தனித்து செல்லும் துணிவை அடையவும்.....

ஜூலை 19, 2014

மொண்ட்ரியல் கனடா 


கேள்வி பதில்கள்:

கே: குருதேவ்! நமக்கு நிகராக இருப்பவர்களால் ஏற்படும் மனஅழுத்தம் பற்றியும் அதை எப்படி சமாளிப்பது என்பதை பற்றியும் கூறவும்.

சில சமயங்களில் இளைஞர்கள் தனித்து செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நீங்கள் நடுநிலையுடன் இருப்பீர்கள். மற்றும் சமமானவர்களுடன் ஒப்பிட்டு மன அழுத்தம் கொள்ளாமல்    நீங்கள் நீங்களாகவே இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுவீர்கள். அது உங்களுடைய ஆளுமையை உறுதிப்படுத்தும்.

நீங்கள் எந்நேரமும் உங்கள் நண்பர்களால் சூழப்பட்டிருந்தால், நண்பர்களில்லாமல் உங்களால்   இருக்க முடியாது என்ற எண்ணம் தோன்றும். ஆனால் நீண்ட நடை மற்றும் ஓட்டம் எடுக்க நீங்கள் பயிற்சி பெற்றிருந்தால், உங்களால் தனித்து நடக்க அல்லது செயல்பட இயலும் என்று தெரிந்து கொள்ளலாம். கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் "தனித்து செல்" என்னும் கவிதையை எழுதியுள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் அந்த பாடல் பலரை ஈர்த்தது. யாரும் இல்லை என்றாலும் நீங்கள் தனியாகவே சென்று ஒரு தலைவனாக இருக்கலாம். நிகரானவர்களால் ஏற்படும் மனஅழுத்தத்தில் சிக்கிக்கொண்டால் நீங்கள் வேறொருவரை பின்பற்றுபவராக மட்டுமே இருக்க முடியும் தலைவராக முடியாது.

ஏன் நீங்கள் நண்பர்களுடைய சகவாசம் வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு அவர்களுடைய கவனம் தேவைப்படுகிறது. நீங்கள் தலைவராக இல்லையென்றால்,குறிப்பாக பள்ளி அல்லது கல்லூரிகளில், யாருமே தங்கள் கவனத்தை உங்களிடம் செலுத்த மாட்டார்கள். எனவே சமமானவர்களால் ஏற்படக்கூடிய மனஅழுத்தத்தை தோற்கடிக்க தனித்து செல்ல வேண்டும்   

கே: குருதேவ்! நம்முடைய உடலையும் சேர்த்து அனைத்துமே கரைந்து போகக் கூடியது என்று  அறிந்திருக்கும் போது எவ்வாறு தற்காலிகமான ஒன்றை தொடர்ந்து செல்வதில் உற்சாகம் ஏற்படும்?

உங்களுக்கு ஆர்வம் ஏற்படும் போது அது என்ன என்று தெரிய வரும். எல்லாமே மாறிக்கொண்டு இருப்பதால் நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்கள்.எப்போதுமே மாறாததும் உள்ளது, மேலும் அவ்வாறு எப்போதுமே மாறாதது மாறுகின்ற அனைத்தையும் நேசிக்கிறது.

கே:குருதேவ்! நாங்கள் எங்களுடைய தொந்தரவுகள், வலிகள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவற்றை உங்களிடம் ஒப்புவிக்கும் போது, நாங்கள் எங்களுடைய பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்லுகிறோமா?
   
இல்லை. இங்கு நீங்கள் சமநிலையில் இருக்க வேண்டும்.  நீங்கள் உங்களுடைய  100 சதவீதத்தை அளித்தபின் முடிவை  விட்டு விடலாம். ஒப்புவித்தல்  என்றால் பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது என்று  அர்த்தமில்லை. அது அனைத்தும் நன்றாக நடக்கும் என்று உங்களுக்குள் உத்தரவாதம் அளிக்கும் ஒரு உணர்வாகும்.

கே: குருதேவ்! நான் யோகப் பயிற்சியில் ஆர்வம் கொண்டுள்ளேன். குண்டலினி யோகாவில் பயிற்சியும் துவங்கியுள்ளேன். யோகா மற்றும் குண்டலினி யோகா ஆகியவற்றின் முக்கியத்துவும் பற்றி தாங்கள் கூற வேண்டும். 

குண்டலினி யோகா மற்றும் அவை போன்றவற்றில் தாங்கள் ஈடுபட வேண்டாமென்று நான் கருதுகின்றேன். எப்படியும் அது இயல்பாகவே உண்டாகப் போகின்றது. நீங்கள் சுதர்ஷன கிரியா, சக்தி கிரியா, மற்றும் முதுநிலை தியானப் பயிற்சி போன்றவற்றை செய்துள்ளதனால் அது மிக நன்றாகவும் மிக சீராகவும் செல்கின்றது. பலவந்தமாக குண்டலினியை நகர்த்தி அதன் காரணமாக வாழ்வில் சமநிலை இழந்தவர்கள் பலரை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் தூக்கத்தையும் இழந்து பெரிய பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே பைத்தியமாக மாறிய பலரை நான் பார்த்திருக்கின்றேன். இது ஏன் என்றால் சில விதமான யோகா பயிற்சிகள் இன்றைய கால கட்டத்திற்கு உகந்தவை அல்ல.

பண்டைய  காலங்களில் அவர்களுக்கு அதிக நேரம் இருந்தது. 12 ஆண்டுகள் தங்கி இருந்து     இந்த பயிற்சிகளை நிதானமாக செய்வார்கள். அவர்கள் செய்வதற்கு வேறு எதுவும் அதிகம் இருக்காது. ஆனால் இன்று அவர்கள் உங்களுக்கு குண்டலினி யோகத்தை கொடுத்து சக்தியை உங்களுக்குள் வேகமாக செலுத்துவதால் நீங்கள் பைத்தியமடைகிறீர்கள்.அந்த மாதியான எதையும் நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் விரும்பவில்லை. பலர் இந்த பயிற்சி கொஞ்சம், அந்த பயிற்சி கொஞ்சம் என்று ஒரு வருட பாட திட்டத்தை ஒரு மாதத்திலேயே செய்ய வைக்கிறார்கள்.

மின்சாரம் அதிக அளவு வந்தால் என்ன நடக்கும்? ப்யூஸ் போய் விடுகிறது. அந்த மாதிரியான ஒன்று நடைபெறும், வயிற்று தொந்தரவு அல்லது வேறு ஏதாவது தொந்தரவுகள் ஏற்படும். எனவே படிப்படியாகவும் சீராகவும் வளர்ச்சி  அடைவது முக்கியம்.  அவ்வாறு  தான் உங்களுடைய உடல் தயாராக வேண்டும். யோகா பயிற்சி செய்யவும். சிறிது ஞானம் படிக்கவும். நம்முடைய யோக பயிற்சி முழுமையானது மற்றும் நல்ல கலவைகள் கொண்டது. ஞான யோகா, பக்தி யோகா காலி மற்றும் வெற்றிட தியானம் ஆகியவை உள்ளன. நீங்கள் நல்ல தியான நிலையை அடைகிறீர்கள்  என்றால் ஏற்கனவே உங்களுடைய குண்டலினி தட்டி எழுப்பப்பட்டு விட்டது என்பதே அர்த்தம். ஆனால் இவர்கள் வலுக்கட்டாயமான பயிற்சி செய்வதன் மூலம் உங்களுடைய குண்டலினியை எழுப்பச் செய்வது சிக்கல்களை உருவாக்குகிறது. பின்னர் அதனால் உபயோகமான ஒரு பயனும் இல்லை என்பதை நான் பார்க்கிறேன்.

கே: குருதேவ்! நான் இதுவரை யாரிடமும் காட்டாத அளவிலும் கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவிலும் உங்களிடம் அன்பு செலுத்துகிறேன். பல வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்து விட்டேன். சமீபத்தில் நான் உங்களிடம் காட்டும் அன்பு பாசம் ஆகியவற்றை என்னுடைய அடுத்த வாழ்க்கைத் துணையிடம் காட்ட விரும்புகிறேன். ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று பயம் ஏற்படுகிறது.

நல்லது! கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு மேலே நகர்ந்து செல்லவும். என்னால் இதை எப்போதுமே செய்ய முடியாது, என்னால் எப்போதுமே அன்பு செலுத்த முடியாது போன்ற முத்திரைகளை குத்திக்கொள்ள வேண்டாம். அந்த மாதிரியான கருத்துக்களை உங்கள் மனதில் புகுத்த வேண்டாம். உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே நல்ல பரிசுகள் என்னும் எண்ணத்துடன் முன்னேறவும். நீங்கள் எப்போதுமே வைத்துக் கொண்டிருக்கக் கூடியது எதுவுமே இல்லை. அனைத்துமே வரும்,சில நேரம் தங்கி இருக்கும், பின்னர் விலகிச் சென்று விடும். நீங்கள் மேலே நகர்ந்து சென்று கொண்டிருக்க வேண்டும்.

கே: குருதேவ்! திருமணமான ஒருவரிடம் அன்பு செலுத்துவதும் அவருடன் இருப்பதும் சரியா ?

நீங்கள் திருமணம் ஆனவராக இருந்து உங்க கணவர் வேறு ஒருவருடன் இருந்தால் நீங்கள் அதை விரும்புவீர்களா? ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணின் இடத்தில் நீங்கள் உங்களை வைத்துப் பாருங்கள், அதன் பிறகு முடிவு செய்யவும். நான் இதை பற்றி எதுவும் சொல்லமாட்டேன்.

கே: குருதேவ்! நாம் நம்முடைய வேலையை நேசத்துடனும் திறமையுடனும் செய்த பின்னும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?

நீங்கள் உங்கள் வேலையை பாராட்டிக் கொள்ளுகிறீர்கள் ஆனால் மற்றவர்களும் அதை பாராட்ட வேண்டும். தற்போதைய நிலையிலேயே இருந்து அதை மேலும் மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கவும். உங்கள் கவனம் அதில் இருந்தால் நிலைமை மாறும்.