பேச்சு அவசியம் இல்லை

23 ஏப்ரல் 2013 - டோக்யோ, ஜப்பான்      




நாம் அனைவரும் இவ்வுலகின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் ஜப்பான் நாட்டில் மகிழ்ச்சி அலைகளை உருவாக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந் நாட்டின் இளைஞர்களை வெற்றி அடையச் செய்ய வேண்டும். 

நான் எங்கு சென்றாலும் ஜப்பானியர்களிடமிருந்து, ஒரே குழுவாகச் செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் சொல்லி வருகிறேன். நிலப் பரப்பில் ஜப்பான் மிகச் சிறிய நாடு. ஆனால் உலக அளவில் மிகப்  பெருமை பெற்ற நாடாக ஜப்பான் இருக்கிறது. இதன் காரணம் நீங்கள் இங்கு உற்பத்தி செய்யும் பொருள்களின் தரம்,மக்களின் அயராத உழைப்பு மற்றும் இந்த நாட்டின் கலாசாரம் என்பவையாகும். உங்களின் கலாசாரம் காரணமாக ஜப்பான் இன்று உலக அளவில் ஒளி விடும் ப்ரகாசமான நட்சத்திரம் என்று போற்றப்படுகிறது.

இன்றைய நாகரீக வளர்ச்சியில், ஒரு நாட்டின் இளைஞர்கள், அந்த நாட்டின் கலாசாரத்தை இழந்து விட வாய்ப்பிருக்கிறது. அவர்கள் மேலை நாடுகளின் கலாசாரத்தை பின்பற்ற விரும்புகிறார்கள். “நம் கலாசாரத்தைப் பின்பற்றுவது அவசியம். அதே சமயம் மற்ற கலாசாரங்களில் இருக்கும் நல்ல கருத்துக்களை ஏற்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும்” என்று நான் சொல்வேன். இன்று காலை நான் ஒரு ஷிண்டோ கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு நடந்த பிரார்த்தனை முறைகள் மிக அழகாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு பழங்கால வேதப்படி நடக்கும் பிரார்த்தனைகள் நினைவுக்கு வந்தது. இரண்டிலும் நிறைய ஒற்றுமை இருப்பதை கண்டேன். 

நீண்ட காலமாக வேர் விட்டு வளர்ந்திருக்கும் நம் கலாசாரத்தை மறக்க கூடாது. அதே சமயம் நல்ல கருத்துக்கள் உலகின் எந்தப் பகுதியிலிருந்து வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜப்பான் நாடு இதைப் பின்பற்றுகிறது.ஷிண்டோ கலாசாரத்தை மறக்காமல் பின்பற்றுகிறது. அதே சமயம் இந்தியாவிலிருந்து, புத்த மத கருத்துக்களையும் ஏற்று ஜென் புத்த மதத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழைநாடுகளில் தீவிர மதவாதம் என்றும் இருந்ததில்லை.பரந்த மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறோம். நம் கலாசாரத்தையும் மறக்காமல் பின்பற்றுகிறோம்.

புத்த மதம் கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன், ஏழாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டுக்கு வந்தது என்று நினைக்கிறேன். தியானம் செய்வது உலகம் முழுதும் பரவியிருந்தது. ஷிண்டோ கோவிலில் உள்ள இரண்டு சிங்கங்களைப் பற்றிக் கேட்டு மகிழ்ந்தேன். ஒரு சிங்கம் “ஆ” என்று சொல்கிறது.மற்றொரு சிங்கம் “ம்” என்று சொல்கிறது. ஒன்று துவங்குகிறது. மற்றொன்று முடிக்கிறது. இது தான் “ஓம்” என்ற சொல். “ஓம்” என்பது மிகப் புராதனமான ஒலியாகும். கீழ் திசை நாடுகள் அனைத்திலும் “ஓம்” என்ற ஒலி ப்ரபஞ்சம் தோன்றியபோது எழுந்த ஒலியாக நம்புகிறார்கள். மேற்கத்திய நாடுகளிலும், கிட்டத்தட்ட அதே போல் ஒலிக்கும் “ஆமென்”, “அமீன்” என்ற ஒலிகள் பழக்கத்தில் உள்ளன. “ஓம்” என்ற சொல் உலகின் எல்லா கலாசாரங்களிலும் உள்ளது. இது உலகத்துக்குப் பொதுவான ஒலியாகும்.இந்த உலகம் அனைத்திலும் உள்ள மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பது என் கனவாகும். ஒவ்வொருவர் முகத்திலும் நான் புன்னகையைக் காண விரும்புகிறேன்.

மெட்ரோ ரயிலின் முன் குதித்து பலர் தற்கொலை செய்து கொள்வதாகக் கேள்விப் பட்டேன். இப்போது ரயில் வருவதற்கு முன் ரயில் பாதையின் அருகில் செல்லத் தடுப்பு வைப்பது அவசியமாகிறது. நல்லது தான். ஆனால் சிறந்த வழி அல்ல. இப்போதும் சிலர் தடுப்பைத் தாண்டிக் குதிக்க முடியும். மக்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க, தடுப்பு வேலி வைப்பது மட்டும் போதாது. அப்படிப் பட்டவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு தியானப் பயிற்சி அளிப்பது நல்லது. வாழும் கலை அமைப்பில், எளிய தியான முறைகள் பல இருக்கின்றன. இதைப் பயின்று தியானம் செய்யும் மக்கள் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு இழந்த புன்னகையை திரும்ப அடைகிறார்கள். நான் மனித சமுதாயத்தின் அனைவரின் முகத்திலும் புன்னகையைக் காண விரும்புகிறேன். நாம் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சி அலைகளை உருவாக்குவோம். பார்வையாளர்கள் அனைவரும் கர ஒலி எழுப்பி “ஆம்” என்று சொல்லி, உறுதி மொழி அளிக்கிறார்கள்.

ஒவ்வொருவர் முகத்திலும் புன்முறுவலைக் கொண்டு வருவோம். நாம் இதற்காக வேலை செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் மக்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டு வர முடியும். பணத்தால் இதைச் செய்ய முடியாது. நாம் இயல்பாக, உபசாரமின்றி எல்லோருடனும் கலந்து பழக வேண்டும். மிகவும் அவசியம். 

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து, ஒரு மணி நேரம் மற்றவர்களோடு அமர்ந்து பழக வேண்டும். பாட்டுப் பாடலாம். சிற்றுண்டிகளைப் பறிமாறிக் கொள்ளலாம். குழுக்களில் அமர்ந்து பாடலாம். பத்து பதினைந்து நிமிடங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தியானம் செய்யலாம். யோக சாதனைகளில் ஈடு படலாம். எல்லோரும் சேர்ந்து உணவருந்தலாம்.45 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். ஒவ்வொரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இப்படிச் செய்தால் அங்கு மகிழ்ச்சி அலைகள் பெருகும். ஒருவருக்கொருவர் சார்ந்தவர் என்ற உணர்ச்சி அதிகரிக்கும். என்ன சொல்கிறீர்கள்? சில நகைச்சுவைச் சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். நம்முள் பெரிய இடம் இருக்கிறது. நம் உள்ளுணர்ச்சிகள், கலை மற்றும் விஞ்ஞானத் திறமைகள் இங்கிருந்து தான் வெளிப்படுகின்றன.

இன்று மகாவீரரின் பிறந்த தினம். மகாவீரரும் புத்தரைப் போன்ற ஞானியாவார். புத்தரின் பிறந்த தினமும் வரப்போகிறது. (புத்த பௌர்ணமி). மகாவீரர் அஹிம்சையை மக்களுக்கு உபதேசித்தவர். ஜைன மதத்தைத் துவங்கியவர்.அவர் “அநேகாந்தவாதம்” என்று சொன்னார். (முக்தி அடைய) எத்தனையோ வாய்ப்புக்கள் உள்ளன என்று அதன் பொருள். இந்த உலகம் நமக்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது. இன்றைய மக்கள் மகாவீரர் சொன்னதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி நடந்தால் உலகில் வன்முறை (பயங்கரவாதம்) என்பதே இருக்காது. மதத்தின் பேரில் தீவிரவாதம் செய்பவர்கள் இருக்க மாட்டார்கள்.

எனக்குத் தெரிந்தவரை புத்தரும் மகாவீரரும் ஒரே நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்திருந்த போதிலும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. யாரோ அவர்களைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது, “அதற்கு அவசியம் இல்லை. நாங்கள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்திருக்கிறோம்” என்று பதில் கூறினார்கள். பரம ஞானிகளின் வழி தனித்தனியாக இருந்த போதிலும், அவர்களின் ஆத்மா ஒன்றாகவே இருக்கிறது. அதில் இடைவெளி கிடையாது.

சரித்திரப்படி அவர்கள் சந்தித்ததாகவும் சொல்வார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை என்கிறார்கள். அவர்கள் சந்தித்த பின் தங்கள் வழியே சென்றார்கள். பேசிக் கொள்ளும் அவசியம் அவர்களுக்கு இல்லை. இதயத்தோடு இதயம் இணைந்தபின், ஆத்மா ஒன்று சேர்ந்த பின் பேச அவசியம் இல்லை. இதயம் இணைந்த பின் நடுவில் சுவர் கிடையாது. மொழிக்கான தடையும் இல்லை. வார்த்தைகள் எதுவுமே இடையில் வராது. இருவர் தங்கள் அறிவோடு பேசும் போது, ஒரே விஷயத்தைப் பேசினாலும், ஏதோ சண்டையிட்டுக் கொள்வது போலிருக்கும்.

மாணவர்கள் அனைவரும் தங்கள் பாடத்தில் சிறந்து விளங்கவும், அவர்களின் ப்ரகாசமான எதிர்காலத்துக்காகவும் வாழ்த்துகிறேன். நீங்கள் நல்ல அரசியல்வாதியாக, நேர்மையான வர்த்தகராக, நல்ல கல்வியாளராக, நல்ல மருத்துவராக, நல்ல பொறியாளராக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆன்மீக சாதனைகளின் அடிப்படையில் உங்கள் பார்வை விரிந்து உங்களுக்கு மகிழ்ச்சி பெருகட்டும். யாருமே அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையும், முகமலர்ச்சியும் உங்களிடம் நிலவட்டும். உங்களுக்கு வழிகாட்ட பல பெரியோர்கள் இங்கு இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான்.

வாழ்க்கையில் எதுவுமே உங்களை நடுநிலையிலிருந்து அசைக்க முடியாதபடி, உங்களை வருத்தாதபடி, உங்களுடைய முக மலர்ச்சியை இழக்காதபடி, உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகள், நற்பண்புகள் இப்படி இருந்தால், உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும், நீங்கள் வரவேற்கப்படுவீர்கள். இதுவே வெற்றியின் அடையாளமாகும். வாழும் கலை அமைப்பு உங்களுக்கு உதவி, வழிகாட்டத் தயாராக இருக்கிறது. உங்கள் நற்பண்புகளை, திறமைகளை வளர்த்துக் கொள்ள பல பயிற்சிகள் இருக்கின்றன. இளைஞர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும் பல பயிற்சி திட்டங்கள் உள்ளன.