மக்கள் உங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுத்து நிறுத்துங்கள்

வெள்ளிக்கிழமை,

25 ஜூலை 2014,

பாத் அண்டோகோஸ்ட், ஜெர்மனி


(உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் அடைவீர்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

அன்புள்ள குருதேவ், பல சமயங்களில் மக்கள் என்னைச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை அறிந்திருக்கின்றேன். சில காலத்திற்குச் சரி என்று விட்டுவிட்டேன்.  ஆனால் என்னை மிதித்து செல்வதைப் பார்க்கும்போது கோபம் வருகின்றது. எங்கு வரையறுக்க வேண்டும்? மறுக்கும் போது சுயநலமாக இருக்கின்றேனோ என்ற குற்ற உணர்வு ஏற்படுகின்றது. எவ்வாறு சுய மரியாதைக்கும் ‘தான்‘ என்னும் அகங்காரத்திற்கும் இடையே வேறுபடுத்துவது?

குருதேவ்: நீங்கள் நிறைய விஷயங்களை குழப்பிக் கொள்கின்றீர்கள். முதலில்,ஒருவன் உங்களைச் சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும், எப்போது நீங்கள் கருணையுடன் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு சைக்கிளை ஓட்டுவது போன்றது ஆகும்.ஒரு புறமாக சாய்ந்து விடாமல் சைக்கிளை ஓட்டுவது போன்று சமநிலையில் இருக்க வேண்டும். பிறர் உங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினால், பிடிவாதமாக மறுத்து விடுங்கள்.எங்கு தேவையோ அங்கு உதவ வேண்டும். எப்போதும் சுய மரியாதை பிரச்சினை என்பது கிடையாது. உங்களை பயன்படுத்திக் கொள்பவர்களால் உங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு உதவி தேவையாக இருந்தால், சரி, உடனே செய்யுங்கள். ஆனால் அதே சமயம் தேவையில்லாமல் எப்போதும் உதவி கேட்டுத் தொந்தரவு செய்தால், உடனே மறுத்து விடுங்கள். நமது கருணை எப்போதும் மெய்யறிவுடன்  இணைந்திருக்க வேண்டும்.

அண்மையில் நான் கலிபோர்னியா பே இல் இருந்தேன். நமது வாழும் கலை தன்னார்வத் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் என்னிடம் ஆயிரக்கணக்கான வீடில்லாதோருக்கு உணவளித்ததாகவும், அதை இனி வழக்கமான வகையில் செய்ய விரும்புவதாகவும் கூறினர். ஆனால் நான் மறுத்து விட்டேன். அவர்களின் செயலை நான் மகிழ்ச்சியுடன் கவனிப்பேன் என்றெண்ணியிருந்த அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நீங்கள் இந்த முறை செய்ததை நான் பாராட்டுகின்றேன், இதைத் தொடர வேண்டாம். அவர்களைப் பாருங்கள். அனைவரும் திடமாக உள்ளார்கள்.ஆண்கள் பெண்கள் அனைவரும் உழைத்து தங்கள் உணவை தேட முடியும். அவர்களுக்கு இவ்வாறு உணவளித்தால், அவர்கள் உண்டு நடைபாதையிலேயே உறங்கி எதுவும் செய்யாமல் இருப்பார்கள். நீங்கள் அவர்களைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்" என்று கூறினேன். இது கருணை அல்ல. தவறான இரக்கம்.இதற்குப் பதிலாக பாஸ்த்ரிகா கற்றுக் கொடுங்கள், சில திறன்களில் பயிற்சி அளியுங்கள்.

இக்காலத்தில், தொழிலாளர் கிடைப்பதில்லை. டிரைவர்கள், கட்டிடத் தொழிலாளிகள், போன்ற பல வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உடல் நலமற்றவர் அல்லது மிக முதியோர் எனில் அவர்களுக்கு உதவி தேவை. ஆனால் பலமான இளம் வயதினருக்கு உதவி தேவை இல்லை. இதனால் தவறான கலாசாரத்தையே வளர்க்கின்றோம். கருணை எப்போதும் மெய்யறிவுடன்  இணைந்திருக்க வேண்டும். மெய்யறிவு என்பது யாருக்கு, எப்போது, எதை, எப்படி அளிப்பது என்பதுவே ஆகும்.

குருதேவ், நான் மௌனத்தில் இருக்கின்றேன். நான் பேசக்கூடாது. ஆனால் இந்தப் பயிற்சியிலுள்ள சிலரை நன்றாக திட்ட வேண்டும் போல் உள்ளது. அவர்கள் தங்களை மட்டுமே கருத்தில் கொண்டு மிகவும் முரட்டுத்தனமாக இருக்கின்றார்கள். ஆன்மீக மார்க்கத்தில் உள்ளவர்கள் அதிகப் பரிவுடன் இருக்க வேண்டாமா?

குருதேவ்: நீங்கள் கூறுவது சரிதான். வெளிஉலகில் அவர்களால் பிரச்சினைகள் இருக்க வேண்டாம் என்று தான் அவர்களை நான் இங்கு வைத்துக் கொண்டிருக்கின்றேன். இங்கு ஆன்மீக வழியில் வந்ததன் பின்னரும் அவர்கள் முரட்டுத்தனமாக இருந்தால், இதற்கு முன்னர் ஆன்மீக அறிவின்றி அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்களால் நீங்கள் தொந்தரவு அடையாதீர்கள். நாங்கள் இங்கு ஒரு சீரான வகையை சேர்ந்தவர்கள் அல்ல. வெவ்வேறு விதமானவர்கள். இங்குள்ள 500 பேரில் மூன்று அல்லது நான்கு பேரே எரிச்சலை தரக்கூடிய மக்களாவர். அவர்கள் சிறுபான்மையினர். மற்ற அனைவரும் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடியவர்கள் அல்ல.அவ்வாறிருந்தால் ஒரு பெரும் போரே இங்கு நிகழ்ந்திருக்கும். மிகுந்த பொறுமையுடன் கூடிய நிறையப் பேர் இங்கு இருக்கின்றார்கள். நல்ல குணம் உடைய, மரியாதையுடைய அந்த நல்லவர்கள் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். நானுமே பாதிக்கப்பட்டிருக்கின்றேன். எவ்வாறு இவர்களை நல்வழிப்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு வேளை, அவர்கள் மெதுவாகக் கற்பவர்களாக இருக்கக்கூடும். ஒரு நாள் அவர்கள் உணர்வார்கள் என்று எதிர்பார்ப்போம். உலகில் பல்வேறு விதமான மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உண்மையில் நாம் ஒரு உயிர் காட்சிசாலையில் இருப்பது போன்று வாழ்கின்றோம். உலகமே ஒரு உயிர்காட்சிசாலை போன்றது தான்.

பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சூதாட்டத்தை தடை செய்திருக்கின்ற போது, சூதாட்டத்தில் வெற்றி பெற மந்திரம் வேத நூல்களில் இடம் பெற்றிருப்பது எனக்குக் குழப்பமாக இருக்கின்றது.

குருதேவ்: பண்டைய கால மக்கள் ஒரு அரசனுக்கு திருடுவது உட்பட அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அரசனாவதற்கு முன்னர் இளவரசன் திருடக் கூட பயிற்றுவிக்கப்பட்டான், அப்போது தான் அரசனாகும் காலத்தில் ஒரு திருடனைக் கண்டறிய முடியும். அனைத்து, நல்ல தீய மெய்யறிவு விஷயங்களும் வேதங்களில் உள்ளன. ஏனெனில் அப்போது தான் மக்கள் அனைத்தையும் அனைவரையும் புரிந்து கொள்ள முடியும். ஒரு குற்றவாளியைப் புரிந்து கொள்ள அவனுடைய மன உணர்வை அறிய அதற்காகவே அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அதனால் நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதோ அல்லது நடைமுறைபடுத்த வேண்டும் என்பதோ கிடையாது..

அன்புமிக்க குருதேவ், திடீரென்று வெறுமையாக உணர்ந்தால் என்ன செய்வது ? அனைத்துமே பொருளற்று மங்கி உணர்ந்தால் என்ன செய்வது? என்னை ஆசீர்வதியுங்கள்.

குருதேவ்: ஆசீர்வதிக்கின்றேன். அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் வந்து போகும். சில சமயங்களில் அனைத்தும் மறைந்து விட்டது போன்று வறட்சியாக உணர்வீர்கள். நல்லுணர்வுகளான அன்பு, அர்பணிப்பு, திடீரென்று மறைந்தது போன்று தோன்றும். பின்னர் அவை திடீரென்று மீண்டும் தோன்றும். இவையெல்லாம் வாழ்வில் கடந்து செல்லக் கூடியவைதாம்.முன்னேறி நகருங்கள்.

அன்புமிக்க குருதேவ், தம்பதி சேர்ந்து பயிற்சிக்கு வருவது சிறந்ததா அல்லது தனித்தனியாக வருவது நல்லதா?

குருதேவ்: சில சமயங்களில் சேர்ந்து வாருங்கள், சில சமயங்களில் தனித் தனியாக வாருங்கள். சேர்ந்து வந்தாலும் தனித் தனியாக வெவ்வேறு இடங்களில் அமர்ந்து உங்களுடைய தியானத்தை செய்யுங்கள். ஒருவரை ஒருவர் கவனித்துக் கொண்டு இருக்காதீர்கள். உங்கள் துணை தியானம் செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் "அவர் இங்கு இருக்கின்றாரா என்றே கவனித்துக் கொண்டிருப்பீர்கள். இது உங்கள் சொந்த விருப்பம். சில நேரங்களில் உங்களுக்கென்று சற்று தனி இடம் வேண்டும் என்று விரும்பினால் அவ்வாறே செய்யுங்கள். சேர்ந்து வர விரும்பினால் அதுவும் உங்கள் முடிவே. எதுவானாலும் சரி.

அன்புள்ள குருதேவ், தூங்கும்போது எங்கு தலை வைத்து தூங்குவது என்று கூறுங்கள். (வடக்கு தெற்கு கிழக்கு அல்லது மேற்கு)


குருதேவ்: தலையணையில் தலை வைத்துத் தூங்குங்கள்! (சிரிப்பு) வடக்கில் காந்த விசை உள்ளது, அதனால் வடக்கு தெற்காகப்படுத்தால் வடக்கு தெற்காகச் செல்லும் காந்த மின்னலை உங்கள் தலை முதல் கால்விரல் வரையில் கடந்து செல்லும்.ஆகையால் சற்று களைப்பும், ஆற்றல் குறைவும் ஏற்படும். இது ஒரு பழமையான கருத்து. கிழக்கு மேற்காகப் படுத்தால், அது காந்த மின்னலை புலத்தைத் தடுத்து, நரம்பு மண்டலத்தின் வழியாக அல்லாமல் உங்கள் உடல் முழுவதும் கிடைமட்டமாகச் செல்ல முடியும். இது காந்த மின்னலை என்பதைப் பற்றிய ஒரு சிறிய விஷயம் தான், பெரும் பிரச்சினை அல்ல.