வெறுப்பும், கசப்பும் உன்னை அழித்து விடும்

வெள்ளிக்கிழமை 18-07-2014

மாண்ட்ரியால், கனடா


(நேர்மை என்பது ஆன்மீக தத்துவம் என்ற உரையாடலின் தொடர்ச்சி கீழ் வருமாறு)

கேள்வி - பதில்கள்

மாமியார் மற்றும் மாமனார் பற்றி சொல்லுங்கள். மக்கள் தங்கள் மாமனார் மாமியாரை வெறுக்கிறார்கள்.

குருதேவர்: ஆம். இந்தியாவில் இது ஒரு பொதுவான வழக்கமாக இருக்கிறது. 20000 – 25000 பேர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். ஆசிரமத்துக்கு வருபவர்களிடம், “நீங்கள் உங்கள் பிரச்சினைகளை இங்கேயே விட்டுவிட்டுச் செல்லுங்கள்“ என்று நான் சொல்வது வழக்கம். ஒரு பெண் சொன்னாள்!. “என் பிரச்சினையே என் மாமியார் தான். என் மாமியாரை நான் இங்கு விட்டுச் செல்லலாமா? என்று கேட்டாள்.

நான் அவளிடம் சொன்னேன். “இரு, உன் மாமியாரை அவருடைய பிரச்சினை என்ன என்று கேட்கிறேன்.“ உன் கணவரையும் கேட்க வேண்டும்.அவருடைய பிரச்சினை நீங்கள் இருவரும் தான். இருவரையும் இங்கு விட்டுச்செல்கிறேன் என்று அவர் கேட்கக்கூடும். பின்பு அந்தப் பெண்ணிடம் நான் சொன்னேன். உன் தாய் இருக்கிறாள் இல்லையா? தினந்தோறும் நீ அவளோடு சண்டை போட்டிருப்பாய். அடுத்த நாள் அதை மறந்து விட்டு அவருடன் பேசுவாய். இன்னும் சொல்லப் போனால் உன் தாய் உன் மாமியாரை விட மிகக் கடுமையாக பேசியிருப்பாள். அந்தப் பெண் “ஆனால் அவள் என் அம்மாவாயிற்றே“ என்று சொன்னாள்.

நான் அவளிடம் “உன் மாமியாரும் அம்மாவும் ஒன்றே தான். உன் மாமியார் உன் அம்மா போன்றவர். இருவரும் ஒரே மாதிரி பழகுபவர்கள். ஒரே வயதுக்காரர்கள். இன்னும் சொல்லப் போனால், உன் மாமியார் உன்னிடம் (மருமகள் என்பதால்) மிக ஜாக்கிரதையாகப் பேசுவார். உன் அம்மா உன்னைத் திட்டுவது போல் உன்னைத் திட்டமாட்டார். நீ ஏன் அவரை உன் அன்பால் ஜெயிக்க முடியாது?அவர் சொல்வதை கேட்டு ஏன் மனதை வருத்திக் கொள்கிறாய்  என்று கேட்டேன். நீ உன் தாயுடன் சண்டை போட்டாலும் அவளுடன் பேசுவதை நிறுத்தி விடுகிறாயா? உன் அம்மா உன்னிடம் கடுமையாக நடந்துகொண்டால் அவளை வெறுக்கிறாயா இல்லை! உன் அம்மாவுடன் பழகுவது போல் மாமியாரிடமும் பழக வேண்டும். மாமியாரிடம் குறைகள் இருக்கலாம். அதை மறந்து விட்டு ஏன் அவருடைய அன்பை ஜெயிக்கக் கூடாது? ஏன் சிறு சிறு விஷயங்களைப் பெரிது படுத்த வேண்டும்?

பல பிரச்சினைகளுக்குக் காரணமே நாம் பேசும் விதம் தான். உனக்கு காரட் சாலட் பிடிக்கும். மாமியாருக்கு சிவரிக்கீரை சாலட் பிடித்திருக்கும். ஒரு நாள் அவருக்கு பிடித்ததை செய். மற்றொரு நாள் உனக்குப் பிடித்ததை செய். இந்த விஷயத்தைப் பெரிது படுத்தத் தேவையில்லை. இதற்காக மாமியாரை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு நாள் அவர் உன்னோடு வாழப் போகிறார். உன் வாழ்நாள் அவருடையதை விட நீண்டது. நீ மாமியாரின் இடத்தில் உன்னை வைத்துப் பார். உன் மகன் வளர்ந்து அவனுக்குத் திருமணமாகி உன் மருமகள் உன் வீட்டுக்கு வந்து உன்னை வெறுத்தால் உனக்கு எப்படி இருக்கும்? அந்த சூழ்நிலையில் உன்னால் இருக்க முடியுமா? உன் மருமகள் உன் மகனை உன்னிடமிருந்து பிரித்தால் அதைத் தாங்க முடியுமா? அப்படி இருக்கும் போது நீ ஏன் அப்படிச் செய்ய விரும்புகிறாய்? நாம் வாழும் இவ்வுலகம் மிகச் சிக்கலானது. நாம் பல விதமான மக்களைச் சந்திக்கிறோம்.

அவர்களோடு சேர்ந்து வாழ்வது அவசியம். காட்டில் பல மிருகங்கள் சேர்ந்து வாழ்கின்றன. புலியும் மானும் ஒரே. காட்டில் வசிக்கின்றன. நீ உன் காட்டுக்குப் போ. எனக்குத் தனிக் காடு வேண்டும் என்று சொல்வதில்லை. சில சமயம் நீ அந்த மானைப் போலிருக்கிறாய். சில சமயங்களில் புலியாக வாழ்கிறாய். அது சரி தான். எப்போதும் மானாக இருக்க அவசியம் இல்லை. அதே சமயம் எப்போதும் புலியாக இருக்காதே. மற்றவர்களைத் தாக்காதே. புலிகூட மற்ற மிருகங்களை கொல்வதில்லை. பசியில்லாமல் இருக்கும் போது புலியும் மானைப் போல் அமைதியாக இருக்கிறது.

எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து சகிப்புத் தன்மையோடு வாழப் பழகு. புகுந்த வீட்டுக்கு நீ ஒரு ஒளி விளக்காக இருந்து, அந்த சூழ்நிலையையும், அந்த மனிதர்களையும் உன் வழிக்கு மாற்றும் சக்தி உனக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள். ஒரு வயதான நாய் புதிதாக ஒரு விளையாட்டைக் கற்றுக் கொள்ள முடியாவிட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மனம் வருந்த வேண்டாம். பெருந்தன்மையாக நடந்து கொள். நீ யாரையாவது மிகவும் வெறுத்தால், அவரைப் பற்றிய நினைவிலிருந்து உனக்கு விடுதலை கிடைக்காது. அவருக்கு மகனாக/மகளாகப் பிறக்க வேண்டியிருக்கும் அல்லது அவர் உனக்கு மகளாக/மகனாகப் பிறப்பார். வாழ்நாள் முழுதும் அவரோடு போராட வேண்டியிருக்கும். இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல், வரப் போகும் பிறவிகளிலும் உறவு தொடரும். எனவே அவரை வெறுப்பதை விட்டு நல்ல உறவை ஏற்படுத்திக் கொள். அப்போது தான் உனக்கு முக்தி கிடைக்கும். உன்னால் நிம்மதியாக இருக்க முடியும்.

நீ உன் மாமியாரை வெறுத்தால், உன் மாமியார் உன்னை வெறுத்தால், அவர் இறந்தாலோ, நீ முன்னதாக இறந்தாலோ, கணக்கைத் தீர்ப்பதற்காக மீண்டும் பிறந்து புதிய உறவிலும் இந்த வெறுப்பு தொடரக்கூடும். அது மிக மிகக் கடினமாக இருக்கும். இப்போதே கசப்பு மருந்தை விழுங்குவது நல்லது. அவர் உன்னிடம் எப்படி நடந்து கொண்டாலும், அவரை மன்னித்து விடு. வெறுக்காதே. கருணையோடு இரு. மற்றவர்களை வெறுப்பதை விட்டு விடு.

நீ ஒரு மருமகளாக இருந்தால், உன் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய சவாலை ஏற்றுக் கொள். வீட்டில் உள்ளவர்களின் மனதையும், இதயத்தையும் அன்பால் வெல்வதே அந்த சவாலாகும். இதற்கான திறமை உன்னிடம் இருக்கிறது. நீ ஆன்மீகப் பாதையில் செல்லும் போது அந்தத் திறமை நன்கு வெளிப்படும். பயங்கரவாதிகளின் மனதையே நாம் மாற்றியிருக்கிறோம். அவர்கள் மனம் திருந்தி ஆன்மீகப் பாதையில் செல்கிறார்கள். உன் மாமியாரை உன்னால் மாற்ற முடியாதா? அவரை மாற்ற முடியாவிட்டால்,அவர் எப்படி இருக்கிறாரோ, அவரை அப்படியே ஏற்றுக் கொள். அபசுரத்தில் பாடுகிறார் என்றாலும் அவரைப் பாட விடு. சிலர் அபசுரத்தில் பாடுவதையே நாகரீகம் என்று நினைக்கிறார்கள். மக்களும் அதை ஒரு புதிய போக்காக கருதுகிறார்கள். பொறுமையாக இரு. நீயே ஏற்படுத்திக் கொண்ட இந்த வலியிலிருந்து விடுபட ஞானம் உதவும்.

மக்கள் ஏன் “என் குருதேவர்“, “என் குருநாதர்“ என்ற வார்த்தைகளை சொல்கிறார்கள். அது “என் சூரியன்“, “என் சந்திரன்“ என்று சொல்வதைப் போல் உள்ளது.

குருதேவர்: இந்த வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. இது உணர்ச்சி சம்பந்தமானது. மொழியில் எப்போதும் “நான்” என்னுடைய” என்ற சொற்களை உபயோகப் படுத்துகிறோம். இந்த வார்த்தைகள் இல்லாமல் நம்மால் பேச முடியாது. இவற்றுக்கு பெரிய அர்த்தமும் கிடையாது. வார்த்தைகள் பெரிதாக எதையும் குறிப்பிடவில்லை. மற்றவர்கள் மக்கள் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். “என் குருநாதர்”, “என் தாய்”, “என் மகன்” அதனால் என்ன? தன்னைச் சேர்ந்தவர் என்ற உணர்வு இருக்கும் வரை, ஒரு பிணைப்பு இருக்கிறது. அன்பு இருக்கிறது. உயிர் இருக்கிறது. அது நல்லது. எதையோ உனக்காக மட்டும் வைத்திருப்பதாக நீ நினைக்கும் போது “என்” என்ற சொல் வருகிறது.

சொல்வதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? அவர்களைப் போல் நீயும் சொன்னால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் அப்படிப் பேசியிருக்க வேண்டும். இப்படி பேசியிருக்கக் கூடாது என்று சொல்வதால் என்ன நடக்கப்போகிறது? அப்படி அவர்கள் சொல்லும்போது அவர்களுடைய உணர்வுகளை கவனி. ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று சிந்தித்துப் பார். முடிந்தால் அவர்கள் சொன்ன வார்த்தைகளை கடந்து அவர்கள் இதயத்தில் உள்ளதை பார்.

ஜோதிட சாஸ்த்திரப்படி நாம் நம் வாழ்வில் தற்போது கெட்டகாலம் நடக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிக்கிறோம்? சனி கிரகத்தின் பாதிப்பு எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கும் ?

குருதேவர்: மிகப் பெரிய ப்ரம்மாண்டத்தையும் மிக மிகச் சிறிதான அணுத் துகள்களையும் இணைக்கும் ஒரு விஞ்ஞானமாக ஜோதிட சாஸ்த்திரம் இருக்கிறது. ஜோதிட சாஸ்த்திரம் நம் பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும் சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ போன்ற கிரகங்களுக்கும் பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கும் மற்ற படைப்புகளான பறவை, தானியங்கள், மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.

பழங்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கிரகங்களுக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்திருந்தனர். உதாரணமாக சனி கிரகத்துக்கு, நம் பற்கள் மற்றும் கால்களுடன் தொடர்பு உண்டு. சூரியனுக்கும் நம் கண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அதே போல் பலவகை தானியங்களுக்கும் பறவைகளுக்கும், இரத்தினக் கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். சனி கிரகம் எள், காகம் மற்றும் நீல நிற வைரக் கல்லுடன் தொடர்புள்ளது. இன்று நாம் மிகவும் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் பைனாகுலர் மூலம் இந்த அண்ட வெளி எத்தனை பெரியது என்பதை அறிந்திருக்கிறோம். டெலஸ்கோப் கண்டு பிடிக்கப்படாத காலத்திலேயே நம் முன்னோர்கள் கிரகங்களின் சுழற்சிப் பாதை பற்றியும் அவற்றின் தூரம் மட்டும் வேகத்தைப் பற்றிய கணக்குகளை நமக்காக விட்டுச் சென்றார்கள்.இன்று அவைகளை படித்து, நவீன கணக்குப்படி, பிழையில்லாமல் இருப்பதை பார்த்து நாம் வியப்படைகிறோம். கிரகணங்கள் வரும் நேரத்தையும் வெகு துல்லியமாக கணித்திருக்கிறார்கள். இது மிகவும் வியக்கத் தக்க உண்மையாகும். இன்றைய விஞ்ஞான உலகில் ஜோதிட சாஸ்திரத்தில் அடங்கியிருக்கும் உண்மைகளை பற்றிய ஆராய்ச்சி நடக்கவில்லை.

சனிகிரகம் மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பாதிப்பது உண்மை தான்.சில சமயங்களில் அது உன் உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்க வல்லது. சனி கிரகம் கெட்டது செய்யுமா? என்று பார்க்கும் போது அது அப்படி அல்ல என்பதை நாம் அறிய முடியும். சனி எப்போதுமே கெட்ட பலன்களை மட்டும் தரும் என்று எண்ணத் தேவையில்லை. சனி மனிதர்களை ஆன்மீக வழியில் செல்லத் தூண்டும் ஒரு கிரகமாக விளங்குகிறது. ஆன்மீகப் பாதையில் செல்பவர்களுக்கு சனி நன்மையைக் கொடுக்கும். ஆன்மீக வழியில் மேன்மை அடைவார்களின் வாழ்க்கைத் தரம் உயரும். பற்றின்மையின் அவசியத்தை அறிவுறுத்தும். எவ்வளவு பற்றில்லாமல் இருக்கிறாயோ அவ்வளவுக்கு சனி கிரகம் உனக்கு உதவி செய்யும். நீ ஆன்மீகப் பாதையில் செல்லாதவளாக இருந்தால், பிரச்சினைகளை ஏற்படுத்தி உன்னை ஆன்மீகப் பாதையில் நாட்டம் கொள்ளச் செய்யும். உலக விஷயங்களில் நீ சிக்கித் தவிக்கும் போது, உன்னை சிந்திக்க வைக்கும். உனக்குள் இருக்கும் சக்தியை வெளிப் படுத்தும். சனிகிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் போது நீ பற்றற்றவளாக மாறிவிடுவாய். பலருக்கு இப்படிப்பட்ட அனுபவம் ஏற்படுவதை காண முடியும். சிலருக்கு வேலை போய் விடும். உறவுகள் முறிந்து போகும். சிலர் தங்கள் மான மரியாதையை இழக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று சிந்தித்து ஆன்மீகத்தை நாடுவார்கள்.

சனி கிரகம் உன்னை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பி உனக்கு எல்லா விதமான செல்வங்களையும் தரும் வலிமை பொருந்தியது. ஆத்ம பலத்தை வலுவாக்க வல்லது. உன் ஆத்மபலம் மேம்படும் போது உனக்குத் தேவையான மற்ற பொருட் செல்வமும் உன்னை வந்தடையும். சனி கிரகம் சூரியனை ஒரு சுற்று சுற்றி வர 30 ஆண்டு காலமாகும். எனவே ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் இருக்கும். கஷ்டமான காலம் 5 ஆண்டுகளிலிருந்து ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடும். அதனால் தான் மக்கள் சனி கிரகத்தை பார்த்து அச்சப்படுகிறார்கள். பிரச்சினைகள் உறவு பற்றியோ, வேலை சம்பந்தமாகவோ, உடல் நலம் பற்றியோ இருக்கலாம். ஏழரை ஆண்டு சனி கிரகத்தால் அவதிப் படுபவர்களை சாடே சாத்தி என்று  அழைப்பது வழக்கம். இரண்டரை ஆண்டு பாதிக்கப் படுபவர்களை டாயியா என்று சொல்வார்கள். (ஹிந்தி மொழியில் ஏழரைக்கு சாடே சாத் என்றும் இரண்டரைக்கு டாயி என்றும் பெயர்)

சனியின் பாதிப்பு வாழ்க்கையில் இரண்டு முறைகளே வர வாய்ப்புள்ளது. இரண்டாவது முறை 30 ஆண்டுகளுக்குப் பின் வரும். இரண்டாவதாக வரும் போது அவ்வளவு கடுமையாக இருக்காது என்கிறார்கள். முதல் முறை கடுமையை உணரலாம். மனம் வருந்த நேரிடலாம். எதுவுமே சரியில்லை என்று தோன்றும். இங்கு ஜோதிட சாஸ்த்திரம் உனக்கு உதவும். ஏற்கனவே ஜோதிடப் படி நீ இந்த கால கட்டத்தை அறிந்து பொறுமையைக் கடைப் பிடிக்கலாம். ஆன்மீக வழியில் செல்லலாம். அதிக நேரத்தை தியானத்தில் கழிக்கலாம். தியானம் செய்வதால் உன் மன வருத்தம் குறையும். எந்த கஷ்டமான சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் மன திடம் பெறுவாய். மேலும் சனி எல்லோருக்கும் கெடுதல் செய்வதில்லை. ஆன்மீகப் பாதையில் செல்பவர்களுக்கு சனி நன்மை செய்யும். வெற்றி அளிக்கும். ஒவ்வொரு கிரகத்தைப் பற்றி அறிவதும், அந்த கிரகங்கள் நம் வாழ்வில் எப்படிப் பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அறிவதும் ஒரு பரவசமான அனுபவமாகும்.

இங்குள்ள ஹேமந்த் என்பவர் ஜோதிட சாஸ்திரம் பயின்றிருக்கிறார். ஆழ்ந்த ஞானமுள்ளவர். இங்கு நான் வந்த போது “குருதேவா! கிரகங்களின் சேர்க்கையை பார்க்கும் போது காற்றில் (வானில்) ஒரு பேராபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது என்றார். நேற்று யாரோ உக்ரேன் நாட்டில் ஒரு மலேசிய யாத்திரி விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டார்கள். எனவே கிரகங்களின் நிலையை ஆராயும் போது அவை பின் வரப் போகும் நிகழ்வுகளைப் பற்றிய குறிப்பை நமக்களிக்க வல்லது. 100% அப்படியே நடக்கும் என்று உன்னால் சொல்ல முடியாது. ஜோதிட சாஸ்திர நிபுணரால் ஒரு குறிப்பை மட்டுமே காட்ட முடியும்.


இறையருள் எப்போதும் எல்லா நேரங்களிலும் நடக்கப்போவதை மாற்ற வல்லது. ஆகவே ஆன்மீகம் அல்லது யோக சாதனைகளை ஞானத்தை விட ஒரு படி மேலாகச் சொல்கிறார்கள். ஜோதிட சாஸ்த்திரமும் ஒரு ஞானம் தான். அதை கற்க வேண்டும். ஆனால் கிரகங்களின் தாக்கத்தை மாற்றுவதற்கு யோக சாதனைகள், சத்சங்கம், பக்தி முதலியவை உதவும்.