அனைத்தும் அந்த பரம்பொருளின் விரிவே....இரண்டாம் பகுதி

15 மே 2013 - பெங்களூரு, இந்தியா


இன்று ஸ்ரீ சங்கர ஜெயந்தி.. இது, ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த நாள் (இந்திய அத்வைத மார்கத்தின் மிகப் பெரிய குரு)  ஆதி சங்கரர், அத்வைத (இருமையற்ற) தத்துவத்தை பரப்பினார். அத்வைதத்தின்படி, அனைத்தும் ஒன்றாலேயே ஆனது. ‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மன்’ என்று அத்வைதத்தில் சொல்லப்படுகிறது. அதன் பொருள், அனைத்தும் ப்ரஹ்மனால் அல்லது ஒரு ப்ரஞ்ஞையால் மட்டுமே உண்டாக்கப்பட்டுள்ளது; இவைகளனைத்தும் வாஸுதேவா (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இன்னொரு பெயர்)




நீ பார்க்கும் வேறுபாடு உண்மையல்ல. உண்மை என்பது பார்க்கப்படாமல் இருப்பது (அதை அனுபவிக்க மட்டுமே முடியும்) நமக்கு கிடைத்துக் கொண்டிருந்த மிருக உருவ பிஸ்கோத்துகள் போன்றது. நீ அந்த பிஸ்கோத்துகளைப் பார்த்திருக்கிறாயா? அவைகள் பல வடிவங்களில் உள்ளன – பூனை, நாய், குதிரை, யானை என்று, உங்களை போன்ற குழந்தைகள் பிஸ்கோத்துகளுடன் விளையாட விரும்புகிறார்கள். ஆக, ஒரே உள்ளடங்கிய பொருட்கள் வெவ்வேறு அளவுகளிலும், உருவங்களிலும் உள்ள இந்த பிஸ்கோத்துகளைச் செய்ய உபயோக படுத்தப்படுகின்றன.

இன்று சாக்கலேட்டுகளில் கூட வெவ்வேறு மிருக உருவங்கள் செய்யப்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். பார்கப்போனால் அவைகளெல்லாம் ஒரே சாக்கலேட்னால் செய்யப்பட்டவைகள், இல்லையா? அவைகளெல்லாம் எறக்குறைய ஒரே சுவையுடையதாகவே இருக்கின்றன. ஆனால் குழந்தைகள் சாக்கலேட்டுகளிடமுள்ள வேறுபாடுகளை ஆனந்தமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவைகள் அனைத்தும் வெவ்வேறாகத் தோன்றினாலும், அடிப்படையில் அவைகள் ஒன்றே. மாயையின் காரணமாக நாம் பார்க்கும் அனைத்தும் ஒன்றுக்கொன்று வித்தியாசப் படுகின்றன ஆனால் அது உண்மையல்ல. ஆதி சங்கரரைப் பற்றிய கதை ஒன்று இருக்கிறது.

ஒரு முறை, ஆதி சங்கரர் இவ்வாறு தன் பார்வைக் கோணத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார், ‘இவ்வுலகம் முழுவதும், அதாவது அனைத்தும், ஒன்றுமே இல்லை.’ ஆகவே, அவர் சொல்லிக் கொண்டிருந்தது, ‘இவையெல்லாம் ஒன்றுமில்லை.’ இன்றைய விஞ்ஞானிகள் சொல்வது போல, ‘இவ்விஷயங்களெல்லாம் ஒன்றுமில்லை ஏனெனில் இவைகளெல்லாம் வெறு அலைகளே.’ ’அனைத்தும் ஒன்றுமில்லை,’ என்று அவர் கூறிக்கொண்டிருந்தபோது, ஒரு புத்தி தடுமாறிய யானை அவரை நோக்கி ஓடி வந்தது. ஆகவே தன்னைக் காக்க ஸ்ரீ சங்கரர் ஓடினார். அப்போது, ‘ஓ! அந்த யானை ஒன்றுமில்லை. எதற்கு ஓடுகிறீர்கள்?’ என்று ஒருவர் கூறினார்.

‘யானை ஒன்றுமில்லை. நான் ஓடுவதும் ஒன்றுமில்லை.’ என்று ஸ்ரீ சங்கரர் அப்போது கூறினார். ஆதி சங்கரரின் புத்தி சாதுர்யம் அவ்வளவு ஆழ்ந்ததாக இருந்தது, அம்மாதிரி ஒருவரை நீ அரிதாகவே காண்பாய். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவர் கூறியது, நவீன விஞ்ஞானம் நமக்கு சொல்வதோடு மிகச் சரியாக ஒத்திருக்கிறது. நாம் இவைகளை சார்பியல் கோட்பாடியல்களை போன்ற வெவ்வேறு பெயர்களாலும், கோட்பாடுகளாலும் அறிவோம். ஆனால் அது ஒன்றே ஒன்று தான். அனைத்தும் அந்த ஒன்றின் விரிவே. டி ஹூர் என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஒருவர் இங்கு சமீபத்தில் வந்திருந்தார். அவர் பருப்பொருளை 45 வருடங்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

‘குருதேவ், பருப்பொருள் இல்லையென்பதைக் கண்டுபிடிக்கவே நான் 45 வருடங்கள் ஆராய்ச்சி செய்தேன்! ஆகவே, இன்று, நான் பேசும்போது, மக்கள், நான் புத்த மதத்தைப் பற்றியோ அல்லது கிழக்கத்திய வேதாந்தத்தைப் பற்றியோ பேசுவதாக நினைக்கிறார்கள், ஏனெனில், பருப்பொருள் இல்லை, இருப்பது அலைகளே’ என்று நான் சொல்கிறேன். இன்று, விஞ்ஞானம் அதே முடிவுச் சுருக்கத்தைதான் அடைந்துள்ளது, அதாவது, தோன்றுவது உண்மையல்ல, பார்க்கப்படாதது உண்மை, அதுவே அனைத்தும். ஆகவே அனைத்தும் வாஸுதேவனே (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்). இப்போது, அனைத்தும் வாஸுதேவனென்று நான் சொல்லும்போது, அங்கு ஓருவர் மயில் மகுடத்துடனும், பளிச்சென்ற மஞ்சள் உடையுடனும், ராதாவின் பக்கத்தில் ஒரு மரத்தடியில், புல்லாங்குழலை வைத்துக் கொண்டு (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உடையைக் குறிப்பிட்டு) இருக்கிறார் என்று பொருளல்ல. இவ்வாறு நீ நினைத்தால், எவ்வளவு வருஷங்களாக அவர் இப்படி கையில் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறாரோ, அவருடைய கைகளும், கால்களும் எந்நேரமும் இவ்வாறு புல்லாங்குழலை வைத்துக் கொண்டிருப்பதால் வலிக்கக் கூடுமே என்று ஆச்சரியப்பட ஆரம்பிப்பாய்.(சிரிப்பு). 

ஆகவே, இவ்வாறு தவறாகப் புரிந்து கொள்ளாதே. இதனால் தான், பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்,‘அவஜானந்தி மாம் முடா மானுஷீம் தனுமாச்ரிதம். பரம் பவமஜானந்தோ மம பூத-மஹேஸ்வரம்’ (9.11) பகவான் அர்ஜுனனிடம் சொல்கிறார், ‘மக்கள் என்னை மனிதனாகத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் (பொருள் ஸ்தூல சரீரத்தை மட்டுமே குறிக்கிறது),அவர்களால் என்னை அறிந்துகொள்ள முடியவில்லை. எதனிடமிருந்து அனைத்தும் வந்துள்ளதோ, எதனால் அனைத்தும் உயிர் வாழ்கிறதோ அந்த தூய உணர்வு நான்.

வாஸுதேவனை அனைத்திலும், அனைவரிலும் பார்க்கும் உன்னத புருஷர்கள் (மஹாத்மாக்கள்) உண்மையில் அரிதானவர்களே. ‘வாஸுதேவன் அனைத்திலும் உள்ளார் ஆனால் என்னுள் அல்ல. நான் வெறும் சிப்பந்தியே. நான் வெத்து, பகவானின் கால்களின் தூசிக்குக் கூட அருகதையற்றவன். நான் அற்பசொற்பம்.’ என்று நினைக்கும் சிலர் இருக்கின்றனர். இவ்வாறு நினைக்கக் கூடாது. அனைத்தும் வாஸுதேவனென்றால், நீயும் கூட வாஸுதேவன். வாஸுதேவனாகிய அனைத்தின் பகுதியும் நீ. வாஸுதேவனுக்கு அப்பால் ஒன்றுமில்லை. அவர்களது அந்தர் ஆத்மாவுடன் ஆழமாகப் பிணைக்கப் பட்டுள்ள ஞானியைப் போன்ற ஆத்மாக்கள் மிகவும் அரிது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார், ‘காமைஸ்தைஸ்தைர் ஹ்ருத ஞானா: ப்ரபத்யந்தேந்ய தேவதா: தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா’ (7.20)

தங்களது ஆசைகளை நிறைவேற்ற வெவ்வேறு தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். சிலர் அனுமாரை வழிபடுகிறார்கள், சிலர் பரம சிவனிடம் செல்கிறார்கள், சிலர் சந்தோஷி மாதாவின் (தெய்வீக அன்னையின் ஒரு வடிவம்) ஆசிகளை நாடுகிறார்கள், மற்றும் இது போன்று பல. அவர்கள் வெவ்வேறு தெய்வங்களை வழிபடுகிறார்கள்,அவர்கள் அவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்பதற்குப் பின்னணியில் வெவ்வேறு ஆசைகள் உள்ளன, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார், ‘ மக்கள் அவர்களின் ஆசைகளைப் நிறைவேற்றி கொள்ள வெவ்வேறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆனால் அந்த தெய்வங்களின் மூலமாக இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளச் செய்யும் சக்தி நான், நான் மட்டும் தான். மக்கள் எந்த பக்தியோடு இந்த தெய்வங்களை வழிபடுகிறார்களோ அந்த பக்தியும் நானே.

உலகில் வெவ்வேறு மதம்சார்ந்த சமூகங்கள் உள்ளன, ஒன்றல்ல. ஒவ்வொரு மதத்தினுள்ளும், அவ்வளவு பிரிவுகள் உள்ளன. பலதரப்பட்ட மக்கள் பல பிரிவுகளை வழிபடுகிறார்கள், அதிலிருந்து அவர்களுக்குச் சிறிது புண்ணியமும் கிட்டுகிறது.. சிலர் ஏசு கிருஸ்துவையும், சிலர் அல்லாவையும், சிலர் குரு க்ரந்த் சாஹிபையும் (சீக்கிய மதத்தின் புனித நூல்), சிலர் ஜெஹோவாவையும் நம்புகிறார்கள், அவரவர்கள் அவர்களது நம்பிக்கையை வைப்பது எந்த மதமாக இருந்தாலும், அவர்களுக்கு அதிலிருந்து நிச்சியமாக எதோ ஒன்று கிடைக்கிறது. அதிலிருந்து ஒன்றும் கிடைக்கவில்லையெனில், எதற்காக அவர்கள் முதலில் நம்பிக்கையை வைக்க வேண்டும்? அது போன்று, சிலர் காளி தேவியையும், சிலர் வைஷ்ணவி தேவியையும் நம்பும்போது, சில பக்தர்கள், அவர்களது ஆசைகள் அமரநாத்தில் (வட இந்தியாவில், பரம சிவனை வழிபடும் புனித இடங்களில் ஒன்று) பூர்த்தியாவதைக் காண்கிறார்கள்.

சிலர், அமர்நாத் க்ஷேத்திரம்,இயற்கையின் விதிக்குத் தகுந்தவாறு உருவாகும் ஒரு பனிக்கட்டி படிவத்திற்கு உயர்ந்தது ஒன்றுமில்லை என்று நினைக்கலாம். எதற்காக அங்கு போகக் கூட வேண்டும்? இல்லை, மக்கள் அனைத்து பக்தியுடன் அங்கு செல்கிறார்கள். பக்தர்களுக்கு, அது தெய்வீகத்தின் பிரதிநிதி, வெறும் பனிக்கட்டி மட்டுமல்ல. அவர்கள் சிவபெருமானை அதில் கண்டு, அதை பக்தி உணர்வுடன் வழிபடுகிறார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார், ‘எவர் எந்த உருவத்தை வழிபட்டாலும்,அது, அவர்களுக்கு வழிபாட்டின் பலன்களை வழங்கும் நானே.’ என்று.

அது, அனைத்தையும், அனைவருக்கும் அளிக்கும் ஒரு தூய உணர்வு. ஒருவன் ஹஜ் போன்ற தீர்த்த யாத்திரைக்குச் செல்லும் போது (முகம்மதியர்களுக்கான புனித யாத்திரை), அவர்களுக்கு அதிலிருந்து ஒரு ஆனந்தம் கிடைக்கிறது. ஆகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘இந்த ஆனந்தத்தை அளிப்பவன் நான். இந்த ஆனந்தம் என்னிடமிருந்து, என்னிடமிருந்து மட்டுமே வருகிறது.’ இன்னும், ‘நான்’ என்பது, மயில் மகுத்துடன் பளிச்சென்று மஞ்சள் உடையணிந்துள்ள ஒருவன் என்ற பொருளல்ல. அது, இதைச் சொல்லும் தூய ஓருணர்வு, அனைத்திடமும், அனைத்திலும் உள்ள ஒன்று. அதுதான் வாஸுதேவன்அபார ப்ரக்ருதி மற்றும் பர ப்ரக்ருதி இரண்டையும் ஒன்றாக அதற்குள்ளேயே வைத்துள்ள அந்த தத்துவம் வாஸுதேவன். அந்த வாஸுதேவன்தான் சொல்கிறார், ‘ யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஸ்ரத்தயார்ச்சிதுமிச்சதி. தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்’ (7.21) 

எவரொருவர், நம்பிக்கை மூலமாகவும் என்னிடம் வந்தாலும்,அவர்களின் பக்திக்கு 

தகுந்தவாறு, அவர்களின் ஆராதனைகுண்டான பலனை அவர்களுக்கு அளிக்கிறேன்.

பக்தியை கொடுப்பவனும் நானே.

பக்தி, நான், ஆராதனை நான், பலனும் என்னிடமிருந்து வருகிறது. இந்த பலன்கள் 

தாற்காலிகமானவைகளே. ஞானியான ஒருவன் என்னை, என்னுடைய  உண்மையான

குணத்தால் அறிந்தவன், ஆகவே, அவன் நான்கு வகையானவர்களிலும் மிக சிறந்தவன்.



ஆத்ம-ஞானத்தைப் பெற்றுள்ள எவரும் இதையே சொல்லியிருக்கிறார்கள், அதாவது ஒரே உணர்வு தான் உள்ளது என்று. அம்மாதிரி மக்களால் அனைத்திலும் ஒருமையைப் பார்க்க முடிகிறது. இதைப் பார்க்காதவர்கள், சண்டை மற்றும் உலக்காயதப் பிடிப்புகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் நன்நூல் உரைகளை எடுத்துக்கொண்டு, ‘நான் சொல்வது சத்தியம்’ அல்லது, ‘என்னுடைய மதம் அனைத்திலும் சிறந்தது’ என்று நினைத்து அவர்களுக்குள்ளே விவாதிப்பவர்கள். ஆனால், பக்தியின் உச்சத்தை அடைந்துவிட்ட ஞானி, அனைத்திலும் தெய்வீகத்தையே பார்க்கிறான்.