நேர்மை என்பது ஆன்மீக தத்துவம்

வெள்ளிக்கிழமை 18-7-2014

மாண்ட்ரியால், கனடா.


கேள்வி - பதில்கள்

குருதேவா! நம் துணைவர் நம்மை ஏமாற்றிய பின்பும் அவரை நம்ப முடியுமா ? அவர் நம்மை ஏமாற்றியதை எப்படி மறக்கமுடியும் ?

குருதேவர்: நான் உனக்கு ஒன்று சொல்வேன். அவருடைய இடத்தில் உன்னை வைத்துப் பார். இந்தத் தவறை நீ செய்திருந்தால், அறியாமலே இந்தத் தவறை நீ செய்திருந்தால் அல்லது ஏதோ கட்டாயத்தின் பேரில் அப்படி செய்திருந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார். உன் துணைவர் உன்னை மன்னிக்காமல் இருந்தால், உன் தவறை அவர் சுட்டிக் காட்டும் போது உனக்கு எப்படி இருக்கும்? அவர் உன்னை மன்னிக்காமலிருந்தால், நீ அவரை மற்றொரு முறை உனக்கு வாய்ப்பு தரும்படி கெஞ்ச மாட்டாயா? இது உனக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

உன் துணைவர் ஒரு ஞானியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய். எப்போதும் அவர் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய். இந்த எதிர் பார்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது. ஓரிரண்டு முறைகள் தவறு செய்திருந்தாலும், அவருக்கு மற்றொரு வாய்ப்பை தரவேண்டும். ஆகவே ஒருவர் மனத்தூய்மையோடு நேர்மையை கடைபிடிக்க, ஆன்மீகப் பாதையில் சென்று ஆத்ம ஞானம் பெறுவது மிக மிக அவசியம். அப்படி செய்யாவிட்டால் அவர் நேர்மையாக வாழ முடியாது.

மற்றவர் தவறு செய்திருந்தாலும் அவரை மன்னித்து விடு. அவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது. அவர் தவறு செய்திருந்த போதிலும்,அவரிடம் “பரவாயில்லை, மேலே ஆக வேண்டியதைக் கவனி“ என்று சொல். ஆனால் நாம் அப்படி சொல்வதில்லை. தவறை சுட்டிக் காட்டுவதிலேயே நம் சக்தியை விரயம் செய்கிறோம். நீ தவறு செய்திருக்கிறாய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அவர் எப்படி உன்னோடு நல்ல உறவோடு இருக்க முடியும்? பொதுவாக யாரும் மற்றவர்களை ஏமாற்றமாட்டார்கள்.பொருளின் மேல் ஏற்பட்ட வசீகரத்தாலோ, அதி தீவிரமான ஆசையாலோ ஒருவர் செய்யக் கூடாத செயல்களை செய்கிறார். உன் ஆத்மா தன்னை அடையும் வரை, அந்த ஆனந்த அனுபவத்தை உணரும் வரை நிற்காது. பொருளின் மேல் உள்ள இச்சையால், மேலும் ஏதாவது கிடைக்காதா? என்று எதிர்பார்க்கும் நிலை இருக்கிறது. அதனால் தான் மக்கள் ஏதாவது கிடைக்காதா என்ற எதிர்பார்பிலேயே வாழ்கிறார்கள்.

நான் உங்களுக்கு போதிய அளவு சேவை செய்வதில்லை என்று எப்போதும் எண்ணுகிறேன். நீங்கள் யாரையாவது பாராட்டினால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இந்த உணர்ச்சியை எப்படிக் கையாள வேண்டும் ?

குருதேவர்: இது அன்பின் இயல்பு. நீ மேலும் சேவை செய்ய வேண்டும் என்று எப்போதும் சிந்திக்கிறாய். ஒரு தாய் தன் மகளுக்கு மேலும் ஏதாவது செய்து கொண்டேயிருக்க விரும்புகிறாள். மகளுக்கு இது வரை செய்தது போதாது என்று நினைக்கிறாள். மேலும் செய்ய விரும்புவது அன்பின் அடையாளம்.அன்பு குறையும் போது, “நான் உனக்கு நிறைய செய்திருக்கிறேன். முடிந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன்“ என்று சொல்லும் போது வெறுப்பு தலை தூக்குகிறது. உனக்கு அப்படித் தோன்றுகிறதோ, அன்று நீ களைப்படைந்து, வெறுப்படைந்து விட்டாய். உன் ஆத்மபலம் குறைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்.

நிறுவனங்களில் நிலவும் பூசல்கள், மக்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் சிக்காமல்,மீண்டு உங்களோடு எப்போதும் நெருக்கமாக இருப்பதற்கான சிறந்த வழி ?

குருதேவர்: எங்கு மக்கள் இருக்கிறார்களோ, அவர்களிடையே கருத்து வேறுபாடு கண்டிப்பாக இருக்கும்.(அலுவலக) அரசியல் என்றால் என்ன? அரசியல் என்றால் மக்கள் அங்கு இருக்கிறார்கள் என்று அர்த்தம். உலகில் எங்கு சென்றாலும் மக்கள் அரசியலில் ஈடுபடுவதைப் பார்க்கலாம். எங்கு அரசியல் இருப்பதாக நீ நினைக்கிறாயோ அது உனக்கு பெரிதாகத் தோன்றும். மக்கள் வேறு வேறு சிந்தனையுடையவர்கள், குணமுடையவர்கள், சமுதாயத்தில் வேறு வேறு பொறுப்பு வகிக்கிறவர்கள் என்பதை நீ அறிந்தால், எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கத் தேவையில்லை என்பதை அறிந்து கொள்வாய். எல்லோரும் எல்லோருடனும் பிரியமாக இருக்க முடியாது என்பதையும் அறிந்து கொள்வாய். அப்போது இதை நீ அரசியல் என்று சொல்லமாட்டாய் எல்லோருக்கும் நீ பிரியமானவனாக இருக்க முடியாது. சிலர் உன்னை விரும்புவார்கள். சிலருக்கு உன்னைப் பிடிக்காது. எல்லோருடைய மனப் போக்கும் (எண்ண அதிர்வுகள்) எல்லோருடனும் ஒத்துப் போக முடியாது.

அதை நீ ஏன் அரசியல் என்றழைக்கிறாய். உன் மனப்போக்கு மற்றவர்களுடைய மனப் போக்குடன் இயைவதில்லை. உலகில் எங்கு சென்றாலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்க முடியாது. உண்மையில் நாம் இந்த அரசியலுக்கு வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதை நீ உணர வேண்டும். நாம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்காக இருக்கிறோம். நம் பார்வை அதில் குவிந்திருக்க வேண்டும். ஞானத்தை சிந்தித்து,என்னுடன் இணைக்கப்பட்டிருக்கிறாய் என்ற உணர்வோடு இருந்தால், எந்த ஒரு அரசியலும் உன்னை அசைக்க முடியாது.

எனக்கு நல்லது எது என்று நான் அறிந்திருந்த போதிலும் என்னை அழிக்க வல்ல சோம்பேறித்தனம், தன்னலம் போன்ற எதிர்மறை குணங்களால் ஈர்க்கப்படுகிறேன். இதற்கான காரணம் என் குழந்தைப் பருவத்திலிருந்து வந்ததாக நினைக்கிறேன். மறந்து போனவைகளை நினைவில் கொண்டு வர நல்ல வழி என்ன ?

குருதேவர்: நீ உன்னை சோம்பேறி என்று சொல்லி லேபிள் ஒட்டிக் கொண்டால் அந்த சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்துகிறாய். நான் கெட்டவள் என்று சொல்லி ஒரு லேபிள் ஒட்டிக் கொண்டால் அது நீ கெட்டவளாக இருக்கக் கிடைத்த உரிமையாக நினைக்கிறாய். நான் சொல்வது புரிகிறதா? “முதல் காரியமாக இந்த லேபிள்களை எடுத்து தூர எறிந்து விடு. நீ யார் என்பது உனக்குத் தெரியவில்லை என்பதை நீ அறிவது அவசியம். நீ திறமை சாலி, சக்தி வாய்ந்தவள் என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லை. “நான் யார் என்று எனக்குத் தெரியவில்லை“ என்று நீ சொல்ல வேண்டும். அப்போது உன்னை மாற்றிக் கொள்ள, நீ முன்னேற்றமடைய வாய்ப்பு இருக்கிறது. என்னை மாற்றிக் கொள்ள முடியும் என்ற உறுதி உனக்கு வர வேண்டும்.

துவக்கத்தில் எளிதான பழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வா. அதைக் கை விடாமல் பின் பற்று. உதாரணத்துக்கு, “நான் இன்று 1 கி.மீ தூரம் நடக்கப் போகிறேன் “ என்ற உறுதி எடுத்துக் கொள்.
நான் பள்ளியில் படித்த போது நான் வீட்டுக்கு நடந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வருகிறது. நான் ஒவ்வொரு காலடியையும் எண்ணிக் கொண்டு செல்வேன். அரை கி.மீ தூரத்தில் என் வீடு இருந்தது.முழு கவனத்துடன் 1, 2, 3 என்று காலடிகளை எண்ணிக்கொண்டு வீடு சென்றடைவேன்.
நடக்கும் போது கவனத்தோடு மன உறுதியோடு நடந்து செல். “இன்று 20 நிமிடங்களில் வீட்டை அடைந்தேன். நாளை 18 நிமிடங்களில் சென்றடைவேன். அடுத்த நாள் 15 நிமிடங்களில் சென்றடைவேன்.“ என்று சொல். இப்படிப்பட்ட சவால்களை நீயே ஏற்றுக் கொண்டு, அப்படிச் செய்யும் போது உன் தன்னம்பிக்கையும், திறமையும் வளரும்.

குருதேவா ! மக்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் குறைந்து வருகிறது. அரசும், சமுதாயமும் நம் வாழ்வில் மேலும் மேலும் குறுக்கிடுகின்றன. ஒரு சாதாரண தனி மனிதனால் என்ன செய்ய முடியும் ?

குருதேவர்: சட்டம், ஒழுங்கு முறைகள் சமுதாயத்தின் தேவையாக உள்ளன. ஆனால் அவை மிகக் கடுமையாக இருக்கத் தேவையில்லை. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவை பாதிக்கக் கூடாது. வாழ்க்கையில் ஒரு ரசமும் இல்லாமல், வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக நீ எண்ணும் போது, நீ இப்போது இந்த மௌனப் பயிற்சிக்கு வந்தது போல் ஏதாவது காரியத்தில் ஈடுபட வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை இப்படிப்பட்ட பயிற்சியில் சேர வேண்டும். இங்கு நாம் பாடுகிறோம். சிந்திக்கிறோம். மேலும் பல செயல் முறைகளில் கலந்து கொள்கிறோம். தினந்தோறும் ஓரிரண்டு மணி நேரம் சிறு சிறு குழுக்களாக சேர்ந்து காரியம் செய்யலாம்.

நம் வசதியான நிலையிலிரூந்து வெளியே வராமல், நம்மைப் பற்றியே, நம் குடும்பத்தைப் பற்றியே எப்போதும் சிந்தித்து வந்தால், நம் வாழ்க்கை சுருங்கி விடும். நமக்குக் கோபம் வரும். சம நிலையிலிருந்து தவறுவோம். வெறுப்பு வந்தடையும். இப்படி எதிர் மறை எண்ணங்கள் மனதில் வந்து கொண்டிருக்கும்.


நீ சமுதாயப் பணிகளில் ஈடு படுத்திக் கொண்டு சேவை செய்யும் போது, உன் வீட்டிலும் சம நிலை தடுமாறாமல் இருப்பாய். வீட்டில் அதிக மகிழ்ச்சி பெருகும்.