மாறிக் கொண்டிருக்கும் அதிர்வலைகள்



ஏப்ரல் 11 - 2013 மாண்ட்ரியல் - கனடா

கே: குருதேவ்! ஆன்மீக ஈடுபாடுள்ள விஞ்ஞானி தன் முனைப்புள்ள அத்துறையில் எவ்வாறு தொடர்ந்து இருக்கின்றார்?

குருதேவ்: மகிழ்ச்சியாக! நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருந்தால், சந்தோஷமாக இருங்கள். இவையெல்லாம், அலை சார்பியக்கங்கள்" என்று கூறுங்கள். யாராவது கோபப்பட்டால்," இது அலை இயக்கம், அலைவரிசை மாறுகின்றது! என்று கூறி, விட்டு விடுங்கள். அவ்வளவுதான். ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால், அது ஒரு அலை வரிசை. பொறாமை இருந்தால், "அவர் மூன்றாவது அலைவரிசைக்கு மாறி விட்டார்!"  ஒருவர் வேதனையுடனும் மனச்சோர்வுடனும் இருந்தால்,'' அலை வரிசை மாறிவிட்டது''  எல்லாமே அலை வரிசைகள் தாம். இதுதான் விஷயம். மாறிக் கொண்டிருக்கும் அலைவரிசைகளைப் பற்றி யாராவது கவலைப்படுவார்களா? இல்லை. எனவே, எல்லாவற்றையும் அலைவரிசைகளாகவே காணுங்கள். அப்போது எதுவுமே உங்களைப் பாதிக்காது. சரியாபல்வேறு வகைகளை அனுபவியுங்கள்!


வேற்றுமைகளை அனுபவியுங்கள். உங்கள் புன்முறுவலை இழக்க எதுவுமே தகுதியுடையது அன்று. யாராவது தன் முனைப்புடன் இருக்கிறார்களா? அதனால் என்ன? அவர்களுக்கு கருணை தேவையாக இருக்கின்றது. 



அவர்கள் அறியாமையுடன் இருக்கின்றார்கள்.அறியாமையுடன் இருப்பவர்களுக்கு நீங்கள் தர வேண்டியது என்ன? கருணை. அல்லவா? தன் முனைப்புள்ள ஒருவரைக் காணும் போது நீங்கள் " ஐயோ பாவம்! அவன் தன்னைப் பற்றிப் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். அண்மையிலோ, அல்லது பின்னரோ, வீழ்ச்சி அடையப்போகின்றான். அவன் அதை அறியாமல் இருக்கின்றான். மாபெரும் சக்திப் பேரலையில் அவன் ஒரு கிழிந்த பொம்மை என்று உணராமல் இருக்கின்றான்." என்று கருதுங்கள்.

ஆகவே, தன் முனைப்புள்ளவரிடம் கருணை காட்டுங்கள். நீங்கள் மற்றவரிடம் அங்கீகாரத்தைத் தேடும்போது தான் அவர்தம் தன் முனைப்பை உணருகிறீர்கள். இது தான் பிரச்சினை. யாராவது தன் முனைப்புடன் இருந்தால் உங்களை அது எப்படி பாதிக்கின்றது? நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். அவர்கள் தாம் உங்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் உங்களைப் பார்த்து, தன் முனைப்புள்ளவன்," பார்! அவன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றான் என்று பொறாமைப்பட வேண்டும்.அது உங்கள் கையில் தான் இருக்கின்றது. மற்றவரின் தன் முனைப்புக்கு நீங்கள் அங்கீகாரம் அளித்தால், ஒரு எலியைப் போலப் பதுங்கி நடப்பீர்கள். ஒரு சிங்கத்தைப் போன்று நடங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். சிங்கத்தைப் போன்று முகச்சுளிப்பும் கர்ஜனையும் தேவையில்லை. உங்களுள் ஒரு சிங்கத்தைப் போன்று கம்பீரமாக புன்முறுவலுடன் இருங்கள்.

கே: குருதேவ்! இவ்வுலகம் மிகுந்த சுயநலம் மிக்கதாக உள்ளது. மக்கள் பணத்திற்கே அதிக மதிப்புக் கொடுக்கின்றார்கள். உணமையான அன்பை எங்கே காண்பது?

குருதேவ்: அவ்வாறு கூறாதீர்கள். இவ்வுலகில் பல்வேறு விதமான மக்கள் இருக்கின்றார்கள். இவ்வுலகம் தன்னலம் மிக்கது என்று குறை கூறி முத்திரை குத்தாதீர்கள். அது நியாயமானது அல்ல. இவ்வுலகில் நல்லவர்கள் இருக்கின்றார்கள்.அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றார்கள். ஏமாற்றுபவர்கள் மிகக் குறைவான அளவிலேயே உள்ளார்கள்.

ஒரு வேளை உங்களை அது போன்ற இரக்கமில்லாத, கொடுமையான தன்னலமுள்ளவனாக முத்திரை குத்தினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? உங்களயே - உங்கள் இதயத்தை, உங்கள் மனத்தைக் கேளுங்கள்.நீங்கள், நல்லவர், அன்பானவர் ஆனால் மற்ற ஒவ்வொருவரும் கெட்டவரா? அது தவறு. அல்லவா?

இவ்வுலகில், நல்லவர்களும், நல்லனவற்றை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கின்றனர். அவ்வளவு தான். அவர்களும் கூட நல்லவர்கள் தாம். இப்பிரபஞ்சத்திலேயே தீய உயிர் எதுவும் கிடையாது. ஒவ்வொருவரும் உள்ளார்ந்த நிலையில் நல்லவரே. சிறைச்சாலைக்குச் சென்று கொடிய குற்றவாளிகளிடம் நீங்கள் பேசினால், அவர்களது கண்களிலிருந்து, அவர்களும் நல்ல மனிதர்கள் என்று தெரிந்து கொள்வீர்கள். எங்கோ அவர்கள் தவறு செய்து குற்றவாளிகள் ஆகிறார்கள். கொடிய குற்றவாளியிடம் பேசும் போது நல்ல மனிதன் ஒளிந்திருப்பதைக் காண்பீர்கள்.

என்னுடைய பார்வையில் நீங்கள் நோக்கினால், இப்பிரபஞ்சத்திலேயே தீயவர் என்று யாருமே கிடையாது. நல்லவைகளை வெளிப்படுத்துபவர்கள், நல்லவைகள் மறைக்கப்பட்டு, அவற்றை வெளிப்படுத்தாமல் இருப்பவர்கள் என்றுதான் இருக்கின்றார்கள். அவ்வளவுதான். அவர்களிடமிருந்து நல்லவைகள் வெளிப்பட நீங்கள் உதவலாம். அது போல், அவர்கள் நல்லவைகளை வெளிப்படுத்த நீங்கள் உதவலாம்.இவ்வாறுதான் நீங்கள் உலகை அணுக வேண்டும்.ஒரு போதும் தீயவர்கள் என்று முத்திரை குத்தாதீர்கள். அவ்வாறு செய்தால், உலகை நோக்கி உங்கள் மனப்போக்கும் தீயதாகி விடும்.

கே: நான் வாழும் கலையில் சேர்ந்ததில் இருந்து எனது அனைத்துக் கவலைகளும் தங்களால் கவனித்துக் கொள்ளப்படுகின்றன. ஒரே ஒரு கேள்வி தான் கேட்க விரும்புகிறேன். எப்போது தங்களை சந்தித்தாலும், என் கண்களில் கண்ணீர் நிரம்புகின்றதே? அது ஏன்?

குருதேவ்: அது சரிதான். அது அப்படித்தான். உபநிஷதங்கள் ஒன்றில், விருப்பமானவரை சந்திக்கும் போது என்ன நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஞானத்தை நெருங்கும் போது, உங்கள் இதயம் திறக்கின்றது. இதயம் திறக்கும் போது, மனதிலுள்ள சந்தேகங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. கண்ணீர் பெருகுகின்றது. கர்மாக்கள் அழிந்து விடுகின்றன.

பித்யந்தி ஹ்ருதய க்ரந்தி' - உள்ளத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்கின்றன.
'சித்யந்தே சர்வ சம்சயஹா - மனதிலுள்ள சந்தேகங்கள் மறைகின்றன.
க்ஷீனதி சாச்ய கர்மாணி - கர்மாக்கள் பலவீனமடைந்து, மறைகின்றன.

விவேகம் அறிவு, ஞானம் இவற்றை அடைவதின் குறியீடுதான் அது. இவையெல்லாம் ஞானத்தின் கண நேரத் தோற்றத்தின் போது ஏற்படுவது தாம்

எனக்கு நினைவிருக்கிறது, ஒரு சமயம் நான் இந்த மாண்ட்ரியல் ஆஸ்ரமத்திற்கு (அப்போது ஆஸ்ரமம் கட்டப்படவில்லை. நிலம் மட்டும் வாங்கி இருந்தோம், நான் ப்லோராபெல் எனும் இடத்தில் வந்திருந்த பொழுது, ஒரு பத்திரிக்கையாளர் வந்திருந்தார். என்னைப் பேட்டி காண விரும்பினார். 

அவர் அமர்ந்த உடன்," கடவுளே! எனக்கு என்ன நிகழ்கின்றது? நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். மன்னிக்கவும் ! மன்னிக்கவும்!” என்றாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. இது போன்று முன்னர் எப்போதுமே நிகழ்ந்ததில்லை. மன்னிக்கவும்என்று மிகவும் வருந்தி மன்னிப்புக் கோரினாள். அழுது கொண்டே இருந்தாள். நான் "பரவாயில்லைகவலைப்படாதீர்கள். இது போல நிகழக்கூடியது தான். என்றேன். தான் கேட்க வேண்டும் என்று எண்ணிய அனைத்துக் கேள்விகளையும் மறந்து விட்டாள். இது போன்று பல தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன..

கே: நான் நல்ல வருமானத்தைத் தருகின்ற வசதியான  வேலையில்  இருக்கின்றேன். ஆனால் சில நாட்களாக , "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்? இதைவிட பயனுள்ள ஏதோ ஒன்றை  நான் செய்ய வேண்டுமோ?" என்ற பலத்த எண்ணம் சில நேரங்களில் தோன்றுகின்றது. நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: ஆம். உங்கள் ஓய்வு நேரங்களை நல்ல சேவை, சாதனா ஆகியவற்றில் செலவிடுங்கள்.  ஒருவரது வாழ்வில் இவையெல்லாம் பொன் போன்றவை.  தினமும் திரைப்படங்களையோ அல்லது தொலைக் காட்சித்   தொடர்களையோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். நாம் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம். வீட்டிற்குத் திரும்பி வந்ததும் ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே மீண்டும் மீண்டும் பார்த்து நேரத்தை வீணடிக்கின்றோம். நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதை நான் வேண்டாமென்று சொல்லவில்லை. எப்போதாவது சில நேரங்களில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என்றால் பரவாயில்லை. நாள்தோறும் தவறாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதென்பது நேரத்தை வீணப்படிப்பதாகும்.

ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சமுதாய சேவை செய்வதென்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ஞானம் பற்றி பேசுவது அல்லது எழுதுவது  சமுதாய ஊடகங்களில் சென்று ஞானத்தை பரப்புவது  போன்றவற்றிற்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள்.  என்ன சொல்கிறீர்கள்?  நல்ல யோசனை இல்லையா?  இது ஆக்கபூர்வமானது.  இப்படிச் செய்வதால் வாழ்வில் திருப்தி  உண்டாகும். 

இந்த பிரபஞ்சத்தில் வெறும் பார்வையாளராக இல்லாமல்  பங்கேற்பவராக இருங்கள். நீங்கள் சமுதாய மாற்றத்தில் பங்கேற்பவராகவோ, அல்லது அதற்குத் துணை புரியும் முகவராகவோ இருக்க வேண்டும்.  எனவே வெறுமனே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்  பார்த்துக் கொண்டிருக்காமல் தினமும் ஒரு மணி நேரம் ஆக்க பூர்வமான செயல்களுக்காக அர்ப்பணம் செய்யுங்கள்.

கே:  ஒருவர் குருவுடன் நெருக்கமாக வரும்போது வாழ்வில் அதிமான துன்பங்களை எதிர்கொள்வது ஏன்?  அப்போதும் அவர் ஏன் தன் முயற்சிகளை கைவிடுவதில்லை?

குருதேவ்:  ஆம்.  சவால்களை மிகவும் நேசிக்கும் சிலர் இருக்கின்றனர்.  இல்லையென்றால் மக்கள் எதற்காக உலகைச் சுற்றி படகுச் சவாரி செல்கின்றனர்?  எதற்காக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகின்றனர்?   ஏனென்றால் மக்கள் சவாலை மிகவும் விரும்புகின்றார்கள். மனிதனின் தான் என்கின்ற முனைப்பிற்கு பெரும் சவால்கள் தேவைப்படுகின்றன. சிலர் சவால்களை சந்திக்க வேண்டுமென்றே கடினமான பாதைகளை தேர்ந்தெடுக்கின்றனர். கவலை வேண்டாம். நீங்கள் இந்தப் பாதையில் இருக்கும் போது எல்லாவற்றையும் புன்னகையோடு செய்வீர்கள். அது தான் இந்தப் பாதையின் பலம். 

கே:  யோகா, இந்து மதம் ஆகிய இரண்டும் பெண்களை விலக்கி வைப்பது போல் தோன்றுகின்றது. இது நாம் இன்னும்  ஆன்மீகப்  புரட்சிக்குத்  தயாராகவில்லை என்று என்னை நினைக்க வைக்கின்றது. இது  குறித்தும் பெண்களின் பங்கு குறித்தும் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?  பெண்கள் சமையல் மற்றும் சுத்தப்படுத்தும்  வேலைகளை மட்டுமே  செய்ய , உங்களைச் சுற்றி பெரும்பாலும் ஆண்களே இருப்பது ஏன்?

குருதேவ்:  அப்படி எதுவும் இல்லை. யோகா, இந்து மதம், வேத ஞானம் என்று எதுவுமே பெண்களை விலக்கி வைக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமமான தகுதியே அளிக்கப்படுகின்றனர். இந்தியப் பாரம்பரியத்தில்  தாய் முதலில் வருகின்றார்.  பிறகு தான் தந்தை வருகின்றார். அன்னையைத் தான்  கடவுள் என்று  சொல்கின்றார்கள். 

எழுதுவதைப் பார்க்கும்போது அவர்கள் திரு மற்றும் திருமதி என்று எழுதுவதில்லை. திருமதி என்றெழுதி பிறகு தான் திரு என்று எழுதுகின்றார்கள். இந்து மதத்தில்  ராதே ஷியாம்  என்று தான் சொல்லப் படுகின்றது.  ஷியாம் என்று சொல்லி பிறகு ராதே என்று  சொல்வதில்லை. சீதாராம் என்ற பெயரில் முதலில் சீதா பிறகுதான்  ராம். அதேபோல் லக்ஷ்மி நாராயணன். ஆகவே எப்போதும் பெண்கள் தான்  முதலில்  இருக்கின்றார்கள்.

நீங்கள் அர்த்த நாரீஷ்வரரைப்  பார்த்திருக்கின்றீர்களா? உங்களுக்கு அவரது கதை தெரியுமா? பெண்கள் என்றாலே வெறுக்கும் முனிவர் ஒருவர் இருந்தார். பொதுவாக, சந்நியாசிகள் பெண்களை விட்டு விலகி ஓடுவார்கள். பெண்களில்  யாராவது அவரை ஏமாற்றி இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது நடந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் பெண்களை மிகவும் வெறுத்தார்.  அவர் பெண்களை  பார்க்கவே மாட்டார். பெண் கடவுள்களின் சிலைகளைக் கூட பார்க்க மாட்டார். அவர் சிவ, சிவ , சிவ என்று சொல்லி சிவனை மட்டுமே வணங்குவார். சக்தியை வணங்க மாட்டார். ஆகவே  சிவன்  ஆண் பாதி பெண் பாதி என்று உருவெடுத்து  அர்த்த நாரீஸ்வரராக அவர் முன்னே தோன்றினார். இது ஒவ்வொருவருக்குள்ளும் ஆண் பாதி பெண் பாதியாக இருப்பதைக் குறிக்கின்றது. நீங்கள் உடலளவில்  ஆணோ அல்லது பெண்ணோ எப்படி இருந்தாலும் உள்ளுக்குள்ளே நீங்கள் இரண்டுமாக இருக்கின்றீர்கள்.  ஏனென்றால் நீங்கள்  முட்டை  விந்து  ஆகிய இரண்டும் சேர்ந்து  ஆக்கப்பட்டவர். தாய் தந்தை இருவரின் DNA  சேர்ந்து உருவாக்கப் பட்டவர். இரண்டும் உங்களுக்குள்ளே சமமாக இருக்கின்றன. ஆக,  சிவன்  பாதி ஆண் பாதி பெண் என்று அர்த்த நாரீஸ்வரராக அந்த முனிவரின் முன்னே தோன்றியவுடன், அவர் பெண்கள் மீதிருந்த வெறுப்பு நீங்கி, முக்தி அடைந்தார். இது ஒரு பெரிய கதை. இருந்தாலும், சுருக்கமாக சொன்னால்,  பெண்கள்  மீதிருந்த பாரபட்சம் நீங்கியவுடனே அவர்  முக்தி அடைந்தார்.
பின்னொரு காலத்தில், இந்தியா இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தில் இருந்த போது தான்  மாற்றம் ஏற்பட்டது. பெண் பூசாரிகள் நீக்கப்பட்டனர். இந்தோனேசியாவில் இருக்கும் பாலி  என்னும் இடத்திற்கு   நீங்கள் சென்றால், இன்றும் அங்கே பெண் பூசாரிகள் இருக்கின்றனர். ஆனால்  இடைக்காலத்தில், இஸ்லாம் மதம்  பெண்களை  பர்தா  என்னும் உடை அணிந்து வீட்டிற்குள்ளேயே இருக்க  வைத்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. வேத காலத்தில் பெண்கள் எல்லா உரிமைகளும் பெற்றிருந்தனர்.  ஆனால் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாற்றங்கள்  நிகழ்ந்தால் அவை சிறிது காலம்  நீடிக்கும்.  ஆகவே  பெண்கள் குறைவாக மதிப்பிடப்படுகின்றனர் என்று நினைக்க வேண்டாம்.

இறைவனை அன்னை வடிவமாக வழிபடுவதற்கெனவே ஒன்பது தினங்கள் உள்ளன.  இங்கே ஆசிரமத்தில் பெண்கள் எனக்காக பல வேலைகளை செய்கின்றனர். பெண் ஆசிரியர்கள் உள்ளனர்.  எங்கள் அறக்கட்டளையில் பல பெண்கள் இருக்கின்றனர். பெண்கள் சமையல் மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளை மட்டும் செய்கின்றனர் என்று ஒன்றும் இல்லை. உண்மையில், கனடாவில் இருக்கும்  நம்  ஆசிரமத்தின்  தலைமை நிர்வாகி ஒரு பெண்.  நீண்ட காலமாக கனடாவிலுள்ள ஆசிரமம் பெண்களால் தான் நடத்தப்பட்டு வருகின்றது.  அது ஒரு மகாராணியின் சாம்ராஜ்ஜியமாக இருக்கலாம்.

கே:  குருதேவ், சைத்ர நவராத்திரி  மற்றும் அதன் முக்கியத்துவம்  பற்றி சிறிது சொல்லுங்களேன்.

குருதேவ்:  நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள்.  இந்த ஒன்பது இரவுகளும் நீங்கள் உங்கள் உள்நோக்கி கவனத்தைச் செலுத்துகின்றீர்கள்.  இது தியானத்திற்கான நேரம். நீங்கள் உள்நோக்கி தியானம் செய்து படைப்பாற்றலோடு வெளி வருவதற்கான நேரம் என்பதே இதன் முக்கியத்துவம்.  சைத்ரா என்றால் ஒரு புது ஆண்டின் துவக்கம் என்று பொருள். உள்நோக்கி பார்த்தல், வழிபாடு, தியானம், மந்திர உச்சாடனம், படைப்பில் தெய்வீகத்தை உணர்ந்து அதில் ஈடுபடுதல் என்பவை நிறைந்த இந்த ஒன்பது நாட்களுடன்  புது ஆண்டு துவங்குகின்றது. 

கே: நாம் இந்த சாதி அமைப்பிலிருந்து விடுபடுவது எப்படி? நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். என் பெற்றோரும் அவரது பெற்றோரும் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்று நினைப்பதனால் எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் குருதேவ்.

குருதேவ்: பொறுமையும், கல்வியறிவும் தேவை. இப்பொழுதெல்லாம் இது போன்றவை மிக மிகக் குறைவு என்று நினைக்கின்றேன். மக்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கின்றனர். சில நேரங்களில், சைவம், அசைவம் என்னும் உணவுப் பழக்க வழக்கங்கள் தான் மக்களை கவலைப்பட வைக்கின்றன. அதுவே  மிகப் பெரிய தடையாக உள்ளது. கவலைப்பட வேண்டாம். உங்கள் பெற்றோர்களை சம்மதிக்க வைக்க உங்களுக்கு சக்தி இருக்க வேண்டும். முதலில் அவர்களை வாழும்கலை பயிற்சி செய்ய  வையுங்கள்.  அதை முதலில் செய்வதே சிறந்தது.