இன்றைய வேதனை நாளைய பலம்


செவ்வாய், 15 ஜூலை, 2014, 

மாண்ட்ரியல் கனடா



(திருமணம் என்பதன் பொருள் தியாகம் என்னும் பதிவின் தொடர்ச்சி)

வினாக்களும் - விடைகளும்

நான் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டு விட்டேன். அதை பற்றி மிகவும் வருந்துகின்றேன். எனது குடும்பமும் துன்புருகின்றது.நடந்து முடிந்ததை எண்ணி வருந்தி கொண்டிருக்கின்றேன், அதிலிருந்து விடுபட முடியவில்லை. என்ன செய்வதென்று கூறுங்கள்?

குருதேவ்: எனது புத்திமதியை ஏற்றுக்கொண்டு, நான் கூறுவதன் படி நடப்பீர்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கின்றது? அதை ஏற்றுக் கொண்டிருந்தால்,அதை செய்திருப்பீர்கள். எனது புத்திமதியை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவே நான் என்ன செய்ய முடியும்? விடுங்கள். ஏதோ ஒரு கர்மா ஒன்று உங்களை தவறிழைக்க செய்ய தூண்டியிருக்கிறது. முடிந்து விட்டது. இப்போது நடந்து முடிந்த அதையே எண்ணி மறுகிக் கொண்டிருப்பது ஏன்? ஒவ்வொரு செயலும் நான்கு காரணங்களால்  நடக்கின்றன.

1. அச்செயலை செய்யும் நோக்கம் உங்களுக்கு இருந்திருக்கின்றது.
2. யாரோ ஒருவர் நீங்கள் அதை செய்யவேண்டும் என்று விரும்பி இருந்திருக்கின்றார், அது        உங்களை செய்ய வைத்திருக்கின்றது.
3. நீங்களோ அல்லது அடுத்தவோ அதை விரும்பவில்லை, ஆயினும் உங்கள் இருவரின்    விருப்பத்திற்கு எதிராக அது நிகழ்ந்திருக்கின்றது.
4. நீங்கள் இருவருமே அதை விரும்பி இருந்திருக்கின்றீர்கள், எனவே அது நிகழ்ந்தது.நான் கூறுவது  உங்களுக்குப் புரிகின்றதா?

இரண்டு பேர், எதிராக சண்டை இட்டுக் கொள்கின்றார்கள். முதல் சாத்தியக்கூறு என்னவென்றால், நீங்கள் எரிச்சல் அடைந்து, உங்களது கோபம் அதை ஏற்படுத்தி இருந்திருக்கின்றது. இரண்டாவது சாத்தியக்கூறு என்னவென்றால், ஒருவர் கோபமான மனநிலையில் உங்களை அணுகி, அக்கோப அதிர்வலைகளை நீங்கள் பற்றிக் கொண்டு, நீங்களும் கூச்சலிடத் துவங்குகின்றீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த போதிலும், மற்றவரின் அதிர்வலைகள் உங்களை ஆக்கிரமித்து நீங்கள் எதிர் செயலாற்றுகின்றீர்கள்.

மூன்றாவதாக, நீங்களோ அடுத்தவரோ நடந்ததை சிறிதும் எதிர் பார்க்கவில்லை. ஒரு  விபத்து போன்று அது நிகழ்ந்து விட்டது. ஏனெனில், அது காலம் மற்றும் ஏதோ ஒரு கர்மா.நான்காவதாக, நீங்களும் அடுத்தவரும், உண்மையாகவே சண்டையிட விரும்பினீர்கள், அதனால் மோதிக் கொண்டீர்கள். ஆகவே செயல்களும், தவறுகளும் நான்கு காரணக் கூறுகளினால் நிகழ்கின்றன. நடந்து முடிந்ததை பற்றி கவலைப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. முன்னேறி செல்லுங்கள். ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குள் மின்னி, பிரகாசிக்கும் சக்தி உருவாகி கொண்டிருக்கின்றது, அதனுடன் முன்னேறிச் செல்லுங்கள்.தவறுகள் வேதனையை தருகின்றன, அது நல்லதே. வேதனை உங்களுள் ஆழத்தை ஏற்படுத்துகின்றது, அதுவும் நன்மையே. தவறுகளிலிருந்து பாடம் கற்று, அதே தவறுகளை  மீண்டும் செய்யமாட்டீர்கள். அதுவும் நல்லதே.

கர்மாவை பற்றியும் அது எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை பற்றியும் கூற முடியுமா? ஏன் குழந்தைகள் வேதனயுடன் இறக்கின்றன? ஏன் சிசுக்கள் தாயின் கர்ப்பத்திலேயே இறந்து விடுகின்றன?

குருதேவ்: கர்மா ஆழங்கண்டறிய முடியாத ஒன்று. அது சமுத்திரத்தின் ஆழத்தை போன்று மிக ஆழமானது. எந்த கர்மா, எங்கு, என்ன? இவையெல்லாம் விவரிக்க முடியாத அளவு பெரியது. ஆனால் இதுவே அனைத்துக்கும் காரணம். எந்த நிகழ்வும், செயலும் காரணம் இன்றி ஏற்படாது, இது அறிவியல் பூர்வமான கோட்பாடு. ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் உண்டு. ஒவ்வொரு விளைவிற்கும் உள்ள காரணமே கர்மா. ஆனால் இந்தக் காரணமானது மிக ஆழமானதாகையால் ஒரு நிகழ்வுடன் மட்டுமே இதைத் தொடர்பு கொண்டிருப்பதில்லை, பலவற்றுடன் இது தொடர்புடையதாக இருக்கின்றது, மிகப் பெரிய அளவிலானது.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், "கஹன கர்மாணோ கதிஹ்" கர்மாவின் வழிகள் ஆழங்காண முடியாதவை என்று கூறுகின்றார். ஆகவே கர்மாவை பற்றி சிந்தித்துக் கொண்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். புனித நூல்களில் கூட இது இதைச் செய்தால் இந்தக் கர்மா அதைச் செய்தால் அந்தக் கர்மா "என்றெல்லாம் கூறப்பட்டிருக்கின்றது. இதிலெல்லாம் ஆழ்ந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மூச்சு மிகுந்த சக்தி வாய்ந்தது. அது எவ்வாறு நம்மை நுட்பமான அளவுக் கூறுகளின் தொகுதிக்குத் தொடர்புடையதாக்குகின்றது?

குருதேவ்: ஏற்கனவே நீங்கள் தொடர்பு கொண்டு விட்டீர்கள். மூச்சு நீங்கள் இணைக்கப்பட்டு விட்டதை உங்களுக்கு உணர்த்துகின்றது. உங்கள் மனம் எப்போதுமே புற உலகில் உள்ளது, அது தன்னுள்ளே வருவதே இல்லை, எனவே மூச்சு வெளிச் செல்லும் மனதை உள்நோக்கித் திருப்ப முதல்படியாக இருக்கின்றது. அது ஒரு வாசல் அல்லது வழியாகும். தியானம் மனதை உள்ளறைக்குத் திரும்ப வைக்கின்றது.

போர்க்கலைகள் ஞானோபதேச மார்க்கத்தில் பங்கு வகிக்க முடியுமா?

குருதேவ்: ஆம், போர்க்கலைகள், உடலுக்குப் பலத்தையும், மனதில் ஒழுக்கத்தையும், அறிவுக் கூர்மையையும் ஏற்படுத்துகின்றன. உங்கள் அனைத்து சக்தி மற்றும் உணர்சிகளை நல்வழிப் படுத்துகின்றன. உங்களது உணர்ச்சிகள் வழிப்படுத்த படவில்லையெனில், அவை தாறுமாறாக சென்று, நீங்கள் ஆத்திரம்,கோபம்,சோர்வு மற்றும் மன அழுத்தம் இவற்றை அடைகின்றீர்கள். கராத்தே போன்ற சில போர்க்கலைகளை செய்தால், அல்லது தினமும் உடற்பயிற்சியகத்தில் பயிற்சி செய்தால், அது உங்களது உணர்ச்சிகளை ஒத்திசைக்கும்.

மதிப்பற்ற நிலையும், உதவியற்ற நிலையும் ஏன் அசௌகர்யமாக உணர வைக்கின்றன? ஏன் எப்போதும் மதிப்புடனும் முக்கியத்துவத்துடனும் இருக்க வேண்டும் என்னும் தேவை ஏற்படுகின்றது? எவ்வாறு இதை விடுவது?

குருதேவ்: நீங்கள் பயனற்றவராக இருந்தால், இயற்கை எப்போதோ உங்களை அகற்றி எடுத்துக் கொண்டிருக்கும். இயற்கை மிக அறிவுக்கூர்மையனது.இயற்கை உங்களை இங்கு வைத்திருப்பதால், உங்களால் ஏதோ ஒரு பயன் உள்ளது. நீங்களே உங்களிடம் மிக கடுமையாக இருக்காதீர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை செய்யும் திறமை கொண்டவர்கள். எது செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டே இருங்கள். முடிந்தால், இன்னும் சிறிது அதிகப்படுத்தி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் செயல்திறனும் அதிகரிக்கும்.

எனக்கு எந்த பணித்துறையைத் தேர்ந்தெடுப்பது என்று  தெரியவில்லை. நான் எனது எல்லா திறமைகளுக்கும் மதிப்புக் கொடுக்க விரும்புகின்றேன். ஆலோசனை கூற முடியுமா?

குருதேவ்: நாற்பது வாத்தியங்களை இசைக்கக் கூடிய ஒருவர் என்னிடம் வந்தார். புல்லாங்குழல், கித்தார், சிதார், தபலா போன்ற பல வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்தவர். மிக வசீகரமான விஷயம். வேறொரு கனவானையும் எனக்குத் தெரியும். அவர் 45 பட்டங்களைப் பெற்றவர். எவ்வாறு இத்தனை பட்டங்களைப் பெற்றார் என்று வியந்திருக்கின்றேன். அவர் ஒரு வக்கீல், டாக்டர், பொறியியல் வல்லுநர், ஆஹா! துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு வாகன விபத்தில் இறந்து விட்டார். 47 வயதில் பல விஷயங்களை அறிந்திருந்தார். ஒரே சமயத்தில் பல பட்டப்படிப்புக்களை படித்திருக்க வேண்டும், இல்லையெனில் இதனை பட்டங்களைப் பெற்றிருக்க முடியாது.அவர் ஒரு பிரமாதமான மனிதர்.


நீங்கள் எது செய்தாலும் நல்லது. ஆனால் எதையேனும் எடுத்துக் கொண்டால், அதை செய்து முடியுங்கள்.ஏதோ ஒன்றை எடுத்துக் கொண்டு, அதைப் பாதியில் விட்டு, வேறொன்றை எடுத்துக்கொள்வது சரியல்ல. அப்போது எவ்வளவு திறமையுள்ளவராக இருந்தாலும் அது முற்றிலும் பயனற்றதாகும்.எனவே, எதை எடுத்துக் கொண்டாலும், அதை முழுமையாக செய்யுங்கள்.