உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு!!

21 ஜூலை 2014, கனடா



குருதேவ், என்னுடைய 'தான்' என்னும்  அகங்காரமும், கோபமும் என்னைச் சுற்றி இருக்கும் மற்றவர்களை புண்படுத்தாமல் எவ்வாறு காத்துக் கொள்வது?

குருதேவ்: நீங்கள் நுண்ணுணர்வுடன், பிறரை புண்படுத்தக் கூடாது என்று எண்ணினால் அதுவே போதும். ஆனால் சில சமயங்களில் எவ்வளவோ எச்சரிக்கையுடன் இருந்தாலும் சிலர் மனம் புண்படுவார்கள். அதற்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது. சிலர் நீங்கள் எது கூறினாலும் வருத்தப்படுவார்கள். அவர்களை புகழ்ந்தாலும் பழித்துரைப்பதாக எண்ணிக் கொள்வர். நேர்மையான பின் கருத்துரையைக் கூறினாலும் அவர்கள் நீங்கள் கொடுமையும் முரட்டுத் தனமும் நிறைந்த சொற்களை கூறுவதாகவே எண்ணுவர்.

சிலர் அத்தகைய மனப்போக்குள்ளவர்களாகவே இருந்து வருந்துவர். நீங்கள் அவர்களை ஒரு விருந்துக்கு அழைத்தால், நீங்கள் பகட்டாக காட்டிக் கொள்வதற்கா கருதி வருந்துவர். அவர்களை அழைக்காவிட்டால் நீங்கள் அவர்களை அலட்சியம் செய்துவிட்டதாக எண்ணி வருந்துவர். என்ன செய்வீர்கள்? எனவே அதை பற்றிக் கவலைப்படாதீர்கள். தங்கள் மனக்காயத்திற்கு அவர்கள் தாங்களாகவே தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்கள் தரப்பிலிருந்து கடுமையான சொற்கள் எதையும் கூறாதீர்கள். நீங்கள் பண்பாக இருங்கள். ஆதரவு காட்டுங்கள்.அவ்வளவு தான் நீங்கள் செய்ய முடியும்.அவர்கள் மனதில் என்ன உள்ளது என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் லட்சக்கணக்கான மக்கள் நம்மை சுற்றி இருக்கின்றார்கள், அவர்களது மனங்கள் வெவ்வேறு திசைகளில் இயங்கிக் கொண்டிருக்கும், அதை பற்றி நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. ஒவ்வொருவரையும் மகழ்ச்சியுள்ளவராக்குவதும் சாத்தியம் இல்லை.

ஒருவரையொருவர் விரும்பாத இருவர் இருந்தால், அவர்களில் ஒருவரிடம் நீங்கள் பேசினால் மற்றவர் தானாகவே உங்கள் எதிரி ஆகி விடுவார்! நீங்கள் ஒருவரிடம் சாதரணமாக பேசிக் கொண்டிருந்தாலும் கூட, தான் விரும்பாதவரிடம் நீங்கள் பேசுவது, அடுத்தவரை எரிச்சல் படுத்தக்கூடும். அது தான் உலகங்கிலும் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. காஜாவில் என்ன நிகழ்கின்றது? காஜாவில் உள்ள யாரைப் பற்றியும், "இது தவறல்லவா? பல குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றனரே" என்று அனுதாபப்பட்டு பேசினாலும், இஸ்ரேல் அதை விரும்பாமல் எதிர்க்கின்றது. இஸ்ரேல் செய்வது சரியே என்று கூறினால் காஜா வருத்தப்படுகின்றது. அப்போது என்ன செய்வது? அதனால் உலகில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. உங்கள் மனசாட்சி கூறுவதை கவனித்து, உங்கள் தரப்பிலிருந்து அதிக பட்சம் யாரையும் புண்படுத்தாமல் கவனித்துக் கொள்ளுங்கள். அது போதும். பிறருடைய உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் நீங்கள் உதை பந்தாக இருக்க முடியாது.

சமஸ்க்ரிதத்தில் ஒரு சொற்தொடர் உண்டு, "இன்பமும் துன்பமும் பிறர் கொடுப்பதில்லை. நீங்களே உங்கள் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் உருவாக்கிக் கொள்கின்றீர்கள், யாரும் அதைத் தடுக்க முடியாது.

தங்களது சக்தியின் ரகசியம் என்ன?

குருதேவ்: அதை தான் நான் அனைவருடனும் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். அது சக்தியின் மூலாதாரமான ஆத்மாவுடன் உங்கள் தொடர்பு ஆகும். எப்போதுமே நீங்கள் தொடர்பு கொண்டிருக்கின்றீர்கள்.

குருதேவ், எவ்வாறு அணு கழிவினை நிறுத்துவது? தற்போது, , ஜப்பானில் நிகழ்விற்குப் பின்னர் சமுத்திரமும் மக்களும் பாதிக்கப்படத் துவங்கிருக்கின்றார்கள். எவ்வாறு நாம் இதைத் தடுப்பது?

குருதேவ்: நமது சமுத்திரங்களில் இன்னொரு கண்டத்தை உருவாக்கக் கூடிய அளவு , பல்வேறு விதமான கழிவுகள் திணிக்கப்படுகின்றன. நியூயார்க் கடற்கரைக்கு அப்பால் சமுத்திரம் ஒரு கழிவுக் குவியலாக உள்ளதாக கூறுகின்றார்கள்.அதில் ஒரு தீவு அல்லது கண்டத்தை உருவாக்கும் அளவிற்கு கழிவுகள் திணிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தான், சுழற்சி முறை மிக முக்கியமானதாகின்றது.

நாம் அனைவரும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அனைவரையும் பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைத்துக் கொண்டு இயற்கையிடம் கனிவுடன் வாழும்படி எடுத்துக் கூறுங்கள். ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றால், அவர்களது கிராமங்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதைக் காண்பீர்கள். குப்பை என்பதே கிடையாது.

ஒரு காட்டிற்குச் சென்றால், எந்த விலங்கும் கழிவுகளைக் குவிக்காது. இறைச்சிகள், அல்லது இறந்த உடல்கள் எங்கும் காண மாட்டீர்கள். அனைத்து விலங்குகளுக்கும் காட்டினை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது தெரியும். பழங்குடி மக்களுக்கும் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது தெரியும். நாகரீகமானவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம், தேவையான அளவு சுழற்சி முறை இன்றி, அதிகமான பயன்பாட்டினைச் செய்து வருகின்றோம். அதிகமான கழிவுகளை, அதிலும் மக்கிப் போகாத கழிவுகளை குவித்து வருகின்றோம். இது கவலைக்குறிய விஷயம். இதைப் பற்றி நாம் அனைவரும் கவலையுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

குருதேவ், என் வாழ்வில் நான் எனது முக்கியத்துவத்தையும், அங்கீகாரத்தையும் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றேன். எனது பல முடிவுகள் இவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. எனது சேவாவில் கூட, எது செய்யவும் அங்கீகாரம் தான் முக்கிய ஊக்கியாக உள்ளது.  தயவு செய்து எனக்கு அறிவுரை கூறுங்கள்.

குருதேவ்: உங்களுடைய பலவீனம் என்ன என்பதை நீங்கள் கண்டறிந்திருப்பது மிக நல்ல விஷயம். எப்போது அறிந்து கொண்டு விட்டீர்களோ, அப்போதே நீங்கள் அதிலிருந்து விடுபட துவங்கி விட்டீர்கள்.,"அடுத்த முறை நீங்கள் சேவாவில் ஈடுபடும் போது, நீங்கள் உங்களுக்குள்ளேயே "சரி, நான் சேவையில் ஈடுபடப் போகின்றேன், ஆனால் யாரிடமும் அதைப் பற்றிக் கூறப் போவதில்லை" என்று கூறிக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் ரகசிய தானம் என்று ஒன்று உள்ளது. ஒன்றை தானமாக ஒருவருக்கு அளிக்கும் போது அதை "குப்த் தான் "என்று அழைக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் அளித்திருக்கின்றீர்கள் ஆனால் அதை யாருக்கும் தெரியப் படுத்தவில்லை என்பது. ஒரு நன்கொடை அளிக்கின்றீர்கள் ஆனால் உங்களது பெயர் வெளிவருவதை விரும்புவதில்லை. இவ்வாறு வெளியே தெரியாமல் அளிக்கப் படுவது ரகசிய தானம் ஆகும். வலது கரம் அளிப்பதை இடது கரம் அறியாது. அவ்வாறு செய்வதை பெருமையாக மக்கள் எண்ணி வந்தனர். குறைந்த பட்சம் ஓரிரு முறையாவது எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் சேவை செய்து பாருங்கள். இச்செயல் உங்களுக்குப் பெரு மகிழ்ச்சி அளிக்கும். ஒரு முறை இதை அனுபவித்து விட்டால் இப்பேரின்பத்தை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அனைத்திலும் இவ்வாறில்லாவிட்டாலும், சில செயல்களாவது அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.

மற்றபடி, பிற பணிகளில் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பே ஆகும். அலுவலகத்தில் நல்ல முறையில் பணி புரியும்போது, அதற்கு அங்கீகாரம் வேண்டுவது தவறல்ல. உண்மையான நிறைவை முழு திருப்தியை அடையும்போது பிறர் அதைக் கவனித்து அங்கீகரிக்கின்றார்களா, இல்லையா என்பது உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. எது உங்களுக்கு நல்லதோ அதைச் செய்து வாருங்கள்.

குருதேவ், சில இளைஞர்கள் மரிஜுனா, கஞ்சா புகைச்சுருட்டு பயன்படுத்துவதை அறிவேன். அவர்கள், அதுவே தங்களை பல்வேறு எல்லைகளுடன் இணைக்க உதவும் ஆன்மீகம், என்று கூறுகின்றார்கள்.  மரிஜுனா பயன்பாட்டின் நீண்ட கால விளைவினை பற்றிக் கூறுங்கள்.

குருதேவ்: மரிஜுஆனா பயன்பாடு மிக பயங்கரமான செயல் ஆகும். தாற்காலிகமாக உயர்த்தும் விழிப்புணர்வைத் தரும் அது உடலை அழிக்கின்றது. நரம்பு மண்டலத்தை அழிக்கின்றது. உடற்கூற்றிற்கு மிக மோசமானது ஆகும்.நான் அதை சுவைத்ததில்லை. பயன்படுத்தியவர்கள் உயர்வு விழிப்புணர்வை அடைந்ததாகக் கூறுகின்றார்கள். ஆயினும் அவர்கள் முகத்தில் அது தென்படுவதில்லை,மிகவும் சோர்வாகவே காணப் படுகின்றார்கள்.

தியானத்தில் பேரின்பத்தை அடைபவர்கள் பிரகாசத்தினை அடைகின்றார்கள். இங்கு முகங்களைக் காணுங்கள், எப்படிப் பிரகாசமாக இருக்கின்றார்கள். இன்ப ஒளி வீசுகின்றது, அன்பு பெருகுகின்றது, தியானம் இவர்களை ஒரு உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் செல்கின்றது. ஆனால் இத்தகைய நிலையை மரிஜுனா பயன்படுத்துபவர்களிடம் நாம் காண்பதில்லை. அவர்கள் சுருங்கி, சோகமாக, மன அழுத்தத்துடனும் நோயுடனும் காணப்படுகின்றார்கள். அது உங்கள் உடலுக்கு நீங்கள் செய்யும் குற்றம் ஆகும். குற்றம் என்பது பிறர் மீது ஆனாலும், உங்கள் உடல் மீதே ஆனாலும் அது சமமே. ஒருவர் மரிஜுனா எடுப்பது அவரது உடலுக்குப் பெரும் தாக்குதல் ஆகும். அது சரியல்ல. தாற்காலிகமாக அது உயர எடுத்துச் செல்லலாம், ஆனால் அதை ஏன் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? தியானம் செய்யுங்கள். உயர் சக்தியைப் பெறுங்கள். தியானத்தில், உயர் அனுபவங்களை அடைகின்றீர்கள், உங்கள் உடல் பலப்படும், மனம் கூர்மையாகும்,இதயம் கருணை மிகுந்ததாக ஆகும். உங்களை மிக்க உடல் நலன் உள்ளவராகவும் மகிழ்ச்சியானவராகவும் ஆக்கும். மரிஜுஆனாவைத் தவிர்த்து, ஏன் இதில் ஈடுபடக் கூடாது? மட்டுமீறிய போதை பொருள் நுகர்வு .ஒருவரது ஆத்மாவிற்கு எதிரான குற்றம் ஆகும்.