மகாத்மா காந்தியைப் பற்றி இதுவரை பதிப்பிக்கப்படாத கதைகள்


3 ஏப்ரல் 2013 அட்லாண்டா, ஜியார்ஜியா. காந்தி - கிங் - இகேடா பரிசு வழங்கும் நிகழ்ச்சி

சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் கிடைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு குழந்தையைப் போல் உணர்கிறேன். இன்று பரிசுகளுக்கான தினம்.

“நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையே இறைவன் தந்த பரிசு” என்று சொல்வது வழக்கம். இந்தப் பரிசைப் போற்றுவோம். இப்பரிசுகளைப் பெற நான் தகுதி வாய்ந்தவன் என்று கருதி எனக்குப் பரிசுகளைத் தந்த மோர்ஹவுஸ் கல்லூரி, அதன் கல்வி முதல்வர், கல்லூரித் தலைவர் மற்றும் இங்கு குழுமியிருக்கும் பெரியோர்களுக்கு இன்று என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் இடத்திலிருந்து வெளியே தெரியாமல் சமூகத்தின் அமைதிக்காக, வன்முறையை ஒழிப்பதற்காக, கடினமாக உழைத்தவர்களுக்கு இப்பரிசுகளை வழங்க விரும்புகிறேன். அமைதி மற்றும் வன்முறையற்ற சமுதாயம் உருவாக பாடுபட்டவர்களுக்கு, இந்த பரிசை அளித்து கௌரவிப்பது, அமைதி மற்றும் வன்முறையற்ற நீதிநெறி வழுவா சமுதாயம் உருவாக ஏதுவாயிருக்கும் போர் வீரர்களை கௌரவிப்பதற்காக பதக்கம் அளிப்பது வழக்கம். ஆனால் இங்கு அமைதி மற்றும் வன்முறையற்ற சமுதாயம் உருவாக உழைப்பவர்களுக்கு பதக்கம் வழங்குவதால், மிக பெரிய அளவில் சமுதாய மாற்றம் ஏற்பட வழிவகுக்கும்.

துரதிஷ்டவசமாக, கடந்த பல ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள், அகங்காரமாக இருப்பவர்கள் அப்படி இருப்பது தான் கௌரவம் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையிலிருந்து திசை திரும்புவதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது.

வன்முறையற்ற, அமைதி விரும்புபவர்களுக்கு சமூகத்தில் கௌரவமான இடம் அளிக்க வேண்டும். நாம் வளர்ந்து வரும் பருவத்தில் மகாத்மா காந்தியின் வாழ்வில் நிகழ்ந்தவைகளை கதைகளாக்கி போதிப்பது வழக்கம். என் ஆசிரியரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் இன்றும் உயிரோடு இருக்கிறார். அவருக்கு 118 வயது. அவர் மகாத்மா காந்திக்கு பகவத்கீதையைப் போதித்தவர்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின் அவரோடு ஆசிரியர் 40 ஆண்டுகள் உடனிருந்தார். அவர் மகாத்மாவின் பேச்சுக்களை எழுதி, தென் இந்திய மொழிகளில் மொழி பெயர்த்தார். 



அவர் பெயர் பண்டிட் சுதாகர் சதுர்வேதி. அவர் மகாத்மாவுடன் இருந்த போது நடந்த நிகழ்ச்சிகளை எங்களுக்குக் கதை போல் சொல்வார். அவற்றில் சில கதைகள்,இதுவரை எழுதப்படவில்லை. அவற்றிலிருந்து சில கதைகளை உங்களுக்கு சொல்லி ஊக்குவிக்க விரும்புகிறேன்.

ஒரு சமயம் மகாத்மா காந்தி ரயிலில், டார்ஜிலிங் சென்று கொண்டிருந்தார். டார்ஜிலிங் இந்தியாவில் உள்ள ஒரு மலை பிரதேசம். சிறிய ரயில் மலையடிவாரத்திலிருந்து மலையுச்சியில் உள்ள டார்ஜிலிங் நகரத்துக்குச் செல்கிறது. தண்டவாளத்திற்கு இடையில் உள்ள தூரம் மற்ற ரயில் பாதைகளை விட குறுகியதாக இருக்கும். ரயில் மலைப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, இஞ்சினுக்கும் மற்ற பெட்டிகளுக்கும் இடையே உள்ள இணைப்பு உடைந்து இஞ்சின் மட்டும் மேலே செல்ல, மற்ற ரயில் பெட்டிகள் கீழ் நோக்கி ஓட ஆரம்பித்தன.

மலைப் பாதையில் ரயில் பெட்டிகள் கீழ் நோக்கி, கட்டுப்பாடு இல்லாமல் ஓடினால் என்ன ஆகும் என்று கற்பனையில் பாருங்கள். ரயிலில் பிரயாணம் செய்த மக்கள் மிகவும் பீதி அடைந்தார்கள். மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். ரயில் பெட்டிகள் பக்கத்திலிருந்த பள்ளத் தாக்கில் விழுவதற்கான வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்தால் ஒரு எலும்பு கூட முழுதாகக் கிடைக்காது. அது இமயமலையின் ஒரு பகுதி. \சுற்றிலும் அப்படிக் கலவரமான நிலை இருந்தபோது மகாத்மா காந்தி அனுப்ப வேண்டிய கடிதங்களுக்கான விஷயத்தை என் ஆசிரியருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆசிரியரை அவர் பெங்களூரி என்று அழைப்பது வழக்கம். ஏனென்றால் அவர் பெங்களூரிலிருந்து வந்தவர்.

என் ஆசிரியர் மகாத்மாவிடம், “பாபு! இப்போது என்ன நடக்கிறது என்று  தெரியுமா? நாம் உயிர் பிழைப்பதே நிச்சயமில்லை. நாம் மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருக்கிறோம். ரயில் பெட்டிகள் கட்டுப்பாடில்லாமல் பின் நோக்கி மிக வேகமாக ஓடுகின்றன” என்று சொன்னார். அதற்கு மகாத்மா என்ன சொன்னார் என்று தெரியுமா? “நாம் பிழைத்து விடுவோம் என்றால் இவ்வளவு நேரத்தை வீணடித்திருப்போம் அல்லவா? நான் இறந்து விடுவோம் என்றால் ஒன்றும் இல்லை. இறந்து விடுவோம். ஆனால் பிழைத்துக் கொண்டால் எவ்வளவு நேரம் வீணாகி விடும். வா! கடிதங்களை நான் சொல்லச் சொல்ல எழுது” என்றாராம்.
நடுங்கும் கரங்களுடன் என் ஆசிரியர் அவர் சொல்லச் சொல்ல எழுதினாராம். “பார்! இந்த வயதான மனிதர் (மகாத்மா காந்தி) ஒரு க்ஷணத்தைக் கூட வீணடிக்க மாட்டார்” என்று என் ஆசிரியர் என்னிடம் சொல்வார்.

மற்றொரு கதையையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒரு முறை காந்தி உடுத்தியிருந்த வேட்டி கிழிந்திருந்தது. அதைப் பார்த்த ஒருவர், “பாபு! உங்கள் வேட்டி கிழிந்திருக்கிறது” என்று சொன்னாராம். காந்தி குளியல் அறைக்குச் சென்று, கிழிசல் வெளியே தெரியாமல் வேட்டியை உடுத்திக் கொண்டு வந்தாராம். “பார்! எங்கே கிழிந்திருக்கிறது? இந்த வேட்டியில் கிழிய இன்னும் நிறைய இடமிருக்கிறது” என்றாராம்.

மகாத்மாவின் கருத்துப்படி எந்தப் பொருளையும் வீணடிக்காமல் கடைசி வரை உபயோகிக்க வேண்டும்.. இயற்கையாக எதையும் உபயோகிக்காமல் தூக்கிப் போட அவருக்குப் பிடிக்காது.
அவர் சொல்லும் செய்தி. “இவ்வுலகில் அனைவருக்கும் தேவையான அளவு எல்லாப் பொருட்களும் கிடைக்கும். ஆனால் பேராசைப்படுபவர்களுக்கு உலகில் பொருள்கள் எவ்வளவு இருந்தாலும் போதாது.”

காந்தியின் இதயம் ஒரு குழந்தையுடைய இதயம் போல் மென்மையானது.அவர் ஒரு கபடமில்லாத குழந்தையைப் போலிருந்தார். மகாத்மா காந்தியைப் போல் கபடமில்லாத, தீரம் மிகுந்த, சக்தி வாய்ந்த, எடுத்த காரியத்தை முடிக்கும் மனம் கொண்டவர்களும், மார்டின் லூதர் கிங் போல பரந்த கண்ணோட்டம் உடையவர்களும் இன்று நமக்குத் தேவை.

இன்று நம் சமுதாயம் இருக்கும் நிலைக்கு, மேற்சொன்ன குணங்களுடைய தலைவர்கள் மிக அவசியம். காந்தியின் கொள்கைகள் இன்றைய கால கட்டத்தில் முழுமையாக செயல் படாது. இன்று நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால், இதனால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? உலகுக்கு இதனால் நன்மை கிடைத்தால் கிடைக்கட்டும்” என்று சொல்வார்கள்.

எடுத்த காரியத்தை முடிக்கும் திடமான நெஞ்சோடு மார்டின் லூதர் கிங் போன்ற ஒருவரால் உலகுக்கு வழிகாட்ட முடியும். அப்போது தான் சமுதாயத்தில் எல்லோருக்கும் நீதி கிடைக்கும். இப்படிப்பட்ட புரட்சி உலகுக்கு மிகவும் அவசியம். புரட்சியை இன்றைய இளைஞர்களால் தான் கொண்டு வரமுடியும். இங்கு இருக்கும் அனைவரும் வன்முறையை அழிக்க முன்வர வேண்டும்.
அமெரிக்காவில் சென்ற ஆண்டு ஒரு கோடி வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. குழந்தைகளிடம், பெண்களிடம் பலாத்காரம், இனவெறிச் சம்பவங்கள், பிற மதத்தை சேர்ந்தவர்களிடையே வன்முறை முதலிய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. அனால் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உண்மையும் அஹிம்சையும் கட்டாயமாக வெற்றி அடையும்.

நாம் கோடிக்கணக்கான நற்காரியங்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு வன்முறைச் சம்பவங்களுக்கும் நாம் நூறு  நற்காரியங்கள் செய்ய வேண்டும். அஹிம்சையின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இதுதான் நமக்குத் தேவை.

இன்று நாம் எல்லோரும் சேர்ந்து இங்கு பாடினோம். “இவ்வுலகை நாம் எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ, அதை அடைவதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம்.” எனவே மாற்றம் இங்கிருந்து துவங்குகிறது. நம் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
மகாத்மா காந்தியைப் பற்றி, மற்றும் ஒரு நிகழ்ச்சியை என் ஆசிரியர் சொன்னார். அப்போது என் ஆசிரியர் மகாத்மாவோடு எரவாடா சிறையில் இருந்தார். அங்கு, மகாத்மாவோடு அவர் மனைவி கஸ்தூரிபாய் காந்தியும், என் ஆசிரியரும் (மூவர்) மட்டுமே இருந்தார்கள். அன்று கஸ்தூரிபாய் தன் மரணப் படுக்கையில் இருந்தார். அன்று கஸ்தூரி பாயின் வாழ்க்கையில் கடைசி நாள். மகாத்மா அறையை விட்டு வெளியே வந்து “பெங்களூரி, இன்றைய தினம் எனக்கு சோதனை நாள். இன்று நான் எப்படி சமநிலையில் இருப்பது என்று பார்க்க வேண்டும். எல்லோரையும் ஒன்று போல் நினைக்கிறேனா என்று எனக்கு ஒரு சோதனை நாள்” என்றாராம். இதை சொல்லும் போது மகாத்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்ததாம். நான் மகாத்மாவை அந்த நிலையில் எப்போதுமே பார்த்ததில்லை. அவருடைய கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் எல்லாவற்றையும் உணர்த்தியது.
“இன்று என் நாற்பது வருட துணைவிக்கு விடை கொடுக்க வேண்டும். அவள் தான் என் சக்தியாக, என்னை ஊக்குவிப்பவளாக, எல்லா துக்கங்களையும் தாங்குபவளாக, என் குற்றம் குறைகளை ஏற்று எனக்கு எப்போதுமே துணையாக நின்றவள். இன்று நான் என்னை சமநிலையில் வைக்கவேண்டும். என் ஆத்மபலத்துக்கு இன்று சோதனை வந்திருக்கிறது.” என்று மகாத்மா சொன்னார். வாழ்வில் இப்படிப் பட்ட நேரங்களில் நீ உன்னை உற்றுப்பார்த்துப் புரிந்து கொண்டால், உன்னுள் என்ன நடக்கிறது என்று உணர்ந்தால், உன் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படும்.

யார் நீ? உனக்கு என்ன வேண்டும்? நீ என்ன தெரிவிக்க விரும்புகிறாய்? இதைக் கவனித்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.

பள்ளியிலோ, வீட்டிலோ உங்களின் எதிர்மறை உணர்ச்சிகளை தவிர்க்க கற்றுக் கொடுப்பதில்லை. சமநிலையில்  இருப்பது எப்படி? எல்லோரையும் தன்னுடையவராக பாவிப்பது எப்படி? என்று நாம் கற்றுக் கொள்ளவில்லை. இன்றைய தேவை இதுதான். நாம் நம்முடைய குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வந்து சமூகத்தில் உள்ள அனைவரையும் நம்முடையவராகப் பார்க்க வேண்டும். (அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.)

மனித சமுதாயம் தனித் தனிக் குழுக்களாக இயங்க முடியாது. ஒவ்வொரு இனத்தவரும் மற்ற இனத்தவரோடு கலந்து உறவாட வேண்டும். பல நாடுகளில் நற்காரியங்கள் செய்யும் இகேடா அமைப்பு இங்கும் செயல்படுகிறது என்று அறிந்தேன். பல இனத்தவர்களை ஒன்று சேர்ப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

புத்தரின் அறிவுரைகள், ஏசு கிறிஸ்து, கிருஷ்ண பரமாத்மாவின் அறிவுரைகள் எல்லாமே ஒன்றையே குறிக்கின்றன. நாம் அனைவரும் அன்பால் உருவாக்கப்பட்டிருக்கிறோம். நம் இயல்பே அன்பு தான். நாம் ஒருவரோடு ஒருவர் அன்போடு வாழ்வோம். அன்பை வெளிப்படுத்துவோம். நம்முள் இருக்கும் அன்பான ஆத்மாவை உணர்வோம்.

“நீ அன்பானவன்.அன்பே கடவுள்” என்று ஏசு கிறிஸ்து சொன்னார். இன்றைய சூழ்நிலையில், மதங்களையும், மதங்களின் உட்பிரிவுகளையும் ஒருங்கிணைக்கும் இயக்கங்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. உட்பிரிவுச் சண்டைகளால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அணுகி அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டியது அவசியம்.வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகளும், சமூகத்தில் நடக்கும் வன்முறைகளும் இதில் அடங்கும். சிலர் தன் மீதே நடத்திக் கொள்ளும் (தன்னையே தண்டித்துக் கொள்ளும்) வன்முறையையும் கவனிக்க வேண்டும். உலகில் ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மனச்சிதைவு காரணமாக பெரிய அளவில் மக்கள் இப்படிப்பட்ட காரியம் செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் சேர்ந்து அஹிம்சை வழியில் நடக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன் தென்அமெரிக்காவில், மெக்ஸிகோ நாட்டுக்கு நான் சென்றிருந்த போது நடந்த சம்பவம் இது. இரண்டு டாக்ஸி ஓட்டுனர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்து ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்தனர். அவர்களுடைய டாக்ஸியில் வந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இரண்டு ஓட்டுனர்களும் இறந்துவிட்டார்கள். சகிப்பு தன்மை, விட்டுக் கொடுக்கும் மனம் இல்லாமையால், மன அழுத்தத்தோடு செயல்பட்டதால் ஏற்பட்ட விளைவு இது.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கோடிக்கணக்கான நற்செயல்கள் செய்து, ஒருவரோடு ஒருவர் நட்பாக இருந்து, கருணையோடு காரியம் செய்ய வேண்டும். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான உலகை மேலும் சிறப்பாக மாற்றி நம் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.