புகழ்ச்சியால் ஏற்பட்ட மாற்றம்

புதன்கிழமை 16 ஜூலை 2014  

கனடா 

கேள்வி பதில்கள்



எனக்குத் தெரிந்தவரை அகம்பாவத்தைக் கைவிடுவதே ஆன்மீகம். ஆனால் நீங்கள் மக்களுடைய அகம்பாவத்தைத் தூண்டி விடுவதைப் பார்க்கிறேன். அதுவும் குறிப்பிட்ட சில மக்களுடைய ஆணவத்தைத் தூண்டி அதிகப் படுத்துகிறீர்கள். வெளிப்படையான இந்த முரண்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்.

இரண்டு வழிகள் உள்ளன.
·         ஒருவரிடம் இப்படிச் சொல். நீ ஒரு உதவாக்கரை. நீ ஒரு அழுக்கானவன். நீ எதற்கும் லாயக்கில்லை. பொதுவாக மக்கள் மற்றவரைப் பற்றி இப்படி எண்ணி அவரைப் பழிக்கிறார்கள். திட்டுகிறார்கள். தவறாக நடத்துகிறார்கள். இப்படிச் செய்வதால், மற்றவரின் ஆணவம் குறைந்து சரியாகச் செயல் படுவார் என்று நினைக்கிறார்கள். பல சமயங்களில் இப்படி நடக்காது.
·         அவரிடம் நீ அழகானவன் (அழகானவள்). நீ நல்லவன் (நல்லவள்). நீ பெரிய ஆள். உன்னிடம் உயர்ந்த பண்பு உள்ளது என்று சொல்.

ஒரு மனிதனிடம் (பெண்ணிடம்) இருக்கும் உயர்ந்த பண்புகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அது அவர்களைப் புகழ்வதால் மட்டுமே முடியும். புகழ்வது தெய்வீக குணமாகும். புகழ்ச்சி என்பது மற்றவரின் அகம்பாவத்தை வளர்ப்பது மட்டுமல்ல.புகழ்ச்சியால் அவரிடமுள்ள உயர்ந்த பண்புகளை வெளி கொண்டு வரமுடியும். நீ தியானப் பாதையில் செல்லும் போது, தியானத்தின் ஆழத்தில் இருக்கும் போது, உன் வார்த்தைகள் மிகவும் சக்தி பெறுகின்றன. நீ ஒருவரைப் பார்த்து “ நீ ஒரு அழுக்கான வாத்து “ (கெட்டவன்) என்று சொன்னால், அவர் உண்மையிலேயே அழுக்கானவராக (கெட்டவராகி) விடுவார். ஏனென்றால் உன் வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நீ அவரைப் பார்த்து , “ நீ மிகவும் தாராள குணம் படைத்தவன்“ என்று சொன்னால் அவர் உண்மையிலேயே தாராள குணம் உள்ளவராக ஆகி விடுவார்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளி நாட்டில் வசிக்கும் ஒரு குடும்பம் என்னைப் பார்க்க வருவார்கள். நான் அந்தக் குடும்பத் தலைவரைப் பார்த்து, “நீ மிகவும் தாராள குணம் படைத்தவன்“ என்று சொல்வது வழக்கம். ஒரு நாள் அவருடைய மனைவி, என்னிடம் பேச, தன்னை தைரியப்படுத்திக் கொண்டு, என்னைக் கேட்டாள். குருதேவா ! நீங்கள் ஏன் என் கணவரைப் பார்த்து “ நீ தாராள குணம் படைத்தவன்“ என்று சொல்கிறீர்கள். “அவரோ மிகப் பெரிய கஞ்சன். ஒரு வேளை என் கணவன் தாராள மனமில்லாத பெரிய கஞ்சன் என்பதை குருதேவர் அறியவில்லையோ என்று என் மனதில் சந்தேகம் உருவாகி விட்டது. என் கணவரோ என் இரண்டு குழந்தைகளுக்கு ஒரு ஐஸ் கிரீம் வாங்கி பங்கு போட்டுக் கொள்ள சொல்பவர். தனித்தனியாக வாங்கிக் கொடுக்க அவரிடம் நிறைய பணம் இருந்த போதிலும் இப்படிச் செய்பவர். அவருக்கு தன் மேலும், தன் குடும்பத்தவர் மேலும் செலவு செய்ய மனம் வராது. அவர் எதற்காக பணம் சம்பாதிக்கிறார் என்றே எனக்குப் புரிய வில்லை.“ என்று சொன்னாள்.

“ எனக்கு அது தெரியும் “ என்று அவளிடம் சொன்னேன். அதனால் தான் எப்போதும் “ நீ மிகவும் தாராள மனம் படைத்தவன்“ என்று சொல்கிறேன். யாரையாவது பார்த்து “ நீ உருப்படமாட்டாய் “ என்று சொன்னால் அவன் அப்படியே ஆகிவிடுவான். ஆனால் “ நீ அருமையானவன். நீ தாராள குணம் படைத்தவன். “ என்று சொல்லும் போது அவனிடம் தாராள குணம் வந்து விடும். அந்த மனிதரிடம் அத்தகைய பெரிய மாற்றம் ஏற்பட்டது.

அன்பான குருதேவா ! தயவு செய்து மனு பற்றியும், நம் பண்டைய நூல்களில் அவருடைய பங்கு பற்றியும் சொல்வீர்களா ?

மனு என்பவர் பண்டைய காலத்து அரசர். ஆதாம் ஏவாள் போல் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர். எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்று எனக்குத் தெரியாது. சமுதாயக் கட்டுப் பாடுகள், ஆட்சி முறை விதிகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். மனு பல நல்ல விஷயங்களை பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அவர் எழுதியவற்றில் ஒன்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. பலருடைய விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். பெண்கள் சுதந்திரமாக வாழத் தகுதியற்றவர்கள் என்ற அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் எழுதிய படி, ஒரு பெண்ணின் சிறிய வயதில் அவளுடைய தந்தை பார்த்துக் கொள்கிறார். நடு வயதில் அவளுடைய கணவன் பார்த்துக் கொள்கிறான். வயோதிகத்தில் அவளுடைய மகன் அவளை பார்த்துக் கொள்கிறான். எனவே அவள் சுதந்திரமாக தனியாக வாழத் தகுதி இல்லாதவள். வாழ்நாள் முழுதும் ஒரு பெண் மற்றவரை சார்ந்தே வாழ வேண்டும் என்பது மனுவின் கருத்து.

“ ந ஸ்திரீ ஸ்வதந்த்ரம் அர்ஹதி “ என்ற இந்த வரியின் படி ஒரு பெண் தனியாக, சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள். ஏனென்றால் எப்போதுமே அவளை ஒரு ஆண் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கருத்து சரியல்ல. நான் இதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஒரு வேளை அன்றைய கால கட்டத்தில் இது உண்மையாக இருந்திருக்க கூடும். மனு பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால் அவர் கூற்றின் படி, பெண் சுதந்திரமாக வாழ முடியாது. பெண்களை எப்போதுமே நலிவடைந்தவர்களாக எல்லா மொழிகளிலும் குறிப்பிடப்படுகிறது. இல்லையா? எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

மனு எழுதிய நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பெண்களின் சுதந்திரம் பற்றி அவர் எழுதியதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. இன்றைய சமுதாயத்துக்கு அக்கருந்து செல்லுபடியாகாது.

குருதேவா ! சானலிங் (இறந்தவர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொள்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

இதை விட்டு தூர விலகி இரு. இந்த விஷயத்தில் ஈடுபாடு கொள்ளக் கூடாது. அதை விட மிக உயர்ந்த பாதையில் நீ சென்று கொண்டிருக்கிறாய். “சானலிங்“ படி யாருடைய ஆவியோ உன் உடலில் புகுந்து ( அல்லது மற்றவர் உடலில் புகுந்து ) ஏதோ சொல்வதாக நம்புகிறார்கள். இது 100 % உண்மையல்ல. ஏதோ சில உண்மைகளை ஆவி சொல்லக் கூடும். பின்னால் ஓரிரண்டு மாதங்களில் நடக்கப் போவதை பற்றி, அல்லது ஓரிரு ஆண்டுகளில் நடக்கப் போவதை பற்றி அல்லது நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு உனக்குத் தெரிய வரலாம். உன் முடிவுகள் இப்படிப்பட்ட குறிப்புகளைச் சார்ந்து இருக்கக்கூடாது.

பெரும்பாலான நேரங்களில் மக்கள் கீழ்நிலையில் இருக்கும் ஆவிகளை அழைக்கிறார்கள். ப்ளான்சிட் (க்வாஜா போர்ட்) முதலிய உபகரணங்கள் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஜான் எஃப் கென்னடியின் ஆவியை அழைக்கிறார்கள். அவர்களுடைய மனதில் இருக்கும் கேல்விகளுக்கு ஆவி விடையளிப்பதாகச் சொல்கிறார்கள். உன்னுடைய சக்திக்கு இந்த மாதிரியான செயல்கள் நன்மை தராது. இப்படி ஈடுபடுபவர்களின் சக்தி மிக விரைவில் குறைந்து போவதைப் பார்த்திருக்கிறேன். அதே போல் கிரிஸ்டல் கேஸிங் என்ற செயல் முறையில் இருப்பவர்களின் சக்தியும் மிகச் சீக்கிரமாகக் குறைந்து விடும். அப்படிப்பட்டவர்களை, உங்களில் எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள் ? இப்படிப் பட்ட மனிதர்களின் உதவியை நாடுவது சரியல்ல. விளையாட்டாக எப்போதாவது இதில் கலந்து கொள்ள நேர்ந்தால் சரி. இதை உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் “சானலிங்” கில் ஈடுபட வேண்டாம். நான் இதை ஒத்துக் கொள்ளமாட்டேன்.

“சானலிங்” கில் ஈடுபடும் மக்கள் அதில் சிக்கி வெளியே வர முடியாமல் போகும். இது மிக மிக விரும்பத்தகாத இடம். இறந்தவர்களின் ஆவியோடு சிக்கிக் கொள்வது மகிழ்ச்சியளிக்காது. நீங்கள் முக்தியடைய முடியாது.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன,ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். ஃப்ரான்ஸ் தேசத்திலிருந்து ஒரு இளம் பெண் இந்தியாவுக்கு வந்தாள். ஞானம் தேடும் நல்ல பெண்மணி. அறிவு பெற்றவள். தினந்தோறும் ஆன்மீக சாதனைகள் செய்பவள். அவள் சானலிங் செய்யும் ஒரு மனிதரிடம் சென்றாள். அந்த மனிதர் அவளிடம் “வெள்ளை உடை அணிந்த ஒருவர் உன்னை காத்துக் கொண்டிருக்கிறார். நான் உனக்கு “சானலிங்” செய்து உன் வாழ்வில் என்ன வரப்போகிறது என்று சொல்லமுடியாது“ என்று சொல்லி விட்டார்.

அந்தப் பெண் வாழும் கலையில் இருப்பதால் தான் அவரால் அவளுடைய வருங்காலத்தைப் பற்றி சொல்ல முடியவில்லை. எனவே அந்தப் பெண் வாழும் கலையை விட்டு விலகி விட்டாள். “சானலிங்” கில் ஈடுபாடு கொண்டு அப்பாதையில் சென்றாள். திருமணம் செய்து கொண்டு இப்போது அவளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவன் போதை மருந்துக்கு அடிமையானவன். அவளும் அவனோடு சேர்ந்து போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டாள். அவள் வாழ்க்கையில் மிகவும் துன்பப்படும் படியாகி விட்டது. அவளைப் பார்த்துக் கொள்ள யாருமே இல்லை. உணவளிக்க யாரும் இல்லை. பின்னால் சில வாழும் கலை நண்பர்கள் அவளுக்கு உதவி செய்து, அவள் 6 – 7 ஆண்டுகளுக்கு பின் நம்முடைய பாத் ஆண்டோகாஸ்ட், ஜெர்மனியில் இருக்கும் நம்முடைய ஆசிரமத்துக்கு வந்தாள். அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

சானலிங் செயல் முறையின் போது கீழ் நிலையிலுள்ள ஆவிகள், நீ செல்லும் உன் மகிழ்ச்சிக்கான பாதையிலிருந்து, ஞானப் பாதையிலிருந்து உன்னை திசை திருப்ப முயற்சி செய்யக் கூடும். எனவே அப்படிப்பட்ட ஆவிகளிடமிருந்து விலகியிருப்பதே உனக்கு நன்மை தரும். சில நேரங்களில், சானலிங் செய்யும் ஒருவரிடம் நீ செல்லும் போது, “ ஒரு பெரிய ஞானி வருகிறார்“ என்று அவர் சொல்லக் கூடும்.  ஆனால் அவர் முழுதும் வெற்றிடம், காலியிடமாக இருந்தால் தான் அவர் உடலில் ஒரு ஞானியின் ஆவி வர முடியும. பொதுவாக அப்படிப்பட்டவரைப் பார்ப்பது அரிது. அவர்கள் பணத்துக்காகவோ, வேறு ஏதாவது நோக்கத்துக்காகவோ அப்படிச் சொல்கிறார்கள். எனவே, நான் சொன்னது போல், நீ பயப்படத் தேவையில்லை. அதே சமயம் ஆவி உலகத்துக்கு செல்வது தேவையில்லாத செயல்.

அன்பான குருதேவா ! பணத்துக்காகப் போராடும் நான் ஆன்மீக வளர்ச்சிக்காக எப்படி நேரம் ஒதுக்க முடியும் ?

நிறைய நேரம் ஒதுக்கத் தேவையில்லை. எவ்வளவு நேரம் உன்னால் முடியுமோ, அதுவே போதும். ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சில நாட்கள் வாழும் கலை மௌனம் மற்றும் தியானப் பயிற்சியில் கலந்துகொள். ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று மேல் நிலைப் பயிற்சிகளில் சேர்ந்தாலே போதும். 6 மாதத்தில் 5 நாட்கள் ஒதுக்குவது பெரிய காரியமில்லை. ஒவ்வொரு நாளும் உன் தினசரி சாதனைகளைச் செய்.

இடைவிடாமல் சாதனை செய்வது அவசியம். ப்ராணயாமம், தியானம் செய்யாமல் உணவு உண்ண மாட்டேன் என்ற மன உறுதி உனக்கு வேண்டும். ஒவ்வொரு நாளும் சற்று நேரம் தியானம் செய்து, நேரம் கிடைக்கும் போது ஞானம் பற்றிய உரையாடல்களைக் கேட்டாலே போது. அது உன்னை மேம்படுத்தும். ஞானம் பற்றிய விஷயங்களில் ஈடுபடுவது மிகவும் அத்யாவசியமாகும். நீ கார் ஓட்டும் போது கூட ஞானம் பற்றிய உரையாடல்களைக் கேட்கலாம். தூங்கப் போகுமுன் ஞானம் பற்றிய பேச்சைக் கேட்கலாம். இப்படி செய்வது உன் ஆத்மாவுக்கு உகந்தது.

குருதேவா ! ஆன்மீக சாதனைகளை விட்டு விட்டு செய்கிறேன். அது ஏன் ? மற்றவர்களும் அப்படிச் செய்வதை பற்றிக் கேள்விப்படுகிறேன்.

இது இயல்பாக நடப்பது தான். மரத்தில் பழங்கள் இருக்கும் போது, அதன் வேர்களில் நீ தண்ணீர் ஊற்ற மாட்டாய். மரம் காயும் போது அதன் வேர்களில் தண்ணீர் விடுவாய். நாம் இப்படித் தான் செய்கிறோம். ஒருமுறை, இரண்டு அல்லது மூன்று முறை இப்படி நடக்கும். பின்பு நீ புத்திசாலியாகி, யோக சாதனை, தியானம் முதலியவை உன் வாழ்க்கையின் அங்கமாகி விடும். அப்படி ஆன பின் சாதனை செய்யாமல் இருப்பது உனக்கு  அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஒரு நாள் கூட சாதனை செய்யாமல் இருக்க முடியாது. ஒரு நாள் கூட தியானம் செய்யாமல் இருக்க முடியாது. தியானம் செய்யாவிட்டால் எதையோ இழந்தது போலிருக்கும். ஏதோ குறைபாடு இருப்பது போல் உணர்வாய்.

எனவே, இந்த நல்ல வழக்கத்தை தினமும் பல் துலக்குவது போல் வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கொள்ள வேண்டும். ஒரு நாள் பல் துலக்காவிட்டால் உனக்குப் பிடிக்காது. இல்லையா ? பரிதாபமாக உணர்வாய். டெண்டல் ஹைஜீன் (பற்களின் சுகாதாரம்) போல இது மெண்டல் ஹைஜீன் (மன சுகாதாரம்)