சுவர்கத்திற்கான கதவு

26 ஏப்ரல் 2013 - பாலி, இந்தோனேசியா


இந்த பிரபஞ்சம் அவ்வளவு அழகாக இருக்கிறது. இங்கு பலவிதமான பூக்கள், பழங்கள், மரங்கள், மிருகங்கள், மனிதர்கள் இருக்கின்றனர்; நீங்கள் சந்தோஷமாக இருக்க இத்தனை வகைகள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனிதனின் மனம் இருக்கும் விதமானது உங்களை சந்தோஷமாக இருக்க விடுவதில்லை. மிகச் சிறந்த இடங்களில் கூட, மனம் கடந்தகால நினைவுகளோடு ஐக்கியமாகி விடுகிறது, இதுதான் அவ்வளவு வியப்புக்குறிய விஷயம். மனம் மிகப் பெரிய புதிர். உங்களுடைய மனதே உங்களுடைய மிக நல்ல நண்பன் அல்லது மிக மோசமான விரோதி. நம்முடைய சந்தோஷத்திற்கும், துயரத்திற்கும் மனமே பொறுப்பு.

மனம் இத்தருணத்தில் இருக்கும்போது,எல்லாமே அழக்காகத் தோன்றுகிறது. ஆனால், மனம் குழம்பி இருக்கும் போது, மிகச் சிறந்த இடத்திலும் கூட, துயரத்துடன் இருக்க ஆயிரம் காரணங்களைக் காண முடியும். மனதிற்கு ஐந்து ஏற்ற இறக்கங்கள் உண்டு.

முதலில், மனம் எல்லாவற்றிற்கும் நிரூபணத்தைக் கேட்கிறது. எவ்வாறு உங்களுக்கு எல்லாவற்றிற்கும் நிரூபணம் கிடைக்கும்? முடியாதது!

இரண்டாவதாக, மனம், இருப்பவைகளை,உண்மையாக அவைகள் இருப்பது போலவே புரிந்து கொள்வதில்லை,வேறு மாதிரியாக சிந்திக்கிறது. நீங்கள் ஒன்றை நினைத்தீர்கள்; சிறிது நேரம் கழித்து அது உண்மையில் அவ்வாறல்ல என்று கண்டுபிடித்தீர்கள்;சிறிது நேரம் கழித்து, கருத்துப் படிவம் சிதைகின்றது. இது விபர்யாயா என்று சொல்லப்படுகிறது.

மூன்றாவதாக, மனதிற்கென்று அதனுடைய கற்பனா சக்தி உள்ளது; - அது போன்று ஒன்று உண்மையில் இல்லாத போது.

நான்காவதாக, மனம் தூங்கி விடுகிறது. அது எதைப் பற்றியும் சிந்திக்க வில்லையென்றால்,அது தூங்கிவிடுகிறது.

ஐந்தாவதாக, மனம் கடந்தகால நினைவுகளில் சிக்குகிறது அல்லது எதிர்காலத்தை பற்றி கவலையுறுகிறது. ஐந்து ஏற்ற இறக்கங்கள்,ஒருவரை,இத்தருணத்தில் வாழ்ந்து, அனுபவிப்பதை தடுக்கின்றன.யோகா மாறுதலை உண்டாக்குகிறது; அது உங்களுக்கு மனதின் ஏற்ற இறக்கங்களைக் கடக்க உதவுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது, நீங்கள் அனைத்தையும் இங்கே விட்டுவிட்டு போகப் போகிறீர்கள். இவ்வுலகை விட்டு நீங்கள் செல்லும்போது, நீங்கள் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. என்னுடையது, என்னுடையது, என்னுடையது! என்று விடாமல் பிடித்துக்கொண்டிருப்பதே துயரத்திற்குக் காரணம். நான், பலமுறை கூறியுள்ள ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒரு முறை நான் கானடாவில் இருந்தபோது, 60 வதுகளில் இருந்த ஒரு பெண்மணி நான் தங்கியிருந்த வீட்டுக் கதவை தட்டி வந்தார். இரவு 11.30க்கோ அல்லது 12 மணிக்கோ வந்து அவர் உடனே என்னைப் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார். நான் அவரைப் பார்க்க கீழே வந்தபோது,பள்ளி சிறுவர்களின் திட்டத்திற்காக என்னிடம் $100க்கு ஒரு காசோலையைக் தந்தார். நான் அவரை ஏனந்த அவசரம்,மறு நாளைக்குக் கொடுத்திருக்கலாமே என்று கேட்டேன். “குருதேவ், நான் யாரை வேண்டுமானாலும் நம்பலாம், ஆனால் என் மனதைத் தவிர” என்று பதிலளித்தாள். அவர் ஒரு மணி நேர தொலைவு தள்ளி வசித்தாள், முக்கால்வாசி தூரம் சென்ற பின்னர் திரும்பி வந்து காசோலையைத் தந்தார்.

‘எனக்கு அந்த எண்ணம் வந்தபோது, நான் உடனே அதைச் செய்ய வேண்டுமென்று எண்ணினேன் ஏனெனில் மறு நாள் என் எண்ணம் மாறக் கூடும். மறு நாள் நான் எதையும் கொடுக்க வேண்டாமென்றும் நினைக்கலாம். அல்லது அது வெறும் $10 ஆகக் குறையலாம்.’ என்றார் அவர். பின்னர் அந்த நள்ளிரவில், எனக்கு ஒரு கதையை கூறினார்.

ஒரு முறை ஒரு வணிகர் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்தார். படகில் இருந்த ஒரு செம்படவனைக் கூப்பிட்டார்.‘என்னை எப்படியாவது காப்பாற்று,நீ காப்பாற்றினால்,என்னுடைய செல்வமனைத்தையும் கொடுப்பேன்’ என்று செம்படவனிடம் கூறினார். ஒன்றும் பேசாமல் செம்படவன், வணிகரை தன்னுடைய படகில் ஏற்றினான். அவன் படகில் ஏறியதும், வணிகர் ‘இதோ பார், நான் என்னுடைய முழு செல்வத்தையும் கொடுக்க முடியாது ஆனால் உனக்கு அதில் பாதி கொடுக்கிறேன். எனக்கு ஒன்றும் வேண்டாம், என் மனைவியும், குழந்தைகளும் முழுவதையும் கொடுக்கவிட மாட்டார்கள்; அவர்களுக்காகவும் நான் கொஞ்சம் விட்டுச் செல்ல வேண்டும்”

செம்படவன் சிரித்தான், அவன் எதையும் சொல்லவில்லை. படகு கரையை அடையும் சமயம், வணிகர் மீண்டும் “இதோ பார், உனக்கு நான் பாதி கொடுத்து விட்டால், நான் என்ன செய்வேன்? நான் மறுபாதியை என்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டேன். முடிந்தால் உனக்குக் கால்பங்கு கொடுப்பேன். ”பின்னர், படகு கரையை நெருங்க நெருங்க, கொடுக்கப்படும் தொகை மேலும் மேலும் குறைந்து கொண்டிருந்தது. அவர்கள் கரையை அடைந்தவுடன்,வணிகர், செம்படவனுக்கு $5 கொடுத்தார். “என்ன,உங்கள் மதிப்பு $5 தானா?” என்றான் செம்படவன். “என்னை இங்கே அழைத்து வர எவ்வளவு ஆகிறது? $3 மட்டும் தான்; நான் அதற்கு மேல் உனக்குக் கொடுத்துள்ளேன்” என்றார் வணிகர். மனம் மாறுகிறது! நீ நல்லதைச் செய்ய ஆசைப் படும் போது, உடனடியாகச் செய்ய வேண்டும், இல்லையென்றால் மனம் மாறுகிறது..

நல்லவற்றை செய்ய நாம் தள்ளிப் போடுகிறோம்,ஆனால் கெட்டதையும் உடனே செய்கிறோம். நாம் நமது கோவத்தை வெளிப்படுவதை ஒரு வாரமோ அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ கூட தள்ளிப் போட்டாலும், நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் ஒருவரை அழைத்து சப்தம் போட நினைக்கிறீர்கள், அதை இரண்டு மணி நேரம் தள்ளிப் போட வேண்டும். அப்போது அதன் வேகம் தணிந்துவிடும். அப்பெண்மணி சொன்னது இதுதான், “இதன் காரணமாகத்தான் நான் உடனே வந்தேன். நான் எனக்காகவும்,என் நகைக்காகவும், உணவு மற்றும் இன்பத்திற்காகவும் செலவழிக்க யோசிப்பதில்லை; ஆனால் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும்போது யோசனை வருகிறது.’ அவ்வாறு நடக்கக் கூடாது. நாம் பகிர்ந்து கொள்வது தான் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது நம்முடன் வருகிறது. பிணைப்பிலும், சுதந்திரத்திலும் செயல்பட மனதிற்கு ஒரு முக்கியமான பாத்திரம் உள்ளது.

நரகத்திற்கு மூன்று கதவுகள் உள்ளன என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது. முதல் கதவு கோபம். கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது? அதை வெளிப்படுத்து வதைத் தள்ளிப் போடுங்கள். பேராசை நரகத்தின் இரண்டாவது கதவு. மூன்றாவது கதவு, விடாப்பிடியாக இருப்பது, அடங்கா ஆசை. மனம் ஆசையில் விடாப்பிடியாக இருக்கிறது,மற்றவர்களை லக்ஷியம் செய்வதில்லை.;அது மிகுந்த தொல்லைகளை உண்டாக்குகிறது.

சுவர்கத்திற்கான கதவுகள் என்னென்ன? கடந்த காலத்திலிருந்து அனைத்தையும் ஜீரணிக்கும் விசாலமான மனம், மற்றவர்கள் செய்யும் தவறுகளை ஜீரணிக்கக் கூடிய அளவிற்கான விசாலமான மனம். அதை மனதில் வைத்துக் கொண்டு அசை போடாமல் இருப்பது. இது வைராக்கியம் அல்லது அமைதியான மனநிலை எனப்படுகிறது. 

யானையைப் போல இருப்பது. யானைகள், இலைகள், மரப் பட்டைகள், பழம் ஆகியயவைகளைச் சாப்பிடுகின்றன; தென்னை ஓலையிலிருந்து, மூங்கிலிலிருந்து, வாழைப்பழங்கள் வரை. வாழைப்பழம் அவ்வளவு மென்மையானது, மூங்கில் அவ்வளவு கடினமானது, இருந்தும் யானைகள் அவைகளை சாப்பிட்டு ஜீரணிக்கின்றன. அது போன்று, வாழ்வில், பல மகிழ்ச்சியளிக்கிற, மகிழ்ச்சியில்லாத விஷயங்கள், நல்லவர்கள், தீயவர்கள் இருக்கின்றனர்.(என்னுடைய வாழ்வில், தீயவர்கள் கிடையாது. சமயங்களில் மோசமாக நடந்துகொள்ளும் நல்லவர்களே இருக்கிறார்கள்) ஆகவே, நடந்தது நடந்துவிட்டது, அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தை பொறுத்துக்கொள்வது, நிகழ் காலத்தில் சந்தோஷத்தையும், நிவாரணத்தையும் அளிக்கிறது.

நாம் யானையைப் போல வலிமையாக வேண்டும்; அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்; மென்மையான பழம், உறுதியான மரப்பட்டை ஆகியவைகளை. கடந்த காலத்தை ஜீரணித்து முன்னேற வேண்டும். அது அமைதியான மனநிலை எனப்படுகிறது. அமைதியான மனநிலை எந்த சந்தோஷத்தைதான் அளிக்காது? அமைதியான மன நிலையில் உங்களுக்கு அனைத்து சந்தோஷமும் வரும். மக்களுக்கு இரு விதமான மனப்பாங்குகள் இருக்கலாம்:

ஒன்று, நாம் சதா சர்வ காலமும் நினைத்துக்கொண்டிருக்கும், ‘எனக்கு’ அல்லது ‘எனக்கு இதனால் என்ன பிரயோஜனம்?’ இரண்டாவது, எங்கு நாம் நினைக்கிறோமோ, ‘நான் உலகிற்கு எவ்வாறு உபயோகமாக இருக்கலாம்? என்று. ஆகவே, முழு மனப்பாங்கையும், ‘நான் இவ்வுலகிலிருந்து என்ன எடுத்துச் செல்லமுடியும்; எவ்வளவு ஆனந்தத்தை நான் பெற முடியும்’ என்பதிலிருந்து, ‘நான் உலகிற்கு எவ்வளவு அதிகமாகச் செய்யமுடியும்; நான் எந்த அளவிற்கு உலகிற்கு உபயோகமாக இருக்க முடியும்’ என்பதற்கு மாற்றுங்கள். இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்க்க முடிகிறதா?


சுயநலத்திலிருந்து, சுயநலமின்மைக்கு மாற்றுவதாகும். ஆகவே, நாம் இரண்டாவது மனப்பாங்கை ஏற்கும்போது, நம்முடைய கவலைகள் மறைந்து, அபரிமிதமான (ஆனந்தம் பாய்ந்து வரும்.) சுவர்கத்தின் கதவானது, மற்றவர்கள் செய்யும் தவறுகளை பொறுத்துக்கொள்ளக் கூடிய விசாலமான மனம். அவைகளை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு அவைகளைப் பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருப்பது. இது வைராக்கியம் அல்லது அமைதியான மனநிலை எனப்படுகிறது. கடந்த காலம் எவ்வாறு இருப்பினும் அதை சகித்துக் கொள்வது.