குரு பூர்ணிமா அன்று குருதேவர் வழங்கிய அருளுரை

சனிக்கிழமை, 12/07/2014    

வடக்கு கரோலினா, USA

அதிக ஞானம் அதிக மகிழ்ச்சி


வாழ்க்கையில் குரு என்பவர் வெளியைப் போல விரவி இருக்கிறார். இப்போது நீங்கள் ‘அஜோ அனந்தாய’ என்ற பாடலைப் பாடினீர்கள். ‘அஜோ’ என்றால் பிறக்காதவர் என்று பொருள். ‘அனந்தாய’ என்றால் முடிவிலி என்று பொருள். ‘நித்ய சுத்த’ என்றால் எப்போதும் தூயவர், மேலும் ‘சத்-சித்-ஆனந்த’ என்றால் தூய பேரானந்தம் என்று பொருள். குரு தத்துவம் என்பது வெளியைப் போல, அதை நீங்கள் தவிர்க்க முடியாது. அதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா இல்லையா என்பது வேறு. காற்றிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. காற்றை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா இல்லையா என்பது வேறு. காற்று இருக்கிறது; வெளி இருக்கிறது என்று நீங்கள் அங்கீகரிப்பதற்கான நாள் இன்று.

ஞானத்திற்கு அணுக்கம் இருப்பது ஒரு சலுகை, ஒரு அதிர்ஷ்டம். வாழ்க்கையை ஞானத்தோடும், ஞானத்தில் வாழ்க்கையையும், ஞானதிற்காக வாழ்க்கை இருப்பதையும் நினைவுகூர்ந்து அதைக் கொண்டாடுவதற்கான தினம் இது. காற்று எல்லாவிடத்திலும் இருக்கிறது, ஆனால் நீங்கள் மின் விசிறி முன் அமரும் போது அதை உணர்கிறீர்கள். அதைப் போலவே, உலகத்தில், பிரபஞ்சத்தில் குரு தத்துவம் இருக்கிறது. அதை உணரும் போது அற்புதமாக உணர்கிறீர்கள், பேரானந்தத்தை உணர்கிறீர்கள். குரு தத்துவம் இருப்பதையும், வாழ்க்கையில் அது ஆற்றிய பங்கையும் உணர்வதே குரு பூர்ணிமா. உடலில், தொண்டைப்பகுதியில் இருக்கும் சக்கரம் நன்றியுணர்வு. அதற்கு மேலிருக்கும் சக்கரம் ஆக்ஞை, அதுதான் குருவின் ஆசனம். எனவே நன்றியுணர்வே குரு தத்துவத்தை அடைய வழி.

குரு உங்களை எங்கே அழைத்துச் செல்கிறார்? பேரானந்தம் (உச்சந்தலை), அதாவது சஹாஸ்ரரா சக்கரம். எனவே, குரு என்பவர் நன்றியுணர்வுக்கும், பேரானந்தத்திற்கும் நடுவே இருக்கிறார். இருளைப் போக்குவதும், எல்லா துயரங்களை நீக்குவதும் தான் குரு தத்துவம். பிஷஜே பவா ரோகினம்’ என்று உச்சரிக்கிறோம். உலக வாழ்க்கையில் உள்ள சிறு சிறு விஷயங்களில் சிக்கித் தவிக்கும், சிறிய புத்தி உடையோர்களுக்கான மருந்து என்பதே அதன் பொருள். மனம் அந்தத் துயரிலிருந்து வெளி வர விரும்புவதாலேயே அதை நோய் என்று அழைக்கிறோம். குரு தத்துவம் அந்த முழுமையான நிவாரணத்தைத் தருகிறது. மின்சாரத்தையே அறியாத, மின் விளக்கையே உபயோகித்திராத சிலர் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். விலங்குகளுக்கு மின்சாரம் தேவையில்லை, அது விளக்குகளை உபயோகிப்பதில்லை. ஆனால், மனிதர்களுக்கு இருளில் விளக்கு தேவை.எனவே மனிதர்களுக்கு குருதத்துவம் தேவை, அவர்களுக்கு ஞானம் தேவை. ஞானம் இல்லாமல் வாழ்பவர்கள் விலங்குக்கு ஒப்பானவர்கள்.

ஞானமில்லாமல் வாழ்பவர்கள்,விலங்கு வாழ்க்கை வாழ்கிறார்கள், அது மனித வாழ்வல்ல. எனவே வாழ்க்கையில் குரு இருப்பது என்பது ஒரு நவநாகரீகம். வாழ்க்கையில் குரு இல்லையென்றால், அது ஒரு நாகரீகமில்லாத வாழ்க்கை, தொழில்நுட்பம் ஏதுமில்லாது வாழ்வதை போன்றது. ஞானத்திற்கு அணுக்கம் இருப்பது ஒரு சலுகை, ஒரு நல்லதிருஷ்டம். நமது தொன்மையான மரபு, பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இந்த அழகிய ஞானத்தை பாதுகாத்து வருகிறது. அதை இன்று உணர்ந்து நாம் நன்றி கூறுகிறோம். வாழ்க்கையை ஞானத்தோடும், ஞானத்தில் வாழ்க்கையையும், ஞானதிற்காக வாழ்க்கை இருப்பதையும் நினைவுகூர்ந்து அதைக் கொண்டாடுவதற்கான தினம் இது. இந்த உலகில் துயரை நீக்குவது ஞானமே. ஞானம் மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றால் வேறு எதுவும் மகிழ்ச்சியை அளிக்க முடியாது. மகிழ்ச்சி, அறிவு மற்றும் ஞானம் ஆகியவற்றை பரப்பும் சலுகை நமக்கு இருக்கிறது. இருளை நீக்குவது மற்றும் துயரை நீக்குவது குரு தத்துவமே. உலக வாழ்க்கையில் உள்ள சிறு சிறு பொருட்களில் சிக்கித் தவிக்கும் சிறிய புத்தி உடையோர்களுக்கான மருந்து.

குரு தத்துவம் அந்த முழுமையான நிவாரணத்தை அளிக்கிறது. ஞானம் என்பது வெறும் தகவல்கள் அல்ல, அது பேருணர்வின் தரம்; வாழ்கையின் தரம்.படித்து தேறி பல பட்டங்களை வாங்குவதால் அல்லது தகவல்களை நமக்குள் திணித்துக் கொள்வதால் வருவதல்ல ஞானம். உள்ளே எதுவோ தூண்டப்படுகிறது, நீங்கள் ஞானவான் ஆகிறீர்கள்ஏதோ நாடி அல்லது பேருணர்வின் ஏதோ ஒரு பகுதி மாறுகிறது பிறகு நீங்கள் ஞானவான் ஆகிறீர்கள். அப்படித்தான் நான் நினைக்கிறேன்! நிறைய படிப்பதால் வருவதல்ல ஞானம். ஏராளமாய் படிப்பதால் எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமாக இருக்க முடியாது. ஞானம் என்பது பேருணர்வின் தரம், அது ஒரு வாழ்கையின் தரம், நல்ல சுற்றத்தால் இந்த மாற்றம் நிகழ்கிறது. இதுதான் நடக்கிறது. குருவின் இருப்பு உங்களுக்கு எந்த தகவலையும் தருவதில்லை, பேருணர்வின் தரத்தை அது மாற்றுகிறது, அது உங்கள் மனதிற்கு ஞானத்தைத் தருகிறது.

சரி, இப்போது ஞானம் பெற வேண்டுமானால் குருவின் முன்னே சென்று எல்லா நேரமும் அமர்ந்திருக்கலாமா? தேவையில்லை. எங்கே இருந்தாலும், குரு தத்துவத்தின் இருப்பை உணர்ந்தவாறு இருங்கள் போதும்.குரு தத்துவம் இரு புருவங்களுக்கு இடையே இருக்கிறது. பிட்யூடரி சுரப்பிகள் இருக்கும் ஆக்ஞை சக்கரம் தான் குருவின் இருப்பிடம். யோக அறிவியலில், ஆக்ஞை சக்கரம், இரு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் பகுதி தான் குருவின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இது தொண்டைப் பகுதியில் விசுக்தி சக்கரத்திற்கு அதாவது தூய வெளிக்கு மேலே இருக்கிறது. தூய வெளிக்குள்ளே நுழைகிறீர்கள், தவத்திற்குள்ளே நுழைகிறீர்கள், பிறகு குருவை அடைகிறீர்கள். குருதான் உங்களை தவத்திற்குள்ளே உங்களை அழைத்துக் கொள்கிறார்.
அன்பு, வெறுப்பு மற்றும் பயம் ஆகியவை இருக்கும் இருதயப்பகுதியில், சிக்கிக் கொள்கிறீர்கள். வெறுப்பு பயம் ஆகியவற்றில் இருந்து நீங்கள் வெளியே வரவேண்டும் என்றால் நீங்கள் உள்வெளிக்கு போக வேண்டும். யார் உங்களை உள் வெளிக்கு இழுத்துக்கொள்கிறார்கள்? குரு தத்துவம். எனவே குருதான் உங்களை உள்ளே இழுத்துக் கொள்கிறார். உள் வெளிக்கு வரும் போது, உங்களுக்கு என்ன நடக்கிறது? நீங்கள் தூய்மையாகிறீர்கள், அதாவது விசுத்தி அதாவது சிறந்த தூய்மை. இருதயம் தூய்மையாகிறது, மனம் தூய்மையாகிறது, பிறகு உங்களை பேரானந்தத்தில், அதாவது சஹாஸ்ரராவில் இணைக்கிறது. இதுதான் யோக அறிவியல். அதனுள்ளே ஆழமாகச் சென்றால் பேராச்சரியம். ஒவ்வொரு கணமும் மேலும் மேலும் விளக்குகிறது. ஞானம் என்பது பேருணர்வின் தரம், வாழ்கையின் தரம், நல்ல சுற்றதினால் இந்த மாற்றம் நிகழ்கிறது.

குருவின் இருப்பு உங்களுக்கு எந்த தகவலையும் தருவதில்லை, பேருணர்வின் தரத்தை அது மாற்றுகிறது, அது உங்கள் மனதிற்கு ஞானத்தைத் தருகிறது. வெறும் வார்த்தைகளால், புத்தகம் படிப்பதால்,ஏராளமான தகவல்களை,திணித்துக் கொள்வதால் நீங்கள் ஞானவானாகிறீர்கள் என்று நினைக்காதீர்கள். இல்லை. ஞானம் அந்த மாற்றத்தினால் வருகிறது, அதனால் தான் அது கருணை எனப்படுகிறது. கருணை என்றால் என்ன? விவரிக்க முடியாத ஒன்று. உங்களுக்குக் கிடைத்த ஏதோ ஒன்றை உங்களால் விளக்க முடிந்தால் அது அதிருஷ்டமல்ல.

ஏதோ ஒன்றை எப்போது அதிருஷ்டம் என்று அழைப்பீர்கள்? அதன் காரணத்தை விளக்க முடியாத போது. இது துரதிருஷ்டத்திற்கும் பொருந்தும். உங்களுக்கு துரதிருஷ்டம் நேர்ந்தால் அது ஏன் ஏற்பட்டது என்று உங்களால் விளக்க முடியாது. நன்றியுணர்வு உங்களை குரு தத்துவத்திற்கு அழைத்துச் செல்கிறது, பிறகு மேலே பேரானந்தத்திற்கும் அழைத்துச் செல்கிறது. இது தலை கீழாகவும் நடக்கும். ஏனென்றால், பேரானந்தத்தை அனுபவித்த நீங்கள் நன்றியுணர்வு கொள்வீர்கள்.
எனவே ஞானம் என்பது என்ன? இது பேருணர்வின் ஒரு குணம்; எச்சரிக்கை போன்ற ஒரு குணம்.
எச்சரிக்கையாய் இருப்பது என்றால் என்ன? (விரல்களை சொடுக்குகிறார்) இப்போது, உங்கள் இருப்பு! எப்போது நீங்கள் திடீரென்று எச்சரிக்கை அடைகிறீர்கள் தெரியுமா? உங்கள் மனம் மாற்றமடைகிறது, பிறகு திடீரென்று நீங்கள் உயிர்படைகிறீர்கள். எச்சரிக்கைத் தன்மையை வார்த்தைகள் விளக்க முடியாது! அதைபோலவே ஞானம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்போதேனும் சிறிதளவாவது ஞானத்தை அனுபவித்திருப்பார்கள். அதைத் தக்க வைத்துக் கொண்டார்களா இல்லையா என்பது வேறு விஷயம். ஞானம் தான் மகிழ்ச்சிக்கான சாவியை வைத்திருக்கிறது. ஞானம் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. எனவே மகிழ்ச்சியை வேண்டுபவர்கள் குருவிடம் சென்று தான் ஆகவேண்டும். மகிழ்ச்சியை வேண்டுபவர்கள் குருவிடம் சென்றாக வேண்டும். மேலான வாழ்க்கைத் தரத்தை விரும்புபவர்கள் குருவிடம் சென்றாக வேண்டும்; வாழ்க்கையில் அவர்கள் குரு தத்துவத்தை அங்கீகரித்தாக வேண்டும்.

மத்திய காலகட்டத்தை சேர்ந்த ஒரு யோகி கூறினார், “தேனை அருந்துபவர்கள் யார்? யாருக்கு குரு இருக்கிறாரோ அவரே. தமது வாழ்க்கையில் குரு இல்லாதவர்கள் தாகம் கொண்டு தவித்துப் போகிறார்கள், அவர்கள் வாழ்க்கையில் ரசமில்லை; உண்மையான மகிழ்ச்சி தெரிவதில்லை. ஆனால் குரு வாய்க்கப் பெற்றோர் மறுபடி மறுபடி தேனை அருந்துகிறார்கள்.” நமக்கு உள்ளே உள்ள வெளியில் ஏராளமாய் தேன் இருக்கிறது. குரு வாய்க்கப் பெற்றோர் அதை ஏகமாய் அருந்துகிறார்கள். குரு வாய்க்கப்பெறாதவர்கள் தம் வாழ்க்கை முழுதும் தாகம் தீராமலேயே கழிக்கிறார்கள்.

நமது உடலியலை விளக்குகிறார். அதாவது (உச்சந்தலையில் – சஹாஸ்ரராவில்) பேரானந்தம் இருக்கிறது, தேன் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் குரு இருக்கும்போது அதை உங்களால் அணுக முடிகிறது, இல்லையென்றால் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போகிறது. எங்கே இருந்தாலும் குருவின் இருப்பை உணர்ந்தவாறு இருங்கள் போதும். இதைப்பற்றிய அழகான கவிதைகள் பல உள்ளன. எல்லாவற்றையும் நான் படித்ததில்லை, சிலவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் சாரம் என்னவென்றால், பேருணர்வின் குணம் எப்படி மாற்றமடைகிறது, அந்த மாற்றம் ஒரு பரிசு. (ஞானம் ஒரு பரிசு)

ஞானம் பெற்றவர்களின் தோழமை, பேருணர்வில் அந்த மாற்றத்தை செய்விக்கிறது. அல்லது அது உங்களுக்கு பரிசாக அளிக்கபடுகிறது, நீங்கள் நன்றியுணர்வு கொள்கிறீர்கள். ஏதோ வாழ்க்கையில் நீங்கள் சம்பாதிப்பது அல்ல. இதை சம்பாதிக்க முடியாது, இது உங்கள் மீது பொழியப்படுகிறது, அதுதான் அந்தச் சாவி. ஏராளமாய் புத்தகங்கள் படிப்பதே ஞானம் என்று பலர் நினைக்கிறார்கள். ஞானத்திற்கும் புத்தகத்திற்கும் ஏதும் தொடர்பில்லை. ஞானத்திற்கும் தகவல் சேகரிப்பதற்கும் ஏதும் தொடர்பில்லை. மனதில் பேருணர்வுக் குணம் மாற்றமடைவதே இது. குருவை வாழ்க்கையில் அங்கீகரிப்பதால், குரு தத்துவத்தால் இது வழங்கப்படுகிறது. தம் தரப்பிலிருந்து ஒருவர் இதை அங்கீகரிக்க வேண்டும். குரு யாரையும் ஏற்றுகொள்வதோ அல்லது நிராகரிப்பதோ இல்லை. ஒரு மாணவன், அல்லது ஒரு சீடன், ஒரு குருவை குருவாய் ஏற்றுக்கொள்கிறார்.