உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள்: வாழ்க்கை மாறும்

புதன்கிழமை, 9 ஜூலை 2014, 

வட கரோலினா , அமெரிக்கா


(எழதப்படாத சட்டம் என்னும் இடுகையின் தொடர்ச்சி )

நடைமுறையான மற்றும் உடனடி வழியில், பயங்கரவாதத்தை எதிர்த்து போராட என்ன செய்ய முடியும்? மக்கள், சிறப்பு மந்திரங்களைக் கூறுவதோ அல்லது பிரார்த்தனை செய்வதோ பயங்கரமான வன்முறையை அழிக்க உதவுமா?

குருதேவ்: நாம் வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். பயங்கரவாதம் என்பது ஆன்மீக கல்வியின்மையினாலேயே ஏற்படுகின்றது. மூலகாரணம் அதுவே. அதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும். பள்ளிகளும்,கல்லூரிகளும் பரந்த அளவிலான அறிவினை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் அனைத்து சமயங்களை பற்றியும் சிறிதளவு தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நான் மட்டுமே சுவர்க்கத்திற்கு செல்வேன் மற்றவர்கள் அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள் என்னும் எண்ணமின்றி வளர்வார்கள்.

மற்றவர்கள் அனைவரும் நாஸ்திகர்கள்,கடவுள் நம்பிக்கையற்றவர்கள், தாங்கள் மட்டுமே இறையன்புக்கு பாத்திரமானவர்கள் என்று என்னும் போது, உலகிற்கே ஒரு பிரச்சினை ஆகின்றது. மக்கள் ஒவ்வொரு சொல்லும்,ஒவ்வொரு ஒலியும் இறைவனை சேர்ந்தவை என்று அறிந்து கொள்ள வேண்டும். பல்வேறு கலாசார, சமய கல்விமுறை இவ்வுலகில் மிக அவசியம். இதை நான் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றேன். பலரிடம் பேசிக்கொண்டும் இருக்கின்றேன். நமது வாழும்கலை ஆசிரியர்கள் இராக், குர்டிஸ்தான்,பாகிஸ்தான் ஆகிய இடங்களில் மக்களுக்கு அறிவுறுத்த அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்ப்புக்களும் உள்ளன. பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கானோர் பயிற்சியை எடுத்துக் கொண்டனர்,ஆனால் திடீரென்று சிலர் எதிர்த்து தடுக்க முயன்றனர். ஆயினும் மக்களின் உற்சாகத்தைப் பாருங்கள், "நாங்கள் தொடர்ந்து செய்வோம்" என்று கூறினார். 

நான், அவர்களைச் சிறிது காலம் காத்திருந்து பின்னர் தொடருமாறு கூறினேன். ஆசிரியர்களில் ஒருவர் கூட, பிரச்சினை ஏற்பட்டு விட்டது, இப்பணியைச் செய்யமாட்டோம் என்று கூறவில்லை, மாறாக "நாங்கள் நிச்சயம் தொடர்ந்து செய்வோம்" என்றே கூறினர். இதே போன்று புத்தரின் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றது. புத்தரின் நெருங்கிய சீடர்கள் ஒன்றிணைந்து ஒரு மலைக்கு பின் சென்று மறைந்து ஒரு பாறையை அவர் மீது  தள்ளி விட்டார்கள்.புத்தருக்கு சில அங்குலங்களுக்கு முன்னால் பாறை வீழ்ந்துவிட்டது. அனைவரும் பதறிவிட்டனர், ஆனால் புத்தர் புன்முறுவலுடன், அமைதியாகவே இருந்து விட்டார்." ஏதோ ஒரு நிகழ்ந்து முடிய வேண்டிய கர்மம் இது" என்று கூறினார். இதுவே சத்விக் திருதி.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்திற்கு வெளியே நமது அழகான மையம் அமைந்திருந்தது. அங்கு வார இறுதியில் 100- 150 பேர் தியானம் செய்து வந்தார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு முதிர் நிலைப் பயிற்சியும் நடைபெறும். இந்த குறிப்பிட்ட வார இறுதியில், அவர்களை நான் வேறு இடத்தில் அதை நடத்துமாறு கூறினேன். நமக்கு சொந்தமான இடம் இருக்கும் போது வேறிடத்தில் நடத்துமாறு கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஏனோ அவ்வாறு கூறினேன், அவர்களும் பயிற்சி இடத்தை ஒரு ஹோட்டலுக்கு மாற்றிவிட்டனர். சனிக்கிழமையன்று இரண்டு கார்களின் துப்பாக்கியுடன் எட்டு பேர் வந்து மையம் முழுமைக்கும் தீ வைத்து எரித்து விட்டனர். நமது மையம் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. "நல்ல வேளை நமது மைய தொண்டர்களுக்கும்  காவலாளிகளுக்கும் எதுவும் நேரவில்லை. இதுவும் சத்விக் த்ரிதியே ஆகும். அனைத்தும் எரிந்து விட்டது என்பதற்குப் பதிலாக அவர்கள் "காவலாளிக்கு எதுவும் நேரவில்லை" என்றே என்னிடம் கூறினார்கள்.

அழிவிலும் கூட ஏதோ ஒரு நல்லது நடந்தது, ஏதோ ஒன்று நம்மை முன்னேறி நகர்ந்து செல்ல வைக்கின்றது, அதுவே சத்விக் செயல் அனைத்தும் அழிந்தாலும் அதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, முன்னேறி புதிதாக ஒன்றை உருவாக்குவோம் என்று கூறுங்கள்.

ஒரு உறவு முறிந்து விட்டால், இனிமேல் வாழவே முடியாது என்னும் அளவிற்கு மக்கள் பேரழிந்து விடுகின்றனர். அத்தகைய  தருணத்தில் அறிவு அவர்களுக்குத் திடத்தை அளித்து முன்னேற வைக்கின்றது.

நான் கலிபோர்னியாவில் இருந்த தினத்தில்,ஒரு பெண் "நான் முற்றிலும் அழிந்து விட்டேன். எனது உறவு முறிந்து விட்டது.இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம்,இப்போது என்னை விட்டு விட்டார். நான் அவரிடம், ஏழு பில்லியன் மக்கள் இப்பூமியில் இருக்கின்றனர்,அதில் மூன்றில் ஒரு பகுதியினர் திருமண வயதில் உள்ளனர். ஆகவே கவலைப்படாதீர்கள். இவரை விட சிறந்த ஒருவர் உங்களுக்குக் கிடைப்பார் என்று கூறினேன். இந்த ஒரு வார்த்தை அவருக்கு ஒளியூட்டி விட்டது. நம்பிக்கையுடன், “ஆம் அவன் போனால் என்ன? அவனுக்கு என் அருமை தெரியவில்லை,முட்டாள்" என்று கூறினாள். முன்னேறிச் செல்லுங்கள்.மாற்றுயவரை நீங்கள் பழிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அது உங்களுக்கே துன்பம். புரிகிறதா? துன்பம் என்று நான் கூறுவது உங்களது மனத்   துன்பம் ஆகும்." நீ ஏமாற்றி விட்டாய்" என்றே மீண்டும் மீண்டும் பழித்துக் கொண்டிருந்தால் எதிராளி "நீ முட்டாளாக இருந்ததால் ஏமாந்து விட்டாய். ஏன் ஆழ்ந்து பார்க்கவில்லை" என்று கேட்கக்கூடும். எனவே, உங்களால் பிறரைத் திருத்த முடியாது, ஆனால் நிச்சயம் உங்களை திருத்திக் கொள்ளலாம்.

அவன் முட்டாள், மற்றும் என்னை அடையும் தகுதியற்றவன் என்று எண்ணி விடை கொடுங்கள். பின்னர் அவன் ஏமாற்றுக்காரன் என்றே எண்ணிக் கொண்டிராமல், இலகுவான புதிய மனத்துடன் முன்னேறிச் செல்லுங்கள். ஏனெனில், அவன் உங்களை விட்டு சென்று விட்டான், ஆனால் நீங்கள் விடவில்லை. அவனையே எண்ணிக் கொண்டு உங்கள் மனதை வருத்திக் கொள்கின்றீர்கள். ஆகவே நிகழ்வுகளையும்,மக்களையும் நோக்கி நமது அணுகுமுறையையும் பார்வையையும், மாற்றிக் கொள்ளலாம்.இதைத்தான் பகவத்கீதை நமக்கு கற்பிக்கின்றது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகின்றார், "இந்தக் கண்களுடன் இவ்வுலகில் இறைவனை உன்னால் பார்க்க முடியாது, இறைமையின் விளையாட்டையும் விஸ்வரூபத்தையும் காண உனக்கு நான் தனிச் சிறப்பான கண்களைத் தருகின்றேன்" என்று அர்ஜுனனிடம் கூறுகின்றார். என்ன ஒரு மேம்பாடு தரும் ஆச்சர்யமான ஞானம்.! இதன் அழகை கூற எந்த உயர்ந்த சொல்லும் இல்லை! கீதையின் ஒவ்வொரு பகுதியும் மிக சிறப்பானது.

பல தடவைகள், மக்கள் இவ்வழியில் எதையோ தேடும்போது (நான் யார், உண்மை என்பது என்ன என்னும் கேள்விகளுக்கு விடை) நான் எதையுமே தேடவில்லை என்று தோன்றுகின்றது. அது பரவாயில்லையா?

குருதேவ்: ஆம்.ஏனெனில்,சில சமயங்களில் தேடுதல் என்பது விழிப்புணர்வு நிலையில் இல்லாமல் அதற்கும் ஆழ்ந்து உள்ளே இருக்கலாம். முதலில் நீங்கள் ஏன் இங்கு இருக்கின்றீர்கள்? உங்கள் ஆத்மாவின் உள்நிலை தேவையின் பொருட்டு இங்கு இருக்கின்றீர்கள். அது தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகின்றது. அதுவும் இயல்பாகவே நிகழ்கின்றது.விழிப்புணர்வுடன், நான் என்னை அறிந்து கொள்ளவேண்டும் என்று கூற வேண்டியதில்லை. கூறிக் கொண்டிருந்தால் பித்தாகி விடுவீர்கள். இத்தகையவர்களை நீல நட்சத்திரங்கள் என்று எங்கள் மொழியில் கூறுவோம். நல்லவர்கள் தாம்,ஆனால் நிலை நிற்கவில்லை. விழிப்புணர்வுடன் நான் யார் என்று நான் அறிய  வேண்டும், என்றில்லாமல், இருந்தால் பரவாயில்லை.தேடுதல் இருப்பதால் தான், நீங்கள் இந்த ஞானத்தை,தியானத்தை,இந்த வழியை அனுபவித்து வருகின்றீர்கள். இந்த உணர்வு அனைவரிடமும் உள்ளது. சில சமயங்களில் இவ்வுணர்வு மறைந்திருக்கின்றது. சமயங்களில் சற்று வெளிப்படையாக தெரிகின்றது. அது ஒரு அறிவார்ந்த நிலையில் இருக்க தேவையில்லை,அது இருத்தல் அளவில் உள்ளது.

தாங்கள் தயவு கூர்ந்து , நடைமுறை வாழ்க்கையில் பகவத் கீதையின் முக்கியத்துவத்தைக் கூற முடியுமா?

குருதேவ்: உங்கள் மனம், அறிவு, மற்றும் அமைப்பு ஆகியவை சத்விக் ராஜசிக் அல்லது தமசிக் குணத்துடன் இருக்கின்றனவா என்று ஆய்ந்து தெரிந்து கொள்ள முடியும். இது பகவத் கீதையின் ஞானம். பகவத் கீதை ஆத்ம ஞானத்துடன்  எவ்வாறு பொருளுலக வெற்றியினை அடைவது என்னும் உள் மற்றும் வெளி உலகிற்கிடையே தேவையான பாலத்தை உங்களுக்குத் தருகின்றது. வாழ்வின் வெவ்வேறு நேரங்களிலும் தேவையான ஒன்றை அது அளிக்கின்றது. பகவத் கீதை விஷாத யோகாவில் துவங்குகின்றது.அதாவது வருந்தும் நிலை.பலர் இந்நிலையிலேயே சிக்கிக் கொண்டு விடுகின்றனர். ஒருவரது வாழ்வில் 18 படிகளில் சிக்கிக் கொள்வதை காணலாம். வருந்திக் கொண்டிருக்கும் நிலையில் தான் விழித்தெழு, வருந்துவதை கைவிடு என்று கூற, குரு தேவைப்படுகின்றார்.

அர்ஜுனன், மிகுந்த புத்திசாலியை போன்று அனைத்தையும் அறிந்தவனை போன்று பேசுகின்றான். கிருஷ்ணர் முதலில் அவனிடம்,"அனைத்தையும் அறிந்தவனை போன்று பேசுகின்றாய், ஆனால் மனம் உடைந்து காணப்படுகின்றாய்." என்று கூறுகின்றார். அவ்வாறு தான் அவனை வருத்தமும் சோகமும் நிறைந்த மனநிலையிலிருந்து எழுப்பி, படிப்படியாக ஞானத்தை அறிவுறுத்தி செயல்படும் நிலைக்கு கொண்டு வருகின்றார். பகவத்கீதை என்பது ஒருவருக்காக ஒரு முற்காலத்தில் கூறப்பட்டது அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டியது. முதலில் உங்களை எழுப்பி மேம்படுத்திக் கொள்ள முற்படுகின்றீர்கள். பிறகு என்ன? கர்ம யோகா. செயல் படுகின்றீர்கள்.பின்னர் அந்த செயலிலேயே சிக்கிக் கொள்ளாமல், ஞான நிலைக்கு செல்கின்றீர்கள், அங்கிருந்து தியான நிலைக்கு (தியான யோகா) செல்கின்றீர்கள். பின்னர் அதையும் தாண்டி அன்பு மற்றும் பக்தி நிலைக்குச் செல்கின்றீர்கள். வாழ்வின் அனைத்து அம்சங்களும் இதில் கவனிக்கப் படுகின்றன. உணவு வகைகளில் எது சத்விக் உணவு, ராஜசிக், தமசிக், என்னன்ன குணங்கள் தெய்வீக குணங்கள் மற்றும் அசுர குணங்கள் உள்ளன. ஒரு அத்தியாயம் முழுவதும் தெய்வீக குணங்கள் மற்றும் அசுர குணங்கள்  பற்றிக் கூறுகின்றது. முதலில் தெய்வீக குணங்கள் பற்றிக் கூறுகின்றார், பின்னர்,"இப்போது அசுர குணங்கள் பற்றிக் கூறுகின்றேன், கேள்" என்கிறார். கவனி உனக்கு ஏற்கனவே நல்ல குணங்கள் உள்ளன. அதனால் தான், இதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றாய்" என்று கூறுகின்றார்.

ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை ஊக்குவித்து, முட்டாள்தனத்திலிருந்து வெளி வர உதவுகின்றார். முழு  பகவத்கீதையில் ஒரே ஒரு முறை தான்,"அனைத்தையும் அறிந்த அறிஞனை போன்று பேசுகின்றாய்,ஆனால் உன்னைப் பார், நடுங்கிக் கொண்டிருக்கின்றாய். உனது சொல்லும் செயலும் வேறுபட்டிருக்கின்றது" என்று சுட்டிக் காட்டுகின்றார். ஒன்றே அர்ஜுனனுக்குப் பெரும் அடி, பின்னர் அவனை மேம்படுத்துவதிலேயே குறியாக இருந்து, அவனது சிறப்புக்களைக் கூறுகின்றார். அவனிடம் உள்ள சிறப்புக்களை ஊக்குவித்து வெளிக்கொண்டு வருகின்றார். குருவாக அவ்வாறே படிப்படியாக மேலே இழுத்து வருகின்றார். அர்ஜுனனுக்கும் சந்தேகங்கள் எழுகின்றன. பல கேள்விகளை கேட்கின்றான்." கிருஷ்ணா உன்னைத் தவிர வேறு யாரும் எனது கேள்விகளுக்கு விடை கூற முடியாது. மனம் பற்றிய பல கடினமான கேள்விகள் எனக்கு எழுகின்றன. ஏன் மனம் காற்றைப் போன்று உள்ளது? அதை கட்டுப்படுத்துவது மிகக் கடினமாக உள்ளது. ஏன் மனதை அசைவற்று வைக்க என்னால் இயலவில்லை?" என்று அர்ஜுனன் கூறுகின்றான். 

உங்களுக்கு உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் அர்ஜுனனுக்கும் இருந்திருக்கின்றன. அர்ஜுனன், " என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய மனதினை கட்டுப்படுத்த இயலவில்லை. நான் என்ன செய்வது? என்று அனைத்து இடர்ப்பாடுகளையும் எடுத்துரைக்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணர், " இது மிகவும் கடினமானது என்று எனக்குத் தெரியும், இவ்வாறு செய், இதை முயற்சி செய் என்றெல்லாம், படிப்படியாக அர்ஜுனனை முழுமையை உணரும் ஒரு நிலைக்கு வழி காட்டி அழைத்துச் செல்கின்றார்.