ஜோதிட சாஸ்திரம் - ஞானத்தின் கண்கள்

27 மே 2013 – பெங்களூர் - இந்தியா


கே: குருதேவா! ஜோதிட சாஸ்திரப்படி நான் தற்போது ராகு மற்றும் சனி கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறேன். இதனால் மனம் உடைந்து, பலமுறை கோபம், எரிச்சலால் அவதிப்படுகிறேன். ஆன்மீக பாதையிலிருந்து விலகி, என்னை சேர்ந்தவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்.

குருதேவர்: உனக்கு இந்த ஞானமாவது இருக்கிறது. இவ்வளவு தெரிந்த உனக்கு, இந்த எதிர்மறை சக்திகளால் ஏற்படும் உணர்ச்சிகள் சில காலமே இருந்து கடந்து விடும் என்றும் தெரியும். ராகு மற்றும் சனியின் சேர்க்கையால் தான் இப்படி நடக்கிறது என்று உனக்குப் புரிகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் உதவியால் கஷ்ட காலங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

கிரகங்களின் ஆதிக்கத்தினால் தான் இப்படி நடக்கிறது என்று நீ அறியாமலிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இவ்வுலகமே எதிர்மறை சக்திகளால் ஆனது என்று நினைப்பாய். உன்னால் எந்த ஆக்கபூர்வமான காரியமும் செய்ய முடியாது என்று நினைத்து ஆழ்ந்த துக்கத்தில் இருப்பாய். இல்லையா? அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தை ஞானத்தின் கண்கள் என்று அழைக்கிறார்கள். அது உன்னை தற்போதைய சூழ்நிலையைக் கடந்து என்ன நடக்கும் என்ற பார்வையை உனக்கு அளிக்கிறது. இந்த சூழ்நிலை தற்காலிகமானது என்று நீ ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறியலாம். இது மாறிவிடும் என்று தெரியும். உனக்கே தெரியாமல் ஒரு மனோதிடம் உருவாகும். நீ உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் பழி சொல்ல மாட்டாய்.

கிரகங்களைக் பழி சொல்வது பரவாயில்லை.ஏனென்றால் அவை வெகு தொலைவில் இருக்கின்றன. உன்னால் அவற்றிற்கு எந்த கெடுதலும் செய்ய முடியாது. கிரகங்கள் தங்களுடைய பாதையில், தங்களுக்கு உரிய வேகத்தில் செல்கின்றன. அவைகளை வேகமாக நகரச் சொல்ல முடியாது. ஏதாவது ஒரு காரியம் சரியாக நடக்காவிட்டால் நீ உன்னையோ அல்லது மற்றவர்களையோ குற்றம் சொல்வாய். எப்படியானாலும் உனக்குத் தான் நஷ்டம். காரியம் சரியாக நடக்காததற்கு கிரகங்களின் மேல் பழியைப் போட்டால், உன்னையோ, மற்றவர்களையோ குற்றம் சொல்லத் தேவையில்லை. ஒரளவுக்கு உன் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தினால் இப்படி ஒரு நன்மை உண்டு.

கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஒரு வழி இருக்கிறது. எப்படித் தெரியுமா? தெய்வத்தை வழிபடுவதால் சூழ்நிலைகள் உன்னை வருத்தாது. எல்லா கிரகங்களையும் ஆட்டிப்படைப்பவர் சிவபெருமான். இவ்வுலகம் சிவதத்துவத்தினால் இயங்குகிறது. “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் கஷ்டமான சூழ்நிலைகளை எளிதாகக் கடக்கலாம். எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும் ஏதாவது நன்மை விளையும். நீ வெளி உலகத்திலிருந்து உன் பார்வையைத் திருப்பி ஆன்மீக வழியில் செல்ல இச்சூழ்நிலைகள் உதவும். மகிழ்ச்சியான சமயத்தில் மனம் வெளிநோக்கிச் செல்லும். அப்படி இல்லாத போது மனம் உள்நோக்கிச் செல்லும். இப்படிப்பட்ட சமயங்களில் நீ பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஈடுபடலாம்.

ராகு புத்தி, சனி புத்தி,கேது புத்தி இவை ஆன்மீகப் பாதையில் முன்னேற வழி வகுக்கின்றன. சனி கிரகத்தின் நோக்கமே உன்னை ஆன்மீக வழியில் திருப்புவது தான். எப்படி செயல்படுகிறது? நீ மேலோட்டமான உலக இன்பங்களிலேயே வாழும் போது, ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தி உன் மனத்தை உள்நோக்கித் திருப்புகிறது. நீ ஏற்கனவே ஆன்மிகப் பாதையில் ஈடுபாட்டுடன் இருந்தால் சனிக்கு ஒரு வேலையும் இல்லை. உனக்கு வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வராது. பிரச்சினைகள் வந்தாலும் அவை கடுமையாக இருக்காது. பிரச்சினைகள் வந்த வேகத்தில் மறைந்து விடும். எனவே எந்த விதமான சூழ்நிலையிலும் ஒருவர் நன்மை அடைய முடியும்.

கே: குருதேவா! நம்மிடம் சில மின்னல் வேகக் கேள்விகள் இருக்கின்றன. கேட்கலாமா?

குருதேவர்: கேட்கலாம்!

ஞானம்?

வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.

உறவுகள்?

அன்னியோன்னியமான உறவுகளை காப்பது கடினம். இருந்தாலும் முயற்சிக்க வேண்டும்.

விசிறிகள்?

சில சமயம் சூடாக வீசும். சில சமயம் குளிர்ச்சியாக வீசும்.

தந்தரம்?

வாழ்க்கையில் எப்போதும் உண்டு. வாழும் கலையில் கண்டிப்பாக உண்டு.

எஸ்.எம்.எஸ்?

கீப் இட் ஷார்ட் அன்ட் ஸ்மார்ட்.

சமஸ்கிருதம்?

எல்லா மொழிகளுக்கும் தாய். அறிவாளிகள் கற்கும் மொழி.

சுற்றுச்சூழல்?

பாதுகாக்கப்பட வேண்டும்.

பணம்?

தேவை தான். ஆனால் அது மட்டும் போதாது.

சக்தி சொட்டு மருந்து?

எல்லோருக்கும் அவசியம்.

பிரார்த்தனைகள்?

இதய பூர்வமான பிரார்த்தனைகள் நிறைவேறும்.

கர்மவினை?

வாழ்க்கையில் ஒரு பகுதி. நற்கருமங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

பானு அக்கா?

எல்லோருக்கும் பிரியமானவர்.

உங்களின் காரியதரிசிகள்?

கடுமையாக உழைப்பவர்கள்

திருப்தி?

திருப்தி சேவை செய்வதால் கிடைப்பது.

ஆசிர்வாதம் (நல்வாழ்த்துக்கள்)?

உங்களுக்கு நிறைய இருக்கிறது.

பெங்களூர் ஆசிரமம்?

பூலோக சொர்க்கம்

பொறியியல் நுட்பம்?

வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும்.

ஆயுர்வேதம்?

அடுத்த நூற்றாண்டுக்கான மருந்து. பழங்கால மருந்து.

பொம்மைகள்?

கடவுளின் கையில் நீ ஒரு பொம்மை என்பதை நினைவுகொள். உணர்ச்சிகளின்  பொம்மையாக இராமல் கடவுளின் பொம்மையாக இரு.

தேசபக்தி?

தற்சமயம் தூண்டப்பட வேண்டியது. இந்தியாவுக்கு மிகவும் தேவை.

யோகா?

உன்னை அறிவாளியாக்கும். அறிவாளிகள் யோக சாதனை செய்கிறார்கள்.

அகம்பாவம்?

இருக்கட்டும். தொலைத்துக்கட்ட வேண்டாம்.

அன்பு?

உன் இயல்பு.

சிவா?

எல்லாமும் அடங்குகிறது. வருங்காலத்திலும் எல்லாம் அடங்கும். கடந்த காலத்திலும் 
எல்லாவற்றையும் அடக்கியது.

கடைவீதிக்குச் செல்லுதல்?

ஆன்மீகத்தை (கடைவீதியில்) தேட வேண்டாம்.

பணிவு?

அனுபவம் வாய்ந்தவரிடம் இருக்கும் குணம்.

ஆத்மா?

அழகு, உண்மை, ஞானம்.

வாழும்கலை?

இலக்கு