தடைகளைத் தகர்த்தெறியுங்கள்; குழுவில் சேர்ந்துழையுங்கள் - 2

24 ஏப்ரல் 2013 - டோக்கியோ, ஜப்பான் 

(டோக்கியோவில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கருத்தரங்கில் குருதேவ் தொழில் முனிவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களைத் தொழில்களில் ஆன்மீகத்தைக் கடைப்பிடிக்குமாறு ஊக்குவித்தார்.  குருதேவின் உரையின் எழுத்துப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது).




நான் நேற்று ஷிண்டோ கோவிலுக்குச் சென்றிருந்தேன். வாயிற்புறத்தில்  இரண்டு சிங்கங்கள் காணப்பட்டன. ஒன்றின்  வாய் திறந்திருந்தது, மற்றொன்றின் வாய் மூடி இருந்தது. ஒன்று 'ஆ' என்கிறது; மற்றொன்று 'ம்' என்கின்றது. ஒன்று ஆரம்பம்,மற்றொன்று முடிவு. அதுதான் "ஓம்" எனும் சொல். நமது வாழ்கையின் ஆரம்பமும் சிங்கம் போன்று இருக்க வேண்டும், முடிவும் சிங்கம் போன்று இருக்க வேண்டும்.நமது வாழ்வில் சிங்கம் குறிப்பிட்டுக் காட்டும் பலம், ஒருமைப்பாடு, பற்றுறுதிக் கோட்பாடு இவை யாவும் இருக்க வேண்டும். அவை நம்பிக்கையின் ஒரு பகுதி. நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிடின் இத்தகைய குணங்கள் தோன்றாது.

நம்பிக்கை தான் தொழிலின் முதுகெலும்பு. தொழிலுக்கு ஆன்மீகத்தின் பங்கு என்ன என்று நீங்கள் வியந்து போகலாம்.இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை, உண்மையில் வெவ்வேறு உலகங்கள் எனலாம்.தொழில் என்பது ஆன்மீகத்தினின்றும் முற்றிலும் வேறுபட்டது என்று நீங்கள் கருதலாம். ஆன்மீக  ஈடுபாடு உள்ளவர்கள் தொழில்துறையை விரும்புவதில்லை.தொழில்துறையில் உள்ளவர்கள்  ஆன்மீகத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. உண்மையில் இவை இரண்டுமில்லாத வாழ்கை முழுமை பெறுவதில்லை. தொழில்துறை தான் சமுதாயத்திற்கு செல்வச் செழிப்பைத் தருகின்றது.தொழில் இல்லாமல் செல்வம் இல்லை. வளம் இல்லை என்றால் குற்றங்கள் அதிகரிக்கும்.அப்போது ஆன்மிகம் உருவாகாது.

இதன் மறுபக்கம் பார்த்தால்,ஆன்மீகம்தான் குற்றங்களைக் குறைக்கின்றது. ஆன்மீகம்தான் தொழில் துறைக்குத் தேவையான நேர்மை ,ஒருமைப்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஆகவே இவை இரண்டும் ஒன்றுகொன்று இசைவாகவே இருக்கின்றன.இந்தியப் புராணங்களில் நாராயணன் (மெய்மையின் கருத்துருவம்) லக்ஷ்மி (செல்வத்தின் கருத்துருவம்). செல்வத்தைக் குறிக்கும் கடவுள் எப்போதுமே மெய்மையை குறிக்கும் கடவுளுடன் இருக்கிறார். ஆன்மீகமானது, உள்நம்பிக்கை, ஒருமை, மகிழ்ச்சி, கருணை என ஆன்மாவின் குணங்களைத் தருகின்றது. இக்குணங்களை மேம்படுத்துவதை தான் நான் ஆன்மிகம் என்கிறேன்.

பல சொற்பொழிவுகளைக் கேட்கலாம்,பல புத்தகங்களைப் படிக்கலாம் ஆனால் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? அதற்குத் தான் பயிற்சிகள், தியானம் ஆகியவை உதவியாகின்றன.
நாங்கள் M and M என்போம்.அது அமெரிக்காவில் கிடைக்கும் மிட்டாய் அல்ல, M and M என்பது மீல்ஸ் அண்ட் மெடிடேஷன். இதை நாங்கள் சுமார் 200 தொழிலகங்களில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றோம்.ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின் போது அனைவரும் ஒன்றாக 15முதல்20 நிமிடங்கள் இளைப்பாறி,பின்னர் தங்கள் உணவை பகிர்ந்து உண்கிறார்கள். இதனால், ஒருவருக்கொருவர் ஆதரவும், சார்புணர்வும் ஏற்படுகின்றது.

தொழில் என்பது வெறும் கருவிகளுடன் பணியாற்றுவது அல்ல.மனிதத் தொடர்புடையது. அதற்கு மனித நேயம் அவசியம். அது ஒருவருக்கொருவர் மனப்பூர்வமான தொடர்பு கொண்டால் தான் ஏற்படும். வளர்ந்த நாடுகளில், தொழில் பொதுக் கூட்டங்களில் இரண்டு பேர் ஒரே கருத்தை சண்டையிட்டுக் கொள்வது போல கூறிக் கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். கூட்ட இறுதியில் எந்த முடிவுக்கும் வரமாட்டார்கள், ஏனெனில் அவரவர் தங்களுக்கிடையே பேசிகொண்டிருப்பார்கள் இது மூளைக்கும் மூளைக்குமான தகவல் தொடர்பு. உண்மையில் மூளைக்கும் இதயத்திற்கும் அல்லது இதயங்களிடையே தகவல் தொடர்பு இருக்க வேண்டும். மக்கள் சில நிமிஷங்களாவது மௌனம் அமைதி, சார்புணர்வு இவற்றை பகிர்ந்து கொண்டால் தான் இது நடைபெறும்.

இது 1999 ஆம் ஆண்டு நான் இந்தியாவிலுள்ள பாரத் ஹெவி ஏலேக்ட்ரோநிக்ஸ் ( BHEL) தொழிலகத்திற்கு நமது ஆசிரியர்கள் இரண்டுபேரை அனுப்பியபோதுதான் துவங்கியது. அங்கு சில பிரிவுகளில் அதிகமான தொல்லைகள் காணப்பட்டன. அவர்களை ஒருங்கிணைப் பதற்காக  மூச்சுப் பயிற்சியும், தியானமும் அறிமுகப்படுத்தினோம். முக்கியமாக சிலரை வெளியேற்றவும் முடியாமல் பணியில்  வைத்துக் கொள்ளவும் முடியாமல் ,உற்பத்தி பாதிக்கப் பட்டு அந்த நிறுவனம்  கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தது.இப்படிப்பட்ட வெளியேற்றப் படவோ, தொடர்ந்து உபயோகப்படவோ முடியாத சிலர் ஒவ்வொரு நிறுவனத்திலும்  இருக்கிறார்கள். சிலர் மிக முரட்டுத்தனமானவர்கள்.உங்களுக்குக் கடினமாகத் தோன்றுபவர்களை எல்லாம், என்னிடம் அனுப்பிவிடுங்கள் என்று நான் அடிக்கடி கூறுவேன்

இப்படிப்பட்ட சிலர் எங்களுக்குக் கிடைத்தார்கள். அவர்களுக்காக ஒரு ஆசிரியர் அங்கு சென்றார். அவர்களிடம் சில கேள்விகள் கேட்டார். முதல் கேள்வி " நீங்கள் இந்த வணிக நிறுவனத்தின்  நிர்வாகத் தலைவராக நியமிக்கப் பட்டால் எவ்வாறு இதை எவ்வாறு நடத்திச் செல்வீர்கள்? என்ன செய்வீர்கள்?" குறை கூறிக் கொண்டிருப்பவர்கள் வேலை செய்வதில்லை. முக்கியமாக, குறை கூறுபவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளுவதில்லை. எனவே, நாங்கள் இப்படி சில கேள்விகளின் மூலம் அவர்களது கவனத்தை, மற்றவரின் கண்ணோட்டத்தில் பார்க்கத் திருப்பிய போது மாற்றம் ஏற்படத் துவங்கியது. இதனுடன் சில நிமிஷங்கள் மௌனம், ஆழ்ந்த இளைப்பாறுதல் இவற்றையும் சேர்த்துக் கற்பித்தவுடன் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.

இவர்கள் முன்னர், தங்கள் வீடுகளுக்குத் திரும்பியதும் மனைவி மக்களிடம் சண்டையிட்டுக் கத்திக் கொண்டிருந்தவர்கள் ஆனால் இப்போது  தங்கள் குடும்பத்தவரிடம் ஒழுங்காக நடந்து கொள்ளத் துவங்கினார்கள்.குடும்பத்தவர் மகிழ்ச்சியடைந்தார்கள்.இவர்களும் மகிழ்ச்சியானர்கள் அதனால் உற்பத்தித்திறன் கூடியது.நான்கு நாட்களில் எங்களால் மாற்றத்தை காண முடிந்தது. ஆகவே, அந்த வணிக நிறுவனம்,மேலும் பலருக்கு வகுப்புகள் எடுக்குமாறு வேண்டினார்கள்.

இன்று, ஹார்வார்ட் தொழில் பயிற்சி நிறுவனம், Microsoft, GE ஆகிய நிறுவனங்கள் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.உலக வங்கி கூட இதை தங்கள்  பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக பல நாடுகளில் ஏற்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் ஆழ் மனதில் ஒன்று இருக்கின்றது.அதை ஊக்கி விட்டால், தூண்டுதல் நிலையிலிருந்து தானே உயிர்ப்பூட்டப்படும் நிலை ஏற்படுகிறது.

எந்த வணிக நிறுவனமானாலும் சரி, பணியாளர்களுக்கு ஆர்வம் ஊட்டப்படவேண்டும்.ஊதிய உயர்வு, போனஸ், போக்குவரத்து வசதி இவைதான் சாதரணமாக ஆர்வ ஊக்கிகளாக அளிக்கப் படுகின்றன. இவை நீண்ட நாள் நீடித்து நிற்பதில்லை. ஓரிரு மாதங்களில் மங்கத் தொடங்குகின்றது. நாம் மக்களை உயிர்ப்பிக்க வேண்டும். அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவை எல்லாமே நம்மைப் பற்றி நம்பிக்கை, உறுதி, நம் திறமையில் நம்பிக்கை இவை இருந்தால் தான் ஏற்படும்.அப்போது நமது சமூக செயல்திறன் தானாகவே உறுதியாகி வெற்றி நிச்சயம் ஏற்படும். எப்போதுமே ஒரு அணியாக செயல்படுவது நல்லது. நம்மிடம் ஒரு ஊக்கச் சொற்றொடர் இருக்கின்றது "தடைகளைத் தகர்த்தெறியுங்கள்; குழுவில் சேர்ந்துழையுங்கள்" முதலில் நீங்கள் மனதடைகளைத் தகர்த்தெறிய வேண்டும். அடக்கி வைக்கப்பட்ட மனப் போராட்டங்களுடன் நீங்கள் ஒரு குழுவில் சேர்ந்து செயல்பட முடியாது. நமது மூச்சின் மூலம் நமது மனதை எவ்வாறு கையாள்வது என்று கற்றுக் கொண்டால், அடக்கி வைக்கப் பட்ட மன உணர்ச்சிகளையும் கையாளலாம். பள்ளிகளில் நாம் பல் தூய்மை பற்றிக் கற்றுக் கொடுக்கிறோம்.ஆனால் மனத் தூய்மை பற்றி கற்றுத் தருவதில்லை. 

பணிவல்லுனர்களாக இருந்தாலும் வணிக நிறுவனர்களாக  இருந்தாலும் அனைவரும் மனத் தூய்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதிக அளவிலான உணர்ச்சிச் சுமை இளவயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் அழுத்துகின்றது. பள்ளிகளிலும் வீடுகளிலும் உணர்ச்சி அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்று யாரும் கற்றுத் தருவதில்லை. மன உணர்ச்சிகளை தூய்மைபடுத்துதல், உள்ளிருந்து இலகுவாக உணருதல் ஆகியவை கற்றுத் தரப் பட வேண்டும். அது சமுதாயத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும். அப்போது, வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், குழப்பமற்ற மனம்,தடையற்ற அறிவு, அதிர்ச்சிக் காயங்களற்ற நினைவுத் திறன்,துன்பமற்ற ஆத்மா இவைகளுடன் மகிழ்ச்சியான, வளமான சமுதாயத்தை அடையலாம்.

கே: என்னுடைய பணியில் கட்டிடப் பராமரிப்பும் அடங்கியுள்ளது. என்னிடம் 100 பேர் வேலை செய்கிறார்கள். சமூகத்தில், இத்தகைய பணிகளுக்கு மதிப்பில்லை. ஆகவே, பொருளாதாரச் சரிவு ஏற்படும் போது, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் தர முடிவதில்லை. பணம் தவிர,பிற வழிகளில் நான் அவர்களை ஊக்குவிக்க முயன்று கொண்டிருக்கிறேன். அப்படியும் சிலர் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள். அமைதியையும் சந்தோஷத்தையும் எப்படி ஏற்படுத்துவது?

குருதேவ்: பணம் மட்டுமே மகிழ்ச்சியையும் தராது. நீங்கள் வித்தியாசமாக செய்ய வேண்டும். தங்களது எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என்று கற்றுத் தாருங்கள்.எங்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எங்களது பயிற்சியை உங்கள் பணியாளர்களுக்கு முக்கியமாக எப்போதுமே எதிர்மறையாக இருப்பவர்களுக்குத்  தர முடியும். எங்களுக்குத் தேவை மூன்று நாட்களுக்கு தினம் இரண்டு மணி நேரம் மட்டுமே. நிச்சயம் மாற்றத்தைக் காண்பீர்கள்.

கே: என்னுடைய நிறுவனத்தில் சில சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். இது போன்ற ஆன்மீக பயிற்சியை அவர்களுக்கு அளித்தால், அவர்கள் எழுச்சி பெற்று, வணிகத்தில் பற்றற்று, வாழ்வின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து வெளியேறி விடுவார்களோ என்று பயப்படுகிறேன். இந்த பயிற்சியை நான் வணிகத் துறையில் அளிக்கவும் விரும்புகிறேன்.  இது போன்ற ஒன்றை அவர்களுக்குப் பயமில்லாமல் அளிக்க என்ன சிறப்பான வழி?

குருதேவ்: உண்மையில், வாழும் கலை இந்தப் பயிற்சிப் பிரிவில், அவர்கள் தங்கள் தனித் தன்மையை  மேம்படுத்திக் கொள்வதைத்தான் கற்றுக் கொடுக்கின்றது.அறிவுக்கூர்மை, மன அமைதி இவற்றை ஏற்படுத்தி, அவர்களுக்கு உள்ளுயிர்ப்பூட்டுவதையே முனைப்பாகக் கொண்டிருக்கிறோம். ஆகவே அவர்கள் எங்கும் சென்று விடமாட்டார்கள் என்றும், பற்றற்று இருந்து விட மாட்டார்கள் என்றும் நீங்கள் நம்பலாம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பயிற்சிப் பாடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் வெளியேறியதாக  நாங்கள் காணவில்லை.அப்படியென்றால், உலக வங்கி தனது வர்த்தகத்துறை ஆளுமைப் பயிற்சி கருத்தரங்கில் இதை ஒரு பாடப்பிரிவாக எடுத்துக் கொண்டிருக்காதே?

இது உள்மன அமைதியை எவ்வாறு ஏற்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. உள்மன அமைதி மற்றும் விடுதலை முக்கியம் என்றுணர்ந்தால், மக்கள் அத்திசையை  நோக்கிச் சென்று விடக்கூடுமே  என்று நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. ஆனால் இந்தப் பாடப்பிரிவு மூலம் அவர்கள் தங்கள் உள்மனப் படைப்பாற்றல், அமைதி இவற்றைக் கண்டுணர்ந்து, எந்த கேடான சூழ்நிலையையும்  புன்முறுவலுடன் சமாளிக்கும் திறனை அடைவார்கள்.

கே: ஒரு மனைவியாகவும் குழந்தைகளுக்குத் தாயாகவும் இருக்கும் நான் ஒரு சிறு பள்ளியை நடத்தி வருகின்றேன்.  நான்  செய்பவை அனைத்தும் சில நேரங்களில் தவறாகிவிடுகின்றன. வேலை செய்யும் இடத்தில் நான் நானாக இருக்கவும் வேலையில் முழு கவனம் செலுத்தவும் முடியவில்லை. இதை எப்படி சமாளிப்பது என்று வழி காட்டுங்கள்.   

குருதேவ்: சில சமயங்களில் மட்டும் இவ்வாறு  நிகழ்கின்றது என்றால் பரவாயில்லை.  ஆனால் அடிக்கடி நடக்கிறதென்றால் நாம் அதை கவனிக்க வேண்டும். முதலில் ஒரு தனி ஆளாக ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றல் உங்களுக்கு இருக்கின்றது என்பதனை உணருங்கள்.
அப்படியில்லாமல், ' ஓ! ஒரு அம்மாவாக இருந்துகொண்டு என்னால் அலுவலகத்தில் நன்றாக வேலை செய்ய முடியாது'  என்றோ அல்லது   'நாம் அலுவலகத்திற்கு செல்வதால் என் குழந்தைகளை நன்றாக கவனிக்க முடியாது'  என்றோ நினைத்துக் கொண்டிருந்தால் இந்த முரண்பாடான எண்ணங்கள் உங்கள் மனதிலும் உங்கள் உணர்சிகளிலும் பெரும் பாரமாகி விடும். 
முதலில் ஒரு நல்ல அன்னை, நல்ல மனைவி, நல்ல அலுவலர் அல்லது  நல்ல தொழில் புரிபவராக ஒரே நேரத்தில் இயங்கும் திறன் உங்களுக்கு இருக்கின்றதென்பதை அறிந்து கொள்ளுங்கள். இதற்கு முரண்பாடான எண்ணங்களை வேரோடு களைந்துவிட்டு, உங்கள் திறமைகளில் நம்பிக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். 

இரண்டாவதாக, நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தின் அளவைவிட நேரத்தின் தன்மையே மிக முக்கியமானது. நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் பத்து மணி நேரம் இருக்க வேண்டிய  அவசியமில்லை. ஒரு மணி நேரமே என்றாலும் முழு ஈடுபாட்டுடன் நூறு சதவீதம் அவர்களுடன் இருந்தால் அதுவே அவர்களுக்கு அதிக திருப்தி அளிக்கும். 

மனஅழுத்தமே அனைத்திற்கும் மூல காரணம். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது உங்களை நீங்கள் நன்றாக தளர்த்திக் கொண்டு மன அழுத்தத்திலிருந்து விடுபடாவிட்டால் உங்கள் தலையில் நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்கள் எல்லாம் உங்கள் உணர்ச்சிகளாக வெடித்துக் கிளம்பும். நம் உணர்ச்சிகள் நம் எண்ணங்களைவிட மிக வலிமையானவை. பல நேரங்களில் நாம் உறுதியாக இருக்க எண்ணம் கொண்டிருப்போம்.  ஆனால் உணர்ச்சிகள், கோபம், ஆசைகள், வெறுப்பு, விரக்தி போன்றவை உண்டாகும் போது அனைத்துமே தூக்கி எறியப்படும். 

நம் அறிவு அல்லது நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் எல்லாம் ஒரு வீட்டின் வாயிற்காப் போன் போன்றவை. நம்முடைய உணர்ச்சிகள் வீட்டின் சொந்தக்காரர் போன்றவை. வீட்டின் உரிமையாளர் உள்ளே வரும் போது வாயிற்காப்போன் அவரை தடுத்து நிறுத்த வழியில்லை.  அவரை உள்ளே அனுமதிக்கத் தான் வேண்டும். நம் உணர்ச்சிகளை நம்முள்ளேயே நாம் ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்குத் தான் சுதர்ஷன் கிரியா, பிராணாயாமா போன்றவை துணை புரிகின்றன. 

கே: அறநெறி என்பது நாட்டிற்கு நாடு வேறுபடுமா அல்லது அது உலகப் பொதுமறையானதா?

குருதேவ்: அறநெறி என்பது பொதுவானது. மற்றவர்கள் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது. உதாரணத்திற்கு உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் அல்லது உங்களுக்கு மேலே வேலை செய்பவர்களிடமிருந்து நீங்கள் எதையெல்லாம் எதிர் பார்க்கின்றீர்களோ அவையே அறநெறி ஆகும். உங்கள் மேலதிகாரியோ அல்லது உங்கள் கீழே வேலை செய்பவர்களோ உங்களிடம் நெறிதவறி நடந்துகொள்வதை நீங்கள் விரும்ப விட்டீர்கள் இல்லையா? 

நீங்கள் உங்களைச் சுற்றி வேலை செய்பவர்களிடமிருந்து ஒரு தரமான நடவடிக்கை, ஆசாரம், நேர்மை போன்றவற்றை எதிர்பார்க்கும்போது அவையெல்லாம் உங்களிடமும் இருக்க வேண்டும் இல்லையா? ஆதுதானே பொதுவான வழக்கம்? உங்களிடம் வேலை செய்பவர்கள் உங்களிடம் பொய் சொல்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் இல்லையா? உங்கள் வாழ்க்கையில் நீங்களும் அதையே கடைபிடியுங்கள். இதுவே அறநெறி. எத்தனை எளிமையானது.? 

நெறிமுறைகள் பொதுவானவை. பொய் என்றால் பொய் தான். அதில் ஜப்பானியப் பொய் என்றோ, இந்தியப் பொய் என்றோ அமெரிக்கப் பொய் என்றோ இல்லை. நேர்மை என்றால் அது நேர்மை. இந்த அர்த்தத்தில் பார்க்கும்போது அறநெறி என்பது பொதுவானது. 

கே: இந்தியர்களைப் பொருத்தவரை அறநெறி என்பது என்ன? ஒருவர் அரசியல்வாதியான உடனே அறநெறியை இழந்து விடுவது ஏன்?

குருதேவ்: அரசியல்வாதிகள், குறிப்பாக இந்தியாவில் இருப்பவர்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலிருந்து கீழ் வரை ஊழல் நம் நாட்டை பாழ்படுத்தியுள்ளது.  அறநெறி என்பது முழுமையாக மடிந்து விட்டது. அதனை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா?  முடியும்.  ஏனென்றால் பெரும்பாலான மக்கள் அன்பாகவும் நேர்மையாகவும் இருக்கின்றனர்.  இன்னும் நேர்மையுடனிருக்கும் பெரும்பாலான  மக்கள் ஒரு மாற்றத்தினை  விரும்புகின்றனர். 
உதாரணத்திற்கு நான் உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். அலஹாபாத்தில் இரண்டு மாதங்களுக்கு நடைபெறும் கும்ப மேளா (பெரும் இந்துப் புனித யாத்திரை) நிகழ்ச்சிக்கென கோடிக்கணக்கான மக்கள் அங்கே வருகை தந்தனர். அங்கே ஒரு திருட்டோ அல்லது வேறு எந்த குற்றமோ பதிவு செய்யப்படவில்லை. எண்ணிப்பாருங்கள் ! 100 மில்லியன் மக்கள், இரண்டு மாதங்கள்! ஒரு குற்றம் கூட இல்லை! மக்கள் நெறிமுறை மற்றும் நேர்மையை விரும்புகிறார்கள். ஒரு தலைமைதான் தேவையாக இருக்கின்றது.அத்தகைய தலைமை இன்று இல்லை, சரியான ஆட்சி முறை இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

ஒரு தொழில் வல்லுனராகவோ,பொறியியல் வல்லுனராகவோ,மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ அல்லது எந்த துறையிலும் பணிபுரிய நீங்கள் கல்லூரிக்குச் செற்று படிக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதியாக எந்தப் படிப்புத் தகுதியும்  தேவை இல்லை. அதனால் தான் வாழும் கலையில் நாங்கள் ஆட்சிமுறைக்கு என்று ஒரு கல்லூரி துவங்கி உள்ளோம்.அதில் கிராம பஞ்சாயத்தினருக்கு ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை பயிற்சி அளிக்கிறோம்.அவர்கள் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று நல்ல ஆட்சி முறையை கடைப்பிடிக்கலாம். எங்கெல்லாம் நெறிமுறைகள் அரித்து அழிகிறதோ அங்கெல்லாம் மாற்றம் தேவை. மகாத்மா காந்தியின் காலத்தில் இருந்தது போன்று அரசியல்வாதிகள் ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மதிப்படைய முடியும்.

அரசியலில் ஆன்மீகமும், தொழில்துறையில் சமூக உணர்வும் ஏற்பட வேண்டும் என்று கூறுகிறேன். ஒவ்வொரு தொழிலும் கூட்டு நிறுவனமாக, சமூகப் பொறுப்புடன் செயல்பட்டு சமுதாயத்திற்கு ஏதேனும் பயன் தரவேண்டும். சமய சார்பற்று இயங்க வேண்டும். சமயவாதிகள் வெறியர்களாகி, மனம் குறுகி, வன்முறை, தீவிரவாதம், ஆகியவற்றுக்கு வழிவகுத்து, உலகெங்கும் வெறியைத் தூண்டி விடுகிறார்கள். சமயவாதிகள் தங்கள் சமயத்தவருக்கு மட்டும் பிரார்த்தனை செய்யாமல் மனித இனத்திற்காகப்  பிரார்த்திக்க வேண்டும். ஆகவே சமய சார்பற்ற சமயம், சமூக உணர்வுள்ள தொழில், ஆன்மீகமான அரசியல் உருவாக்கப்பட வேண்டும்.

கே: ஜப்பானிய சமுதாயத்தில் ஆண்களை விடப் பெண்களுக்கு முக்கியமாக திருமணமாகி குடும்பம் என்று ஏற்படும் போது கடமை உணர்வு குறைவு என்று கருதப்படுகிறது. அவர்களுக்கு சக்தியளிக்க எது சிறந்த வழி?

குருதேவ்: பெண்களுக்கு ஒரு முக்கியமான இடம் உள்ளது. குடும்பம் என்னும் நிறுவனத்தில் பெண்தான் முதலிடம் வகிக்கிறாள். ஜப்பானைப் போன்றே இந்தியாவும் பெண்களைச் சார்ந்தது தான் ஒரு குடும்பத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்கும் பெரும் பணியைச் செய்வது பெண்கள் தாம். அதனால் அவர்கள் சக்தியின்றி இருக்க வேண்டும் என்பதில்லை. பெண்கள் பல்வேறு பணிகளைச் செய்யும் திறம் படைத்தவர்கள். பெண்கள் அரசியலிலும் தொழில் துறையிலும் திறம்பட செயல் படக் கூடியவர்கள். ஆண்கள் தரவேண்டும் என்று காத்திராமல் பெண்கள் தானாகவே செயல்பட முன் வரவேண்டும். உங்களுக்கு இயல்பாகவே சக்தி இருக்கின்றது, யாரும் அதைத் தர வேண்டியதில்லை.

ஒவ்வொரு ஆணுக்குப் பின்புலத்திலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது ஒரு ஆங்கில பழமொழி. இன்றையப் பாட்டிற்கு பெண் சக்தி என்பது தான் ராகமாக இருக்கவேண்டும்.சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பாதி இடங்களைப் பெண்களுக்காக ஒதுக்கி விட வேண்டும். அத்தகைய ஒதுக்கிட்டினால் ஆண்கள் பெண்களை வாக்குகளைப் பெற செயல்பட விட்டு தாங்கள் பின்புலத்தில் பணியாற்றுவார்கள்.

கே: தங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்கு, தங்களது அமைப்பு, பயிற்சிகள் ஆகியவை சமயச் சார்புடையது போலக் காணப்படுகிறது. எவ்வாறு எனது நிறுவனத்திலுள்ளவர்களுக்கு சமய உணர்வின்றி தங்கள் பயிற்சியை அறிமுகப் படுத்துவது? 

குருதேவ்: எனக்குப் புரிகின்றது. அதனால்தான், நானோ, சுவாமிஜிக்களோ இந்தப் பயிற்சியை அளிப்பதில்லை. எங்களது தோற்றம் மற்றும் நாங்கள் கூறுவது எல்லாமே சமயம் சார்ந்தது போல தெரியக் கூடும். இந்தப் பயிற்சியை அளிப்பவர்கள் சூட் அணிந்து வருவார்கள். இந்தப் பயிற்சி மூச்சை பற்றியது.மூச்சு மற்றும் யோகா இவைகளின் ஆதாரம் பழமையான வேதங்களில் உள்ளது, அது சமயச் சார்புடையது அல்ல. முற்றிலும் சமயச் சார்பற்றதாகவே உருவாக்கி இருக்கிறோம், ஏனெனில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமயத்தவரும் அதனால் பயன் பெறலாம். அது தான் வாழும் கலையின் அழகு.சமயம் சார்ந்த பகுதி என்பது தனி. 

புத்த பிட்ச்சுக்கள் இப்பயிற்சியைப் பெற விரும்பினால், மூச்சு பற்றி கற்றுக் கொள்ள விரும்பினால்  சூட் மற்றும் டை  அணிந்தவர்கள் அதை கற்றுத் தரச் செல்ல மாட்டார்கள். நானோ, அல்லது சுவாமிஜிக்களோ தாம் அதை கற்றுத்தரச் செல்வோம். ஆகவே வாழும் கலை உலகளாவியது. ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களுக்கும்,அவரவர் மொழி, மற்றும் பாணியில் கற்றுத் தருகிறோம். ஒன்றோடொன்றைக் கலப்பதில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்ற சமயத்தினர்கள் யாராக இருந்தாலும் மக்கள் வசதியாக உணர வேண்டும்.

மனதை அமைதியாக வைத்துக் கொண்டு  சக்தியுடன் செயல்பட சில செயல்முறை பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளுவதுதான் இதில் முக்கியமானது. அப்போது நீங்கள் ஒரு நாளில் 20 மணி நேரம் கூட வேலை செய்து விட்டுப் புன்முறுவலுடன் இருக்கலாம்.அதுவும் மிக முக்கியமானது. ஆகவே தான்,மக்களின் பயனுக்காக, வெவ்வேறு விதமான பயிற்சிகளை வைத்திருக்கிறோம்.சமயம் சார்ந்தவர்களுக்குத் தனியாக, சாதாரண மக்களுக்குத் தனியாக, தொழில் வல்லுனர்களுக்குத் தனியாக, அரசியல்வாதிகளுக்குத் தனியாக என்று உள்ளது. இந்தப் பயிற்சிகளை வெவ்வேறு மொழிகளில் கற்றுத் தருவதற்கு அந்தந்த மொழிகளில் பேசும் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.