அறியாமை சுய பச்சாதாபத்தினை சந்திக்கின்றது

புதன்கிழமை, 23 ஜூலை 2014,

ஜெர்மனி

எது உங்களை கவலைப்படுத்துகின்றது? விழித்தெழுந்து காணுங்கள். எல்லாமே ஒரு நாள் முடியப் போகின்றது. அனைத்துமே ஒரு நாள் முடிவுறும் என்னும் விழிப்புணர்வு கவலைப்படும் மனப்பாங்கிலிருந்து வெளியே கொண்டு வரும். இதுதான் இறுதியானது. அனைத்தும் ஒரு நாள் முடிவு பெறும்.கடந்தகாலத்தில் எத்தனையோ நிகழ்ந்துவிட்டன.சில இனியவை, இனிமையற்றவை. அனைத்தும் முடிந்துவிட்டன. அது போன்று இன்று என்னவோ அதுவும் நாளை முடிந்ததாகி விடும். இது உங்கள் சொந்த அனுபவம். அனைத்தும் மாறிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருப்பதை காணும் போது நீங்கள் திடமாக, வலுவாக, அதே சமயம் மென்மையாக, மையம் கொண்டவராகின்றீர்கள்.

அடுத்து வருவது உறவுகள். உறவுகள் உங்களுக்கு பிரச்சினையை உருவாக்குகின்றது. மனம் உடைகின்றீர்கள். விழித்தெழுந்து பாருங்கள். இந்த உறவுகள் துவங்குவதற்கு முன்னர் நீங்கள் சிரித்துக் கொண்டும் புன்முறுவலுடனும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இந்த நபரை சந்திப்பதற்கு முன்னர் உங்களது வாழ்வினை நினைவில் கொண்டு காணுங்கள். வாழ்வு நன்றாகவே இருந்தது. அது போன்றே பின்னரும் இருக்கும், ஏன் வருத்தப் படுகின்றீர்கள்?

உங்கள் உடல்நலனை பற்றிக் கவலைப்படுகின்றீர்களா? எவ்வளவு நலமாக உங்களை வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள்? எவ்வளவு தான் நலமாக இருந்தாலும் ஒரு நாள் இந்த உடலுடன் உங்கள் உறவு முடிந்துவிடும். அதற்காக நலமின்றி இருக்க வேண்டும் என்பது அல்ல,கவலைப்பட்டு பயனில்லை. உடல் நலனுக்கு எது தேவையோ அதைக் கவனித்துக் கொள்ளுங்கள், ஆனால் அதை பற்றிக் கவலைப்படுவதில் பொருள் இல்லை.

நிதிநிலை குறித்து கவலை எழுகின்றதா? பறவைகளை பாருங்கள். விலங்குகளை பாருங்கள். அவைகள் உணவினை பெறுகின்றன அல்லவா? இயற்கை அனைத்தையும் அளிக்கின்றது. இயற்கையை நம்புங்கள், உங்களுக்குத் தேவையானது கிடைக்கும். உங்கள் விழிப்புணர்வானது ஒரு வயல்வெளியைப் போன்றது. என்ன விதைக்கின்றீர்களோ அதுவே முளைக்கும்.தேவையையே விதைத்தால் தேவையே முளைத்தெழும். மிகுதி என்று எண்ணினால் அனைத்தும் மிகுதியாக கிடைக்கும்.

குருதேவ், எவ்வாறு சுய பச்சாதாபத்தினைத் தாண்டி வருவது?

குருதேவ்: ஏற்கனவே அதைக் கடந்து வர வேண்டும் என்று எண்ணி விட்டீர்கள். சுய இரக்கத்திலிருந்து வெளி வர வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டவுடனேயே ஒரு படி வெளி வந்து விட்டீர்கள். ஏனென்றால் உங்கள் மீது நீங்களே பச்சாதாபம் கொள்கின்றீர்கள் என்பதை உணர்ந்தறிந்து விட்டீரகள். பலர் தங்களை தாங்களே இரக்கப்பட்டுக் கொள்வதை உணராமலேயே இருக்கின்றார்கள். அவர்கள், நான் இப்படித்தான்" என்று எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால் நீங்கள் நான் ஏன் மீதே இரக்கப்படுகின்றேன் என்பதை அறிந்து கொண்டு விட்டீர்கள். எனவே நீங்கள் அதினின்று வெளி வந்துவிட்டீர்கள்.

எவ்வாறு வெளிவருவது என்று ஒன்றும் கிடையாது. எவ்வாறு தூங்கி விழிக்கின்றீர்கள்? ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தால், எழுந்திருங்கள் என்று எழுப்பினால் எழுந்து கொள்கிறார். அது போன்று தான். எவ்வாறு விழித்தேன் என்று யாரும் கேட்பதில்லை.ஏற்கனவே எழுந்து விட்டார்கள். அதே போன்று சுய இரக்கத்தை அறிந்து கொண்டால் அதிலிருந்து விழித்துக் கொண்டு விடுகின்றீர்கள். "நான் பாவம்" என்பதே கிடையாது.முன்பு எப்போதோ செய்ததற்கு இப்போது அனுபவிக்கின்றீர்கள். பிறர் மீதும் பரிதாபப்பட வேண்டாம்.

பண்டைய காலத்தில், குருவிடம், ஒருவர் நான் கஷ்டப்படுகின்றேன் என்று கூறினால் குரு அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். கஷ்டப்பட்டால் அது செய்த தவறின் பலன் ஆகும். அது உங்கள் கர்மா, அதை முடித்து விடுவதே நல்லது. குரு மூர்க்கமானவராகவும் அக்கரையற்றவராகவும் தோன்றினாலும் அது உங்களை சுய பச்சாதாபத்திலிருந்து தடுத்து நிறுத்துவதற்கே. உங்களது செயல்களுக்கு நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவதற்கே ஆகும். இல்லையெனில் நாம் நமது பொறுப்புக்களிலிருந்து விலகி ஓடி, நம்மை நாமே இரக்கப்பட்டு கொள்கின்றோம், மேலும் பிறரும் "ஐயோ பாவம், கடவுள் உங்களுக்குக் கொடுமை செய்து விட்டார் என்று கூறுகின்றார்கள். இவையெல்லாம் அறியாமை.

சுயபச்சாதாபம் ஆனாலும் பிறர் மீது பரிதாபமானாலும் பரிதாபப்படுவது என்பது அறியாமை ஆகும். ஒவ்வொருவரும் அவரவருக்கு தகுதியானதை பெறுகின்றார்கள். ஆனால் இது உயர்ந்த ஞானம். எனவே இவ்வாறு அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்காதீர்கள். அவர்களுக்குப் புரியாது. நீங்கள் மூர்கத்தனமாகப் பேசுவதாக எண்ணுவார்கள். ஒருவர் வருந்திக் கொண்டிருக்கும் போது, உன்னுடைய முந்தைய தவறுக்காக இவ்வாறு அனுபவித்துக் கொண்டிருக்கின்றாய்" என்று கூறமுடியாது. உண்மையாக இருந்தாலும், அவ்வாறு கூறாதீர்கள். உங்கள் மனதிற்குள் புரிந்து கொள்ளுங்கள்.

இயற்கையின் விதிகளை மீறுபவர்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றார்கள். அதிகமான உணவினால் வயிற்று வலி, சர்க்கரை நோய், ஆகியவை ஏற்படுகின்றன. மது அருந்துவதால் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன. மருத்துவமனையில் வருந்திக் கொண்டிருப்பவரிடம், சரி! நீ இதைச் செய்ததால் இப்போது வருந்திக் கொண்டிருக்கின்றாய் என்று கூறமாட்டர்கள். சரி நம்மால் முடிந்ததெல்லாம் செய்வோம் என்று கூறுங்கள். பரிதாபம் வேண்டாம்.

இந்தப் பிரபஞ்சத்தில் காரணம் விளைவு என்பது உள்ளது. ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் உள்ளது. நீங்கள் விரும்புவது கிடைத்தால் அதற்கு ஒரு காரணம் உள்ளது. நீங்கள் விரும்பியது கிடைக்க வில்லையென்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு. இயற்கை மிகவும் புத்திக் கூர்மையுடையது. இறைமையும் மிகுந்த அறிவுள்ளது ஆகும். சுய இரக்கம் என்பது ஆன்மீக வழியில் தவறானது ஆகும். சுய பச்சாதாபமும் வேண்டாம், பிறர் மீது பரிதாபமும் வேண்டாம்.
பரிதாபம் கருணை இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாடு என்னவெனில், அன்பு செயல் வடிவாக வெளிப்படுவது கருணை. "நான் உன் மீது அன்பு வைத்திருக்கின்றேன், ஆனால் உனக்கு எதுவும் செய்ய மாட்டேன்" என்று கூறமாட்டீர்கள். அன்பும் அல்ல, கருணையும் அல்ல. கருணை என்பது, அன்பும் செயலும் சேர்ந்தது ஆகும். பரிதாபம் என்பது காரணம் விளைவு என்னும் கோட்பாட்டினை மறுத்து, கர்மா என்னும் விதியினையும் மறுத்து, வருத்தம் என்னும் மனப்போக்கை காட்டுவதே ஆகும். பரிதாபம் என்பது அறியாமை ஆகும். பரிதாபம் என்பதில் கர்மாவினைக் குற்றம் சாட்டிக் கதறுகின்றீர்கள், அதில் பயனில்லை.

ஒவ்வொன்றையும், எல்லா இடங்களிலும் எந்நேரத்திலும் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் மனப்போக்கிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

குருதேவ்:  சிறிய விஷயங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும். அதனால் இத்தகைய தோற்றம் ஏற்படுகின்றது. பெரிய விஷயங்களைக் கட்டுப்படுத்துங்கள். இராக்கில் நடைபெறும் போரினை தடுத்து நிறுத்துங்கள், சிரியாவில் நடைபெறும் போரினைத் தடுங்கள். ஒரு தம்பதி என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.கணவர் கூறினார்," என் மனைவி சிறிய விஷயங்களைத் தீர்மானிப்பாள், நான் பெரிய விஷயங்களை முடிவு செய்வேன். என் மனைவி, என்ன கார் வாங்க வேண்டும், வீட்டுக்கு என்ன வண்ணம் பூசப்பட வேண்டும், விடுமுறைக்கு எங்கே செல்ல வேண்டும், பணம் எவ்வாறு செலவு செய்யப்பட வேண்டும் இவற்றையெல்லாம் தீர்மானிப்பாள். நான் இவற்றில் தலையிட மாட்டேன். நான் பெரிய விஷயங்களைத் தீர்மானிப்பேன். இராக் போரைத் தடுப்பது எப்படி, பிரிட்டனில் யார் பிரதமர் ஆக வேண்டும், நாடுகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள வேண்டும் என்பவையெல்லாம் தீர்மானிப்பேன். அவற்றில் அவள் தலையிட மாட்டாள். ஆகவே எங்கள் குடும்பத்தில் அமைதி நிலவுகின்றது" என்று கூறினார். (சிரிப்பு) அது போன்று எதையாவது கட்டுபடுத்த வேண்டும் என்று விரும்பினால் எவ்வாறு வானிலையை கட்டுபடுத்தி மழையை வரவழைப்பது என்பது போன்ற பெரிய விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

குருதேவ், என்னுடைய காலை நேர தியானத்தின்போது, ஒரு விசித்திரமான தோற்றம் ஏற்பட்டது. என்னுடைய உடல் ஒரு நொறுங்கிய காரில் கிடப்பதைக் கண்டேன். இது மனதில் உள்ள பயத்தின் வெளிப்பாடா?

குருதேவ்: ஆம் பயத்தின் வெளிப்பாடே ஆகும். அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.’’ஓம் நமசிவாயா‘’ சில முறைகள் கூறுங்கள். சரியாகிவிடும்.

மரண பயம் பற்றி என்ன செய்வது?

குருதேவ்:இயற்கை ஒவ்வொருவரிடமும் மரணம் பற்றி சிறு பயத்தை வைத்திருக்கின்றது.அது அபிநிவேஷ் என்று அழைக்கப்படுகின்றது. அதைப் பற்றிப் பயப்பட வேண்டாம். எப்போது போக வேண்டுமோ அப்போது போய்த்தான் ஆக வேண்டும். அது வீட்டினாலும், காரினாலும் சரி. அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதை பற்றிக் கவலைப் படாதீர்கள். எப்போதெல்லாம் பயம் ஏற்படுகின்றதோ,அப்போது "ஓம் நமசிவாயா" என்று கூறுங்கள். சரியாகி விடும். அதற்காக நீங்கள் கவனக் குறைவாக இருக்கக் கூடாது. இது நுட்பமான உயர்ந்த ஞானம் ஆகும். அன்றாட வாழக்கையில், எப்படியானாலும் இறக்கத்தானே போகிறோம் என்று அதி வேகமாகக் காரை ஓட்ட முற்படாதீர்கள். அது சரியன்று. அதே சமயம் மரண பயத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். மூச்சினைக் கவனித்து "ஓம் நமசிவாயா" என்று கூறுங்கள்.

குருதேவ், சமநிலையை எங்கு காண்பது? ஆன்மீகத்திலும் எனக்குக் கவர்ச்சி உள்ளது, அதே சமயம் பொருள் உலகிலும் ஈடுபாடு உள்ளது.

குருதேவ்: பரவாயில்லை.ஒன்றோடொன்று எதிரானவை அல்ல. வாழ்வில் ஒரு நடுநிலை தேவை. நன்றாக உழைத்து சம்பாதியுங்கள், சேமியுங்கள், அத்துடன் தியானத்திற்கும் சிறிது நேரம் செலவிடுங்கள். உழைத்துச் சம்பாதிக்கும் லட்சியவாதிகள் பல் தேய்க்கவோ, உணவு உண்ணவோ மறப்பதில்லை அல்லவா? எவ்வளவு தான் தீவிரமாகப் பணம் சம்பாதித்தாலும்  உணவை ரசித்து உண்ண நேரம் எடுத்துக் கொள்கின்றார்கள். அது போன்று ஆன்மிகம் ஆத்மாவிற்கு உணவு ஆகும். எனவே இதையும் செய்யுங்கள்.

சிலர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்கின்றார்கள்.அதில் ஆழ்ந்து செல்கின்றார்கள்." போதும், ஏராளமான செல்வத்தை பார்த்து விட்டேன். என்னுடைய வேலையைக் கவனித்துக் கொண்டு, மற்றவர்களுடைய மேம்பாட்டிற்கும் பணி செய்கின்றேன் என்று வாழ்வின் அடுத்த நிலையை அடைகின்றார்கள். வாழ்வில் பல நிலைகள் உள்ளன. எந்த நிலையில் வேண்டுமானாலும் நீங்கள் அமரலாம். முதல் நிலை, இரண்டாம் நிலை மூன்றாம் நிலை அல்லது இறுதி நிலை. அது உங்கள் விருப்பத் தேர்வு.

சத்சங்கத்தில் நிறையப் பேர் உங்கள் எதிரில் அமர வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அதனால் சில சண்டைகள் ஏற்படுகின்றன. எங்கும் நிறைந்திருக்கும் தங்கள் அருகில் அமர வேண்டும் என்பது அவ்வளவு முக்கியமா?


குருதேவ்: உங்களுக்கு ஒரு ரகசியம் கூறுகின்றேன். பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கே அதிக அளவு ஆசீர்வாதம் செல்கின்றது என்பதை அவர்கள் அறியவில்லை.(சிரிப்பு) " தனக்கு "என்னும் நிலையைத் தாண்டி பிறரும் முன்னால் வர இடம் தர வேண்டும். நேற்று நான் அமர்ந்தேன், இன்று வேறு யாராவது அமரட்டும் என்னும் மனப்போக்கு  வேண்டும். நீங்கள் பாடவோ அல்லது மொழிபெயர்க்கவோ வேண்டியிருந்தால் சரி, இல்லையெனில் பிறருக்கும் இடம் கொடுங்கள். அவ்வாறு இருந்தால் தான், இது வரையில் நீங்கள் கேட்டவற்றை எல்லாம், புரிந்தறிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது வெளிப்படும். இல்லையெனில் கேட்டது அனைத்தும் வீண்.