பரந்து விரிந்த சூரியனை, உங்கள் சிறு கண்ணாடியில் கைப்பற்றுங்கள்

28 மே 2013  - பெங்களூரு, இந்தியா  இரெண்டாம் பகுதி

யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர் யஸ்ய ந லிப்யதே. ஹத்வாபி ஸ இமல் லோகான்ன ஹந்தி ந நிபத்யதே. (18.17)



அவர் கூறுகிறார், ‘மாயையின் பாதிப்பில்லாத புத்தியுடைய (அலிப்த - புத்தி) ஒருவர், இந்த முழு உலகையும் அழித்தாலும் கூட அவருக்கு எந்த பாவமும் சேராமல் பிணையுமின்றி விடுதலையாய் இருப்பார். அப்படிப்பட்டவருக்கு தன் செயலால் எந்த பாதிப்பும் நேராது.’ மாயையால் சூழப்படாத அளவு விழிப்புணர்வு கொண்ட புத்தியை உடைய ஒருவர், எப்படியும் மக்களை கொல்லும் அளவு வன்முறைச் செயல்களில் ஈடுபடப் போவதில்லை. அப்படியே செய்தாலும் கூட, அவர் ஒரு போர் வீரராக இருந்து தன் கடமையின் ஒரு பகுதியாக அதைச் செய்வாரே அன்றி வெறுப்பினாலும் வேட்கையினாலும் அல்ல. அலிப்த புத்தியுடைய (மாயையால் தொடப்படாத தூய புத்தி) ஒருவர் மாயையை இனம் காணுவது மூன்றாவது நிலையாகும். அப்படிப்பட்டவர் மாயையின் வழிகளைத் தடுப்பதுமில்லை, அதனால் பாதிக்கப் படுவதுமில்லை. அந்த நிலையில் அவர் மாயையால் தொடப்படாமல் விலகி இருக்கிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?

உண்மையில், இந்த நிலையில் அவர் மாயையின் வழிகளைக் பார்ப்பதிலே மகிழ்ச்சி அடைந்து அதை ஒரு கேளிக்கையாய் உணர்கிறார். அது சந்தோஷம் கொள்வதற்கான ஒரு வழியாகிறது. நாம் மலர்ந்து மூன்றாம் நிலைக்கு பரிணமிக்கும் போது, எந்த மாயை நம்மை திரையிட்டு பந்தத்திலே சிக்கித் தவிக்க வைத்தோ அதுவே மகிழ்ச்சிக்கான ஆதாரமாய்ப் போய்விடுகிறது. சந்தோஷத்திற்கும் கேளிக்கைக்கும் ஆதாரமாய் அந்த மாயை ஆகி விடுகிறது. எனவே மாயை நம்மைக் குழப்பி பந்தத்திலே சிக்க வைக்கவும் செய்கிறது, அதே மாயை நமக்கு ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது! இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணா பகவான் கூறினார், ‘தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா. மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’ (7.14)

அவர் ‘ஓ அர்ஜுனா! இறை குணங்களால் நிரம்பியது என்னுடைய யோக மாயை, அதை ஒருவரால் எளிதில் வெல்ல முடியாது. என்னிடம் அடைக்கலமாகி சரணடைந்தால் மட்டுமே ஒருவரால் அதை வெல்ல முடியும்.’ இந்த முழு படைப்பும் மாயையால் திரைபோட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. எங்கும் காற்று எப்படி சூழ்ந்திருக்கிறதோ அப்படியே இந்த முழு உலகமும் மாயையால் சூழப்பட்டிருக்கிறது.. ஒவ்வொரு மனிதரின் மனமும் மாயை என்ற உறையிலிருக்கிறது. 

ஒவ்வொருவரும் மாயையில் ஆழமாய் சிக்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் மனமும் ஏதோ ஒரு வகையில் மாயையின் ஆதிக்கத்திலிருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் உங்கள் அனைவரின் மனதிலும் பலப்பல வித்தியாசமான எண்ணங்கள் இருக்கின்றன. உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் என்னவெல்லாம்  ஓடிக்கொண்டிருக்கிறது என்று கொஞ்சம் கவனியுங்கள்! ஓ இறைவா! (சிரிப்பு). இதுதான் மாயை. இந்த முழு படைப்பும் மாயையால் உறையிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு உண்மையான பக்தர் உணர்வது, ‘ஓ என் சிவ பெருமானே, என் மனம் உன்னை பக்தி செய்வதிலேயே முழுமையாய் ஈடுபட்டு, உன் நினைப்பிலேயே மூழ்கி இருக்கிறது. உன்னை அவ்வளவு முழுமையாக சூழ்ந்திருக்கிறது என் மனம் இரவு பகலாக நினைப்பதெல்லாம் உன்னையே மற்றும் உன்னை மட்டுமே.’ இப்போது, இது எப்படி முடியும்? நம்முடைய அளவான சிறு  மனம், பரந்து விரிந்து எங்கும் விரவி இருக்கும் இறைவனை எப்படி உறையிலிட முடியும்? அளவான நம் மனதில் எப்படி இறைவனை அடக்கி வைக்க முடியும்? இது இயலுமா? ஒரு சிறு கண்ணாடியுள்ளே எப்படி ஒரு பெரிய யானையை (அதன் பிம்பம்) பிடிக்க முடியுமோ அப்படித் தான்.

உங்களால் முழு சூரியனை ஒரு கண்ணாடியில் பிடிக்க முடியுமா? சூரியன் மிகவும் பெரியது, ஆனாலும் நீங்கள் ஒரு சிறிய கண்ணாடியில் அதை கச்சிதமாகக் கைப்பற்ற முடியும். இல்லையா? அதே வழியில், நம் மனதாலும் இறைவனை முற்றிலும் கைப்பற்ற முடியும். அதனால் தான், ஒரு தூய இதயம் இருந்தால் நீங்களும் அந்த இறைவன் தான் என்று சொல்லப்படுகிறது! நீங்கள் தான் பிரம்மம். ஆனால் அது எப்போது சாத்தியம்? உங்கள் இதயக் கண்ணாடி அப்பழுக்கில்லாமல் தூயதாய் இருக்கும்போது உங்களால் இறைவனை பிடித்து உங்களுக்குள் வைக்க முடியும். அந்தக் கண்ணாடி திரையினால் (மாயை) மறைக்கப்பட்டிருந்தாலோ அல்லது அழுக்காய் இருந்தாலோ இதை செய்ய முடியாது.

புனிதர் எனப்படுபவரின் மனமும், இதயமும் தூயதாய் ஒரு கண்ணாடியைப் போல இருக்கிறது. குரு எனப்படுபவர் ஒரு தெளிந்த கண்ணாடியைப் போல பரிசுத்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறார். எனவே உங்கள் மனமும் அப்பழுக்கிலாமல் தூயதாய் இருக்க வேண்டும், பிறகு பரிபூரணம் (உங்கள் மெய்யுணர்வு) உங்களுள் மலரும். பிறகு சூரியனையும் சந்திரனையும் நீங்கள் கண்ணாடியில் பிடிக்கலாம். எனவே எப்படி ஒரு கண்ணாடி பெரிய யானையை முழுமையாக தன்னிடம் பிடித்து வைக்கிறதோ அப்படி உங்கள் மனமும் இறைவனை பிடித்து வைக்கலாம். உங்கள் மனம் மாயையின் இருப்பிடமாக அல்லாமல் இறைவனின் ஆலயமாக மாற வேண்டும். மாயையால் விழுங்கப்படக் கூடிய உங்கள் மனம் இறைவனிடம் முழுமையாக சரணடையக் கூட முடியும். அழகான ஞானத்தைக் கேட்பதாலேயே உங்கள் மனம் உயர்ச்சி பெற்று தூய்மையாகிறது அல்லவா? வேட்கைகளும் துவேஷங்களும் உங்கள் மனதிலிருந்து உடனடியாக துடைக்கப்படுகிறது.

நம் முகத்திலிருக்கும் புன்னகையை நாம் ஏன் இழக்கிறோம். அதன் காரணம் வேட்கை, துவேஷம் மற்றும் மாயையில் சிக்கியிருக்கும் தன்மை. நம் மனதிலிருக்கும் இடம் வேட்கையினாலும் துவேஷத்தினாலும் ஆக்கரமிக்கப்படும் போது, மகிழ்ச்சி முழுமையாகத் தொலைந்து போகிறது.

‘ஓ, இது சரியில்லை,அது சரியில்லை!அவர் நல்லவரில்லை,சரியில்லை’, போன்ற எண்ணங்களில் பீடிக்கப்படுகிறோம். நான் சொல்கிறேன்,அந்த கணத்தில் நீங்கள் கூடத் தான் சரியில்லை! சக்தி முழுவதும் அந்த எண்ணங்களிலேயே தொலைந்து போகிறது. அப்படிப்பட்ட எண்ணங்களில் செலவழித்த பின் நீங்கள் எளிதில் பயனற்று போய்விடுகிறீர்கள்; எதையும் செய்ய முடியாது. நீங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தை தொலைத்த பின் வேறென்ன மீதமிருக்கும்? அப்படி சிக்கியிருப்பதால், அன்பு, புன்னகை, உற்சாகம் என உங்களுடைய எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். உற்சாகத்தை இழந்த பின் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். பிறகு சும்மா ஒரு இடத்தில் கிடந்து கொண்டு எதுவும் செய்யாமலிருப்பீர்கள். ஏன் இதெல்லாம் நடக்கிறது? இது மாயையினால்தான். இந்த மாயை உண்மையில் மிக சுவாரசியமானது. யாரை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு அவர்களை தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்கும்! பாவம் பிடிபட்டவர் ஆடிக்கொண்டேயிருப்பார்.

மாயையினால் இந்த முழு உலகமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதனால், மக்கள் பலர் மாயையை விமர்சித்துவிட்டு மாயையின் லீலைகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள். ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த மாயை இறை குணங்கள் நிரம்பியது, மேலும் அது என்னிடமிருந்து பிறந்தது. எனவே அதை நீங்கள் மதித்து மரியாதை செய்ய வேண்டும்.’ஸ்ரீ கிருஷ்ண பகவான் மட்டுமே அப்படிக் கூற முடியும், வேறு யாருமல்ல. இது எப்படி என்றால், ஒரு திரைப்படத்தின் இயக்குனர்,‘எல்லாம் எனக்குச் சொந்தம். நாயகன் மற்றும் எதிர்நாயகன் இருவருமே எனக்குச் சொந்தம்.’ என்று சொல்வதைப் போல ஆகும்.

ஒரு கதா நாயகன், தன் எதிர் நாயகன் தனக்குச் சொந்தம் என்று சொல்ல முடியுமா? இல்லை, அப்படி இருக்க இயலாது. ஒரு கதா நாயகனால் எதிர் நாயகனை எதிர்நாயகனாக  மட்டுமே கருத முடியும். ஆனால் அந்தத் திரைப் படத்தின் இயக்குனர் சொல்லலாம், ‘கதாநாயகன் மற்றும் எதிர் நாயகன் இருவரும் எனக்குச் சொந்தம். நான்தான் இந்தப் படத்தில் வேலை செய்ய அவர்களுக்குச் சம்பளம் கொடுத்தேன். எனவே நான்தான் அவர்களுக்கு இடையே பிரச்சினை வருமாறு கதை வடிவமைத்தேன் நான் தான் அந்தக் பிரச்சினையின் முடிவையும் எழுதினேன்.’ இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த மாயை என்னிடமிருந்து பிறந்தது. நான் தான் இதை பரப்பினேன், மேலும் என்னுடைய இறை அருளினால் மட்டுமே உங்களால் இதை வெல்ல முடியும். நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும், உங்கள் முயற்சியினால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியாது. என்னிடம் அடைக்கலம் பெற்றால் மட்டுமே உங்களால் மாயை என்னும் பெருங்கடலை கடக்க முடியும்.’ எனவே உங்களுக்குள் ஆழமாய்ப் போனால் மட்டுமே உங்களால் மாயையை வெல்ல முடியும்.