உனக்குத் தேவையானது உனக்குக் கிடைக்கும்

வெள்ளிக்கிழமை 25 ஜூலை 2014

பாத் ஆண்டகாஸ்ட், ஜெர்மனி




கேள்வி பதில்கள்

குருதேவா ! நல்ல நட்பை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ?

குருதேவர்: நண்பர்களிடம் எதையும் கேட்காதே. நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என்று சொல். உனக்குத் தேவையானவை உனக்குக் கிடைக்கும் என்பதில் உறுதியாக இரு. கொடுப்பவர் வேறு யாரோ ஒருவர். எனவே அன்புக்கு உரிமை கொண்டாட வேண்டாம். உரிமை பேசி அன்பை நீ கேட்கும் போது, நீ அன்பை அழித்து விடுகிறாய். எனவே எப்போதும் நீ மற்றவர் உன் மேல் அன்பு செலுத்த வேண்டும்; உன் மேல் கவனம் வைக்க வேண்டும் என்று கேட்கக் கூடாது.

நீ எப்போதும் மற்றவரிடம் அன்பாக இருந்து அவரை கவனமாகப் பார்த்துக் கொள்வாயானால், அவர் உன்னோடு பழகுவதை சுகமாக உணர்வார். ஆனால் நீ மற்றவர்களிடமிருந்து அன்பை எதிர் பார்த்தால் (அவர்களுடைய அன்பை உரிமை கொண்டாடினால்) அவர்களை மிகவும் சங்கடமான நிலைக்கு உள்ளாக்குகிறாய். நான் சொல்வது உனக்கு விளங்குகிறதா? உலகில் எல்லோரிடமும் இப்படிச் சொல்ல முடியாது. ஆனால், அறிவாளிகளுக்கு, இதைப் புரிந்து கொள்பவர்களுக்கு இதற்கான வழி கிடைக்கும். உன் நண்பர்களிடம், “நான் உனக்காக எது வேண்டுமானாலும் செய்வேன். உன் நட்பை தவிர உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். “என்று சொன்னால் அந்த நட்பு நீடித்திருக்கும். நீ அப்படி நடந்து கொள்ளும் போது உன் நண்பர் உனக்கு உதவ மாட்டார் என்று நினைக்கிறாயா? உனக்கு உதவி தேவையாயிருக்கும் போது ஒருவரல்ல, 10 பேர்கள் உனக்கு உதவ முன் வருவார்கள். மேலும் நண்பர்களுக்கு நீ நன்மை செய்திருக்கும் போது அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உதவி செய்திருக்கிறாய் என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டாம். யாராவது உனக்கு உதவி செய்திருந்து, அவர் அந்த உதவியை திரும்பத்  திரும்ப உனக்கு சொல்லிக் காட்டினால் உனக்கு எப்படி இருக்கும்? நீ வெறுப்படைவாய். இல்லையா ? அப்படிப்பட்டவரிடமிருந்து விலகி செல்ல விரும்புவாய். யாரும் நன்றிக் கடனுடன் வாழ விரும்ப மாட்டார்கள். மற்றவர்கள் உன்னிடம் நன்றிக் கடன்பட்டிருப்பதாக சுட்டிக் காட்ட வேண்டாம்.

நண்பர்களை தாழ்வுணர்ச்சியில் தள்ள வேண்டாம். நீ யாருக்காவது மிக அதிகமாக உதவி செய்திருந்தால், அவ்வப்போது அவரிடமிருந்து சிறு உதவியைக் கேள். உதாரணமாக அவரை உன்னை ரயில் நிலையம் அல்லது விமான நிலையம் வரை கொண்டு விடச் சொல்லலாம். இந்த சிறு உதவியை நீ கேட்கும் போது அவருடைய சுயமரியாதை மேம்படுத்தப் படும். (உனக்கு உதவி செய்த திருப்தி அவருக்குக் கிடைக்கும்.) பலர் பெரிய அளவில் நன் கொடைகள் அளித்து உதவுகிறார்கள். ஆனால் உதவி பெற்றவரின் சுய மரியாதையை தாழ்வடைய செய்கிறார்கள். அப்படிச் செய்வது நல்லதல்ல.

ஒரு கனவான் என்னிடம் “நான் இது வரை யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கியதில்லை. இது வரை என் சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும் நான் தான் ஏதாவது கொடுத்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு செய்திருந்த போதிலும் யாரும் என்னைப் பார்க்க விரும்பவில்லை. என்னுடன் பேச விரும்ப வில்லை. இது எனக்குப் புதிராக இருக்கிறது. அவர்களை நான் எதுவும் கேட்டதில்லை“ என்று கூறினார். “எப்போதாவது சிறு உதவி கேட்டிருக்கிறீர்களா?“ என்று அவரை கேட்டேன்.“ என்றும் எதுவும் கேட்டதில்லை. எனக்கு எதுவும் தேவையில்லை என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.“ என்று விடையளித்தார். அவர் என்ன செய்தார் என்று புரிகிறதா? மற்றவர்களுடைய சுயமரியாதையை தன்னையுமறியாமல் தாழ்வடைய செய்திருக்கிறார். சுயமரியாதையை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் யாரும் அந்த கனவானோடு இருக்க விரும்புவதில்லை.

நட்பில் இரண்டு விஷயங்கள் உள்ளன. நீ மிகவும் குழப்பமடையக் கூடும். நீ யாரையும் எதையும் கேட்காதே என்று சொன்னேன். அதே சமயம் அவர்களுடைய சுய கௌரவத்தைக் காப்பதற்காக அவர்களிடம் சிறு உதவிகளைப் பெற்றுக் கொள் என்றும் சொல்கிறேன். இங்கு தான் உன் தனித் திறமை தேவையாகிறது. இரண்டும் எதிர்மறையான விஷயங்கள். மற்றவர்களின் சுய கௌரவத்தை மதிப்பது முதலிடம் பெறுகிறது. எதையும் கொடு என்று அவரை கேட்காமலிருப்பது இரண்டாமிடத்தில் இருக்கிறது. இரண்டையுமே நினைவில் வைத்துக் கொள். உறுதியாக அதே சமயம் பணிவாக இருப்பது

நான் எப்போதும் எதையும் மற்றவரிடமிருந்து கேட்டு வாங்கியதில்லை என்று சொல்வது உன் அகங்காரத்தை காட்டுகிறது. உண்மையாக இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசுவது சரியல்ல. நான் சொல்வது உனக்குப் புரிகிறதா? நீ உன் கொள்கையில் உறுதியாக இருக்கலாம். ஆனால் பணிவாக இருப்பது அவசியம். பணிவாக இருப்பது என்றால் என்ன? “நான் மிகவும் சாதாரணமானவன். பணிவாக இருப்பவன் என்று சொல்வது பணிவல்ல. உறுதியுடன் இருப்பது அதே சமயம் மற்றவர் கருத்தை மதித்து ஏற்றுக் கொள்வது தான் பணிவு. கௌரவமாக இருப்பது. அதே சமயம் எல்லோரிடமும் எளிமையாக பழகுவது. எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் போது மற்றவர்களுக்கு அவர்களிடம் மரியாதை இல்லாமல் போகலாம். அப்படிப்பட்டவர் மற்றவர்களின் பார்வையில் பெரிய மனிதராக தெரியமாட்டார். மற்றவர்கள் பணிவானவர்களை ஒரு நூடூல் போல் நடத்துவார்கள். அவர்கள் மிகவும் மிருதுவானவர்கள். அப்படி எப்போதும் பணிவாக இருப்பது வாழ்க்கைக்கு உதவாது. மிகவும் கடுமையாக நடந்து கொள்வதும் சரியல்ல. இரண்டுக்கும் நடுவில் உள்ள வழி நட்புக்கு நல்லது. உறுதியாக இருக்க வேண்டும். அதே சமயம் பணிவாகவும் இருக்க வேண்டும். இதுவே நட்பின் ரகசியம்.

யாராவது ஒருவர் துன்பப்படும் போது, மன உறுதி குறைந்தவராக இருக்கும் போது அவரை ஊக்கப்படுத்தி அவர் அந்தத் துன்பத்திலிருந்து விடுபட வழி சொல்லுங்கள்.மனக் கவலையோடு ஒரு நண்பரிடம் சென்று பேசிவிட்டு வரும் போது, உன் கவலை தீர வழி கிடைத்தால் அவர் ஒரு நல்ல நண்பர் என்று தெரிந்து கொள். அதே சமயம் நீ ஒரு பிரச்சினையோடு ஒருவரிடம் ஆலோசனை கேட்கச் சென்று, அந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகி விட்டதாக நீ உணர்ந்தால் அவர் நல்ல நண்பர் அல்ல.

தாயின் பேச்சை மட்டும் கேட்கும் என் கணவருடன் நான் எப்படி வாழ்வேன் ? தாயின் பிடியிலிருந்து அவர் எப்போது நல்ல கணவராக, நல்ல தகப்பானாக மாறுவார் ?

குருதேவர்: இதை நீ நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பார். உன் மகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவாய்? உன் மகன் திருமணமான பின் ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும் மட்டும் இருந்து ஒரு நல்ல மகனாக இல்லாவிட்டால் என்ன ஆகும்? இந்தக் கேள்வி உன் வாழ்வில் எழும். இந்தக் கேள்விக்கு விடை சொன்னால் நீ கேட்ட கேள்விக்கும் விடை கிடைக்கும்.

ஒருவன் நல்ல கணவனாகவும், ஒரு நல்ல தகப்பனாகவும் இருப்பதை எதுவும் தடுப்பதில்லை. அவனுக்கு சில சமயம் நினைவுபடுத்த வேண்டியிருக்கும். ஒரு தாயின் மகனுக்கு, திருமணத்துக்கு பின் வேறு பொறுப்புகளும் வரும். ஒரு நல்ல கணவனாக, ஒரு நல்ல தகப்பனாக அவன் புதிய பாத்திரத்தில் பொறுப்பேற்க வேண்டும். இதை இயல்பாக செய்வதற்கு சிலகாலம் பிடிக்கலாம். நீ உன் தாய் பேச்சைக் கேட்காதே என்று அவனிடம் சொல்ல வேண்டாம். பொறுமையாக எடுத்துச்சொல். இது உன் பிரச்சினை தீர ஒரு வழியாகும்.

சில சமயம் புது கார் வாங்கியவர்கள் அதை எப்படி ஓட்டுவது என்று தெரியாமல் இருப்பார்கள். அந்தக் காரில் பல புதிய நவீன உபகரணங்கள் இருப்பதால் தடுமாற்றம் ஏற்படக்கூடும். அவற்றைக் கவனித்து, அதன் உபயோகத்தை அறிந்து கொள்ளும் போது அவர்கள் அந்தக் காரை நன்றாக ஓட்ட முடியும். பொதுவாக பல தாய்மார்கள் தங்கள் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் ஆன பின் ஏதோ பாதுகாப்பை இழந்தது போல் உணர்கிறார்கள். அப்படிப் பட்ட தாய்க்கு எடுத்துச் சொல்லியோ, நம் பழக்க வழக்கத்தாலோ, இந்த பயம் தேவையற்றது. புதிய சூழ்நிலையில் எந்த வித மாற்றமும் இல்லை என்ற உணர்வை அளிக்க வேண்டும். இது பல குடும்பங்களில் ஒரு பிரச்சினையாக உள்ளது.

இரண்டாவதாக, ஒருவர் திருமணத்துக்குப் பின்னும் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல், ஒரு நல்ல கணவனாகவும், ஒரு நல்ல தகப்பனாகவும், தாய்க்கு ஒரு நல்ல மகனாகவும் வாழ முடியும். இது ஒருவரின் சிறப்பு குணம் (ஆற்றல்). இந்த ஆற்றல் அவருடைய மன நிலை அமைதியாக இருக்கும் போது வரும். எனவே மனைவி திருமணமாகி சில காலத்துக்குப் பின் தன் கணவனை மகனாகவும் நடத்த வேண்டும். மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உன் குழந்தையை வளர்க்கும் போது உனக்கு எவ்வளவு பொறுமை தேவையாக இருக்கிறது என்று கவனித்துப் பார். ஒரு குழந்தை தன் தாய்க்கு பொறுமையைக் கற்றுத்தருகிறது. தாய் தன் குழந்தைக்கு பல்துலக்கக் கற்றுத் தர வேண்டும். குளிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். கழிவறையைப் பயன்படுத்துவது எப்படி என்று பயிற்சி தர வேண்டும். உணவு உண்ணப் பழக்க வேண்டும். கைகளைக் கழுவி சுத்தமாக வைப்பதன் அவசியத்தைச் சொல்லி குழந்தைக்கு பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். எல்லாவற்றையும் தாய் தன் குழந்தைக்கு சொல்லித் தர வேண்டும். அந்தப் பொறுமையில் 50% கணவனிடமும் காட்டலாம்.

என்னுடைய முரட்டுத்தனத்தையும், கடுங்கோபத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க வாழும் கலையின் தினசரி சாதனைகள் உதவுகின்றன. இருந்தாலும் முரட்டுத்தனமும், கடுங்கோபமும் சில சமயங்களில் தலை தூக்குவதை உணர்கிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவீர்களா ?

குருதேவர்: ஒரு துணி மிகவும் சுத்தமாக இருக்கும் போது, ஒரு துளி அழுக்குப்பட்டால் கூட பெரிதாகத் தெரியும். அதே போல், மனம் மிகவும் அமைதியாக இருக்கும் போது, சிறிது கோபம் வந்தால் கூட மிகப் பெரிதாகத் தோன்றும். இது ஒரு இயல்பான அனுபவம் தான். துணி ஏற்கனவே அழுக்கடைந்திருக்கும் போது, அதில் ஒரு தூசிபட்டு மேலும் அழுக்கடையும் போது அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஆனால் தூய்மையான துணியில் சிறு அழுக்கும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

எனவே இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, நீ உன் கோபத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் போது, சில சமயம் உன்னையும் மீறி பழைய ஞாபகத்தில் கோபம் வரும் போது அதை கவனித்துப் பார். முன்பு நீ கோபப்படும் போது அதன் தாக்கம் நீண்ட நேரத்துக்கு உன் மனதில் இருந்திருக்கும். ஆனால் இப்போது அந்தத் தாக்கம் இருந்தாலும் நீண்ட நேரத்துக்கு இருக்காது. ஏனென்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வு உன்னை அந்தத் தாக்கத்திலிருந்து விடுவிக்கும். இதை நீ அனுபவத்தில் உணர்ந்திருக்கிறாயா?

இது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு வந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும் மேலும் தியானம் செய்வது உனக்கு உதவும். கவலை வேண்டாம்.

மேலும் மேலும் இது வேண்டும். அது வேண்டும். மற்றவர் என்னைக் கவனிக்க வேண்டும் என்று கேட்பதை எப்படி நிறுத்தலாம்? அந்த குணம் வந்த வண்ணம் இருக்கிறது. பண்பு எங்கிருந்து உதிக்கிறது?

குருதேவர்: அதை பற்றி ஆச்சரியப்படு. மற்றவர்கள் கவனம் உன் மேல் இருக்கும் போது உனக்கு சக்தி கிடைக்கிறது. நீ மிதப்பது போல் உணர்கிறாய். ஆனால் நீ உன் ஆத்மாவுடன் ஒன்றியிருக்கும் போது மற்றவர்கள் உன்னை கவனிக்கிறார்களோ இல்லையோ உன்னைப் பாதிக்காது. அதைப்பற்றி நீ கவலைப்பட மாட்டாய். ஆனால் மற்றவர்கள் உன் மேல் கவனம் செலுத்தும் போது உனக்கு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. அதனால் தான் மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்ப்பதற்காக பலர் பல விதமான செயல்களில் ஈடு படுகிறார்கள். இந்த பண்பு எங்கிருந்து உதித்தது என்று கவலைப்படாதே. அதை நீ உணரும் போது, அதை விட்டுவிட்டு மேலே செல்.

நம்பிக்கை என்றால் என்ன ?

குருதேவர்: எல்லா விதமான சந்தேகங்களையும் மீறி வருவது நம்பிக்கை. எப்போதும் ஆக்க பூர்வமான ஒன்றின் மேல் உனக்கு சந்தேகம் வருவது இயல்பு. ஒருவருடைய நேர்மையை நீ சந்தேகிப்பாய்.ஆனால் ஒருவருடைய நேர்மையின்மையை சந்தேகிக்க மாட்டாய். மற்றவரின் அன்பின் மேல் சந்தேகம் வரும். ஆனால் அவருடைய வெறுப்பை சந்தேகப்பட மாட்டாய். உன் மகிழ்ச்சியின் மேல் சந்தேகம் வரும், மன உளைச்சல் மேல் சந்தேகம் வராது. யாராவது தங்கள் மன உளைச்சலை பற்றி சந்தேகப்பட்டிருக்கிறார்களா? எப்போதாவது நீ “நான் மன உளைச்சலால் அவதிப்படுகிறேனா?“ என்று கேட்டிருக்கிறாயா? உனக்கு மன உளைச்சல் இருப்பது உண்மை என்று நம்புகிறாய். இது சந்தேகத்தின் இயல்பு. நம்பிக்கை இருக்கும் இடத்தில் சந்தேகத்தின் நிழல் கூட அண்டாது.

ஒரு முறை ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்டார். “சுற்றி வளைத்துப் பேசாதீர்கள். நேர் கேள்விக்கு நேரான பதில் சொல்லுங்கள். நீங்கள் ஆத்ம ஞானம் பெற்றவரா? நான் அவரைப் பார்த்து புன்முறுவலோடு சொன்னேன். நான் அவருடைய கேள்விக்கு “ஆம்” என்று சொன்னால் அதை நிரூபிக்க வேண்டும். ஏன் அந்தத் தலைவலி? அதனால் “இல்லை” என்று விடையளித்தேன். அவர் “நீங்கள் விளையாடுகிறீர்கள். உண்மையான பதிலை வேண்டுகிறேன்“ என்றார். நான் “இல்லை” என்று சொன்னதால் மேல் பேச்சுக்கு இடமில்லை என்று சொன்னேன். இருந்தாலும் அவர் விட வில்லை. அவரிடம் “நீ உன் இதயத்தைக் கேள். நான் உண்மை பேசவில்லை என்று உன் இதயம் சொல்கிறதா?” என்று கேட்டேன். அவர் “ஆம்” என்று சொன்னார். எனவே. “ஆம்” என்று சொல்வது எது? அந்தக் குரலைக் கேள். ஏன் என்னைக் கேட்கிறாய்?