திட சித்தம், மென்மையான இதயம் மற்றும் அன்பு


ஏப்ரல் 13, 2013 - மாண்ட்ரியால், கனடா      
                   
இன்று வைசாகி. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதை கால்ஸா தினம் என்று கொண்டாடுகிறார்கள். இன்று தான் குரு கோவிந்சிங், தர்மத்தைக் காக்க, கொடுமையை அழிக்க, மனித நேய பண்புகளை உயர்த்துவதற்காக கால்ஸா இயக்கத்தைத் துவங்கி வைத்தார்.

குரு கோவிந்சிங் அன்று சொன்னது இன்றும் உகந்ததாக இருக்கிறது. அவர் “நீங்கள் வெளி விவகாரங்களை மன உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும்.  அதே சமயம் உங்கள் இதயம் மென்மையாக இருக்க வேண்டும். நீங்கள் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவராக இருக்க வேண்டும். ஒரு “சந்த் சிபாஹி” யாக இருக்க வேண்டும். உங்களிடம் ஒரு சாதுவின் குணங்களும், ஒரு படை வீரரின் குணங்களும் ஒரு சேர இருக்க வேண்டும்.

அவர் சொல்லியதன் பொருள் இது தான். ஒரு படை வீரனைப் போல் கொடுமையை எதிர்த்து நில். அதே சமயம் ஒரு சாதுவைப் போல் கருணை உள்ளவனாக இரு. சீக்கியர்களின் 10 வது குருவான கோவிந்சிங் தான் திட சித்தத்தின் அவசியத்தையும் அதே சமயம் மென்மையான இதயத்துடன் இருக்க முடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.

குரு கோவிந்சிங் இறக்கும் சமயத்தில், “எனக்குப் பிறகு உங்களுக்கு “குரு கிரந்த சாஹிப்” தான் குருவாக இருக்கும். உங்களுக்குத் தேவையான ஞானம் எல்லாம் குரு கிரந்த சாஹிபில் இருக்கிறது. இது உங்களை ஒளியை நோக்கி வழி நடத்திச் செல்லும்” என்று உபதேசித்தார். (குரு கிரந்த சாஹிப் என்ற புத்தகம் சீக்கியர்களின் வேதமாகும்) எனவே, சீக்கியர்களில் கோவிலான குருத்வாரா இருக்கும் இடத்தில் எல்லாம், குரு கிரந்த சாஹிப் வைக்கப்பட்டிருக்கும்.இப்புத்தகத்தில் விலை மதிக்க முடியாத ஞானம் மனித சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கிறது. 16 குருமார்களின் போதனைகள் குரு கிரந்த சாஹிபில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

சீக்கிய மதத்தில் 10 குருக்கள் இருந்தார்கள்.அவர்களின் வரலாறு கேட்க, கேட்க நம்மை உற்சாகப்படுத்தும். தியாகத்தின் மகத்துவத்தை நாம் உணரலாம். தர்மத்தை காக்க, நல்லவர்களையும், கள்ளமில்லாதவர்களையும் கொடுமையிலிருந்து காப்பதற்காக, குருமார்கள் தங்களிடம் உள்ள எல்லாவற்றையும் தியாகம் செய்தார்கள். மக்களுக்கு எளிதில் புரியும்படி ஞானத்தை எழுதிச் சென்றார்கள்.

குருநானக் தேவரைப் பற்றி ஒரு அருமையான கதை உள்ளது.குருநானக் தேவர் சீக்கியர்களின் முதல் குருவாவார். அவரின் பெற்றோர்கள் அவரிடம் பொருளைக் கொடுத்து விற்று வரச் சொல்வார்கள். அவர் ஒன்று முதல் எண்ண ஆரம்பிப்பார். 12 முடிந்து 13 வரும் போது அதில் நிறுத்தி விடுவார்/ ஹிந்தியில் 13 க்கு தேரா என்று சொல்வார்கள். தேரா என்ற சொல்லுக்கு உன்னுடையது என்றும் பொருள் இருக்கிறது. 13 வரும் போது கடவுளை நினைத்து இது எல்லாம் உன்னுடையது என்று சொல்வது அவர் வழக்கம். வேலையில் ஈடுபடும் போதும் அவர் மனம் இறைவனை பற்றிய சிந்தனையிலே இருந்தது. தன்னையும் கடவுளின் பொருளாகக் கருதி, நான் உன்னுடையவன், நான் உன்னுடையவன், நான் உன்னுடையவன் என்று சொல்வாராம்.

குரு நானக் தேவரின் வாழ்க்கை, தூய்மையான அன்பு, ஞானம் மற்றும் வீரத்தால் நிரம்பியிருந்தது. சீக்கியர்களின் கலாசாரத்தில்,ஒரு அழகான வாழ்த்து இருக்கிறது. “சத் ஶ்ரீ அகால்”. உலகில் வழங்கும் வாழ்த்துரைகளில் அருமையான ஒன்றாகும். சத் என்றால் சத்தியம், உண்மை.ஶ்ரீ என்றால் செல்வம். அகால் என்றால் நிரந்தரமானது என்று பொருள். சத் ஶ்ரீ அகால் என்றால் “உண்மையே நிரந்தரமான செல்வம்” என்று பொருள். நிரந்தரமான இறைமையே சத்தியம். இதுவே உண்மையான செல்வமாகும்.

நீங்கள் இன்று இங்கு வந்து தியானம் செய்து, உங்களுக்குள் ஆழ்ந்து பயணம் செய்து, உண்மையான செல்வத்தைப் பெற்றீர்கள். அது தான் சத்தியம். “சத் ஶ்ரீ அகால்”. நிறையப் பேர்கள் அர்த்தம் தெரியாமலே சத் ஶ்ரீ அகால் என்று சொல்கிறார்கள். இது ஒரு அருமையான வாழ்த்துரையாகும். ஒருவரை சந்தித்து வாழ்த்தும் போது, சத்தியமே நிரந்தரமான செல்வம் என்று நீ உணரலாம். இந்த வாழ்த்துரை ஆன்மீகத்தைப் பற்றி, நிரந்தர ஞானத்தைப் பற்றிச் சொல்லி உண்மையான செல்வம் என்ன என்று நினைவுறுத்துகிறது. இது மிகவும் அழகான வாழ்த்துரை அல்லவா?

ஜோ போலோ ஸோ நிஹால் ! சத் ஶ்ரீ அகால் !! இதன் அர்த்தம் “சத் ஶ்ரீ அகால் என்று சொல்பவர்கள் அதிக மகிழ்ச்சியில் திளைப்பார்கள்”. நிஹால் என்றால் அதிகமான மகிழ்ச்சி. இந்த வாழ்த்தைச் சொல்லும் போது, நீ வீரம் நிரம்பியவன் மற்றும் நிரந்தர ஆத்மா என்பதை உணர முடியும். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் “ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமனுஸ்மரன் | ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் || (அத்யாயம் 8 ஸ்லோகம் 13) என்று சொல்கிறார்.

ப்ரம்மம், எங்கும் நிறைந்த இறைமை ஓம் என்று அழைக்கப்படுகிறது. “குரு கிரந்த் ஸாஹிப்” ல் “ஏக் ஓம்கார் ஸத் நாம்” என்று சொல்லப் படுகிறது. ஒரு ஓம் தான் இருக்கிறது. அதுவே எல்லை இல்லாத சத்தியமாகும். “ஓம்” என்பது நிரந்தரமாக ஆத்மாவின் ஆழத்தில் இருக்கும் ஒரு ஒலி. சமுத்திரத்தின் அருகில் சென்று கவனமாகக் கேட்டால், ஓம் என்ற அதே ஒலியைக் கேட்கலாம். ஒரு மலை உச்சியில் சென்று காற்றின் ஒலியைக் கேட்கும் போதும் “ஓம்” என்று ஒலிக்கும். பிறப்பதற்கு முன் நாம் “ஓம்” ல் இருந்தோம். பிறந்த பின், நம் இறப்பிற்குப் பின் நாம் அண்ட வெளியின் சப்தமான “ஓம்” ல் கலந்து விடுவோம்.இப்போது கூட இந்த ஸ்ருஷ்டியின் ஆழத்தில், அந்த ஒலி ரீங்காரமிடுகிறது.

எனவே புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம், இந்து மதம், டாவோயிஸம், ஷிண்டோயிஸம் முதலிய மதங்களில் “ஓம்” என்ற மந்திரத்துக்கு, அதை ஜபிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவ மதத்தின் “ஆமென்” மற்றும் இஸ்லாமியரின் “அமீன்” என்ற ஒலிகளும் “ஓம்” என்பதன் திரிபு தான் என்று நான் நினைக்கிறேன். ஆகவே “ஓம்” என்பது எங்கும் நிறைந்திருக்கும் நிரந்தரமான ஆத்மாவைக் குறிக்கும் ஒரு சொல். இன்று வங்காளத்திலும், கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் புது ஆண்டு கொண்டாடப்படுகிறது.

கே: குருதேவா! என் கணவர் என்னிடம் அன்பாக இருக்கிறார். இருந்தாலும்,வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னிடம் இருக்கும் எதிர்மறை குணங்களை (என் குறைகளை) சுட்டிக்காட்ட தவறுவதில்லை. என் உற்சாகம் குறைந்து விடுகிறது. என்ன செய்யலாம்?

குருதேவர்: நீ வேறு மாதிரி நடந்து கொள்ள வேண்டும். அவர் ஆச்சரியப்படும் படி நடக்கலாம். அவர் உன்னைக் குறை சொல்லும் போது அவரிடம் அதிக அன்பு செலுத்தலாம்.அவரைப் பாராட்டி பேசலாம். “நீங்கள் சொல்வது முற்றிலும் சரி! அதை தான் நான் கேட்க விரும்பினேன்!” என்று அவரிடம் சொல். எப்போதும் ஒரே மாதிரி உற்சாகமின்றி நடந்து கொள்ளாதே. வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீ எப்படி நடக்க விரும்புகிறாயோ, அப்படி நடக்கலாம். இல்லையா?

அவர் ஒரு நாள் உன்னை மகிழ்விப்பதற்காக பூங்கொத்து கொண்டு வந்து பாராட்டும் போது, “இதையெல்லாம் ஏன் கொண்டு வந்தீர்கள்” என்று கடிந்து கொள். அவர் உன்னைத் திட்டினாலும் மகிழ்ச்சியோடு இரு. உன் மகிழ்ச்சி உன் கையில் என்பதை நினைவு கொள். யார் எது சொன்னாலும், எது நடந்தாலும் உன் மனத்தைக் காப்பாற்றி கொள். மகிழ்ச்சியோடு இரு. என் மகிழ்ச்சியை யாரும் கெடுக்க விட மாட்டேன் என்ற உறுதியோடு இரு. கடவுளே வந்து உன்னிடம் சத்தம் போட்டாலும் அவரிடம்“நன்றி, நான் இதை உங்களுடைய பரிசாக ஏற்று கொள்கிறேன்” என்று சொல். இன்றிலிருந்து உறுதியாக இரு.

இன்று “வைசாகி”. இன்று உனக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. அது என்ன? எது வந்தாலும் என் மனத்தை எப்போதும் மாறும் இந்த உலகம் என்ற மாயையில் சிக்க விடமாட்டேன். என் மகிழ்ச்சிக்கு நான் தான் பொறுப்பு. இந்த மன உறுதியோடு சென்று என்ன நடக்கிறது என்று பார். இந்த இடத்துக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். திரும்பத் திரும்ப வரலாம்.

துணிகள் அழுக்காகும் போது நாம் அவற்றை சலவைக்காக அனுப்புகிறோம். இந்த ஆசிரமம்,சலவை இயந்திரம் போல் செயல்படுகிறது. எல்லா வித அழுக்குகளையும் சுத்தம் செய்து விடுகிறது.

கே: நான் அன்போடு இருக்க விரும்புகிறேன். ஆனால் அன்புக்கும் ஞானத்துக்கும் இடையே முரண்பாடு இருப்பது போல் தோன்றுகிறது. இரண்டையும் ஒருங்கிணைப்பது எப்படி? அன்புடன் !

குருதேவர்: அதை நீ ஏற்கனவே செய்து விட்டாய். ஞானத்தின் மேல் அன்பு இல்லாவிட்டால்,ஏன் அதைப் பற்றிக் கேட்கப் போகிறாய்? ஞானத்தைப் பற்றி அறிந்தால் நீ எப்படி அன்பில்லாமல் இருக்க முடியும்? அறிவதால் அன்பு வருகிறது. அன்பு மேலும் மேலும் அறியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

கே: ஐந்து கோஸங்கள் யாவை? ஆன்மீகத்தில் அதன் சிறப்பு என்ன?

குருதேவர்: கோஸம் என்றால் உறை எனப்படும். மூடுவதற்கு உதவுவது உறை.

முதல் உறை நம் சுற்றுப் புறம். நம்மை சுற்றி விஷவாயுக்கள் நிரம்பியிருந்தால் நம்மால் உயிர் வாழ இயலுமா? முடியாது.ஏனென்றால் காற்றில்லா விட்டால் நம் உடல் இயங்காது. எனவே நம் சுற்றுப்புறத்தை நம் முதல் உடல் என்று கொள்ளலாம்.அன்ன ரஸமய கோஸம்: அன்னம் என்றால் உணவு. ரஸம் என்றால் திரவம் போன்றது. நம் சுற்றுப்புறம் திரவம் போன்றது. அது கண்களைக் கவர்கிறது. வாசனைகளால் மூக்கை கவர்கிறது. இனிமையான ஒலிகளால் இன்பம் தருகிறது. நம் சுற்றுப்புறம் உடலின் ஐந்து புலன்களுக்கு வேண்டிய எல்லா விதமான உணவையும் அளிக்கிறது. உதாரணம், அருமையான காட்சி கண்களுக்கு உணவாகிறது.ஆகவே சுற்றுப்புறம் முதல் வகையான அன்ன ரஸமய கோஸம் எனப்படும். சிலர் நம் உடலை அன்ன ரஸ மய கோஸம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நம் சுற்றுப் புறமே முதல் உறையாகிறது.

இரண்டாவது உறை நம் உடல். பிராண மய கோஸம் என்று சொல்வார்கள்.

மூன்றாம் உறை. மனோ மய கோஸம். நம் மனம் எண்ணங்கள், உணர்ச்சிகள் சம்பந்தமானது.
நான்காவது உறை விஞ்ஞான மய கோஸம். அது நம் மனத்தை விட நுண்ணியதாக இருக்கிறது. நம் உள்ளுணர்வுகள் இதிலிருந்து வெளிப்படும். நம் எண்ணங்களுக்கும், காரண காரியங்களுக்கும் அப்பாற் பட்டது. உங்களுக்குள் ஒரு உடல் இருந்து அதிலிருந்து நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அற்புதமான கலைத் திறமைகள் வெளிப்படுகின்றன. இவை வருவது விஞ்ஞான மய கோஸத்திலிருந்துதான்.கண்டுபிடிப்புகள், கலைத் திறமைகள், கவிதைகள் மனோமய கோஸத்திலிருந்து வருவது அல்ல.அவைகள் விஞ்ஞான மய கோஸத்திலிருந்து வெளிப்படுகின்றன.

ஐந்தாவது உறை ஆனந்த மய கோஸம். அதை பரம ஆனந்தமான உடல் என்று கொள்ளலாம். பரம ஆனந்தமான உடல் நம் பௌதீக உடலை விட மிகப் பெரியதாகும். அதனால் தான் நீ மகிழ்ச்சியான சமயங்களில் பெரிய விரிவாக்கத்தை உணர்கிறாய். துக்கத்தில் இருக்கும் போது உன் உணர்வுகள் எப்படி இருக்கின்றன? யாரோ உன்னை நசுக்கி விட்டது போல் உணர்கிறாய். இல்லையா?

கே: குருதேவா!“குரு க்ரந்த சாஹிப்”க்கு முன் தலையை ஒரு துணியால் மூடுவதன் காரணத்தை விளக்குவீர்களா?

குருதேவர்: இது ஒரு பாரம்பரிய வழக்கம். பல்லாண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது. சீக்கிய மதத்தின் பாரம்பரியப்படி ஐந்து கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தலை முடியை வெட்டாமல் துணியால் மூடிக் கட்டுவது. தலை முடியில் ஒரு சீப்பை சொருகி வைப்பது. இடுப்பில் ஒரு பிச்சுவாக் கத்தியை வைத்திருப்பது. கையில் ஒரு வளையம் அணிவது. மற்றும் ஒரு விதமான உடை அலங்காரம். இவை சீக்கிய மதத்தின் அடையாளங்கள். இவற்றிற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.ஏனென்றால் இவைகள் குருவின் சொல்படி உங்களை தனியாக அடையாளம் காட்டிக் கொள்ளத் தேவையாகிறது.

அந்த நாட்களில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிள்ளையை குருவுக்கு காணிக்கையாக அளித்தார்கள். பொதுவாக மூத்த மகனை அளிப்பது வழக்கம். குரு அவர்கள் எல்லோருக்கும் தேவையான பயிற்சிகள் அளித்தார். இது எல்லா குடும்பத்திலும் நடந்தது. அவர்கள் நல்ல படை வீரர்களாகத் தேர்ச்சி பெற்றார்கள். அதே சமயத்தில் நற்குணங்கள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார்கள். பிரார்த்தனை செய்யவும், தேவையான சமயத்தில் ஆயுதமேந்தி தர்மத்தைக் காக்கவும் கற்றார்கள்.

கே: குருதேவா! கடவுள் மற்றும் இறைமையை நம் புலன்களால் அறிய முடியாது என்றால் நீங்கள் யார்?

குருதேவர்: அதை நீ கண்டுபிடி. நான் யார் என்று அறிய, நீ யார் என்று அறிய வேண்டும். நீ உன்னை அறிந்தால், என்னையும் அறிவாய். உன்னை நீ அறியா விட்டால் என்னை யார் என்று அறிய முடியாது.

கே: குருதேவா! மக்கள் தங்கள் நோய்களை, அல்லது அவர்களின் குடும்பத்தினர்,உறவினர்களின் நோய்களை அப்படியே ஏற்றுக்கொள்ள எப்படி உதவலாம்?

குருதேவர்: ஒன்றும் செய்யாதே. அமைதியாக அவர்களுடன் இரு. நோய்வாய் பட்டிருப்பவர்களை உன் வார்த்தைகளால் சுகப்படுத்த முடியாது. அவர்களை தங்கள் நோயை ஏற்றுக் கொள்ளும் படியும் செய்ய முடியாது. இருந்தாலும் உன் அமைதியான மன நிலையால் எழும் எண்ண அலைகள் சுற்றுப் புறத்தில் பரவி நோயாளிகளுக்கும் போய் சேரும்.

கே: குருதேவா! மக்கள் ஏன் உங்கள் பாதங்களை மிக விரும்புகிறார்கள்? அது உங்கள் கலாசாரமா?

குருதேவர்: ஆம் அது ஒரு கலாசார வழக்கம். ஜப்பானில் மக்கள் முன்னால் வளைந்து வணங்குகிறார்கள். இந்தியாவில் மக்கள் இன்னும் குனிந்து குருவின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறார்கள். பாதங்களிலிருந்து ஒரு கதிர் வீச்சும், சக்தியும் வெளிப்படுவதாக சொல்வார்கள். இது ஒரு பாரம்பரிய நம்பிக்கை. அதனால் தான் மக்கள் பாதத்தைத் தொட்டு வணங்குகிறார்கள். இப்படிச் செய்வதால், சில சமயம் என்னால் மேலே நடப்பது கடினமாக இருக்கிறது. ஒரு முறை நான் நடந்து செல்லும் போது, என் பின்னாலிருந்து இரண்டு பேர் என் கால்களைப் பற்றி வணங்கினார்கள். நான் ஒரு நீச்சல் குளத்தில் குதிக்கப் போவது போல் கைகளை முன்னால் நீட்ட வேண்டியதாக இருந்தது. (விழாமல் இருப்பதற்காக). என் உடல் வேத வக்ராஸனம் செய்வது போல இருந்தது. நல்ல வேளையாக நான் கீழே விழவில்லை. அப்படி நடந்திருந்தால் நான் நடப்பதற்கு கை அணைப்புடன் கூடிய தடி தேவையாக இருந்திருக்கும். நீங்களும் குருதேவர் தடியுடன் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாருங்கள் ! எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் சமநிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. அடிக்கடி இப்படி நடக்கிறது. இது ஒரு கலாசார வழக்கம் தான்.

கே: குருதேவா ! உங்களைப் போல் எப்படி ஆகலாம்? நான் இயல்பான வழியில் வளர்ச்சி அடைவதற்கு வேண்டிய அறிவுரைகள் சொல்லுங்கள்.

குருதேவர்: நீ எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறாய் என்று பார். வாழும் கலை அடிப்படை பயிற்சி எடுத்ததற்கு முன் உன் மனம் எந்த நிலையில் இருந்தது. அந்த மனிதனை இப்போது உன்னுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறதா? பயிற்சிக்கும் முன் தியானமே செய்யாத நீ இப்போது எப்படி ஆகி விட்டாய்? அந்த வித்தியாசத்தை கவனி. இதுவே வளர்ச்சிப் பாதையில் உன்னை வழி நடத்தும். புன்முறுவலோடு, ஓய்வாக ஆத்ம சிந்தனையில் ஈடுபடு. வெளி உலகில் சுறுசுறுப்பாக நடந்து கொள். யோக சாதனைகள்,சேவை மற்றும் சத்சங்கத்தில் நேரத்தை செலவிடு.

கே: குருதேவா! கடந்த 9 மாதங்களாக என் ஆத்மாவுடன் இருந்த இணைப்பு துண்டித்து விட்டதாக உணருகிறேன். எந்த காரியத்திலும் ருசி இல்லை. சேவை செய்வதில்லை. எதன் மேலும் விருப்பம் இல்லை. இது மிகவும் வலியைத் தருகிறது. ஏதாவது உபதேசம் கிடைக்குமா?

குருதேவர்: சிலருக்கு இப்படி ஏற்படக் கூடும். இது ஆத்மாவின் இருண்ட இரவு என்பார்கள். ஆன்மீகத்தில் ருசி இருக்காது. நல்ல விஷயங்கள் பிடிக்காது. மனம் வளர்ச்சியில்லாத விஷயங்களில் செல்லும். அல்லது அழிவை நோக்கிச் செல்லும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் 12 ஆண்டுகளில் ஒரு முறையோ, அல்லது 30 ஆண்டுகளில் ஒரு முறையோ வரக்கூடும். 12 ஆண்டுகளில் ஒரு முறை வந்தால் அதன் தாக்கம் 1 ஆண்டு காலத்துக்கு இருக்கும்.30 ஆண்டுகளில் ஒரு முறை வந்தால் அதன் தாக்கம் இரண்டரை ஆண்டுகளுக்கு இருக்கும்.
இதை எதிர் கொள்ள சிறந்த வழி, உன்னை யோக சாதனைகள், தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்வது தான். “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜபிக்கலாம். இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்களால் மனம் அவதிபடும்போது அதைத் தாண்டிச் செல்ல இது சிறந்த மந்திரமாகும்.

கே: குருநாதா!வாழ்வில் குறைவில்லாத செல்வத்தை அடைவது எப்படி?

குருதேவர்: செல்வத்தில் மேல் அதிக மோகம் கொள்ளாமல் இருந்தால், அது உன்னைத் தேடி வரும். அதைப் பற்றியே ஒவ்வொரு நொடியிலும் ஏங்கும் போது, “ஓ! எனக்கு அதிக செல்வம் தேவை!” என்று நினைத்தால் அது உன்னிடமிருந்து வெகு தூரத்தில் இருக்கும். ஓய்வாக இரு! உனக்கு எது தேவையோ,அது உனக்குக் கிடைக்கும்.

சமஸ்கிருதத்தில் செல்வம் ஈட்டுவதைப் பற்றிய பழமொழி ஒன்று இருக்கிறது. “உத்யோகினாம் புருஷ சிம்ஹம் உபைதி லக்ஷ்மி” “உத்யோகினாம்” என்றால் 100% முயற்சி. “புருஷ சிம்ஹம் உபைதி லக்ஷ்மி” என்றால் சிங்கத்தைப் போன்ற முழு நம்பிக்கையும், குவிந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

சிங்கம் ஒரு கோழியைப் போல் சுற்றி ஓடுவதில்லை. சிங்கம் ஒரு இடத்தில் எப்படி அமர்ந்திருக்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கும் அந்த நம்பிக்கையும், அமைதியான மனமும் தேவை. சிங்கம் செய்யாத ஒன்று. முயற்சி. சிங்கம் முயற்சி செய்வதில்லை. சிங்கம் கடுமையான உழைப்பாளி இல்லை. “உத்யோகினாம் புருஷசிம்ஹம் உபைதி லக்ஷ்மி”. நீ கடுமையாக உழைப்பவனாகவும், குவிந்த மனமுடையவனாகவும் இருக்க வேண்டும். உன் ஆத்மபலத்தில் நம்பிக்கை உள்ளவனாக இருந்தால், லக்ஷ்மி, உன்னைத் தேடி வருவாள்.
ஆகவே, குவிந்த மனத்துடன், தன்னம்பிக்கையோடு கடுமையாக உழைத்தால் (யுக்தியோடு உழைத்தால்) குறைவற்ற செல்வத்தை அடையலாம்.

கே: குருதேவா! எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு எப்போது விலகும்?

குருதேவர்: அவைகள் விலகாது. நம்முடனே இருக்கும். என்ன செய்யப் போகிறாய்? அதோடு வாழ வேண்டும். அவைகளை விரட்டுவதற்கு வழியே இல்லை. நாம் என்ன செய்யலாம் என்றால் அவைகளோடு சிநேகிதம் செய்து கொள்ளலாம். கை குலுக்கலாம். நம் அருகில் அமர்த்திக் கொள்ளலாம். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மடியில்  இருக்கும் போது “நீங்கள்  என் அருகில் அமருங்கள். என் மடியிலோ, தலையிலோ வேண்டாம்” என்று சொல்லுங்கள். அவைகள் மிகவும் கனமானவை. மிகவும் நீளமானவை. எதிர் மறை எண்ணங்களை விரட்ட வாய்ப்பில்லை. என்ன செய்யப் போகிறாய்?