எழுதப்படாத விதி

புதன், 9 ஜூலை, 2014

வடக்கு கரோலினா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்


(இது மௌனத்தின் மூன்று நிலைகள் என்ற பதிவின் தொடர்ச்சி...)

வினையாற்றுபவர்களின் வகைகளைப் பற்றி பகவத் கீதையில் அழகாக விவரிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவர் கூறுகிறார், ‘முக்த-சங்கோ நஹம்-வாதி, த்ருதி-உத்ஸாஹா-சமன்விதாஹ் சித்தி-அசித்யோர் நிர்விகாராஹ், கர்தா சாத்விக உச்சையதே’. (18.26) ஒரு செயலை செய்வதில் மூன்று விதமாக வினைபுரிபவர்கள் உண்டு.

1.        சத்வ வினைபுரிபவர்
2.        ராஜச வினைபுரிபவர்
3.        தாமச வினைபுரிபவர்

இந்த கணத்தில் நீங்கள் இதில் எந்த வகையைச் சேர்ந்தவர் என்று பார்க்க வேண்டும். எல்லா நேரமும் ஒன்று போல இருக்காது, இது மாறிக்கொண்டே இருக்கும். யார் சத்வ வினைபுரிபவர்? வேலை நடக்கிறதோ இல்லையோ,அதில் வெற்றியோ,தோல்வியோ,அதிலுள்ள உற்சாகத்தை இழக்காதவர் யாரோ அவரே சத்வ செயலாற்றுபவர்.த்ருதி என்றால் உங்களை மேலே உயர்த்தித் தாங்கிப்பிடிக்கும் ஒன்று.உயிரையும் பிராண சக்தியையும் தக்க வைக்கும் அந்த சக்தி உள்ளவர்கள் சத்வ வினைபுரிபவர்கள்.

நாம் காணும் இந்த இயல் உலகம் சூக்ஷும உலகால் ஆளப்படுகிறது. இந்த இயல் உலகம் சூக்ஷும உலகிலிருந்து உதித்தே பரிணமித்திருக்கிறது. உங்களுக்குள் உள்ள அந்தத் தீ (பேருணர்வு) உங்களை இந்த உலகிற்கும் சூக்ஷும உலகிற்கும் உண்டான இணைப்பை ஏற்படுத்தித் தருகிறது. இரண்டாவது வகையினர் ராஜச வினைபுரிபவர்கள். எப்போதும் விளைவைப் பற்றி மட்டுமே கருதுபவர்கள். ஏதாவது நல்ல விளைவு ஏற்பட்டுவிட்டால் மேற் கூரை தொடுமளவு துள்ளுவர், தகுந்த விளைவு ஏற்படவில்லையானால், அதனோடு அப்படியே கீழே போய்விடுவர், அந்த அளவுக்கு விளைவுகளின் மீது மட்டுமே கருத்தை வைத்திருப்பவர்கள். விஷயங்கள் நடக்கவில்லை என்றால் தாம் முழுதும் அழிந்தே போய்விட்டதாக நினைப்பார், அது நடந்துவிட்டாலோ, அவரது தான் என்ற அகம்பாவம் வலுப்பெற்று, ‘பார் இதைச் செய்துவிட்டேன்’ என்கிறது. இது ராஜச வினையாற்றுபவர். 

அவர் எல்லாவற்றையும் அதீத ஆர்வத்தோடு செய்தாலும், அந்த அதீத ஆர்வத்தோடு ஏராளமான ராஜசமும் உண்டு. ராஜசம் என்றால், நிறைய கோபம், அகங்காரம், சவால் தன்மை, போன்றவை. ஏதோ ஒரு வேலையை யாரவது செய்ய மறுக்கும் போது, அவரிடம் நீங்கள் உங்களால் முடியாது என்று சவால் விடும்போது, அந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதாக கூறுவதை கேட்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கும். இந்தச் சவால் தன்மை கொண்டவர்களே ராஜச வினையாற்றுபவர்கள். எல்லாம் எப்போதும் தீயவை என்று எண்ணுபவர் தாமச வினையாற்றுபவர்கள். ‘ஓ, 10  வருடங்களுக்கு முன் நான் மின் பொறியாளருக்கு படித்திருக்க வேண்டும், தவறு செய்துவிட்டேன்’, என்று எப்போதும் வருந்துபவர். இனியவரே, பத்து வருடங்கள் ஓடிப்போய்விட்டது, நீங்கள் இப்போது வருந்தி என்ன பயன்.

பல நேரங்கள் தாய்மார்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள்,‘கடந்த பத்து வருடங்களாக கூறி வருகிறேன்.’ அல்லது மனைவி கணவனைப் பார்த்து கூறுவார், ‘திருமனமாகி முப்பது வருடங்களாகி விட்டது, இன்னும் இப்படியே இருக்கிறீர்கள்’. விஷாதீ என்றால் வருத்தம் நிறைந்த என்று பொருள். தீர்க்க சூத்ரி என்பவரிடம் எதைக் கூறினாலும், ‘ஓ, அது முடியாது. மிகக் கடினம் என்பது உங்களுக்குத் தெரியுமா,’ என்று கூறுவார். சுற்றி சுற்றிப் பேசி, ஏன் முடியாது என்பதற்கு விளக்கம் கூறுவார்கள். எல்லாமே கடினம்,எதிலுமே நம்பிக்கை இல்லை என்றே கருதுவார்கள். இது தாமச வினைபுரிவோர். இந்த மூன்று வகையினர் தான் வினை புரிவோர்கள்.  இந்த கணத்தில் உங்களுக்குள் எந்த வகை வினை புரிபவர் இருக்கிறார்? எப்படி தாமசத் திலிருந்து ராஜசம், பிறகு சத்வ வினைபுரிபவர் என்று முன்னேறுவது? இதுதான் சவால், அதற்கு இதுதான் பாதை.

வேலை செய்பவர்கள் இந்த மூன்று வகையினர்தான். இந்த கணத்தில் நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள் என்று பார்க்க வேண்டும். இது எல்லா நேரமும் அதே வகையில் இருப்பதில்லை, மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள் என்று கண்டுகொண்டால், நீங்கள் மேலே செல்லலாம். இல்லையென்றால் அதிலேயே சிக்கி திரும்பத் திரும்ப அதையே செய்துகொண்டிருப்பீர்கள். கடந்த முப்பது வருடங்களாகக் கூறிவருகிறேன், ‘காலியாகவும் வெறுமையாகவும் ஆகிவிடுங்கள்,’ என்று யாருமே அதைச் செய்யவில்லை. கடந்த முப்பது வருடங்களாக, ‘புன்னகை செய்யுங்கள் புன்னகை செய்யுங்கள்’ என்று தலையை முட்டிக் கொள்கிறேன், என் முன்னே புன்னகை செய்துவிட்டுப் பிறகு வழக்கம் போல சிரிப்பதேயில்லை. ‘எல்லோரிடமும் அன்பாயிருங்கள், விடுதலையாய் இருங்கள், உற்சாகமாய் இருங்கள்’ என்று கடந்த முப்பத்தைந்து வருடங்களாக கூறிவருகிறேன், ஆனாலும் எல்லோரும் எல்லோரிடமும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்! என்ன பயன்? நான் போய் ஆனந்தமாக உடற்பயிற்சி செய்யப் போகிறேன். என் வேலையைப் பார்க்க விடுங்கள். இந்த மக்களை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? யாரும் தேறுவதாயில்லை! இந்த ஞானத்தின் மதிப்பை யாருமே உணரவில்லை. இந்த உலகம் மாறப் போவதில்லை. இது முடியவே முடியாது. இவை எல்லாம் வினைப் பயன், ஏதும் செய்ய முடியாது. யாரையும் பார்க்கமலிருப்பது மேல். பேசாமல் இமயமலைக்கு சென்று எங்காவது அமர்ந்து பறவைகளின் இனிய கானத்தையும், நீர் விழும் சலசலப்பையும் கேட்டவாறு நிறைவாய் இருந்துவிடுகிறேன். ஏன் கவலைப் படவேண்டும்? இவ்வளவு வருடங்களாக எவ்வளவோ முயற்சி செய்தும் மக்கள அப்படியே தான் இருக்கிறார்கள்! எதுவுமே மாறுவதில்லை.

இது விஷாதீ, வருத்தத்தோடு இருப்பது; எதைச் செய்தாலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை, எனவே செய்து என்ன பயன்தீர்க்க சூத்ரி என்பது, ‘சரி, இந்தச் சவாலை ஏற்றுகொள்வோம், இதை முடிப்போம்’. ஆனால் அங்கேயே இருக்க முடியாது ஏனென்றால் திரும்ப தாமச த்ருதிக்கு வந்துவிடுவீர்கள். ராஜசம் ஒரு பாலமாக மட்டுமே இருக்க முடியும். பாலத்தின் மீதே இருக்க முடியாது, அங்கு வாழமுடியாது. கடந்து செல்ல வேண்டும். தாமசத்திலிருந்து விலக மட்டுமே ராஜசம்.

கீதையில், அர்ஜுனரிடம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘உன்னைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? இந்த போரைவிட்டு ஓட விரும்புகிறாயா? நீ ஒரு கோழை என்று நினைப்பார்கள். கோழை என்ற பட்டதை விட இறப்பது மேலானது.’ மற்றவர்களின் கருத்துக்கு உதை பந்தாக இருக்காதே என்று கூறவில்லை, ஏனென்றால் அந்த நேரத்தில் மனத் தாழ்வு கொண்டு இருப்பவரை செயலுக்குத் தள்ள வேண்டிய சூழ்நிலை அது. பிறகு அவர் கூறுகிறார், ‘பார், நீ தோற்கிறாயா வெற்றிகொள்கிறாயா என்பது பொருட்டல்ல. இந்த உலகில் எதுவுமே கச்சிதமானது அல்ல. வெற்றி பெறுவதை பற்றி, எதையுமே கச்சிதமாக ஆக்குவதைப் பற்றி நீ எவ்வளவு ஆதங்கம் கொண்டிருந்தாலும், பிறகு நீ நிச்சயம் வருத்தப்படப் போகிறாய்.’ இது எழுதப்படாத விதி.

எப்படி தாமச வினையிலிருந்து, ராஜச வினைக்கும் பிறகு சாத்விக வினைக்கும் செல்வது? இதுதான் நமக்கு முன்னே இருக்கும் சவால், அதற்கு இதுதான் பாதை. நீங்கள் எந்த வகையிலிருக்கிறீர்கள் என்று உணர்ந்தால், நீங்கள் முன்னே செல்லலாம். தங்கள் குழந்தைகள் மிக சரியாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அப்படி ஒரு கவனத்துடன் வளர்த்தாலும், அவர்கள் வளர்ந்த பின்னர் அதையெல்லாம் எதிர்த்து வேறு பாதைக்கு செல்கிறார்கள். செயலின் விளைவின் மீது பற்று வைக்கும் போது இது தான் நடக்கிறதுஇப்படிப்பட்ட நல்ல வேலைகளை செய்தபின்னர் பலர் கூறுகிறார்கள், ‘இது ஒரு நன்றியில்லாத வேலை. யாரும் எனக்கு நன்றி கூறவில்லை’. இதனால் வேதனை கொண்டு மனத்தாழ்ச்சி கொள்கிறார்கள்.

‘எனக்கு அவ்வளவு நல்ல மனது, நான் எவ்வளவோ நல்ல வேலைகள் செய்தும் என்னை யாரும் கண்டுகொள்ளவே இல்லை’. இந்த ஒரு எண்ணம் போதும், உங்களைப் பல நாட்கள், மாதங்கள் மற்றும் வருடங்கள் உங்களை கீழே தாழ்த்த. ‘நான் அவ்வளவு நன்றாக எல்லாவற்றையும் செய்தேன். எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்தேன், ஆனால் எனக்கு என்ன ஆனது? இந்த உலகம் கொடூரமானது, இந்த மக்கள் கொடூரமானவர்கள், கடவுளே கொடூரமானவர்.’ முடிந்தது! அவ்வளவு தான்! உலகில் இப்படி நடப்பதை பார்க்கவில்லையா?  இப்படி ராஜச இயல்பிலோ அல்லது தாமச இயல்பிலோ இருந்தால், இப்படிப்பட்டவர்களைத்தான் நீங்கள் கவர்கிறீர்கள். அவர்களெல்லாம் வந்து இதை தான் சொல்வார்கள், ‘கடவுள் மிக மோசம். அவர் மிகக் கொடுமையானவரும் கூட. அவர் உங்களிடம் கருணையே காட்டவில்லை. உங்களுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது’. அவர்கள் உங்களுக்கு இப்படித்தான் ஆறுதல் கூறுவார்கள். தாமச பிரவ்ரித்தி தாமச குணம் கொண்ட மக்களைத்தான் தம்மைச் சுற்றி கவர்வார்கள். ராஜசத்திற்கும் இதேதான்.

ஒன்றாக அமர்ந்து புலம்பும்போது அவர்களுக்குள் ஒரு ஒத்திசைவு. வேறு யாரவது வந்து சொன்னால், ‘அது அப்படியெல்லாம் இல்லை.’ என்று ஒதுக்கித்தள்ளுவார்கள். அவர்களால் அதைத் தாள முடியாது. அவர்களுக்கு இதெல்லாம் புரியவில்லை என்று நினைப்பார்கள். இதுதான் உண்மை. மோசமான நிலையில் இப்படித்தான் நடக்கும். யாராவது வந்து, ‘கவலை வேண்டாம், எல்லாம் சரியாகி விடும்’, என்று சொன்னால் உங்களால் அவர்கள் சொல்வதை ஏற்றுகொள்ள முடியாது. அவர்களுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றால் அவர்களுடன் உங்களால் சேர முடிவதில்லை. எனவே, நீங்கள் உங்கள் வட்டத்துக்குள்ளேயே இருக்கிறீர்கள், அது மேலும் உங்களுடைய அந்த மன நிலைக்கு எண்ணெய் ஊற்றி எரியவைக்கிறது1985 அல்லது  1986 இருக்கும், இத்தாலியில் இருந்தேன். பார்ப்பதற்கு நன்றாக இருந்த சுமார் 50 இளைஞர்களைக் கொண்ட மறுவாழ்வு மையம் அது. மது மற்றும் போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மீட்கும் சிகிச்சை பெற்றுகொண்டிருந்தனர். அந்தக் குழுவினுடன் கலந்துரையாட அழைக்கப்பட்டிருந்தேன், எனவே அங்கு ஒரு பயிற்சி வகுப்பு எடுத்தேன்.

அந்த வகுப்பிற்குப் பிறகு அவர்கள் பிரகாசமடைந்தனர். அவ்வளவு மகிழ்ச்சியாய், திடீரென்று எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு அவ்வளவு சுதந்திரமாய் உணர்ந்தனர்! அந்த உள் விடுதலை அவர்களுக்குக் கிடைத்தது. அந்த இல்லத்தின் உரிமையாளர் மிகவும் வருத்தமடைந்தார். ஏனென்றால் அவர் அந்தக் குழுவினரிடம், ‘இந்த உலகம் மிகக் கொடூரமானது’, என்று சொல்லிவந்திருக்கிறார். உலகத்திற்கெதிராக ஒரு பய உணர்ச்சியையும் வெறுப்பையும் ஊட்டிவைதிருந்தார். அப்படியெல்லாம் இல்லை என்பதை இப்போது அவர்கள் உணர்ந்து விட்டனர். முதலில், அவர்களுடைய கேள்விகளெல்லாம், ‘ஏன் மக்கள் தீயவர்களாக இருக்கிறார்கள், ஏன் இப்படி கொடுமையாக இருக்கிறார்கள்?’

ஆனால், வகுப்பிற்குப் பிறகு அது உண்மையல்ல என்று அறிந்துகொண்டார்கள். அதனால் இரண்டே நாளில் எவ்வளவு நிம்மதியும் விடுதலை உணர்வும் மன உயர்ச்சியும் பெற்றார்கள் என்பதை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அந்தக் குழுவின்மீது தனக்கிருந்த அதிகாரமும் உரிமையும் முழுமையாகப் போய்விட்டது என்று அந்த இல்லத்தின் உரிமையாளர் மிகவும் வருந்தினார். முதல் நாளில் அவர்தான் அறிமுகம் செய்துவைத்து இந்த வகுப்பின் பலன்களை விவரித்தார். ஆனால் மூன்றாம் நாள் நேரெதிராகப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் குரல், நடத்தை எல்லாம் முழுதுமாக மாறிவிட்டிருந்தது. ஏனென்றால், மக்கள் மாறிவிட்டிருந்தனர். தங்களுடைய சத்வகுணம் அதிகமாகிவிட்டதால் எதிர்மறை செய்திகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

த்வகுணம் அதிகமாகும் போது உங்களால் எதிர்மறை செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
எப்போதும் லல் லல்லா என்று பாடியபடி உண்மையான நிலவரத்தைக் காணாமல் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. உண்மையான நிலவரத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல இது, உங்கள் சக்தியையும் உற்சாகத்தையும் இழக்ககூடாது என்பதைப்பற்றியது. மனதில், ‘இது இப்படித்தான்’, என்று கருத்துக்களை உருவாகிக்கொள்ளக் கூடாது என்பதைப் பற்றியது. ஆனால் அது உண்மையில் என்ன என்பதை உணர்வது, இப்படியும் இருக்கலாம் அல்லது வேறுவிதமாகவும் இருக்கலாம்,’ என்று அராய்ந்து அறிவது.

கடை வீதிக்குச் சென்றீர்களானால் ஏராளமான கடைகளைப் பார்க்கலாம். ஒரு கடை நன்றாக நடக்கும் ஆனால் அடுத்த கடை அப்படி இல்லாமல் இருக்கும். ஏன்? ஒரே இடம், ஒரே வீதி, அடுத்தடுத்த கடைகள், ஒன்று இலாபம் அடையும்போது மற்றது இழப்பில் இருக்கும். ஏன்? இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் இந்த இயல் உலகம் சூக்ஷும உலகால் ஆளப்படுகிறது. ஒரு எளிய விளக்கம் வினைப்பயன், அதை அப்படியே விட்டுவிடுகிறோம். சில சமயம் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மேலே நகர்ந்து விடுகிறோம், ஆனால் அது வெறும் வினைப்பயன் மட்டுமல்ல. ஆம், அது ஒரு விளக்கம் தான், ஆனால் இன்னும் சூக்ஷுமமாகச் சென்று பார்த்தோமானால், இங்கு நடக்கும் அனைத்தும் வேறு ஒரு சக்தி மண்டலத்திலிருந்து, இருப்பு மண்டலத்திலிருந்து பேருணர்விலிருந்து வருவதை அறியலாம். அந்தப் பேருணர்வில் எழும் முனைப்புதான் இங்கு வெளிப்பாடாக வருகிறது. அங்கே நம் கவனத்தை வைக்க நாம் நம் கவனத்தை நமக்கு உள்ளே திருப்ப வேண்டும்.

அக்னி ஒரு இணைப்பு. அக்னி என்பது வெறும் நெருப்பு அல்ல, உங்களுக்குள் இருக்கும் நெருப்பு, உங்களுக்குள் உயிராக இருக்கும் பேருணர்வு. அந்த நெருப்புதான் உங்களுக்குள் இருக்கும் இறந்தகாலத்தை எரிப்பது, கடந்த காலத்தில் நீங்கள் உங்கள் செயல்கள் மூலம் சேர்த்து வைத்த குப்பைகளை எல்லாம் எரிப்பது.


‘அக்னி முக வை தேவஹா’ என்று சொல்லபடுகிறது, அதன் பொருள், எல்லா தேவதைகளும் அக்னியின் மூலமே தொடர்புகொள்ளப்படுகிறார்கள். அதை இயல் விளக்கமாகக் கூறும்போது சமர்ப்பணங்களை அக்னியில் போட்டால் மட்டுமே அது கடவுளை அடையும் என்று காண்பிக்கிறார்கள். அப்படி அல்ல அது. ஞானமே அந்த நெருப்பு. எல்லா வெளிப்பாட்டிற்கும் மூலமான அந்த சூக்ஷும உலகோடு உங்களை இணைப்பது உங்களுக்குள் இருக்கும் அந்த நெருப்பே.