ஓர் எழுதப்படாத சட்டம்

புதன்கிழமை, 9 ஜூலை 2015,

வட கரோலினா அமெரிக்க ஐக்கிய நாடுகள்



(மௌனத்தின் மூன்று நிலைகள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் செயல்படுபவர்களின் விதங்களை மிக அழகாக சித்தரிக்கின்றார். "முக்த சங்கோ நஹம் வத உத்சாஹா  - சமன்விதா  சித்தி அசித்யோர் நிர்விகரஹ கர்த்தா சத்விக உச்யதே" ( 18. 23) செயல்படுபவர்களில் மூன்று விதங்கள் உள்ளன

1. சத்விக் செயல்வீரர்
2. ராஜசிக் செயல்வீரர்
3. தமசிக் செயல்வீரர்

இந்த மூன்றில் இந்த க்ஷணத்தில் நீங்கள் எது என்று பார்த்துக் கொள்ளுங்கள். இது ஒரே விதமாக இருக்காது, அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும். சத்விக்விதமாக செயல்படுபவர் யார்? அவர்களது பணி நிகழ்ந்தாலும் இல்லையெனினும்,வெற்றியோ தோல்வியோ எதுவானாலும்  உற்சாகத்தை இழக்காமல் இருப்பவர் சத்விக் விதத்தை சேர்ந்தவர்.  உத்சாஹா என்றால் உற்சாகம் த்ரிடி என்பது உங்களை தாங்கி உயர்த்துவது. உயிரை மற்றும் பிராணனை தாங்கித் தக்க வைத்துக்கொள்ளும் அந்த ஆற்றல் உள்ளவரே சத்விக் கர்த்தா .

இரண்டாவது வகை, ராஜசிக் - செயலின் விளைவுகளில் அதிக ஈடுபாடு கொள்பவர்.விளைவில் அதிக பற்றுதல் இருப்பதால், ஏதேனும் வெற்றியடைந்தால், மிக அதிக மகிழ்ச்சியும் ஏதேனும் தோல்வி கண்டால் மிகக் கீழே இறங்கியும் உணர்வர். சரியாக காரியங்கள் நடக்காத போது முற்றிலும் உடைந்து விடுவர். அவை நிகழ்ந்து விட்டால் தான் ஈனும் அகந்தை மேலோங்கி தானே அச்செயலை செய்து விட்டதாக தற்பெருமை கொள்வர். இதுதான் ரஜசிக் வகையினர்.  அதிக ஈடுபாட்டோடு செயல் புரிந்தாலும் அதில் ரஜஸ் குணம் மிகுந்திருக்கும். ரஜஸ் என்பது அதிகக் கோபம், அகந்தை சவால் விடும் தன்மை ஆகியவை கொண்டது. எதையேனும் செய்யாமல் விட்டு விடுபவரிடம் அதை பற்றிக் கேட்டால், உடனேயே அவர்கள் அதை சவாலாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறுவார். இத்தகைய சவால் உணர்வு உள்ளவர் ரஜசிக்கர்த்தா தமசிக் வகையினர் அனைத்துமே மோசம் என்னும் எண்ணம் உள்ளவர். எதையாவது எண்ணி வருந்துபவர். "ஒ நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே மின் பொறியியல் படித்திருக்க வேண்டும். நான் தவறு செய்து விட்டேன்" என்று வருந்துவர். ஏற்கனவே பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன, இப்போது வருந்தி என்ன பயன்?

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் நான் பத்து வருடங்களாக இதையே உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்" என்று அடிக்கடி கூறுவார்கள் அல்லது ஒரு மனைவி கணவனிடம் " திருமணமாகி 30 வருடங்கள் ஆனபோதிலும் இன்னமும் இப்படி இருக்கிறீர்கள்" என்று கூறுவாள். விஷாதி என்றால் கழிவிரக்கம் கொள்ளுதல் என்று பொருள். திர்கசுத்ரி என்றால் எதை கூறினாலும் "ஒ அது சாத்தியமில்லை. மிகக் கடினமானது" என்று கூறுவார். சுற்றி வளைத்து எவ்வாறு சரியாக எதுவும் நடக்க வில்லை என்பதனைக் கூறுவார். எதுவுமே சிரமமானது அனைத்தும் மோசமானது என்றே கருதுவர். இவ்வகையினர் தமசிக் கர்த்தா இவைதாம் செயல்படுபவர்களில் மூன்று வகையானவர்.

இந்தக் க்ஷணத்தில் எந்த வகையான செயல்படுபவர் மனதில் தோன்றுகிறார்? எவ்வாறு நீங்கள் தமசிக்கர்த்தாவிலிருந்து, ரஜசிக்கர்த்தா நிலைக்கு சென்று பின்னர் சத்விக்கர்த்தா ஆகின்றீர்கள்? இது ஒரு சவால், இதுவே வழி. எந்த வகையானவர் என்று கண்டறிந்தால், நீங்கள் நகர்ந்து செல்லலாம் இல்லையெனில் நீங்கள் அதிலேயே சிக்கிக்கொண்டு விடுவீர்கள். 30 ஆண்டுகளாக காலியாகவும் வெற்றிடமாகவும் ஆகுங்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறேன்.யாரும் அவ்வாறு ஆவதில்லை.30 ஆண்டுகளாக புன்முறுவலுடன் இருங்கள் என்று கத்திக் கொண்டிருக்கிறேன், என்னெதிரே புன்முறுவல் பூத்துவிட்டு பின்னர் அவ்வாறு இருப்பதில்லை. அனைவரையும் நேசியுங்கள், உற்சாகமாக இருங்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறேன் ஆனால் எல்லோரும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். என்ன பயன்? ஆரோக்கிய நீரூற்றுக்கு சென்று மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன். ஞானத்தின் மகிமை யாருக்குமே தெரியவில்லை. உலகம் மாறப் போவதே இல்லை. இதுவெல்லாம் கர்மா எதுவும் செய்ய முடியாது.

இனி நான் யாரையும் சந்திக்கப் போவதில்லை. இமயமலைக்குச் சென்று அங்கு நீர் மற்றும் பறவைகளின் சப்தங்களைக் கேட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கப் போகின்றேன். நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு முயற்சி எடுத்தும் மக்கள் அதே போன்றுதான் இருக்கின்றனர். எதுவுமே மாறவில்லை" இந்த எண்ணம் தான் விஷாதி - கழி விரக்கப்படுதல். எதைச் செய்தாலும் பயனின்றிப் போவதைப் போன்று உணருதல். த்ரிக சுத்ரி என்பது," சரி, இதை ஓர் சவாலாக ஏற்றுக் கொள்வோம். செயல்படுவோம்" என்று எண்ணுதல். ஆனால் அதிலேயே சிக்கிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் உங்களை தமசிக் திருதிக்கு தள்ளி விடும். ரஜஸ் என்பது ஓர் பாலம் போன்றது. பாலத்திலேயே தங்கி வாழ்ந்து விடமுடியாது. அதைக் கடந்து செல்ல வேண்டும். ரஜஸ் என்பது தமஸ் என்பதிலிருந்து வெளி வர உதவுவதற்கு மட்டுமேயாகும்.

கீதையில் கிருஷ்ணபகவான் அர்ஜுனனிடம்," மக்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்? இந்தப் போரிலிருந்து தப்பியோட விரும்புகிறாயா? மக்கள் உன்னை ஒரு கோழை என்றே எண்ணுவார்கள்.அத்தகைய அவப்பெயரை அடைவதை விட மடிவதே மேலானது" என்று கூறுகிறார். அவர் "பிறருடைய அபிப்பிராயங்களுக்கு உதைபந்தாக இருக்காதே என்று கூறவில்லை. ஏனெனில், அந்த சமயத்தில் சோர்வடைந்திருப்பவனை செயல் நிலைக்கு தள்ளுவதே முக்கியமாக இருந்தது. பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர்," நீ வெற்றியடைவதும் தோற்பதும் இங்கு முக்கியமல்ல. உலகில் எதுவுமே பூரணமானதல்ல.வெற்றியடைவதை பற்றி நீ ஆர்வத்துடன் அனைத்தையும் நிறைவாக்க வேண்டும் என்னும் விருப்பத்துடன் இருந்தால், நிச்சயம் நீ வருந்துவாய்" என்று கூறினார். இது எழுதப்படாத சட்டம்.

பெற்றோர் தங்கள் குழந்தைகள் முற்றிலும் முழு நிறைவு பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மிகுந்த கவனத்துடன் அவர்களை வளர்க்கின்றனர், ஆனால் குழந்தைகள் அதற்கு மாறுபட்டு எதற்கும் அடங்காதவர்களாக ஆகின்றார்கள். ஓர் செயலின் விளைவிற்கு நீங்கள் பற்றுதல் கொள்ளும் போது இவ்வாறு தான் ஆகின்றது. பலர் பல நற்காரியங்களை செய்து பின்னர், "இது நன்றியில்லாத பணி. யாருமே என்னைப் பாராட்ட வில்லை" என்று வருத்தமடைகின்றனர். எனக்கு நல்ல இதயம் உள்ளது. பல நற்காரியங்கள் செய்திருக்கின்றேன், யாரும் என்னை கவனிப்பதில்லை "என்னும் இந்த எண்ணம் உங்களை பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் வருந்த செய்வதற்கு போதுமானதாகும். "நான் மிக நன்றாகச் செயல் புரிந்தேன், முழு நிறைவாகப் பணிபுரிந்தேன். ஆனால் எனக்கு என்ன ஆயிற்று? இந்த உலகம் பொல்லாதது, மக்கள் தீயவர்கள், கடவுளும் கொடுமையானவர்" அவ்வளவு தான். அனைத்தும் முடிந்து போயிற்று. இவ்வாறு சமுதாயத்தில் நிகழ்வதை  நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா?

ரஜசிக் மற்றும் தமசிக் குணம் உடையவராக இருந்தால், இத்தகைய குணமுடையவர்களையே நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள். இவர்கள் உங்களிடம், "கடவுள் பொல்லாதவர். கடுமையானவர். உன்னிடம் சற்றும் இரக்கமில்லாதவர். இவ்விதமாக உனக்கு நிகழ்ந்திருக்கக் கூடாது" என்று ஆறுதல் கூறுவார்கள். தமசிக் பிரவ்ருத்தி எப்போதுமே தமசிக் குணமுடையவர்களையே தன்னைச் சுற்றிக் கவர்ந்திழுத்து கொள்ளும். அது போன்றதே, ரஜசிக் குணமும் ஆகும். குறைக் கூறி புகார் செய்து கொண்டிருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வர். இது சரியல்ல என்று யாரேனும் கூறினால் அவர்களால் தாங்க முடியாது. பிறர் தம்மை புரிந்து கொள்ளவில்லை என்றே எண்ணுவர். இதுதான் உண்மையில் நிகழ்வது.  சரியான முறையில் விஷயங்கள் நடைபெற வில்லையெனில், யாரேனும்,"எல்லாம் சரியாகும்" என்று கூறினால் அவரோடு ஒத்துப் போக முடியாது.

அவ்வாறு ஒத்துப் போக முடியாத, உங்கள் எண்ணங்கள் இசைந்து வராத நிலையில், அவர்களுடன் இணைந்து போகமாட்டீர்கள். நீங்கள் அத்தகைய மனநிலைக்கே எரி பொருள் அளித்துக் கொண்டு உங்களுடைய வட்டத்திலேயே இருந்து கொண்டு இருப்பீர்கள். 1985 அல்லது 1986 ஆம் ஆண்டில் நான் இத்தாலியில் இருந்தேன். பார்க்க நன்றாக இருக்கும் இளம் வயது ஆண்கள், ஐம்பது பேர் மீட்பு இல்லத்தில் இருந்தனர்.அவர்கள் போதைப் பொருள் மற்றும் மது அடிமைத்தனத்திலிருந்து மீண்டு கொண்டிருந்தனர்.அவர்களிடம் பேசுவதற்காகவும் அவர்களுக்கு ஒரு கருத்தரங்கம் அளிக்கவும்  நான் அழைக்கப்பட்டிருந்தேன். நான் சென்று ஒரு பயிற்சித் திட்டத்தினை அளித்தேன்.

அது முடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் புத்துணர்வு பெற்றனர். மிக மகிழ்ச்சியாகவும் திடீரென்று விடுதலை பெற்றது போன்றும் உணர்ந்தனர். அவர்களது உள்மன விடுதலையினை அடைந்தனர். ஆயினும் அந்த இல்லத்தின் நிறுவனர் மிக வருத்தமாக இருந்தார். அவர் அந்த ஆண்களிடம், "இந்த உலகம் மிகப் பொல்லாதது, என்று கூறி அவர்கள் மனதில் வெறுப்பு பயம் ஆகியவற்றை வளர்த்திருந்தார்.இப்போது அவர்கள் அவ்வாறில்லை என்று உணர்ந்தனர். பயிற்சி ஆரம்பித்த பொழுது, அவர்கள் ஏன் மக்கள் கொடுமையானவர்களாக இருக்கின்றனர்? என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பயிற்சி முடியும் போது எவ்வாறு தாங்கள் விடுதலையடைந்த உணர்வினையும், மேம்பட்ட உணர்வினையும் இரண்டே நாட்களில் பெற்றோம் என்று பிறருடன் பகிர்ந்து கொண்டனர். இந்தக் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் குறைந்து விட்டதால் நிறுவனர் வருத்தம் அடைந்தார். முதல் நாள் அவர்தாம் எங்களை அறிமுகப்படுத்தி, பயிற்சியைப் பற்றி உயர்வாகப் பேசினார், ஆனால் மூன்றாம் நாள் அதற்கு முற்றிலும் மாறாக வேறுபாடாக அவரது பேச்சு அமைந்து விட்டது. ஏன்? ஏனெனில், மக்கள் மாறி விட்டனர். அவர்களது சத்விக் குணம் உயர்ந்து விட்டது. சத்வ குணம் மேலோங்கும்போது, எதிர்மறை செய்திகளை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

அதற்காக நீங்கள் பளபளப்பான கனவுலகிலேயே சஞ்சரித்துக் கொண்டு உண்மையினைத் துறந்து விட வேண்டும் என்று நான் கூறவில்லை.அடிப்படை உண்மையை அலட்சியம் செய்ய வேண்டுமென்பதில்லை உங்கள் ஆற்றலையும் உற்சாகத்தையும் இழந்து விடக்கூடாது என்பது தான் முக்கியம். இப்படித்தான் அப்படித்தான் என்று உங்களுக்குள்ளேயே கருத்துப் படிவங்களை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. ஒரு வேளை அப்படியிருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று உங்களது உங்களது பகுப்பாய்வின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஒரு அங்காடிக்கு சென்றால், அங்கு வரிசையாகக் கடைகள் இருப்பதைக் காண்பீர்கள்.ஒரு கடையில் நல்ல வியாபாரம் நடக்கும், அடுத்ததில் நடக்காது ஏன்? ஒரே  இடத்தில், ஒரே தெருவில் அடுத்தடுத்து இருந்த போதிலும் ஒன்று லாபகரமாகவும் அடுத்தது நஷ்டத்திலும் ஓடிக் கொண்டிருக்கும். ஏன்? இதைப் பற்றி யோசிக்க வேண்டும். நாம் காணும் இந்த உலகம் வேறொரு நுண்ணிய உலகினால் ஆட்சி செய்யப்படுகின்றது.

எளிதாக விவரிக்க வேண்டுமெனில் அது கர்மா என்று கூறி விட்டு விட வேண்டியது தான்.  சில சமயங்களில் நாம் அதை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்கின்றோம் ஆயினும் அது கர்மம் மட்டுமல்ல. ஆம், அது ஒரு விளக்கம் மட்டும் தான். நுண்ணிய நிலைக்குக் சென்று பார்த்தால், வேறொரு ஆற்றல் மெய்யுணர்வுப் பரப்பிலிருந்தே அனைத்தும் நிகழ்கின்றன என்றறிவீர்கள்.அந்த மெய்யுணர்வில் தான், உட்கருத்து உள்ளது. அதுவே வெளிப்படுகின்றது. அதைக் கவனிக்க நாம் உள்நோக்கிக் கவனம் செலுத்த வேண்டும்.  

அக்னி தான் தொடர்பு. அக்னி என்பது வெறும் நெருப்பு மட்டுமல்ல, அது உங்களுக்குள் இருக்கும் தீ; உயிர்ப்புடன் இருக்கும் மெய்யுணர்வு. உங்களுக்குள் இருக்கும் தீ கடந்த காலத்தை பொசுக்கி விடுகின்றது,கடந்த கால நிகழ்வுகளிருந்து நாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் குப்பைகளை எரித்து விடுகிறது. 'அக்னி முக வை தேவஹா’ அனைத்து தெய்வங்களையும் அக்னி மூலம் மட்டுமே அணுக முடியும். மொத்தமாகப் பார்த்தால், அக்னியில் இடப்படும் பொருட்கள் மட்டுமே இறைவனை அடைகின்றன என்று தோன்றுகிறது. ஆனால் அவ்வாறில்லை.ஞானமே தீ. உங்கள் உள்ளிருக்கும் தீ உங்களை இவ்வுலகிலிருந்து நுண்ணிய உலகிற்கு இணைக்கிறது, அதிலிருந்தே இந்த வெளிப்பாடு முழுமையும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.