ஞானத்தின் வெளி

31 மே 2013 - பெங்களூரு, இந்தியா - இரெண்டாம் பகுதி 

பிரத்யக்ஷாவகமம் தர்ம்யம் சு-சுகம் கர்த்தும் அவ்யயம் (9.1)

ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், ‘நேரடியாய் அனுபவிக்க கூடியது இந்த ஞானம். இதை இப்போது பின்பற்றினால், பின்னர் பல வருடங்கள் கழித்து இதன் பலனை அடையலாம் என்பது அல்ல! ஞானத்தின் பலனை உடனடியாக அடையலாம். எப்படி? வலி அல்லது பசியை எப்படி அனுபவிக்கிறாயோ, அப்படியே இதையும் நீயே அனுபவிக்கலாம்’. உனக்கு தூக்கம் வருவது போல இருந்தால், யாரிடமாவது சென்று தூக்கம் வருகிறதா என்று அதை சோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? உனக்கு காலிலே வலி ஏற்பட்டால், யாரிடமாவது சென்று நிஜமாகவே வலி இருக்கிறதா இல்லையா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? உன் அனுபவத்தின் மூலம் வெளிப்படையாக அறிந்துகொள்கிறாய். அதைப் போலவே, இந்த ஞானமும் அனுபவித்து உடனடியாக அறிந்து கொள்ளும் அளவு வெளிப்படையானது என்பதைக் காண்பாய்.



நீங்கள் சுதர்சனக் க்ரியா, பிரணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை பயிற்சி செய்து வருகிறீர்கள். இது உங்களுக்குப் பலனை தருகிறதா என்பதை வேறு யாரிடமாவது கேட்க வேண்டுமா என்ன? தியானம் செய்யும் போது அதன் பயனை அனுபவிக்கிறீர்கள். சுதர்சனக் க்ரியா செய்யும் போது அதன் பலனை உடனடியாக அனுபவிக்கிறீர்கள், இல்லையா? அதைப் போலவே நீங்கள் பசியாய் இருக்கும் போது அது உங்களுக்கு உடனடியாக தெரிகிறது.

நீங்கள் தியானம் செய்யும் போது, அந்த ஆனந்தத்தையும் அமைதியையும் உடனடியாக அனுபவிக்கிறீர்கள். அந்த கணத்திலேயே உங்கள் மனம் அமைதியடைகிறது. எனவே அதைப் போல, ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், இந்த அறிவை செயல்முறையில் நீயே அனுபவிக்கலாம். இந்த ஞானம் உன்னை துயரத்திலிருந்து விடுவித்து மகிழ்ச்சியை அளிக்கிறது. மற்றும் இந்த ஞானம் பின்பற்றத் தகுதியானது. இதை எளிதாகப் புரிந்துகொண்டு பயிற்சி செய்யலாம், அதே நேரத்தில் இந்த ஞானம் காலத்தால் அழியாதது மற்றும் எப்போதும் மாறாதது.’

ஒரு முறை தியானம் செய்தாலும், அதன் பலன் காலத்தால் அழியாதது, நிரந்தரமானது. நல்ல காரியம் செய்தால் அதன் பலன் உங்களிடமேயே இருக்கும். எனவே இந்த ஞானம் காலத்தால் அழியாதது மற்றும் நிரந்தரமானது. இந்த ஞானத்தை ஒருமுறை பெற்று விட்டால் பின்னர் அது உங்களிடம் எப்போதும் இருக்கும். ஒரு முறை மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு விட்டால், பின்னர் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்கிறது அல்லவா, அதைப் போலத்தான். நீங்கள் மறுபடி கற்க வேண்டியதில்லை. அதைப் போலவே, நீங்கள் ஒரு முறை அல்வா செய்யக் கற்றுக் கொண்டால், உங்கள் வாழ்நாள் முழுதும் அது தெரிந்திருக்கிறது. அதை திரும்பத் திரும்பக் கற்றுக் கொள்வது தேவையில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘நான் உனக்குத் தர இருக்கும் இந்த ஞானம் முடிவில்லாதது மற்றும் காலத்தால் அழியாதது.’

பிறகு அவர் அடுத்த வரிகளைக் கூறுகிறார், ‘அசரத்ததானாஹ் புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப. அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு-சம்சார-வர்த்மநி. (9.3)

‘உனக்கு வெளிப்படுத்த இருக்கும் இந்த ஞானத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களால் என்னை அடைய முடியாது.’ அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயத்தை அறிய முடியாது என்பது இதன் பொருள்.‘அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்கள், என்னை அடைய முடியாமல் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் மறுபடி பறுபடி செல்வார்கள்.’

பாருங்கள், இந்த ஞானப் பாதைக்கு வராதவர்கள் உலகத்தின் கவனச் சிதறல்களில் மாட்டிக் கொண்டு அதிலேயே இருக்கிறார்கள். இது உண்மையில்லையா? அந்த அளவு வாழ்கையின் தினசரி போராட்டங்களில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.அதே புகார்கள், பிரச்சினைகள்; அதே கதை ஒவ்வொரு தினமும் மறுபடி பறுபடி நடக்கிறது. யார் ஒருவருடைய வாழ்கை ஞானமில்லாமல் இருக்கிறதோ; யாருக்கு அறிவியல் பார்வை இல்லையோ; அல்லது யாருக்கு ஒரு உயர்ந்த இலட்சியம் இல்லையோ, அவர்களால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது.

அவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்களிடம் தாம் கொண்டுள்ள வேட்கையிலோ அல்லது துவேஷத்திலோ சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அன்பாய் இருப்பவர்களிடமே சண்டை போடுகிறார்கள்சண்டை போடுபவர்களிடமே அன்பாய் இருக்கிறார்கள்.நண்பர்களே எதிரிகளாகிறார்கள், எதிரிகளே நண்பர்களாகிறார்கள். நீங்கள் தவறு செய்வில்லை என்றாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் எதிரிகளாவதைப் பார்த்திருப்பீர்கள். இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்)

பாருங்கள், ஏறக்குறைய எல்லோரும் கைகளை உயர்த்துகிறார்கள்! எனவே, மக்கள் வாழ்நாள் முழுதும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்து இறுதியில் இறப்பைச் சந்திக்கிறார்கள். பிறப்பு இறப்பு சுழற்சியில் மறுபடி சிக்கி துயரம் அடைந்து, எந்த விதமான நீங்கா இன்பத்தையும் காணமுடிவதில்லை. இந்தப் பொருள் உலகில் நிஜமான இன்பம் என்று கண்டுபிடிக்க எதுவும் இல்லை. எவ்வளவு அதிகம் இன்பத்தை தேடுகிறீர்களோ அவ்வளவு அதிகம் துயரத்தைத் தான் காண்பீர்கள். ஞானத்தில் நம்பிக்கை இல்லாதவர், எந்த வித பக்தியும் இல்லாத வாழ்கை உடையவர், அவர்களுக்கு வேறு என்ன தான் இருக்கிறது?

அன்பின் வடிவமும், படைப்பில் உள்ள எல்லாவற்றிற்கும் உயிர் அளிப்பதுமான மாபெரும் சக்தியிடம் நம்பிக்கை இல்லாதவரின் வாழ்க்கையில் வேறு என்ன தான் மீதம் இருக்கும்? அவ்வளவு வறட்சியாய் இருக்கும் அவரது வாழ்கை. அவர், எதையாவதைத் தேடி தன் ஆசைகளின் பின்னே எப்போதும் ஓடிக் கொண்டிருப்பார். அவர் தேடியது கிடைக்கவில்லை என்றால் துயரம் அடைகிறார், அது கிடைத்தாலும் துயரம் அடைகிறார். மிருத்யு-சம்சார் என்பதின் பொருள் இதுதான். (இது பொருள் உலகைக் குறிக்கிறது. இங்கு உள்ள அனைத்தும் தற்காலிகமானது, எப்போதும் மாறிக்கொண்டிருப்பது மற்றும் இறப்புக்கு ஆளாகும் தன்மை கொண்டது)

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘நம்பிக்கையும் பக்தியும் தன் வாழ்கையில் இல்லாத ஒருவரால் என்னை அடையவே முடியாது. அவர்களால் காலத்தால் அழியாத இறையை, அதாவது என்னை அடையவே முடியாது. மரணத்தைக் கொண்ட இந்த உலகத்திற்கு திரும்பத் திரும்ப வருகிறார்கள் (அதாவது, எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் இந்த பொருள் உலகிற்கு).’

அடுத்த இரண்டு சுலோகங்களில், அவர் கூறுகிறார், ‘மயா ததம் இதம் சர்வம் ஜகத் அவ்யக்த-மூர்த்தினா. மத்-ஸ்தானி சர்வ-பூதானி ந சாஹம் தேஷ்வ்-அவஸ்திதஹ்’.  (9.4)
‘ந ச மத்-ஸ்தானி பூதானி பஷ்ய மே யோகம் ஐஷ்வரம். பூதப்ருந்ந ச பூத-ஸ்தோ மமாத்மா பூத-பாவனஹ்’ (9.5)

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘ஓ அர்ஜுனா, இந்த முழு படைப்பும் என்னுடைய வெளிப்பாடு. ஆனாலும் நான் வெளிப்படாமல் வடிவமற்றவனாக இருக்கிறேன். இந்த முழு படைப்பும் (வடிவம் கொண்டது) என்னிலிருந்து (சூட்சுமமான வடிவமற்ற இறையிலிருந்து) வந்தவை. இந்தப் படைப்பில் நீ பார்ப்பவை எல்லாம் என்னிடமிருந்து வந்தவை. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வெளி என்று இருக்கும் இந்த ஐந்து பூதங்களும் என்னிடம் வசிக்கின்றன, அவை என்னிடமிருந்து தோன்றியவை. ஆனாலும் நான் அதில் இல்லை’.
இது நீங்கள் சொல்வது போல, ‘இந்த உடை என்னுடையது ஆனால் நான் அந்த உடையல்ல’. பாருங்கள், அந்த உடைகளுக்குள்ளே தான் நீங்கள் இருக்கிறீர்கள், உடை உங்களைச்  சுற்றி இருக்கிறது, ஆனாலும் அந்த உடையை அணியும் நீங்கள் அந்த உடையல்ல.

அதை போல ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் என்னிடமிருந்து பிறந்தவை, என்னில் வசிப்பவை, ஆனாலும் நான் அதிலில்லை. (பகவான் இறைப் பேருணர்வாக இருப்பதினால், இயற்கையின் இந்த ஐந்து கூறுகள் தன்னிடமிருந்து வந்தாலும், அவைகளுக்குள் அடங்கிவிடாமல் அல்லது அதுவாக இல்லாமல் இருக்கிறார் என்பதே இதன் பொருள்.) இதை தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இங்கு கூறுகிறார், மேலும் இது ஒரு மகா ரகசியம்.

இவர் என்ன கூறுகிறார் என்றால், ‘பார்க்க முடியாத வடிவமற்ற தன்மையுடைய நான், நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் விஞ்சியவன்’. உதாரணமாக ஒரு மரம் இருக்கிறது, அதன் அடித்தண்டின் உள்ளே திரவமான சாறு இருக்கிறது. உங்களால் அந்த மரத்தை மட்டும்தான் பார்க்க முடியும் அந்த திரவத்தை அல்ல.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்தப் படைப்பில், பல்வேறு வடிவங்கள் தரும் அந்தச் சாறு (இறை) நான்தான். எல்லா மரங்கள், அதிலுள்ள இலைகள், அதிலுள்ள பழங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னே உள்ள காரணம் நான்தான். அதை போலவே, ஒருவரின் இயல் உடம்பை வேண்டுமானால் நீங்கள் பார்க்கலாம், ஆனால் அதன் ஆத்மாவை அல்ல. அந்த ஆத்மா வடிவமற்றது மேலும் அந்த ஆத்மாதான் நான்’.

நம் இருப்பின் ஒவ்வொரு துகளிலும் அந்த உயிர்-விசை இருக்கிறது. அந்த உயிர்-விசை ஒருவருடைய உடம்பை விட்டு நீங்கிய அடுத்த கணம் அவர் இறந்ததாக அறிவிக்கப் படுகிறார். உதாரணமாக, உங்கள் உடலில் உள்ள  தோலில் ஒரு சிறு பகுதி எரிந்து போனால் அந்த செல்கள் மெதுவாக இறந்து அங்கு உணர்வுகள் மரத்துப் போய்விடும். அந்தப் பகுதியில் உங்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது, ஏனென்றால் அங்கு உள்ள செல்களில் உயிர்-விசை இருப்பதில்லை.


இந்தப் படைப்பில் உயிர் இருப்பதின் காரணம் பேருணர்வு. எனவே ஸ்ரீ கிருஷ்ண பகவான்  கூறுகிறார், ‘எல்லா உயிர்களையும் வாழவைக்கும், உயிர் தரும் பேருணர்வாக நான் இந்தப் படைப்பில் வெளிப்படுகிறேன். இந்த பெரும் இரகசியத்தை நீ கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.’