பௌதீக விதிகளை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது..

19 ஏப்ரல் 2013 - கால்கரி – கனடா    


                                 
ராஜா தசரதரைப் பற்றிய புராணக் கதை ஒன்று இருக்கிறது.தசரதருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். ஆனால் குழந்தைகள் இல்லை. அவரும் அவர் மனைவிகளில் ஒருவரான கௌசல்யாவும் அஷ்வமேத யாகம் செய்து நான்கு பிள்ளைகளை அடைந்தனர். “மேத” என்றால் தூய்மைப்படுத்துவது.“அஷ்வ” என்றால் இன்று அல்லது நிகழ்காலம் என்று பொருள். “தசரதா” என்றால் ஒரே சமயத்தில் 10 ரதங்களை ஓட்ட வல்லவன் என்று பொருள். “கௌசல்யா” என்றாள் திறமை வாய்ந்தவள் என்று பொருள்.

உன் உடல் 10 ரதங்களுக்குச் சமமானது. அதில் ஐந்து புலன்களுக்கான உறுப்புகளும், ஐந்து காரியம் செய்ய உதவும் உறுப்புகளும் அடங்கும். புலன்களுக்காக கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடு உணர்ச்சிக்கான தோல் பகுதி அடங்கும். காரியம் செய்ய உதவும் அங்கங்கள் உலகில் வாழ உதவுகின்றன. கை, கால், குதம், பிறப்பு உறுப்பு, வாய் என்பவை. ஐந்து புலன்களும் ஐந்து காரிய உறுப்புக்களும் மனதை 10 விதமான திசைகளுக்கு எடுத்துச் செல்கின்றன. ரேகை, பிரகாசம் என்ற வார்த்தைகள் “ரா” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தவை. “ரா” என்றால் பிரகாசமானது, ஒளி விடுவது, பளபளப்பது என்று அர்த்தம். “மா” என்றால் என்னுள் இருப்பது. என் இதயத்தில் இருப்பது என்று பொருள். எனவே “ராமா” என்றால் என் இதயத்திலிருந்து ஒளிவிடும் ஒன்று என்று அர்த்தமாகிறது. நம் மனம் உடலில் உள்ள திறமையோடு இணைந்து நிகழ்காலத்தில் வாழ்ந்து மனமும் இதயமும் தூய்மையாகும் போது “ராமா” என்ற பிரகாசமான ஒளி நம் இதயத்திலிருந்து வெளிப்படும்.

அஷ்வமேத யாகம் செய்வதால் நான்கு பலன்கள் கிடைக்கும்.

“ராமா” என்றால் நம் இதய ஒளி பிரகாசிக்கும். “லட்சுமணா” என்றால் விழிப்புணர்வு, கூர்மையான மனம் என்பது பொருள். “பரதா” என்றால் மிகத் திறமை வாய்ந்தவன். “சத்ருக்னா” என்றால் பகைவர்களே இல்லாதவன்.“அஷ்வ” என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. ஒன்று “குதிரை”,“மேத’ என்றால் தூய்மைப்படுத்துவது என்று பொருள். இங்கு “குதிரை” என்பது உன் புலன்களைக் குறிக்கிறது. உன் புலன்கள் தூய்மைப்படுத்தப் படும் போது “ராமா” என்ற தெய்வீக ஒளி உன் இதயத்தில் பிரகாசிக்கும்.நீ விழிப்புணர்வுடன் (லட்சுமணன்) இருப்பாய். பகைவர்களே இருக்க மாட்டார்கள். (சத்ருக்னன்) உன் திறமைகள் வெளிப்படும். (பரதன்) “ராவணா” என்றால் அகந்தை அல்லது ஆணவம் என்று பொருள்.

மூன்று விதமான எண்ணங்கள் உன்னைப்  பாதிக்கின்றன.

முதலாவது: உனக்குத் திறமைகள் இருந்தாலும் அதைக் காட்ட வழி தெரியாமல் இருக்கிறாய். உன் திறமைகள் உபயோகப்பட வில்லை என்று நினைக்கிறாய். அதனால் நீ குழப்பமடைகிறாய்.

இரண்டாவது: உனக்குத் தெரிகிறது. ஆனால் மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறாய். ஆகவே நீ துக்கப்படுகிறாய்.

மூன்றாவது: நீ வழி தவறி விட்டதாக நினைக்கிறாய். நீ நன்றாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அல்லது வேறு வழியில் சென்றிருக்க வேண்டும் என்று எண்ணுகிறாய். கடந்த காலத்தைக் குறை சொல்கிறாய். உன்னைச் சுற்றி இருப்பவர்களையும் குறை சொல்கிறாய். இந்த மூன்று விதமான குறைகளும் எண்ணங்களும் உன்னைப் பாதிக்கின்றன. அவை உன் சக்தியை உறிஞ்சி விடும். இவ்வுலகில் நீ சோர்வடைய லட்சக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. எது வேண்டுமானாலும் உன்னைக் கீழே இழுத்து விடக் கூடும். ஏனென்றால் நீ விரும்பியபடி எதுவும் நடப்பதில்லை. ஞானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் போது நீ இந்த நிலையைக் கடக்கலாம். எதுவும் உன்னைப் பாதிக்காது.எத்தனையோ திறமைசாலிகள் இவ்வுலகில் வந்து தங்கள் திறமைகளை உபயோகித்திருக்கிறார்கள். அதன் பின் இறந்து விட்டார்கள். அவர்களைப் பற்றி எல்லோரும் மறந்து விட்டார்கள்.

மைக்கேல் ஆஞ்சலோவின் சித்திரங்களை நாள் தோறும் யாரும் பார்ப்பதில்லை. ஒரு முறை பார்த்து மறந்து விடுகிறோம். பீத்தோவன் மிகவும் திறமை வாய்ந்த இசைக் கலைஞர். மக்கள் ஒவ்வொரு நாளும் பீத்தோவனுடைய இசையைக் கேட்கிறார்கள் என்று நீ நினைக்கிறாயா? இசையைக் கேட்ட சிலரும் மறந்து விடுவார்கள். இங்கு எதுவுமே நிலையாக இருப்பதில்லை. எல்லாமே மாறிக் கொண்டிருக்கும். மாறும் உலகிலிருந்து உன் பார்வையை என்றும் மாறாத ஒன்றை நோக்கித் திருப்பு. இல்லாவிட்டால் நான் செய்வது, சொல்வது தான் சரி என்ற நினைப்பில் சிக்கி இருப்போம்.

பொதுவாக நீ சொல்வது சரி என்று நினைக்கும் போது மற்றவர்கள் தவறு செய்வதாக நினைப்பாய். உனக்குக் கோபம் வரும். மற்றவர்கள் சரியாக நடப்பதாக நினைக்கும் போது, நீ தவறு செய்வதாக நினைக்கும் போது குற்ற உணர்ச்சியால் வருத்தமடைவாய். இரண்டு நிலைகளிலும் நீ தடுமாறி விட்டாய். மனம் சரி/தவறு என்ற இரண்டு நிலைகளிலும் ஊசலாடுகிறது. இந்த இரண்டும்கெட்டான் நிலையிலிருந்து விடுபடுவது தான் முக்தி எனப்படும். முக்தி என்பது சரி/தவறு என்ற நிலைகளைக் கடந்து செல்வது. வாழ்க்கையில் இந்த கசப்பான சம்பவங்கள் ஏற்படுவது இயல்பு.

யஜுர் வேதத்தில் சிவனைப் போற்றும் “ருத்ரம்” என்னும் பகுதியில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இவ்வுலகில் எல்லாவிதமான மனிதர்களும் வாழ்கிறார்கள். ஏமாற்றுபவர்கள், நாணயமில்லாதவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றாதவர்கள், பண்பு இல்லாமல் இருப்பவர்கள், மூடர்கள் என எல்லா வகையான மனிதர்களும் இருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றிய சிந்தனை வேண்டாம். உன் மனமே மேலும் கீழும் உன்னை அலைக்கழிக்கிறது.இப்படிப்பட்ட சமயத்தில் என்ன செய்யலாம். அஷ்வமேத யாகம் செய்து நிகழ் காலத்தைத் தூய்மையாக்கலாம். “மேதா” என்றால் அறிவு என்று பொருளாகும். “அஷ்வ மேத” என்றால் அறிவை நிகழ்காலத்துக்குக் கொண்டு வருவது. என்று பொருள். “ஷ்வ” என்றால் நேற்று அல்லது நாளை. “அஷ்வ” என்றால் நேற்றும் இல்லை. நாளையும் இல்லை. அப்படி என்றால் அது எப்போதும் இருக்கும் அழியாத உண்மையாகும். அது நிகழ்காலத்தையும் குறிக்கிறது.

உன் அறிவுக் கூர்மை நிகழ்காலத்தில் இருக்கும் போது யாரும் உன்னை அசைக்க முடியாது. உன் அறிவை அசைக்க வல்லது கடந்த காலம் மட்டும் தான். உன் கடந்த காலத்தை விட்டு விலகி நிகழ் காலத்தில் மட்டும் வாழும் போது நீ முக்தி அடைகிறாய். அதுவே மோட்சம் எனப்படுவது. கடந்து போன நிகழ்ச்சிகளால் நீ பாதிக்கப்படாமல் இருக்கும் போது மோட்ச நிலையில் இருக்கிறாய். நிகழ் காலத்தில் அறிவோடு செயல் படுவது தான் அஷ்வ மேதம். அஷ்வ மேதத்தின் மற்றொரு அர்த்தம் தூய்மையாக்குவது. நிகழ் காலத்தில் வாழ்ந்து, புலன்களை, உடல் மற்றும் மனத்தைத் தூய்மையாக்கி ஆத்மாவின் ஆழத்தில் செல்வது அஷ்வமேதம் எனப்படும்.

பழங்காலத்தில் யாகம் செய்யும் போது, ஒரு குதிரையின் மேல் கொடியைக் கட்டி அதைக் கட்டுப்பாடில்லாமல் (கயிறு இல்லாமல்) வெளியில் அனுப்பும் பழக்கம் இருந்தது. அந்தக் குதிரை செல்லும் இடமெல்லாம் அதை அனுப்பிய அரசனுக்குச் சொந்தமாகிவிடும். அடுத்த நாட்டுக்குச் சென்றால், அந்த நாடும் அஷ்வ மேத யாகம் செய்யும் அரசனுக்குச் சொந்தமாகி விடும். இது தான் அஷ்வ மேத யாகத்தின் சிறப்பாகும். தசரதர் அஷ்வ மேத யாகம் செய்து புத்திரர்களைப் பெற்றார். மூன்று அரசிகளின் பெயர்களும் பொருள் பொதிந்தவையாக இருக்கிறது. ராமாயணம் என்பது ஒரு காலத்தில் நடந்த கதை மட்டும் அல்ல. ராமாயணம் என்பது மிக உயர்ந்த தத்துவத்தை அடக்கிய ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த காப்பியமாகும்.

முதல் மனைவியின் பெயர் “கௌசல்யா”. ஹிந்தியில் இதற்கு “திறமை” என்று அர்த்தம்.கௌசல்யா என்றால் திறமை வாய்ந்தவள் என்று பொருள்.இரண்டாவது அரசியின் பெயர் “சுமித்திரை”. இதன் பொருள் ஒரு நல்ல நண்பன் / சிநேகிதி என்று கொள்ளலாம். நமக்கு நண்பர்கள் பலர் இருக்கலாம். எல்லாருமே நல்ல நண்பர்களாக இருக்க முடியாது. சில நண்பர்கள் நம்மை தவறான வழியில் அழைத்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. “சுமித்திரை” என்றால் நம்மை நல்ல வழியில் அழைத்துச் செல்பவள் என்று அர்த்தம். மூன்றாவது மனைவியின் பெயர் “கைகேயி”.தன்னை அழித்துக்கொண்டு நன்மை தருபவள் என்பது இதன் பொருளாகும். “கைகேயி” என்றால் உன் பக்கம் இருப்பவள் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. கொடுமையாக இருப்பவள் போல் தோன்றினாலும்,உனக்கு நன்மையே தருபவள் கைகேயி. ஒரு மருத்துவர் கசப்பான மருந்தை ஒரு உறையில் இட்டு (காப்ஸ்யூல்) கொடுப்பது போல், ஒரு தடுப்பு ஊசி போடுவது போல் உன் நன்மைக்காக நடந்து கொள்பவள் கைகேயி. குழந்தை மருத்துவரைப் பார்த்தாலே ஊசி போடுவார் என்று பயப்படும்.. ஆனால் அவர் போடும் தடுப்பூசி, குழந்தைக்கு கொடிய நோய் வராமல் காப்பாற்றும். அதே போல் கைகேயி கெட்டவளாகக் காட்சி அளித்தாலும், முடிவில் உனக்கு நன்மை செய்பவள். இவை தசரதரின் மூன்று மனைவிகளின் குணங்களாகும்.

இது போன்ற ஆன்மீக நோக்கில் புரிந்து கொள்ள பல விஷயங்கள் ராமாயணத்தில் கிடைக்கும். ஞான சம்பந்தமான பல கருத்துக்கள் ராமாயணம் படிப்பதால் விளங்கும். இக்கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தும். கதையாகச் சொல்லப்பட்டிருப்பதால் சிறுவர்கள், வயோதிகர்கள் வரை யாரானாலும் சில நல்ல கருத்துக்களை ராமாயணத்திலிருந்து கற்கலாம். இந்நூலில் வாழ்க்கைத் தத்துவம் அடங்கியுள்ளது. ஆன்மீக நோக்கில் இதில் ஒரு ஆழமான உண்மை அடங்கியிருக்கிறது.
ராம தியானம் மகாத்மா காந்திக்கு மிகவும் பிரியமாக இருந்தது. “என்னிடமிருந்து நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ராமனை என்னிடமிருந்து பிரித்தால் நான் உயிரோடு இருக்க முடியாது” என்று காந்தி சொன்னார். காந்திஜி துப்பாக்கிக் குண்டு பட்டு உயிர் துறக்கும் சமயத்தில் கடைசியாகச் சொன்ன வார்த்தை “ஹே ராமா” என்பது தான். “ராமா” என்னும் மந்திரம் மணிபுர (நாபி) சக்கரத்தோடு தொடர்பு கொண்டது.

ராமாயணத்திலிருந்து உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். சொல்லப் போனால் இரண்டு கதைகள் இதில் அடங்கும். ராமர் இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டிய போது, பல வானரர்கள் அவருக்கு பாலம் அமைக்க உதவினார்கள். வானரர்கள் (குரங்குகள்) பாறைகளைத் தூக்கி அதில் “ஶ்ரீ ராமா” என்று எழுதி நீரில் போட்ட போது அப்பாறைகள் நீரில் மிதந்தன என்கிறார்கள். ஆன்மீக ரீதியில்  இதற்கான விளக்கம் வருமாறு. பகவானின் நாமம் உன்னோடு இருக்கும் போது சமுதாயத்தில் ஏற்படும் வெள்ளங்களிலிருந்து நீ மீளலாம். எப்படிப்பட்ட துக்ககரமான சம்பவமும் உன்னை மூழ்கடிக்காது.

குரங்குகள் “ஶ்ரீ ராமா” என்று எழுதி நீரில் போட்ட பாறைகள் எல்லாம் மிதந்ததைப் பார்த்து ராமர் ஆச்சரியம் அடைந்தார். கற்கள் எப்படி மிதக்கின்றன என்று வியந்தார். அவர் ஒரு பாறையில் “ஶ்ரீ ராமா” என்று எழுதி நீரில் போட்டபோது அது மிதக்காமல் நீரில் மூழ்கியது.ராமருக்கு ஆச்சரியமாக இருந்தது. ராமர் இப்படிச் செய்வதை ஒரு குரங்கு பார்த்துக் கொண்டிருந்தது. ராமர் யாரும் பார்க்காத இடத்தில் கற்களில் பெயர் எழுதி நீரில் போடுவதாக நினைத்தார். (யாருமே பார்க்க வில்லை என்று நாம் நினைத்தாலும் யாரோ அதைப் பார்க்கிறார்கள்). ராமர் இப்படிச் செய்ததைப் பார்த்த குரங்கு சிரித்தது. அக்குரங்கு ராமரைப் பார்த்துச் சொன்னது. “நீ யாரையாவது தூக்கி எறிந்தால் அவர்கள் எப்படி மிதக்க முடியும்? அவர்கள் கட்டாயம் மூழ்கி விடுவார்கள். இக்கதை பக்தர்கள் பகவானை விட சிறந்தவர்கள்,பலசாலிகள் பகவானை விட சிறந்த காரியங்களை செய்ய வல்லவர்கள் என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டது. இது தான் இக்கதையின் கருத்து.

இப்படி நடக்கும் போது ஒரு சிறிய அணில் அங்குமிங்கும் போய் வந்தது. சிறிய கூழாங்கற்களை உடலால் தள்ளி நீரில் போட்ட வண்ணம் இருந்தது. இந்தச் சிறிய அணிலால் இப்படிப்பட்ட பெரிய பாலம் கட்ட என்ன உதவி கிடைக்கப் போகிறது என்று அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள். பெரிய காரியத்தில் உன் பங்கு மிகவும் சிறிது என்ற ஏளனம் அவர்கள் பார்வையில் இருந்தது. அணில் அவர்களைப் பார்த்து, “நான் என் மகிழ்ச்சிக்காக இக்காரியத்தைச் செய்கிறேன். ஶ்ரீராமர் கட்டும் இப்பாலத்தில் என்னால் முடிந்த அளவு காரியம் செய்வது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று சொல்லியது. இந்தியாவில் இன்றும் “அணிலின் பங்கு” என்ற இக்கதை போற்றப்படுகிறது. இது பணிவுக்கு அடையாளமாகக் கருதப்படுகிறது. சிறிய காரியமானாலும், நம் பங்கு ஒரு பெரிய நோக்கத்தை அடைய உதவுகிறது என்ற எண்ணம் நம்மைப் பெருமைப் படுத்தும். மனம் மகிழ்ந்து திருப்தி அடைவோம். இப்படித் தான் ஒரு சிறிய அணிலும் சிறு சிறு கற்களைத் தள்ளி ஶ்ரீராமரின் பாலம் கட்டுவதில் பங்கெடுத்துக் கொண்டது.

இக் கதையிலிருந்து பக்தர்கள் ஶ்ரீராமரை விட சக்தி படைத்தவர்கள் என்பது விளங்கும். உன் இதயம் அன்பு மற்றும் கருணையால் நிரம்பி இருக்கும் போது நீ சக்தி வாய்ந்தவனாக ஆகலாம். உன்னை எப்போதும் தாழ்வாக மதிப்பிட வேண்டாம். வாழும் கலையில் இப்படி ஒரு சம்பவம் கடந்த அக்டோபர் மாதத்தில் நிகழ்ந்தது. உங்களுக்குச் செல்போன் கதை தெரியுமா? நான் ஒரு கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த கிராமத்தில் 2000 இளைஞர்கள் பல ஆண்டுகளாக சேவையில் ஈடு பட்டிருந்தார்கள். என்னோடு வந்தவரிடம் 3 புதிய செல் போன்களை எடுத்துக் கொள்ளச் சொன்னேன். நான் அந்தக் கிராமத்துக்குச் சென்ற பின் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “உங்களில் எத்தனை பேருக்கு செல் போன் காணாமல் போனது?” என்று கேட்டேன். மூன்று பேர்கள் எழுந்து நின்றார்கள். அவர்கள் பல கிராமங்களில் சென்று சேவை புரிகிறார்கள். அவர்களுக்கு செல்போன் ஒரு விலை உயர்ந்த சாதனமாகும். ஒரு செல் போனின் விலை அவர்களுடைய ஒன்று அல்லது இரண்டு மாத சம்பளத்துக்கு ஈடாகும். செல் போன் தொலைந்து போனதால் மிக வருத்தத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு நான் 3 புதிய செல் போன்களை கொடுக்கச் சொன்னேன். இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சி.

ஒரு இளைஞன் எழுந்து நின்று மேடைக்கு வந்து தன் அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவதாகச் சொன்னான் அவன் வாழும் கலை இரண்டாம் நிலைப் பயிற்சியில் இருந்த போது வீட்டிலிருந்த தன் மனைவியிடம் பேச வேண்டியிருந்தது. அவனுடைய செல்போன் பாட்டரியில் சார்ஜ் இல்லை. சார்ஜரை வீட்டில் மறந்து விட்டு விட்டு வந்திருந்தான். அவன் செல்போனை என் படத்துக்கு முன் வைத்து, “குருதேவா! என் செல்போன் பாட்டரி சார்ஜ் செய்ய உதவுங்கள்” என்று வேண்டினானாம். அடுத்த நாள் காலையில் எழுந்தபோது பாட்டரி முழுதும் சார்ஜ் ஆகி இருந்ததாம்.
அந்த இளைஞன் தன் செல்போனை என்னிடம் காட்டி, “பாருங்கள்! கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் சார்ஜரை உபயோகிப்பதில்லை.. உங்கள் படத்துக்கு முன் செல்போனை வைத்தாலே சார்ஜ் ஆகி விடுகிறது” என்றான். அவன் தன் சார்ஜரைத் தூக்கி எறிந்து விட்டதாகவும் சொன்னான். நான் சொன்னேன். “என் செல்போனை சார்ஜ் செய்ய எனக்கு சார்ஜர் தேவைப்படுகிறது. என் கையில் வைத்திருந்தாலோ அல்லது என் படத்தின் முன் வைத்தாலோ, அது சார்ஜ் ஆவதில்லை.” அந்த கிராமத்து இளைஞனோ ஒன்றரை ஆண்டுகளாக சார்ஜரை உபயோகிக்கவில்லை. என் படத்தின் முன் வைத்து சார்ஜ் செய்வதாகச் சொன்னான். எல்லோருக்கும் தன் செல்போனை காட்டினான். அதில் சார்ஜ் முழுவதுமாக இருந்தது.இந்த நிகழ்ச்சி மிகவும் ஆச்சரியம் அளித்ததால், நான் பெங்களூர் ஆசிரமம் வந்த பின், 150 வெளிநாட்டவர் அடங்கிய குழுவில் இதைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் ரஷ்யா மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலிரூந்து வந்திருந்தனர். அவர்களிடம், “பாருங்கள் ! ஒரூ பக்தனின் சக்தி எப்படிப்பட்ட காரியத்தை நிகழ்த்துகிறது” என்று சொன்னேன்.

அவர்களில் பலர், “இதில் என்ன அதிசயம்? இப்படிப்பட்ட அனுபவம் எங்களுக்கும் உண்டு” என்று சொன்னார்கள். நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ரஷ்யா நாடுகளிலிருந்து வந்திருந்த பலர், இப்படி எங்களுக்கும் நடந்திருக்கிறது என்றார்கள். இப்படிப்பட்ட அதிசயங்கள் பல நிகழ்கின்றன. எல்லோருக்கும் இதில் அனுபவம் இருக்கிறது. நாம் தேடி அலைவதில்லை. தானாகவே நிகழ்கின்றன. இன்னொரு நிகழ்ச்சியைப் பற்றி உங்களுக்கு சொல்கிறேன்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று “சாதுக்கள், குருக்கள் எல்லாம் ஏமாற்றுக்காரர்கள். அவர்களை நம்ப வேண்டாம்” என்று சொல்வார். இந்தத் தலைவரின் மகன் நான் சென்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் இருந்தான். படத்தின் முன் செல்போன் சார்ஜ் செய்யும் இளைஞனின் அனுபவத்தை அவனும் கேட்டான்.

கடந்த பிப்ரவரியில் மூடநம்பிக்கை ஒழிப்பு குழுவின் தலைவருடைய  கணினி (கம்ப்யூடர்) பழுதாகி விட்டது. வேலை செய்யவில்லை. அது 30000 ரூபாய் கொடுத்து வாங்கியது. அவர் மிகவும் வருத்தத்தில் இருந்த போது, அவர் மகன் அவரிடம், “ஏன் இதை குருஜியின் படத்துக்கு முன் வைக்கக் கூடாது?” என்று சொன்னான். அந்த கணினியை என் படத்தின் முன் 2 நாட்கள் வைத்திருந்தும் அது சரியாக இயங்கவில்லை. “பார் ! நான் சொல்ல வில்லையா? இதெல்லாம் மூடத்தனம். பயன் ஒன்றும் இல்லை” என்று தந்தை மகனிடம் சொன்னார். மகன் “நீங்கள் குருதேவரிடம் வேண்டிக் கேட்கவில்லை. நம்பிக்கையோடு கேட்க வேண்டும்” என்று சொன்னான். தந்தை அதற்கு ஒத்துக் கொண்டார். மகன் சொன்னதால் அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் கணினி சரியாக இயங்கத் துவங்கியது. இப்போது தந்தைக்கு என்ன செய்வது என்று புரிய வில்லை.“நான் மூட நம்பிக்கையை ஒழிக்கும் குழுவின் தலைவன்.இப்படி ஒரு ஆச்சரியமான அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.” என்றார்.

இந் நிகழ்ச்சியிலிருந்து அறிய வேண்டியது இது தான். வாழ்க்கை நம் விருப்பப்படி செல்லும் என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு க்ஷணத்திலும் அதிசயம் நிகழ்கிறது. ஒவ்வொரு க்ஷணத்திலும் இறை அருள் நமக்குக் கிடைக்கிறது. புதிது புதிதாக கிடைக்கிறது. நாம் விரும்பாதது நிகழ்ந்தாலும், அந்த நேரத்தில் நாம் வருத்தம் அடைந்தாலும் நீண்ட கால நோக்கில் அந்த நிகழ்ச்சியால் ஏதோ நன்மை வந்தடையும்.

ஒரு பொருளின் லாப நஷ்டத்தில் சிக்க வேண்டாம். பௌதீக விதிகள் இருக்கின்றன. பொருள்களின் குணங்களும் இருக்கின்றன. இவைகளை மீறிய சக்தி ஒன்று இவ்வுலகை இயக்குகிறது. நாம் நேரில் காணும் அனுபவிக்கும் இவ்வுலக நிகழ்சிகளை, பெயர்களை, உருவங்களை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. சூட்சுமமான ஆத்மாவை அறிவது, பொருட்களை கட்டுப்படுத்தும் சக்தியுடைய மனத்தைப் பற்றி அறிவது, நாம் காணும் உலகை மிஞ்சிய நம் ஆத்ம சக்தியை உணர்வது நமது நோக்கமாக இருக்க வேண்டும். உங்கள் அன்பை, நம்பிக்கையை, சக்தியைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். நாம் நம் இதயத்தைத் தூய்மையாக வைக்க வேண்டும்.