ஒரு கச்சிதமான பார்வை

31 மே 2013 - பெங்களூரு, இந்தியா

பகவத் கீதையின் ஒன்பதாவது அத்தியாயம் ராஜ-வித்யா யோகம் அல்லது ராஜ-குஹ்யா வித்யா என்று அழைக்கப்படுகிறது (மிக மிக உயர்ந்த மற்றும் இரகசியமான ஞானம்).

அரசன் எதை செய்வதற்கும் பெரும் பிரயத்தனம் செய்வதில்லை. அரசன் எதற்காகவாவது மிகக் கடினாமாக வேலை செய்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எனவே இந்த ஞானத்தை பிரயத்தனம் இல்லாமல் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார். அவர் இதை ராஜ-குஹ்யா யோகம் என்றும் அழைக்கிறார், இந்த ஞானம் ஒரு பெரும் இரகசியம் என்ற பொருளில். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்,

இதும் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்ய அநசூயவே. ஜ்ஞானானம் விஜ்ஞான-சஹிதம் யஜ் ஞாத்வா மோக்ஷயசே சூபாத்’. (9.1)

ஓ, அர்ஜுனா! நீ அனுசுயை, எனவே உனக்கு இப்போது ஒரு பெரும் இரகசியம் சொல்கிறேன்’. அனுசுயா என்பதின் பொருள் என்ன? எதிலும் குற்றம் காணாத தன்மையை அனுசுயா என்று அழைப்பார்கள்.
யாரை அசுயா என்று அழைப்பார்கள்? தன்னை சுற்றி எல்லாவற்றிலும் குறையை காண்பவரை அசுயா என்பார்கள். ஒருவருடைய பார்வை பாரபட்சமாக சிதைந்து இருக்கும் போது, தன்னைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும் குறை காண்பது போல தோற்றமளிப்பார்கள். எனவே யாருடைய பார்வை பாரபட்சமாக இருக்கிறதோ அவரே அசுயா. யாருடைய பார்வை பாரபட்சமின்றி எதிர்மறை இன்றி இருக்கிறதோ அவரே அனுசுயா.

உதாரணமாக, துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் யாராவது ஏதாவது சொன்னால், தம்மை கிண்டல் செய்கிறார் என்றே நினைப்பார்கள். உங்களில் யாருக்காவது இந்த அனுபவம் எப்போதாவது நிகழ்ந்திருக்கிறதா? பிரச்சினையிலுள்ள ஒருவரை நீங்கள் புகழ்ந்தால் கூட, நீங்கள் அவரை கிண்டல் செய்கிறீர்கள் என்றே நினைப்பார். நீங்கள் ஏதாவது நன்மை செய்தால் கூட, அதிலும் ஏதாவது குறை காண்பார். அப்படிப்பட்டவருக்கு, நீங்கள் எவ்வளவு தான் நல்ல நோக்கம் கொண்டு ஏதாவது நன்மை செய்தாலும், அதில் ஏதாவது ஒரு குறையை காண்பார். எந்த ஒரு செயலிலும் தவறான நோக்கம் இருப்பதைக் காண முயல்பவரை அசுயா என்று அழைப்பார்கள்.

அனுசுயா என்றால் பாரபட்சமான பார்வை இல்லாமல் இருப்பவர். அவர், எல்லாவற்றையும் அதன் நிலையைத் தெரிந்து கொண்டு அதை அப்படியே ஏற்று கொள்வார், அதில் குற்றம் குறைகளை காணமாட்டார். எனவே யாரிடம் நீங்கள் இரகசியதைச் சொல்ல முடியும்? யார் அனுசுயாவோ அவருக்கு. யாருடைய பார்வை பாரபட்சமின்றி இருக்கிறதோ, யார் எதிலும் குற்றம் குறை காணாமல் இருக்கிறாரோ அவரிடமே நீங்கள் இரகசியதை சொல்ல முடியும். 

எங்கு சென்றாலும் அசுயா என்பவர் எல்லாவற்றிலும் குறைகளை தான் காண்பார். அவர்கள் தங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை வெளி உலகில் காண்பார்கள், பின்னர் அதற்கு மற்றவர்களே காரணம் என்றும் குற்றம் கூறுவார்கள். பாரபட்சமான பார்வை உடையவர்களுக்கு தன்னுடைய குறை தெரியாது. குற்றங்களையும் தரக் குறைவையும் மற்றவர்களிடமே காண்பார்கள். தம்மை சுற்றி உள்ளவர்களிடம் மேலும் குறைகளை காண முயன்று கொண்டே இருப்பார்கள். அவரே அசுயா. அவரை யாரும் தமது சீடராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், ஒரு குரு அவரை சீடராக ஏற்றாலும், குருவின் பாடங்களிளும் குறை காண்பார். ‘குருதேவ், நீங்கள் இதைச் சொன்னீர்கள், ஆனால் நீங்கள் கூறியதில் ஒரு தவறு உள்ளது’.

குருவை குற்றம் சொல்லி, அவருடைய போதனைகளில் குறை காண்பவர்களால், அந்த குருவிடமிருந்து எதை கிரகிக்க முடியும்? அவரால் எதையும் உள்வாங்க முடியாது. அதனால் தான் குரு என்பவரை புத்தியின் குறுகிய பார்வையால் பார்க்கக் கூடாது, ஞானத்தின் விசாலமான பார்வை கொண்டு பார்க்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், ‘உன் பார்வை பாரபட்சமின்றி இருப்பதால், இப்போது நான் உனக்கு பேராச்சரியமான இரகசிய பாடத்தைக் கூறுகிறேன். இந்த அறிவை பெறுவதின் மூலம், நீ உன்னுடைய துயரங்களிலிருந்தும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விடுபடலாம். இந்த அறிவு விஞ்ஞானம் மற்றும் ஞானம் என இரண்டின் அடிப்படையிலும் அமைந்ததாகும். இது என்ன?’ என்று தெரிந்து கொள்வது அறிவியல் (பொருள் உலகம் சம்பதப்பட்ட விஷயங்களில்), ‘நான் யார்?’ என்று தெரிந்து கொள்வது ஆன்மிகம். அவர் கூறுகிறார், ‘இந்த ஞானத்தை தெரிந்து கொள்வதின் மூலம், தீயவற்றிலிருந்து விடுதலை பெறுவாய், மேலும் உன்னை சுற்றி எந்த எதிர் மறையான விஷயங்களும் இருக்காது. இதைத் தெரிந்து கொண்டபின் உனக்குத் துயரமும் கெடுதலும் எப்போதும் வராது.’

அடுத்த ஸ்லோகத்தில், அவர் கூறுகிறார், ‘ராஜ-வித்யா ராஜ-குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம். ப்ரத்யக்ஷ வாகமம் தர்ம்யம் சு-சுகம் கர்த்தும் அவ்யயம்’. (9.2)

‘உன்னால் புரிந்துகொள்ள இயலாத அல்லது நடைமுறையில் செயல்படுத்த முடியாத எதையும் நான் உனக்குக் கூறமாட்டேன். அப்படிப்பட்ட ஒன்றைக் கூறுவது பயனற்றது.’ ஒரு குரு தன் சீடருக்கு ஒன்றை கூறுகிறார், ஆனால் அதை அவரால் செயலபடுத்த முடியவில்லை என்றால் அந்த விஷயத்திற்கு பயனென்ன? ஒரு சீடரால் கிரகிக்க இயலாத அளவு மிக உயர்ந்த சிக்கலான ஞானத்தை ஒரு குரு வழங்கிவருவதால் என்ன பயன்?

ஒருமுறை ஒரு மகானின் உரையைக் கேட்பதற்காக ஒருவர் சென்றார். அந்த நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பின், அவர் தன் நண்பர்களிடம் கூறினார், ‘ஓ, அந்த உரை நிகழ்ச்சி மிக அருமையாய் இருந்தது. மகான் பேராச்சரியமான ஞானத்தை வழங்கினார்.’ நண்பர்களில் ஒருவர் கேட்டார், ‘அந்த மகான் எதைப் பற்றி பேசினார் என்று எங்களுக்குச் சொல்.’ அதற்கு அவர் ,‘ஓ! அந்த ஞானம் மிக உயர்ந்ததாகும். எல்லாம் என் தலைக்கு மேலே போய்விட்டது’. எதுவும் புரிந்துகொள்ள இயலாது இருக்கும்போது அந்த உயர்ந்த ஞானத்தை கேட்டு அவருக்கு என்ன லாபம். மற்றும் அதை ஒருவர் புரிந்து கொண்டாலும் கூட, அதை நடைமுறையில் பயன்படுத்தவில்லை என்றாலும் பயனில்லை.

இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘உன்னால் புரிந்துகொள்ள முடியாத நடைமுறையில் பயன்படுத்த முடியாத எதையும் நான் கூறமாட்டேன். நான் உனக்கு அளிக்கப் போகும் இந்த ஞானம் ஞானங்களில் ஒரு அரசன் (ஆகச் சிறந்தது). இது மிக நம்பகமானது, இரகசியங்கள் நிரம்பியது; இதுதான் மிக மிக உயர்ந்ததும் மற்றும் மிக மிக புனிதமானதும் கூட.’

ஞானங்களில் அரச வகையைச் சேர்ந்ததும் இறைத்தன்மை கொண்டதுமான இந்த ஞானம் புனிதமாக இல்லையென்றால் என்ன பயன். இது ஒரு மாபெரும் இரகசியமாக இருக்கலாம், அதில் புனிதத்துவம் இல்லையென்றால் அந்த ஞானத்தை வைத்துக் கொண்டு ஒருவர் என்ன தான் செய்வது. பொதுவாக வெட்கப்படக் கூடிய விஷயங்களை தான் இரகசியமாக வைத்து கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் இது இப்படி இருந்ததே இல்லை. வெட்கப்படக் கூடிய விஷயங்கள் இரகசியமாய் எப்போதும் இருந்ததே இல்லை. எதிலிருந்து பெரிய விஷயங்களை சாதிக்க முடியுமோ அவை மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டன. அதனால் தான் இந்த ஞானம் ராஜ-குஹ்யம் என்று அழைக்கப்பட்டது; மிக மிக இரகசியமான உச்சநிலை ஞானம். 

இந்தியாவின் சிறப்பு என்னவென்றால் புனிதமானதும்,இரகசியமானதும் எப்போதும் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தன. ஒரு சீடருக்கு மந்திரம் இரகசியமாக அளிக்கப்பட்டது. மந்திரங்களில் மிகச் சிறந்ததான காயத்ரி மந்திரத்தை சீடருக்கு கற்று தருவதை இரகசியமாக காதோடு சொல்லப்பட்டது. மந்திரம் சீடருக்குள்ளேயே ஒரு விதை போல இருக்க வேண்டும் என்ற நோக்கில், இரகசியத்தை யாருக்கும் சொல்லக் கூடாதென்று அந்த சீடருக்கு சொல்லப்பட்டது. ஒரு விதையை மண்ணுக்குள் விதைப்பதை போல. ஒரு விதையை விதைக்கும் போது, அதை மண்ணுக்குள் மறைத்தே வைப்பார்கள், அப்போது தான் அந்த விதை முளைத்து மரமாகும். எனவே இரகசியம் என்பது ஒரு விதை போல. வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தி அதனால் வாழ்கையை அற்புதமாக மாற்றுவது தான் இரகசியம்.


எனவே இரகசியங்களில் இதுதான் மாபெரும் இரகசியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். இது ஏதோ சாதரணமான அல்லது உபயோகமில்லாத இரகசியமல்ல. இது வெட்கப்படக் கூடிய விஷயமோ அல்லது மறைக்கப்படக் கூடிய விஷயமோ அல்ல. இதைத் தெரிந்து கொள்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நன்மைகளையும் மட்டுமே தரும். இதைக் கைக்கொண்டவர்களுக்கு எல்லாவற்றிலுமிருந்தும் ஆகச் சிறந்ததை பெறவைக்கும் இந்த ஞானம்.