தனி மனிதனின் மன அமைதியே உலக அமைதிக்கான திறவுகோல்

சனிக்கிழமை, ஜூலை 26, 2014

பாத் ஆண்டகாஸ்ட், ஜெர்மனி.


வாழும்கலை என்றால் மகிழ்ச்சியாக இருப்பது, பாடுவது, ஆடுவது, சேவை செய்வது, தியானம் செய்வது மற்றும் வாழ்க்கையை கொண்டாடுவது. இந்த பூமியில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியதே. 60 – 100 ஆண்டுகள் தான் இங்கு வாழ்கிறோம்.


சிலர் மட்டும் அதை விட அதிக காலத்துக்கு வாழ்கிறார்கள். அதுவும் 125 – 150 ஆண்டுகளுக்கு மேல் இல்லை. இந்த பூமியில் நாம் வாழும் குறுகிய காலத்தில், மகிழ்ச்சியாக வாழ்வது நல்லது. அதைவிட்டு,சின்ன விஷயங்களுக்காக ஏன் கலகம் செய்ய வேண்டும்? (ஏன் சண்டை போட வேண்டும்?) அப்படி செய்வது முட்டாள் தனம். (அஞ்ஞானம்). இன்று உலகில் பல நாடுகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தி கேட்க கூட பிடிக்கவில்லை. எங்கு பார்த்தாலும் வன்முறை. எனவே பாடுங்கள். சிரியுங்கள். ஆடுங்கள். உதவியாக இருங்கள். தியானம் செய்யுங்கள். இதிலும் மாட்டிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கேளிக்கைகளிலும் சிக்க வேண்டாம். வேடிக்கை விளையாட்டுகள், உங்களை பழக்கத்துக்கு அடிமையாக்கி விடும்.

விளையாட்டுகளில் ஈடுபடாத போது சலிப்பு ஏற்பட்டு நீ மற்றவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க நேரிடும். விளையாட்டு, கேளிக்கைக்கான உன் ஏக்கம் மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கும். வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளுங்கள். நாம் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் போது இது முடியும். மேலும் மக்கள் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும். மற்றவர்களிடையே மகிழ்ச்சியை பரப்பவேண்டும். ஒரே ஒரு தெரு விளக்கு பாதை முழுவதற்கும் ஒளியூட்ட முடியாது. சில மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் பல இருக்க வேண்டும். அப்போது தான் பாதையில் இருக்கும் இருட்டு விலகும். நமக்கு பல ஆசிரியர்களும், தன்னார்வலர்களும் தேவை. அப்போது தான் நாம் பல வகுப்புகள் நடத்த முடியும். உக்ரேன், ஈராக், சூடான், ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் வீடுகளிலும் வன்முறை நடக்கின்றது. நம் வகுப்புகளின் மூலம் வன்முறையைக் குறைக்க முடியும். இதில் கவனம் தேவை. நம்மால் அப்படிச் செய்ய முடியும்.

தனி மனிதனின் மன அமைதி உலக அமைதிக்குத் திறவுகோலாகும். உள்ளுக்குள் எரிமலை வெடிப்பது போன்ற மன நிலையில் மனிதர்கள் இருக்கும் போது உலக அமைதி எப்படி ஏற்பட முடியும்? அப்படிப்பட்ட மனிதர்கள் உச்ச பதவி வகிக்கும் போது அவர் மனம் மட்டும் வெடிக்காமல் அந்த நாடும், நாட்டில் வாழும் பல சமுதாயங்களுக்கிடையே வன்முறை வெடிக்கும். சென்ற மாதம் ஜெர்மனியில் உள்ள வாழும் கலை ஆசிரியர் ஈராக் நாட்டுக்குச் சென்று 35 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடம் நடத்தி விட்டு வந்தார். 3ம் நாளுக்குப் பின் அவர்கள் தங்கள் அழகான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் வேறு வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். முதல் முறையாக ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல் பட முடிந்தது. எங்கள் பொறுப்புகளை உணர்ந்தோம். முதல் முறையாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுத்தோம். 

ஈராக் நாட்டுக்கு இது மிகவும் அவசியம். ஈராக்கின் பிரச்சினைகளுக்கு இதுவே தீர்வாகும்.
அவர்கள் பேசியது மனதை நெகிழ வைத்தது. அவர்களனைவரும் சேர்ந்து ஒன்றாக செயல்பட உறுதிமொழி அளித்தார்கள். மூன்றே நாட்களில் மாறுதல் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்பு நடந்தது. அதுவும் மௌனக் கலைப் பயிற்சி அல்ல. முதல் நிலைப் பயிற்சியான ஆனந்தப்பயிற்சி தான். அவர்கள் மேல் நிலைப் பயிற்சியான மௌனக் கலையைக் கற்றிருந்தால் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

மக்கள் தங்கள் ஆழ் மனதில் அமைதி பெற்றால், அவர்கள் சமுதாயத்திலும் அமைதி நிலவும்.
அமைதி என்பது மோதல் மற்றும் வன்முறையற்ற நிலை மட்டுமல்ல. அது நமக்குள் ஒரு ஆக்க பூர்வமான சக்தியை உருவாக்க வல்லது. மனம் அமைதியாகும் போது அறிவு ஆற்றல் பெறும். நம் உணர்ச்சிகள் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட வைக்கும். மனம் லேசாகி விடும். உடல் ஆரோக்கியம் பெறும். நம் நடத்தை மற்றவர்களுக்கு இதமளிக்கும். இவை உள் மனம் அமைதி அடைவதால் கிடைக்கும் நன்மைகளாகும். தனி மனிதனின் மன அமைதியே உலக அமைதிக்கான திறவுகோல்.

தனி மனிதனின் மனம் குமுறும் போது உலக அமைதி ஏற்பட முடியாது. அப்படிப்பட்டவர்கள் பெரிய பதவி வகித்தால், நாடுகளும் சமுதாயங்களும் வன்முறையால் வாட நேரிடும். அதிக மதப் பற்று உள்ளவர்களிடமும் அதே நிலை தான். தன்னை பெரிய மதத் தலைவர் என்று நினைக்கும் பலருக்கு இன்று மன அமைதி இல்லை. அவர்கள் அதிகமாக பிரார்த்தனை செய்கிறார்கள். கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். கடவுளை வேண்டுகிறார்கள். ஆனால் இவை பொதுவான சடங்குகளாக மாறி விட்டன. வாயில் வரும் வார்த்தைகள் வெறுமையாகி விட்டன. பிரார்த்தனை இதயத்திலிருந்து வருவதில்லை. இதயத்திலிருந்து வரும் பிரார்த்தனைக்கு வார்த்தைகள் தேவையில்லை. உங்கள் மூச்சே பிரார்த்தனையாகிறது. நீ மூச்சை இழுப்பது பிரார்த்தனையாகிறது. நீ ஒன்றும் செய்யாமல் அமர்வதும் பிரார்த்தனை தான். நீ நடப்பது பிரார்த்தனை. உன் வாழ்வே பிரார்த்தனையாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கிறது. நாம் செய்யும் அனைத்துமே பிரார்த்தனையாகி விடும்.

(யாரோ ஒருவர் ஜன்னல் வழியாகப் பார்க்கிறார். பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்.) நீங்கள் என்னுடைய ஜன்னல் வழியாகப் பார்க்க வேண்டும். உலகம் வேறு விதமாகத் தெரியும். அந்த ஜன்னலைத் திறந்து வைக்க வேண்டும். அப்போது ஒவ்வொருவரும் அதன் வழியாகப் பார்க்க வேண்டும். (குரு ஜன்னல் போன்றவர்) ‘ஓ ! இது மிகவும் அருமையாக இருக்கிறது. இது ஒரு அழகான நிகழ்வு. இவ்வுலகைக் கொண்டாட பல வாய்ப்புகள் உள்ளன. இன்று விளையாட்டுப் போட்டிகள் நாடுகளிடையே போராகி விட்டன. நாடுகளிடையே போர் விளையாட்டுப் போட்டிகள் போல நிகழ்கின்றன. இப்படிப் பட்ட நிலையில் நம் எல்லோருடைய பொறுப்பும் இதுதான். சமுதாயத்தில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும். நீங்களும் அப்படி நினைக்கிறீர்கள். இல்லையா? நம்மால் இயன்ற வரை நாம் சமுதாய அமைதிக்காக உழைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மன அமைதியோடு வாழ முடியும். மன அமைதி பெற ஞானம் மிகவும் அவசியம். நீங்கள் கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யும் போது அமைதியாக உணரலாம். ஆனால் கண்களை விழித்து மற்ற மனிதர்களோடு செயல்படும் போது மன அமைதியற்ற பழைய நிலை திரும்பி விடுகிறது. எல்லாம் அழியக் கூடியது. மாறக் கூடியது என்ற ஞானம் நாம் அமைதியாக நடுநிலையில் இருக்க உதவுகிறது.

இப்போது நீ கேட்பாய். “எப்போதும் நடுநிலையில் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டுமா ? இது சாத்தியமா?” நான் அப்படிச் சொல்லவில்லை. வாக்குவாதம் செய்யும் போது கோபப்படும் போது உன்னை அறியாமலே நடு நிலையிலிருந்து தவறி சிரித்த முகம் மாறி விடும். அதை ஒரு நாடகம் போல் பார்த்தால் மிகக் குறைந்த நேரத்தில் அதை மறந்து அமைதியடைய முடியும். அந்த நிகழ்ச்சி உன்னை பாதிக்க அனுமதிக்க வேண்டாம். பல சமயங்களில் நடுநிலை தவறுவது நீயல்ல. 

சமுதாயத்தின் பொதுவான மன உணர்வின் காரணத்தால் நீயும் பாதிக்கப்படுகிறாய். உக்ரேன் நாடு முழுதும் கொந்தளிக்கிறது. ஒரு நிலையில்லாத் தன்மை. என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாத நிலை. நீ அங்கு சென்று அங்கு நடக்கும் சம்பவங்களை பார்த்தால் உன் மனமும் பாதிக்கப்படும். நீ ஆப்கானிஸ்தான் நாட்டுக்குச் சென்று பார்த்தாலும் உன் மனம் பாதிக்கப்படும். அதே சமயம் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் போது உன் மனம் அமைதியான சூழலில் மகிழ்ச்சியாக இருக்கும். நீ இங்கு (ஜெர்மன் ஆசிரமத்துக்குள்) நுழையும் போதே ஒரு மாறுபட்ட மென்மையான மன நிலையை உணர்கிறாய். சக்தி உன் மனதுக்கு அமைதியளிக்கிறது. நம் கண்ணோட்டம் மாறுகிறது. இது தான் ஞானம். எனவே காலமும், இடமும் மனதை பாதிக்க வல்லவை. இடமும் காலமும் நம் மன நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயத்தில் ஏனென்ற காரணம் புரியாமல் நாம் மன அழுத்தத்தை உணருகிறோம். உங்களில் பலர் இதை அனுபவித்திருப்பீர்கள். நேற்று இரவு அமாவாசை. நேற்றும் அதற்கு முந்தைய தினமும் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். சில சமயத்தில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் உங்களுக்குத் தூக்கம் வராமல் இருந்திருக்கும். எவ்வளவு பேர் பௌர்ணமி இரவில் தூங்க முடியாமல் இருந்திருக்கிறீர்கள்? அமாவாசை, பௌர்ணமி இரண்டுமே நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காலம மனதைப் பாதிக்கிறது.

நம் நண்பர்கள் நம் மனதைப் பாதிக்கிறார்கள். எதிர்மறை எண்ணமுடையவர் அருகில் அமரும் போது உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணங்கள் வரும். சிறிது நேரத்துக்குப் பின் நீங்களும் எதிர்மறையாகப் பேசுவீர்கள். உங்கள் மகிழ்ச்சி மறைந்து விடும். நம் சகவாசம் நம் மனதை மாற்ற வல்லது. நாம் உண்ணும் உணவு நம் மனதை பாதிக்கிறது. அதிகமான உணவு, அல்லது சாத்வீகமல்லாத உணவு மனதைத் தாக்க வல்லது. அந்தத் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். அதைப் பற்றி அதிகக் கவலை வேண்டாம். நம் மூச்சின் தாக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தத் தாக்கங்கள் அனைத்தையும் நாம் சரி செய்ய முடியும். இடம், காலம் மற்றும் நண்பர்களால் ஏற்படும் தாக்கத்தை ஞானம், தியானம், சுதர்சன கிரியா மற்றும் சான்றோரின் அருகாமையால் சரி செய்து கொள்ள முடியும்.

“வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை வாழும் கலை நமக்கு அளித்திருக்கிறது. நாம் மிகவும் பாக்கியசாலிகள்.” பல நாடுகளில் மக்கள் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மக்களைத் துன்புறுத்தி வாழ்கிறார்கள். மனிதாபிமானமே இல்லாமல் இருக்கிறார்கள். சிறையில் இருக்கும் குற்றவாளிகள் அனைவருக்கும் வாழும் கலைப் பயிற்சி அளித்தால், அவர்களுடைய மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படும். அவர்கள் நல்ல மனிதர்களாக மாறி விடுவார்கள். பல சிறைச் சாலைகளில் சுதர்சன கிரியா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்தப் பயிற்சி அவசியம் என்று நினைக்கிறேன்.

சென்ற ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டிலும் நான் எகிப்து செல்வதற்காக மிக முயற்சி எடுத்தேன். ஏனென்றால் அந்த நாட்டில் வன்முறை சக்திகளால் ஏற்படக் கூடிய தீமைகளை எதிர் பார்த்தேன். பல் வேறு மதத் தலைவர்களை சந்தித்து அவர்களை வன்முறையைக் கைவிடச் சொல்ல விரும்பினேன். ஏனென்றால் சில மதத் தலைவர்கள் சொல்வதை மக்கள் கேட்டு வருகிறார்கள். வன்முறையை தூண்டும் தீவிர மதவாதிகளையும் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர்களை சந்திப்பது கடினமாக இருந்த போதிலும், செல்லும் வழியில் தெருக்களில் வன்முறை பரவியிருந்த போதிலும், சிலரின் உதவியோடு எகிப்து நாட்டின் பல மதத் தலைவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டேன். இந்தியாவில் உள்ள எகிப்து நாட்டின் தூதரகத்துக்கு விசா வேண்டிச் சென்றேன். எகிப்து நாட்டின் தூதர் எனக்கு விசா வழங்க மறுத்து விட்டார். “நீங்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர். எகிப்து நாட்டில் வன்முறை பரவியிருக்கும் இந்த சமயத்தில், நீங்கள் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது. உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் எங்களுக்குப் பிரச்சினையாகி விடும். இந்தியாவில் எங்கள் தூதரகத்தை மூட நேரிடலாம்.” என்று சொன்னார்.

“எனக்குப் பாதுகாப்பு இருக்கிறது. எனக்கு ஏதும் ஆகாது. என்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும் “ என்று நான் அவரிடம் சொன்னேன். இருந்தாலும் எகிப்திய தூதர் “என்னை மன்னித்து விடுங்கள்“ என்று சொல்லி விசா கொடுக்க மறுத்து விட்டார். நாங்கள் சிலர் எகிப்து நாட்டுக்கு சென்று அங்குள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்களையும் வன்முறையாளர்களையும், அரசியல் வாதிகளையும் சந்திக்கத் திட்டமிட்டிருந்தோம். 3 நாட்கள் அங்கு தங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் எனக்கு விசா கிடைக்கவில்லை. நாம் முயற்சியை கைவிடக் கூடாது. அது எளிதானதல்ல. விடா முயற்சியோடு அந்த திசையில் செல்வது அவசியம்.
ஒரு சாரார் மற்றொரு சாராரைப் பற்றி அறிந்து கொள்ளாததால் பிரச்சினை ஏற்படுகிறது. அவர்கள் கெட்டவர்கள் அல்ல. என் கண்ணோட்டத்தில் அவர்கள் அறியாமையால் பாதிக்கப் பட்டு கெட்ட செயலில் ஈடுபடுகிறார்கள். இரு சாராருக்கிடையில் உள்ளவர்களும் அறியாமையால் அவர்களை வன்முறைக்குத் தூண்டுகிறார்கள்.

மற்றொரு பக்கம் போதை மருந்தால் வரும் தீமைகள். பல தாய்மார்கள் என்னிடம் வந்து தங்கள் பிள்ளைகள் போதை மருந்துக்கு அடிமையாக இருப்பதைச் சொல்லி, நான் அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அழும்போது என் இதயம் நொறுங்கி விடுவது போல் உணர்கிறேன். இதற்காகம் நாம் என்ன செய்ய முடியுமென்று பார்க்க வேண்டும். போதை மருந்துப் பழக்கத்தால் பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கிறார்கள். ஆகவே நம் பிள்ளைகளை மிகச் சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவது அவசியம்.

கேள்வி பதில்கள்

குருதேவா ! என்னிடம் மிகவும் அன்பு செலுத்தும் வாழ்க்கைத் துணைவர் இருக்கிறார். நான் அவருக்கு ஏற்றபடி இல்லை என்று எண்ணுகிறேன். அவருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில்லை. உண்மையில் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதா ? அல்லது நான் அன்பால் சபிக்கப்பட்டிருக்கிறேனா ?

குருதேவர்: நீ ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்று வருத்தப்படுகிறாய்.இப்போது சமயம் கடந்து விட்டது. எனவே அதைப் பற்றிக் கவலைப்படுவதால் ஒன்றும் ஆகாது. திருமணம் என்பதே விட்டுக் கொடுப்பது தான். நீயும் விட்டுக் கொடுத்து வாழவேண்டும்.ஒரு அருமையான வாழ்க்கைத் துணை உனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஒரு வேளை மிகவும் கெட்டவர் வாழ்க்கைத் துணவராய் ஆகியிருந்தால் என்ன நிலைமையில் இருப்பாய் என்று கற்பனை செய்து கொள். உன் மேல் பழி சுமத்திக் கொள்வதும், உன் துணைவரின் மேல் பழி சுமத்துவதும் ஒன்றே. உன் மேல் பழி சுமத்திக் கொள்ளும் போது, “நான் கெட்டவன் (கெட்டவள்) இப்படியே இருந்து விடுகிறேன். என்னை மாற்றிக் கொள்ள அவசியம் இல்லை“ என்று சொல்கிறாய்.

உன் துணைவர் மேல் பழி சுமத்தும் போது “அவர் (அவள்) கெட்டவர். மாறவே மாட்டார்.” என்று நினைக்கிறாய். இரண்டு நிலைகளிலும் சரியாகச் செயல் பட முடியாது. ஒரு முறை நான் ஒரு சிறுகதை படித்தேன். மரணத்துக்குப் பின் ஒரு கனவான் பிரிந்து செல்லும் போது, அவருடைய செல்ல நாயும் அவரோடு சென்றது. “சொர்க்கம்” என்று எழுதியிருந்த கதவை அடைந்த போது அங்கிருந்த காவலர் “நீங்கள் மட்டும் உள்ளே வரலாம். உங்கள் நாய்க்கு உள்ளே வர அனுமதியில்லை” என்று சொன்னார். அதற்கு அந்த கனவான், “நாய் என்னிடம் மிக நன்றியோடு இருந்திருக்கிறது. அதை நான் எப்படிப் பிரிவேன்?“ என்று கேட்டார். காவலர் “சொர்க்கத்துக்குள் நாய்களுக்கு அனுமதி கிடையாது” என்று சொன்னார். அந்த கனவான் அங்கு நுழையாமல், தன் நாயுடன் பயணமானார்.

“நரகம்” என்று எழுதியிருந்த கதவருகில் சென்றார். அங்கிருந்தவரிடம் நான் என் நாயையும் அழைத்துக் கொண்டு உள்ளே வரலாமா ? என்று கேட்டார். காவலர் “தாராளமாக வரலாம்” என்று கதவைத் திறந்தார். அக் கனவான் நுழைந்தது உண்மையில் சொர்க்கமாகும். இது “சொர்க்கம்” என்றால் அங்கு “சொர்க்கம்” என்று எழுதியிருந்த இடம் எப்படி இருக்கும் என்று வியந்தார். அக்காவலர் “அந்த இடம் உண்மையில் நரகம் என்றும் அங்கு நுழைபவர்களுக்கு ஒரு பரிட்சை வைப்பது வழக்கம்” என்று சொன்னார்.

யார் மற்றவர்களை கைவிடுகிறார்களோ அவர்களுக்கு நரகம் தான் கிடைக்கும். வாயிலில் “சொர்க்கம்” என்று எழுதியிருந்தாலும் அது உண்மையில் நரகம். நீங்கள் உங்கள் நாயைக் கைவிடாமலிருந்ததால் உங்களுக்கு சொர்க்கத்துக்குள் அனுமதி கிடைத்தது.” என்று சொன்னார்.
எனவே நீ உன்னை கெட்டவன் (கெட்டவள்) என்று எண்ண வேண்டாம். நீ மாறி விடு. ஏன் உன்னால் உன்னை மாற்றிக் கொள்ள முடியாது ? உன் வாழ்க்கைத் துணைவருக்காக சிறுசிறு விஷயங்களை விட்டுக் கொடுக்கலாம். எப்போதுமே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சில சமயங்களில் விட்டுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும் போது நீ உன்னைக் கெட்டவனாகப் பார்க்க மாட்டாய். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா ?


உன்னையறியாமல் உன் வாயில் வேண்டாத வார்த்தைகள் வந்து விட்டாலோ, அல்லது உன் நடத்தை சரியில்லாமல் இருந்தாலோ, அதை நினைத்து நினைத்து வருந்தத் தேவையில்லை. அதை ஒரு கனவு போல் நினைத்து மறந்து விட்டு மேலே செல். அதனால் வாக்குறுதியைக் காத்து தற்சமயத்தில் வாழ வேண்டும் என்று சொல்வேன். தற்சமயத்தில் வாழ்ந்தால் மட்டும் போதாது.