உங்கள் ஆன்மீகப் பசியைத் திருப்திப்படுத்துதல்

ஜூலை 12, 2014

பெங்களூர், இந்தியா

(ஜெய் குருதேவ், இயற்கை வேளாண்மை முறையில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் திரு.கான் அவர்கள் இன்று நம்மிடையே இருக்கின்றார். அவர் அருகிலுள்ள மாலவல்லி என்னும் கிராமத்தில்  ஏறக்குறைய 800 ரக நெற்பயிர்களை அறுவடை செய்துள்ளார். அவருடைய கொள்ளுத் தாத்தா காலத்தில் அவர் குடும்பத்தினர் திப்பு சுல்தானிடமிருந்து நிலத்தைப் பெற்றனர். அந்த காலத்தில் இருந்த அனைத்து வகை மாமரங்களையும் அவர் இன்று வளர்த்து வருகின்றார். ஏறக்குறைய 120 வகை மாமரங்கள் உள்ளன. 


இயற்கை முறை வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் பலர் இங்கே கர்நாடகாவில் உள்ளனர். குருதேவரின் ஆசிர்வாதத்தை பெற வந்திருக்கும் அவர்களை நாங்கள் வரவேற்கின்றோம். கோதுமை மற்றும் நெற்கதிர்களிலிருந்து இந்தப் பாய் எவ்வளவு அழகாக செய்யப்பட்டிருக்கின்றது என்று பாருங்கள். மிகப் புதுமையாகவும் உள்ளது. இவற்றிலிருந்து நீங்கள் தோரணங்கள் செய்து உங்கள் வீடுகளில் வைத்தால் பறவைகள் பல வந்து நெல்மணிகளை ஒவ்வொன்றாக எடுத்து உண்ணும். நீங்கள் அனைவரும் இது போன்ற நற்செயல்களை  செய்ய வேண்டும்.

இளைஞர்கள் விவசாயத்துறைக்கு வந்து இதுபோன்ற புதுமைகளைக் கொண்டுவர வேண்டும்.  அப்போதுதான் இந்தியா முன்னேறி செல்ல முடியும் இந்த விவசாயிகள் பல்வேறு வகையான விதைகளைக் கொண்டுவந்திருப்பது மிகவும் போற்றத்தக்க ஒன்றாகும். அவர்கள் 700 முதல் 750 வகை அரிசி ரகங்களை  பயிரிட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு ரகங்களை பாதுகாப்பதோடு மட்டுமன்றி பலரக விதைகளை புதுப்பித்துள்ளனர். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு சிறப்பாக செயல்புரிவது மிகச்சிறந்த விஷயமாகும்.  நம் நாடு விவசாயத்தில் நிலைத்து நிற்பதற்கும் அனைவருக்கும் உணவு கிடைப்பதற்கும்  இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவேண்டியது அவசியம். 

கேள்வி பதில்கள்

நான் வாழும் கலையின் பயிற்சியின் போது வெறுமையாகவும் காலியாகவும் உணர்கின்றேன். ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு ஆசைகளும் கவலைகளும் என்னுள் நிறைந்திருப்பதை அறிகின்றேன். எப்போதுமே நான் வெறுமையாகவும் காலியாகவும் இருப்பது எப்படி?

ஒவ்வொரு நாளும் சாப்பிட்டுக்கொண்டு இல்லாமல்  வாழ்நாள் முழுவதற்கும் ஒரே தடவையாக சாப்பிடுவது எப்படி என்று கேட்பது போல் உள்ளது. ஒவ்வொரு நாளும் சமைத்து சாப்பிடுவது என்பது மிகவும் சலிப்பான வேலை தான்.   நீங்கள் இன்று சாப்பிடுகின்றீர்கள்.  மீண்டும் நாளை பசிக்கின்றது.  காலையில் சாப்பிடுகின்றீர்கள். மீண்டும் மாலையில் பசிக்கின்றது. நீங்கள் மொத்தமாக ஒரே முறை சாப்பிட்டு முடித்துவிட முடியாது.  ஏனென்றால் உடலுக்கு அதற்கென்று தனி நியதி உள்ளது. உங்கள் மனதிற்கும் அதே போல் தான்.  ஒரே  ஒருமுறை பொழுதுபோக்கு என்பது போதாது. வாழ்நாள் முழுவதற்கும் ஒருமுறை ஒரே ஒரு திரைப்படம் பார்த்தால் போதுமென்று நான் சொன்னால் நீங்கள் என் பேச்சைக் கேட்பீர்களா?  கேளிக்கை மீண்டும் தேவைப்படுகின்றது.  உடலுக்கு மீண்டும் மீண்டும்  ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது.  பசியைத் தணிக்க நாம் உணவு உண்கின்றோம். தாகம் தணிக்க தண்ணீர் குடிக்கின்றோம். சோர்வாக இருக்கும்போது ஓய்வெடுக்கின்றோம். ஆன்மீகமும் அதே போன்றது தான்.  ஆன்மீகப் பசியைத் தணிக்க நாம் மீண்டும் தியானம் செய்வது அவசியம்.   

பொதுவாக நம் உடல் உழைப்பின்போது நம் இருதயத் துடிப்பு அதிகரிக்கின்றது.  ஆனால் நாம் யோகப்பயிற்சி செய்யும் போது  இருதயத்துடிப்பு  அதிகமாவதைப்போல் உணர்வதில்லை.  குருதேவ், தயவு செய்து இதற்கு விளக்கம் அளியுங்கள். 

உடற்பயிற்சியின்  போது  உங்கள் ஜீவத்துவ பரிணாமம் மேலே செல்கின்றது. அது அவசியம்.  ஆனால் நீங்கள் ஓய்வெடுக்கும் போது  உங்கள் இதயத்துடிப்பு குறைகின்றது. உங்களுக்கு அந்த ஓய்வும் அவசியம். நீங்கள்  வேலை, ஓய்வு  இரண்டையும் சம நிலையில் வைத்திருக்க வேண்டும்.அப்போது  உங்கள் ஆயுள் அதிகரிக்கும்.