உங்கள் உண்மையான இயல்பு....

11 மே 2013 - பெங்களூர் - இந்தியா




இந்தப் படைப்பு முழுவதும் இரண்டு வகை பிரக்ருதிகளால் ஆனது: பர பிரக்ருதி மற்றும் அபர பிரக்ருதி. அபர பிரக்ருதியில் எட்டு வகைகள் உள்ளன, ஆனால் பர பிரக்ருதியோ ஒன்றே ஒன்று மட்டும் தான், அதுவே படைப்பில் உள்ள மற்றவற்றை தாங்கி நிற்பது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் எட்டாவது ஸ்லோகத்தில் கூறுகிறார்,ஏதத்யோநீநி பூதாநி சர்வாணீத்யுபதாரய. அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகதஹ் பிரபவஹ் பிரலயஸ் ததா’. (7.6)

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த படைப்புகள் அனைத்தும் பர பிரக்ருதி மற்றும் அபார பிரக்ருதி என இரண்டு வகை பிரக்ருதிகளால் ஆனது, மற்றும் அந்த இரண்டு பிரக்ருதிகளும் என்னிடமிருந்து பிறந்தவை. அவற்றின் பிறப்புக்கும் காரணம் நான், அவற்றின் மறைவுக்குக் காரணமும் நான், மற்றும் அவை எல்லாம் என்னுள் இருக்கிறது. இது தான் நீ தெரிந்து கொள்ள வேண்டியது.’ எதிலிருந்து எல்லாம் உருவாக்கப்பட்டதோ அது தான் கடவுள். இப்போது நீங்கள் கேட்கலாம், ‘அப்படியென்றால் கடவுள் எங்கிருந்து வந்தார்?’ அவர் எதிலிருந்தாவது வந்தார் என்றால் அவர் கடவுள் அல்ல. அப்படியென்றால் அவர் எதிலிருந்து வந்தாரோ அது தான் கடவுள்.
மற்றவர்கள் கேட்கிறார்கள், ‘கடவுளை யார் பெற்றார்கள்?’ பிறப்பிக்கப்பட்ட ஒருவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? எதிலிருந்து படைப்புகள் அனைத்தும் உருவாகிறதோ, எதில் எல்லாம் கரைந்து போகிறதோ அதுதான் கடவுள்.

இதை கேட்டு கடவுள் என்பவர் உங்களை விட்டு தொலைதூரம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம்; அனைத்தும் அதிலிருந்து தோன்றிய ஏதோ ஒன்று. இல்லை, அவர் தொலை தூரத்தில் இல்லை. அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘என்னை தெரிந்து கொள் மற்றும் என்னை மட்டுமே (எதிலிருந்து எல்லாம் தோன்றியதோ எதில் எல்லாம் கரைந்து போகிறதோ அதுவாக).’
எல்லோரிடத்திலும் இருக்கும் ‘நான்’ அல்லது ‘எனது’ சைதன்யா (சுயம் அல்லது மெய்யுணர்வு) எனப்படுகிறது. மற்றும் இந்த மெய்யுணர்வில் இருந்து தான் எல்லாம் பிறந்தது, இதில் தான் எல்லாம் இறுதியாக கரைந்து போகப் போகிறது. இந்த மெய்யுணர்வு தான் உயிரின் அடிப்படை. இந்த உடம்பு உயிரோடு இருப்பதன் காரணம் இந்த மெய்யுணர்வு. இந்த மெய்யுணர்வு நம் உடம்பை விட்டு போகும் போது வாழ்கை முடிந்து போகிறது. எனவே ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘எல்லாவற்றிலும் அடிப்படையாக உள்ளதும் எல்லாப் படைப்பையும் தக்க வைப்பதுமான ஒவ்வொரு ஜீவனிலும் உள்ள மெய்யுணர்வாக என்னைத் தெரிந்துகொள். எல்லாவற்றிற்கும் பிராதான காரணம் நான்தான்.’

எனவே மெய்யுணர்வுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. கருவிலிருக்கும் குழந்தைக்குக் கூட மெய்யுணர்வு உள்ளது, அதனால் தான் அதனால் வளர முடிகிறது. அப்படி அது இல்லையென்றால் அந்தக் குழந்தைக்கு உயிரில்லை என்று அர்த்தம். ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்,‘படைப்புகளில் உயிருடன் இருந்து வளரும் எதுவும், நான் எங்கும் அந்த சைதன்ய சக்தியாக (மெய்யுணர்வாக) வியாபித்திருப்பதால் தான்’.

இந்த மெய்யுணர்வு இருப்பதால் தான் மரங்கள் இலைகளை துளிர்த்து பழங்கள் தருகின்றன. மரங்களும் தாவரங்களும் உயிருடன் இருப்பதின் காரணம் அந்த மெய்யுணர்வு இருப்பதால் தான், இல்லையென்றால் அவை வளராது.இப்போது நாம் ஒரு கல்லில் உயிரில்லை என்று நினைக்கலாம், ஆனால் அப்படி இல்லை. எல்லாமே உயிருள்ளது. பன்னெடுங்காலமாக கோடிக்கணக்கான உயிரினங்களைப் பிறப்பித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்த இயற்கை, அல்லது இந்த பூமி உயிரற்றது என்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. இந்த பூமி அவ்வளவு உயிர்ப்புடன் இருப்பதால் தான் நாம் அதை பூமித் தாய் அல்லது பூ தேவி என்று அழைக்கிறோம். அவளிடம் உயிர் இருப்பதால் தான் நாம் அப்படி அழைக்கிறோம். இயற்கை அன்னையும் உயிருள்ளவளே. இந்த பூமியே ஒரு உயிரினம் தான். கோடிக்கணக்கான படைப்புகள் மற்றும் நுண்ணுயிர்கள் இவளுள் வாழ்ந்து வருகின்றன. படைப்பை இந்த நோக்கில் பார்க்கும் போது, இங்கு உள்ள எதுவும் உயிரற்றவை இல்லை, எல்லாமே உயிருள்ளவை என்பதை புரிந்து கொள்வீர்கள்.

பார்த்தால், படைப்பில் உள்ளவை சில அசையாமல் இருப்பவை, சில நகர்வது போல தோன்றுபவை. ஆனால், உண்மையில் எல்லாமே நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சூரியனும் கூட நகர்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்தப் படைப்பில் உயிருள்ளவை எல்லாவற்றிலும் நான்தான் இருக்கிறேன். என்னால் தான் அவை இருக்கின்றன’. அடுத்த ஸ்லோகத்தில் மேலும் விவரிக்கிறார், மத்தஹ் பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தனஞ்சய. மயி சர்வமிதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ.’ (7.7)

அவர் கூறுகிறார், ‘ஓ அர்ஜுனா! இந்தப் படைப்பில் என்னைத் தவிர்த்து என்று எதுவுமே இல்லை என்பதை அறிந்துகொள். நான் மட்டுமே எல்லாவற்றிலும் இருக்கிறேன். என்னைத் தாண்டி இந்தப் படைப்பில் எதுவுமே இல்லை. முத்து கயிற்றில் கோர்க்கப்பட்டிருப்பதைப் போல இந்த முழு படைப்பும் எனக்குள்ளே நெய்யப்பட்டிருக்கிறது’.

இந்த படைப்பு  முழுதும் இருட்டுப் பொருள் அல்லது இருட்டுச் சக்தி எனப்படும் சக்தியால் நிரம்பியிருக்கிறது என்று நேற்று நான் கூறினேன். காற்று இதற்கு ஒரு எளிமையான உதாரணம். பாருங்கள், நீங்கள் காற்றால் சூழப்பட்டுள்ளீர்கள், அது உங்கள் உள்ளேயும் நிரம்பியிருக்கிறது. உங்கள் உடம்பிலிருந்து காற்றை வெளியே எடுத்துவிட்டால், அது அப்படியே சுருங்கிப் போகும். ஒரு டயரைப்போல உடம்பு காற்றால் நிரப்பப் பட்டிருக்கிறது. காற்றை நீக்கிவிட்டால், ஒரு ரப்பர் டயரைப் போல உடம்பைச் சுருக்கி ஒரு பையினுள் போட்டு விடலாம். அவ்வளவு சிறிதாக சுருங்கிவிடும். ஒரு பலூனில் காற்றை நீக்கி விட்டால் எப்படி சுருங்கி சிறிதாகி விடுமோ அப்படி.
அதைப்போலவே, காற்று அம்சம் நம் உடம்பினுள்ளேயும் அதற்கு வெளியேயும் இருக்கிறது. காற்று அம்சம் இல்லாமல் நம் உடம்பு பிழைக்க முடியாது. மேலும், மெய்யுணர்வின் சக்தியின்றி இந்த உலகில் எதுவுமே பிழைக்காது. அவர் கூறுகிறார், ‘ஒரு கயிற்றில் எப்படி பல முத்துக்கள் கோர்க்கப்பட்டு சேர்ந்து இருக்கிறதோ, அப்படியே இந்தப் படைப்பில் பல உலகங்கள் எனக்குள்ளே இருக்கின்றன. எல்லாவற்றின் மையம் நான்’. அடுத்த ஸ்லோகத்தில்,’ரசோஹமப்சு கௌந்தேய பிரபாஸ்மி சசி-சூர்யையோஹ். ப்ரணவஹ் சர்வ-வேதேஷு சப்தஹ் கே பௌருஷம் ந்ருஷு’. (7.8)

சுவாரஸ்யமான பகுதி இப்போது வருகிறது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘தண்ணீரிலுள்ள ஈரம் நான், எல்லா திரவப் பொருட்களின் சுவை நான்; சூரிய சந்திரனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் நான். வேதங்களுள் நான் பிரணவம் (ஓம், படைப்பின் மூலாதார ஒலி). ஓம் தான் நம்முடைய நிஜமான பெயர். நாம் வைத்துக் கொண்டிருக்கும் பெயர், நமக்கு பெற்றோர்களால் இடப்பட்டு இந்த ஜென்மத்தில் நாம் இறக்கும்வரை மட்டுமே இருக்க வல்லது. யாருக்காவது நல்ல பெயர்கள் இருந்தால் கூட, மிண்டு, பிண்டு, ஜிம்மி என்று அவர்களை செல்லப் பெயர்களை கொண்டு அழைக்கப் படுகிறார்கள். ஒரு பெண்ணின் பெயர் பத்மா (தாமரை என்று பொருள்) என்று நல்ல பெயராக இருக்கலாம், ஆனால் அவளை பம்மி என்று செல்லப் பெயர் கொண்டு அழைப்பார்கள். (சிரிப்பு)

இன்று மக்கள் ஒருவரை ஒருவர் எந்த விதமான பெயர்களாலும் அழைத்து கொள்கிறார்கள். நம்முடைய உண்மையான பெயர் இதுவல்ல. நம்முடைய உண்மையான பெயர் ஓம். நாம் பிறக்கும் முன்பும் நமக்கு அந்தப் பெயர் இருந்தது, நாம் இறந்த பின்னும் அந்தப் பெயர் இருக்கும். ஒரு நாள் நாம் அனைவரும் ஓம் இல் கரைந்து போவோம். சீக்கிய மரபில், குரு நானக்ஜி அவர்களின் பிரார்த்தனை ஒன்று இருக்கிறது, ‘ஏக் ஒம்கார் (கடவுள் ஒருவர்), சத்னம் (அவர் பெயர் உண்மை), கர்தா-புரக்ஹ் (அவர்தான் படைப்பாளி) அப்படியென்றால், ஓம் ஒன்று மட்டுமே உண்மையான பெயர், அதுதான் அனைத்து இருப்புக்கும் காரணம்.

ஆனால் அறியாத மக்கள் சிலர் சொல்வார்கள், ‘எங்களுக்கு ஓம் ல் நம்பிக்கை இல்லை. நாங்கள் ஓம்காரை நம்புகிறோம்’. இது இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம். ஒரு வித்தியாசமும் இல்லை. ‘ஓம் தான் அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அதுதான் நான்.’ இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார்.

ஓம் இல்லாமல் ஞானத்தில் எந்த முன்னேற்றமும் இருக்க முடியாது. வேதம் ஓதுதல் ஓம் என்றுதான் தொடங்கும் ஓம் என்றுதான் முடியும். ஓம் என்பதின் விரிவாக்கம் தான் வேதங்கள். அனைத்து படைப்பின் சாரம்தான் ஓம். சப்தம் ஆகாயத் (வெளி) தத்துவத்தின் தன்மை. இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘பேசப்படும் உணர்த்தப்படும் எல்லாவற்றின் வெளியில் நான் சப்தமாக இருக்கிறேன். மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் திறமை நான். பெண்களுக்கு எப்படி மென்மையும் தாய்மை இயல்பும் குணங்களாக இருக்கிறதோ அப்படி ஆண்களுக்கு இருக்கும் ஆண் தன்மை (வலிமை, திறன் மற்றும் செயல் ஆகிய குணங்கள்) நான் தான். அடுத்த ஸ்லோகத்தில் கூறுகிறார், ‘புண்யோ கந்தஹ் ப்ருதிவ்யாம் ச தேஜஸ்சாஸ்மி விபாவசௌ. ஜீவனம் சர்வபூதேஷு தபஸ்சாஸ்மி தபஸ்விஷு.’

வாசம் மண் அம்சத்தின் ஒரு தன்மை. வாசத்தை நாம் அனுபவிப்பத்தின் காரணம் வாயு அம்சம் என நாம் நினைக்கிறோம், ஆனால் அது அப்படி அல்ல. இனிப்பு எப்படி சர்க்கரையின் தன்மையோ, ஈரம் எப்படி தண்ணீரின் தன்மையோ, வெப்பம் எப்படி நெருப்பின் தன்மையோ, அதைப் போல வாசனை மண் அம்சத்தின் தன்மை.


ஸ்ரீ கிருஷ்ணா பகவான் கூறுகிறார்,’மண் அம்சத்தின் வாசனை நான்; நெருப்பின் வெப்பம் நான், மற்றும் எல்லா படைப்பிலும் இருக்கும் உயிர் விசை நான் தான். ஒரு நல்லவரோ அல்லது ஒரு தீயவரோ, ஒரு சிங்கமோ, ஒரு பூனையோ, ஒரு எலியோ அல்லது ஒரு கழுதையோ, எங்கெல்லாம் உயிரைக் காணலாமோ அந்த உயிரின் மூல காரணம் நான்தான். எல்லாம் நான் தான். ஞான முனிவர்களின் தவம் நான். எல்லா புனிதர்களின் மற்றும் ஞான முனிவர்களின் அருளும் வல்லமையும் நான்’.