சித்திரத்தைப் பார்ப்பது யார் என்று அறிந்து கொள்

16 மே 2013 – பெங்களூர் - இந்தியா - பகுதி ஒன்று 


              
பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். “ ஸ தயா ச்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதன மீஹதே | லபதே ச தத: காமான்மயைவ விஹிதான்ஹி தான் || “  (7.22)

ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும்,(நான் விதித்தபடி) அதற்கான பலன்களை அந்த தெய்வத்திடமிருந்து பெறுவார். பிரார்த்தனையின் பலன்களை அளிப்பது என்னைத் தவிர வேறு யாரோ என்று நினைக்காதே. எல்லா விதமான பிரார்த்தனையின் பலன்களும் என்னிடமிருந்து தான் கிடைக்கிறது. எல்லா தெய்வங்களும் என் சொருபமே. இது இயற்கையின் நியதி. நீ உன் கையை நெருப்பில் வைத்தால், இயற்கை நியதிப்படி அது உன் கையைச் சுடும். நீரில் கை வைக்கும் போது அதன் குளிர்ச்சியை உணரலாம். பகவான் சொல்கிறார்.

எல்லாமே இயற்கையின் விதிகளின் படி தான் நடக்கிறது. இந்த விதிகளை உருவாக்கியது நான் தான். ஆகவே எல்லோருக்கும் கிடைக்கும் பிரார்த்தனையின் பலன்களை அளிப்பதும் நானே. யாருக்கு அவரவர் கர்ம வினைப்படி என்ன பலன் கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்வதும் நானே. வேறு யாரும் அல்ல. நான் ஒருவனே தூய்மையான ஆத்மா. ஆனால் நான் பல ரூபங்களில் காட்சி அளிக்கிறேன். பகவான் மேலும் சொல்கிறார்.

“அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் | தேவான் தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி || “    (7.23)

மக்கள் சின்ன பொருட்களுக்கு ஆசைப்படுவது, புத்தி மிகக் குறைவாக இருப்பதை காட்டுகிறது. ஏனென்றால் அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைத்துவிட்டால், அது குறைவான காலத்தில் ஒரு முடிவுக்கு வந்து விடும். மக்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் அற்ப விஷயங்களுக்காக ஆசைப் படுகிறார்கள். வேலை உயர்வு, அதிக பணம், திருப்தியான உறவு போன்றவைகளுக்காக ஆசைப் படுகிறார்கள். ஆனால் இவை குறுகிய காலத்துக்கு இன்பம் தருபவை. எப்போதும் திருப்தி அளிக்க இயலாதவை.

இப்படிப்பட்ட ஆசைகளை அடைய விரும்பும் மனிதர்கள், ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்காகவே வாழ்கிறார்கள். இவர்கள் புத்திசாலிகள் அல்ல. அப்படிப்பட்டவர்களை அறிவில்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. அறிவில் குறைந்தவர்கள் என்று சொல்லலாம். வாழ்க்கையில் சிறிய பலனுக்காக கடினமாக உழைக்கிறார்கள்.புலன்களின் இன்பத்துக்காக, குறுகிய இலட்சியத்துக்காக ஆசைப்படுபவர்களின் இன்பம் மிகக் குறுகிய காலமே நீடிக்கும். இவர்கள் சித்திரத்தை மட்டும் பார்ப்பவர்கள். ஆனால் அந்த சித்திரத்தைப் பார்ப்பவர் யார் என்று ஆத்ம விசாரத்தில் ஈடுபடுபவர்கள் பலகாலம் நீடிக்கும் இன்பத்தை அடைவார்கள். இப்படிப்பட்ட பக்தியின் பலன் என்றுமே குறையாமல் இருக்கும். எனவே இந்த வாழ்க்கையின் இலக்கு. ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு சித்திரத்தை மட்டும் பார்ப்பதைத் தவிர்த்து, அந்தச் சித்திரத்தைப் பார்ப்பது யார் என்று அறிவது தான்.

நீ சித்திரத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் போது (கடவுளை எந்த ரூபத்தில் வணங்குகிறாயோ) அதனால் பலன் கிடைக்கிறது. உன்னுள் இருக்கும் பக்தியினால் அந்த பலன் உனக்குக் கிடைக்கிறது. அந்த பக்தி சித்திரத்தைப் பார்ப்பவரிடம் இருக்கிறது. வாழ்க்கையில் கிடைக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் அவரிடம் இருக்கும் நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கை அல்லது பக்தி எப்போதும் சாட்சி ரூபத்தில் பார்ப்பவரிடம் இருந்து வருவது. நமக்கு வாழ்வில் கிடைக்கும் அனைத்தும் நம்முடைய பக்தியினால் மட்டுமே. அதுவும் எப்படிப்பட்ட பக்தி என்பதைப் பொறுத்திருக்கும். யாரிடம் பக்தி செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்திருக்கும். ஒரு தேவதையின் மேல் வைக்கும் பக்தி அல்லது ஒரு குருவின் மேல் வைக்கும் பக்தி அல்லது இறைவனின் மேல் வைக்கும் பக்தி. எனவே எது முக்கியம்? சித்திரமா அல்லது பக்தியா? பக்தி மட்டுமே மிக முக்கியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பக்தி எங்கிருந்து வருகிறது? பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.

எல்லா விதமான பக்தியும் என்னிடமிருந்தே வருகிறது. நான் தூய்மையான ஆத்மா. தேவதையிடம் பக்தி செலுத்துபவர்கள் அந்த தேவதைகளை அடைவார்கள். என் பக்தர்கள் என்னை அடைவார்கள். “ஆத்ம நம்பிக்கை யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு ஞானம் கிட்டும். தேவதைகள் பகவானிடமிருந்து வேறானாவர்கள் என்று நம்புபவர்கள் அத்தேவதைகளை அடைவார்கள். யார் என்னிடம் பக்தி வைக்கிறார்களோ அவர்கள் என்னை அடைவார்கள்.என்னுடன் கலந்து விடுவார்கள். என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். என்னுடன் என்று சொல்பவர் யார்? இதை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.

“அவ்யக்தம் வ்யக்திமாபன்னம் மன்யந்தே மாமபுத்தய: | பரம் பாவமஜானந்தோ மமாவ்யயமனுத்தமம் ||”  (7.24)

என் தெய்வீக ரூபம் என்றும் இருப்பது. இவ்வுலகில் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஈடில்லாதது. என் ரூபம் யார் கண்ணுக்கும் தெரியாதது. என்னை அறியாதவர்கள் என்னுடைய கண்ணுக்குத் தெரியும் மனிதனைப் போன்ற உருவத்தையும் என்னுடைய இந்த குணங்களையும் மட்டும் நினைப்பவர்கள் மூடர்கள். நான் ஒரு தெய்வீக சக்தி. மனிதன் அல்ல. நான் தூய்மையான ஆத்மா. எங்கும் நிறைந்திருப்பவன். இந்த தெய்வசக்தியை அறியாதவர்களின் கண்ணுக்கு நான் சாதாரண மனிதனாகக் காட்சி அளிக்கிறேன். இது ஒரு குறுகிய கண்ணோட்டமாகும். குறுகிய கண்ணோட்டம் என்றால் என்ன? சின்னச் சின்ன விஷயங்களில் சிக்கிக் கொள்வது. உதாரணத்துக்கு“அவர் அவனைப் பார்த்தார். என்னைப் பார்க்கவில்லை. அவனோடு பேசினார். என்னோடு பேசவில்லை. இதெல்லாம் வேண்டாதவையாகும்.

இந்திய பாரம்பரியப்படி நீ உன் குருவை (உன் சிற்றறிவின் படி) ஒரு மனிதராகப் பார்க்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால் “குருதேவர் அவளைப் பார்த்தார். என்னைப் பார்க்கவில்லை. மற்றவர்களோடு பேசினார். என்னோடு பேசவில்லை. அவரோடு அதிகமாகப் பேசினார். என்னோடு மிகக் குறைவாகப் பேசுகிறார். மற்றவர்களை அதிகமாக விரும்புகிறார்” என்ற சின்னச் சின்ன சிந்தனைகளில் சிக்கித் தவிப்பாய். மனிதனுடைய சிற்றறிவு தான் இப்படிப்பட்ட சிந்தனை வரக் காரணமாக இருக்கிறது. ஒரு முறை நீ குருவை அடைந்தபின் மற்றவைகளைப் பற்றிக் கவலை வேண்டாம். உனக்கு அவர் மேல் இருக்கும் பக்தியும் அவருக்கு உன் மேல் இருக்கும் அன்பும் முழுமையானது. அவர் அன்பைச் சந்தேகிக்க வேண்டாம். அதைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டாம். குரு உன் மேல் அன்பாக இருக்கிறாரா? இல்லையா? என்று எண்ணாதே. குரு என்றால் சக்தி. குரு சக்தி உன்னை மிகவும் நேசிக்கிறது. அன்பே அதன் இயல்பு. அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.

“நாஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத: | மூடோ யம் நாபிஜானாதி லோகோ மாமஜமவ்யயம் ||        (7.25)

என் யோக மாயையினால் நான் எல்லோருடைய கண்களுக்கும் காட்சி அளிப்பதில்லை. அதனால் தான் எல்லோரும் என்னை அறிவதில்லை.. என்னை (இறைவனாக) அறிந்தவர்கள் புத்திசாலிகள். அறியாதவர்கள் மூடர்கள். சூரியனைப் பார்த்து இது தான் சூரியனா? என்று கேட்பவனை என்னவென்று அழைப்பாய்? சூரியனின் கிரணங்கள் உன் தலையில் படும் போது, அதன் வெப்பம் பூமியைத் தகிக்கும் போது யாராவது இப்படிக் கேட்பார்களா? இது தான் சூரியன் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. பகவான் கிருஷணர் சொல்கிறார்

“என்னுடைய யோக மாயையினால் எல்லோராலும் என்னைக் காண இயலாது. இந்தப் படைப்பில் எல்லா விதமான காரணங்களுக்கும் மூல காரணமாக இருப்பவன் நான். எந்த நிகழ்வுக்கும் காரணம் நான் தான். என்னில் எதுவும் குறையாது. எதுவும் கூடாது. ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பவன் நான். என்றும் பிறந்ததில்லை, இறக்கப் போவதும் இல்லை. மூடர்களுக்கு இது புரியாது.” “சிறிது அறிவு படைத்தவர்கள் கூட நான் தூய்மையான பரமாத்மா, பிறப்பு இறப்பு அற்றவன் என்று அறிவார்கள். பிறப்பு இறப்பை நான் எப்போதும் அனுபவித்ததில்லை. என்னைச் சுற்றி இருப்பவர்கள் காலப்போக்கில் வயது முதிர்ச்சி அடைகிறார்கள். மாறி கொண்டிருக்கிறார்கள். என்னில் எந்த மாற்றமும் இல்லாததால் நான் எப்படி இறக்க முடியும்?” எது மாறிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு மட்டும் தான் அழிவு உண்டு.

நமக்குள் மாறாத ஒன்று எப்போதும் நம்முடன் இருக்கிறது. நம் எல்லோரும் ஓரளவுக்கு இதை நம் வாழ்வில் எப்போதாவது உணர்ந்திருக்கிறோம். இந்த மாறாத ஒன்றின் மேல் நம் கவனத்தைத் திருப்பினால், நாம் என்றும் அழியாமல் இருக்கிறோம். வருங்காலத்திலும் எப்போதும் இருப்போம் என்று அறியலாம். இங்கு பகவான் கிருஷ்ணர் என்றும் அழியாத ஆத்ம தத்துவத்தைப் பற்றிச் சொல்கிறார். ஆத்ம தத்துவத்தை அறிந்தவர் மிகவும் அறிவாளி என்று அவர் சொல்கிறார். அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்வது.

“வேதாஹம் ஸமதீதானி வர்தமானானி சார்ஜுன | பவிஷ்யாணி ச பூதானி மாம் து வேத  ந கஸ்சன ||”  (7.26)

நான் கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் அறிவேன். நிகழ்காலத்தில் எல்லாவற்றையும் அறிவேன். வருங்காலத்தில் நடக்கப்போகிற எல்லா நிகழ்ச்சிகளை பற்றியும் நான் அறிவேன்.” என்று பகவான் சொல்கிறார். நமக்குள் ஆழ்ந்த நிலையில் உள்ள ஆத்மா எல்லாவற்றையும் அறியும். கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றியும், வருங்காலத்தில் நடக்கப் போகும் அனைத்து நிகழ்சிகளைப் பற்றியும் ஆத்மா அறியும். இவற்றை அறிய வல்லதையே நாம் ஆத்மா என்று சொல்கிறோம். பகவான் சொல்கிறார். நான் எல்லாவற்றையும், எல்லோரையும் அறிவேன். ஆனால் எல்லோரும் என்னை அறிவதில்லை. எல்லாவற்றையும் அறியும் சக்தி ஒன்று மட்டுமே. அது ஆத்மா. படைப்பில் உள்ள பொருள்கள் வித்தியாசமாகத் தோற்றம் அளிக்கின்றன. அவைகள் என்னை அறிவதில்லை. நான் அனைத்தையும் அறிவேன். உண்மையானால், உலக மக்களில் பலர் ஏன் ஆன்மீகப் பாதையில் செல்வதில்லை என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். கிருஷ்ணர் தெளிவாக விளக்குகிறார்.

“அறிவிலிகள் என்னை அறியமுடியாது. உலகில் அறிவில் சிறந்த சிலரே என்னை அறிவார்கள். ஒருவர் அறிவுள்ளவர் என்பதற்கு அடையாளமே அவர் என்னைப் பற்றி அறிந்திருப்பது தான்.”