்கள் இகழுகிறீர்களோ அவர்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து, நீங்கள் அவர்களிடம் கட்டுண்டு விடுகிறீர்கள். அது போன்று மாயையை இகழுபவர்கள் மேலும் மேலும் அதில் கட்டுண்டு விடுகிறார்கள். முதலில் நீங்கள் முழுவதுமாக மாயையைப் போற்ற வேண்டும் (ஏனெனில் அது தெய்வீகமானது). ஆகவே, எது இல்லையோ அதைப் போற்றுங்கள்.ஏனெனில் அது தான் மாயை- உண்மையில் இருப்பது போலத் தோன்றுவது, ஆனால் உண்மையில் இல்லாதது. ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்," இருப்பது போலத் தோன்றும் உண்மையில் இல்லாததைப் போற்றுங்கள், ஏனெனில், அதுவும் என்னிடமிருந்து வந்தது தான்"

மருட்சியின்  தோற்றுவாய் என்ன? இதைத்தான் நீங்கள் முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.
மருண்ட மயக்க  நிலைக்கு முன்னர் எப்படி இருந்தீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். மயக்கம் மறைந்து விடுவதை  உணருவீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ''இந்த மூன்று குணங்களின் மூலமாக வெளிப்படும், இம்மாயமயக்கத்தின் தோற்றுவாய்க்கு உங்கள் கவனத்தை எடுத்துச் செல்லுங்கள். என்னிடமிருந்து வருவதை உணருவீர்கள். அதனால் என்னுடைய அருளினாலேயே நீங்கள் அதைக் கடந்து வெல்ல முடியும். உங்களுடைய சுய முயற்சிகளினால், நீங்கள் மாய மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. சரணாகதி அடைந்து என்னில் அடைக்கலமாகுங்கள். அதுதான் உங்களுக்கு மாயமயக்க நிலையைக் கடக்க உதவும்"