யோக அறிவியல் பற்றிய ஒரு உள்நோக்கு

ஏப்ரல் 18, 2013 - கால்கரி , கனடா



.
(ஹெல்த் சயன்செஸ் சென்டரில் உள்ள லிபின் அரங்கத்தில் நடைபெற்ற கால்கரி மருத்துவக் கழகத்தினருக்கான கருத்தரங்கில், குருதேவ் 200க்கும் மேற்பட்ட மருத்துவத் துறையினருக்கு உரை நிகழ்த்தினார். அதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள். மருத்துவர்கள்,செவிலியர்கள், சமூகத் தொண்டர்கள், உள நல வல்லுனர்கள், அகநிலை மருத்துவர்கள், இயற்கை மருத்துவர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள், தவிர சில நீண்ட கால அனுபவம் உடைய மருத்துவர்களுடன் பணிபுரிபவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோர்).

நீங்கள் தியானம் மற்றும் பிராணாயாமம் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள் பழமையான இந்த அறிவியல் இந்தியாவில் சுமார் 5000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது என்று  உங்களுக்குத் தெரியுமா? இந்த அறிவியலும், ஆயுர்வேதமும் (கீழை நாடுகளில் உள்ள மூலிகைகள் அறிவியல்) பல தலைமுறை மக்களின்  மருத்துவம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை காக்க பயன்பட்டு வந்தது. கோடிக்கணக்கான மக்கள் இவற்றால் பயனடைந்தார்கள்ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இதற்கு அறிவியல் ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆகவே நாங்கள் இதற்கான செயல் முறையில் ஈடுபட்டுள்ளோம். வாழும் கலை என்னும் எங்கள் நிறுவனம்இதனால் பயன் அடைந்தவர்களின் அனுபவங்களைச் சேகரித்து, இதுவரை இல்லாமல் இருந்த ஆவணங்களை உருவாக்கி வருகிறது. உண்மையில், இந்திய அரசாங்கம் தற்சமயம் ஆயுர்வேத ஆராய்ச்சி பிரிவு ஒன்றை நிறுவி இருக்கின்றது.

ஐந்து வருடங்களாக, ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு கல்லூரியை வெற்றிகரமாக நடத்தி வருகின்றோம்.பெங்களூரில் எங்கள் வளாகத்திலேயே ஒரு ஆயுர்வேத மருத்துவ மனையையும் நிறுவி இருக்கின்றோம். அது ஆசியாவிலுள்ள சிறந்த மருத்துவமனைகளில் ஒன்று. உங்கள் அனைவரையும் கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் வருகை தருமாறு அழைக்கிறேன்.

எங்கள் கல்லூரியில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சுருள் நாளம் மற்றும் மூல வியாதிக்கு 100 சதவீதம் வெற்றியுடன் சிகிச்சை அளிக்கிறோம். .பழமையான 'ஷார' முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 0.1 சதவீதத்தினருக்கே மீண்டும் மூலம் ஏற்படுகின்றது. அல்லோபதி மற்றும் ஆயுர்வேத முறை மருத்துவ வல்லுனர்களிக்கிடையே ஒரு கருத்துப் பரிமாற்ற உரையாடல் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். உலக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தியானம், மற்றும் பிரனாயாமத்தைப் பற்றி நீங்கள் ஆராய்ச்சி வல்லுநர்களிடமிருந்து நிறைய கேட்டிருக்கிறீர்கள். நான் சாதாரணமானவன். ஆனால் நான் ஒன்று கூற விரும்புகிறேன், நீங்கள் ஒரு குழந்தையை பிறந்ததில் இருந்து மூன்று வயது வரை கவனித்துப் பார்த்தால், அது எல்லா யோகப் பயிற்சிகளையும் செய்வதை காணலாம். நீங்கள் அதற்கு யோகப் பயிற்சியாளராக இருக்க வேண்டியதில்லை,கூர்ந்து கவனித்தாலே போதும். யோக நூல்களில் காணப்படுவது போன்ற ஆதி முத்திரையுடன் தான் (கட்டை விரல் உள்ளங்கையில் வைத்து மற்ற விரல்கள் அதை மூடி இருப்பது போன்று மடக்கி) பிறக்கின்றது. குழந்தைகள் தூங்கும் போது சின்முத்திரையுடன் (கட்டை விரலும் ஆழ்காட்டி விரலும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு மற்ற விரல்கள் நீட்டப்பட்டு) மற்றும் சின்மயீ முத்திரை (கட்டை விரலும் ஆழ்காட்டி விரலும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு மற்ற விரல்கள் உள்ளங்கையில் மடக்கப்பட்டு ) தூங்குகின்றன. அவை மேரு தண்டா முத்திரையும் கட்டை விரலைச் சப்பும்போது செய்கின்றன. முத்திரை என்பது மூளையிலும், உடலிலும் உள்ள சில பகுதிகளை ஊக்குவிக்கின்றன. ஆகவே குழந்தைகள் இவ்விதமான முத்திரைகளைச் செய்கின்றன.

ஒருவருக்கு மிகக் குளிராக உணரும் போது இயல்பாகவே கட்டை விரல் அக்குளுக்கடியில் வெப்பமாக உணருவதற்காக கொண்டு செல்வதைக் கவனிக்கலாம். யோகக்கலையில் கட்டை விரல்கள் மிக முக்கியமானவை. கட்டை விரல்கள் வெதுவெதுப்பாக இருந்தால் உடல் முழுவதும் வெதுவெதுப்பாக இருக்கும். யோகக்கலையில், விரல் நுனிகள் சக்தி புள்ளிகளாக கருதப்படுகின்றன. காதுகளும் அவ்வாறே கருதப்படுகின்றன. ஆயுர்வேதத்தில் இவை மர்மப்புள்ளிகள், உடலின் ரகசிய சக்திப்புள்ளிகள் என்று கூறப்படுகின்றன. இந்த புள்ளிகள் தூண்டப்படும்போது உடலெங்கும் சக்தியை பரப்புகின்றன. இது ஆயுர்வேத மரபு.

இனி, மீண்டும் குழந்தைகளைப் பற்றி பார்க்கும் போது அவர்கள் சர்ப்ப ஆசனம் குப்புறப் படுத்துக் கொண்டு கழுத்தை மட்டும் தூக்குவதைக் காணலாம். பின்னர் அவர்கள் படகு ஆசனம் நிமிர்ந்து படுத்து, கைகளையும் கால்களையும் தரையிலிருந்து உயர்த்திக் கொள்கிறார்கள். மூன்று வயதிற்குள் அநேகமாக எல்லா ஆசனங்களையும் செய்து விடுகிறார்கள். நாம் அவர்களைக் கூர்ந்து கவனித்தால் இது தெரியும். குழந்தைகள் சுவாசிப்பதும் வித்தியாசமானது, அவர்கள் அடி வயிற்றிலிருந்து சுவாசிக்கிறார்கள்.

ஒவ்வொரு மன உணர்ச்சிக்கும் ஒரு தாளலயத்துடன் கூடிய மூச்சு உண்டு. மகிழ்ச்சியாக இருக்கும் போது, மகிழ்ச்சியற்று இருக்கும் போது உண்டாகும் சுவாசத்திலிருந்து வேறு பட்டிருப்பதை நீங்கள் ஒப்பிட்டுக்  கவனித்திருக்கலாம். மூச்சுக் காற்றின் வெப்பம், அதன் வேகம், நீளம், அளவு எல்லாமே வேறுபட்டிருக்கும். (நடிப்புத்துறை வகுப்புகளில் வெவ்வேறு உணர்ச்சிகளை எவ்வாறு சுவாசத்தை மாற்றுதலின் மூலம் வெளிப்படுத்திக் காட்டலாம் என்று கற்றுத் தரப்படும்) ஆகவே, நமது உணர்ச்சிகள் சுவாசத்துடனும், உடலின் சில பகுதிகளுடனும் தொடர்புடையாதாக இருக்கின்றன. வாழும் கலையின் முதுநிலைப் பயிற்சியின் போது, உடலிலுள்ள சக்தி மையங்களான சக்கிரங்களைப் பற்றிக் கற்றுத் தருகிறோம். யோகக்கலையில், இந்தச் சக்கிர மையங்களுக்கு தனிப்பட்ட குணங்களும், தனிப்பட்ட தாளமும் இருப்பதாகவும், அவை சில ஆக்கக்கூறுகளுடன் தொடர்புடையன என்றும் கூறப்படுகின்றது. ஆகவே சக்கிரங்களுடன் மூச்சுப்பயிற்சி என்பது மிக்க பயன்களைத் தரும். நம் உடல் முழுவதிலும் நூற்றியெட்டு சக்கிரங்கள் உள்ளன, அவற்றில் பன்னிரண்டு முக்கியமானவை, அதிலும் ஏழு சக்கிரங்கள் மிக முக்கியமானவை. முது நிலை தியானப் பயிற்சியில், இந்த சக்கிர மையங்களில் முழ கவனத்தையும் செலுத்தி, அவற்றைத் தூண்டி, தளர்வடையச் செய்கிறோம்.

கே: நாம் அனைவரும் சீர் வேக உடற்பயிற்சி மற்றும் ஓடுபொறியில் நடப்பது இவற்றைத் தவிர்த்து யோகா மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா?

குருதேவ்: யோகா மட்டுமே செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. உலகில் பிறக்கும் எல்லோருக்கும் இயல்பாக ஏற்படும் செயல்பாடு யோகா என்றுதான் கூறுகின்றேன். நாம் குழந்தைகளாக இருந்த போது இதையெல்லாம் செய்திருக்கின்றோம். வயதாகும் போது, உங்களுக்கு சீர் வேக உடற்பயிற்சி, அதிக உணவினால் கிடைக்கும் கூடுதல் கலோரிகளை குறைக்க ஓடு பொறியில் நடைப்பயிற்சி இவை தேவைப்படுகின்றது.

கே: தியானத்திற்கும், கடவுளுக்கும் இடையே உள்ள உறவு என்ன? நான் அத்வைத சித்தாந்தத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன்.

குருதேவ்: கடவுள் என்பது உண்மை,அழகு,மற்றும் அன்பு என்று நீங்கள் கருதினால்,ஆம் ! இவற்றிக்கிடையே தொடர்பு உண்டு. கடவுள் தான் படைப்பின் உயர்நிலை என்றால், இம்முழுப் படைப்புமே ஒன்றால் தான் ஆகியது என்றால், அந்த ஒரு சக்திதான் கடவுள் என்று கூற முடியும். எல்லாமே அதனால் தான் உருவானது எல்லாவற்றுடனும் இணைந்துள்ளது. கடவுளுடன் இணையாதது இந்த உலகில் எதுவுமே கிடையாது. ஆயினும், கடவுள் என்று ஒருவர் மேலே எங்கேயோ இருக்கின்றார், நீங்கள் பிடித்துக் கொள்வதற்காக தன் விரல்களை நீட்டுவார், பின்னர் சென்றுவிடுவார் என்பதானால், அத்தகைய கடவுளுக்கும் நாம் பேசிக் கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கடவுளை ஒரு சக்தியாக, முன்னிலையாக,அன்பாக (அன்பு என்பதுதான் மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய உணர்ச்சி) மாபெரும் சக்திப்பரப்பாகக் கண்டால், ஆம்! அதினின்று யாரும் வெளியேற முடியாது. நாம் அனைவரும் அதில் இருக்கின்றோம். அதிலேயே இருப்போம். அதில் தான் இருந்தோம். நாம் இல்லாவிட்டாலும், அது இருக்கும்.

கே: தியானம் என்பதுதான் அந்த உறவை ஒத்திசைய செய்யும் ஆற்றல் மிகுந்த வழியாக இருக்குமா?

குருதேவ்: எந்தப் பயிற்சியானாலும் அது தியானத்திற்கு கொண்டு செல்லும். தாகத்தை தீர்ப்பதற்கு திரவம்தான் ஒரே வழி. திரவம் மட்டுமே உங்கள் தாகத்தைத் தீர்க்கும், சரியா? அது எந்த திரவமாக இருந்தாலும் பரவாயில்லை, திரவமாக இருக்க வேண்டும். தியானம் என்பது, விழிப்பு, உறக்கம், கனவு இவை எதுவுமற்ற நிலை, அது நான்காம் நிலை. உடல் ஓய்வாகவும், மனம் விழிப்புடனும் இருக்கும் நிலை. பிரார்த்தனையும், தியானமும் நெருங்கியவை. பிரார்த்தனையில் நீங்கள் நன்றியுடனோ எதற்காவது வேண்டிக்கொண்டோ இருக்கின்றீர்கள். ஆனால், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், தியானத்தின் போது நீங்கள் கவனிக்கத் தயாராக இருக்கிறீர்கள். ஆகவே, தியானம் என்பது பிரார்த்தனையின் உயர் நிலை. தியானம் என்பது ஒரு மன நிலை.அது வெறும் செய்முறை அல்ல. .

கே: உட்கார்ந்த நிலையில் தான் தியானம் செய்ய வேண்டுமா அல்லது எந்த அமைவு நிலையிலும் செய்யலாமா?

குருதேவ்: உட்கார்ந்த நிலையில் செய்வது நல்லது. நீங்கள் படுத்துக்கொண்டும் செய்யலாம், ஆனால் தூங்கி விடும் இன்னல் இருக்கின்றது. தியானம் செய்வதாக நினைத்து கொண்டிருப்பீர்கள், ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பீர்கள்.

கே: எவ்வாறு ஒழுங்கான முறைப்படி தியானம் செய்வது?

குருதேவ்: நான் நிறைய குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கின்றேன். முதல் இரண்டு தினங்களோ, வாரங்களோ, அவற்றைப் பயன்படுத்தி, தியானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முறைப்படி செய்யும் பழக்கம் ஏற்பட்ட பின்னர் உங்களுக்கு குறுந்தகடுகள் தேவைப்படாது. நீங்களே தானாகவே செய்ய முடியும். உங்களுக்குத் தேவை சிறிது தியானப் பழக்கம் தளர்ந்து விட்டு விடுதல் பழக்கம். இது அனைத்துமே தளர்ந்து விட்டு விடுதல் பற்றியதுதான்.

கே:  வாழும் கலைப் பயிற்சி நுட்பங்கள் எல்லை கடந்து செல்லும் தியான நுட்பம் அல்லது மற்ற தியான நுட்பங்களை விட எந்த வகையிலாவது மேலானவையா?

குருதேவ்: நான் ஒரு சிறந்த விற்பனையாளன் இல்லை.தியான நுட்பங்களை எப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. தியான நுட்பங்கள் பல இருக்கின்றன. உங்களுக்கு மிக பொருத்தமாக இருக்கக்கூடியதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். புத்த மதத்தின் தியான முறையாகிய விபாசனா போன்ற சில தியான முறைகள் நீண்ட கால தியான முறைகள்.  அவற்றிற்கு நீண்ட நேரமும் பல மணி நேரப் பயிற்சிகளும் அவசியம். நான் மக்களிடம் கேள்விப்பட்ட வரையில் வாழும் கலை பயிற்சிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவதில்லை. மூச்சின் தாளகதியினை மாற்றிக் கொண்டே பயிற்சி செய்வதனால் மிக விரைவிலேயே பலன் கிடைக்கின்றது. அன்றாட  வாழ்க்கையில் மிகவும் மும்முரமாக இருப்பவர்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் பொருத்தமாக உள்ளது. உறக்க நிலை போன்ற இது அதிக சக்தி தரக்கூடியது. வெகு விரைவில் ஆழ்ந்த தியான அனுபவத்தை உங்களுக்கு அளிக்கின்றது. 

எல்லை கடந்த தியானப் பயிற்சி கூட இந்த உள் அமைதியைக் கொண்டு வருகின்றது.      தியானப் பயிற்சி செய்தவர்கள் கூட சுதர்ஷன கிரியாவும் பிராணாயாமப் பயிற்சிகளும் செய்யும் போது இன்னும் கூடுதல் பலன்களை அடைவதாக உணர்கின்றனர். சுதர்ஷன கிரியா தங்களது பயிற்சிக்கு உதவியாக பூர்த்தி செய்யும் பயிற்சியாக இருப்பதாகவும் தியானத்தில் மேலும் ஆழ்ந்து செல்ல உதவுவதாகவும் உணர்கின்றனர். வாழும் கலைப் பயிற்சிகளுக்கு பெரும் முயற்சிகள் எதுவும் தேவைப்படுவதில்லை. இன்றைய நவ நாகரீக வாழ்க்கை முறைக்கு அது மிக நன்றாக பொருந்தி இருக்கின்றது. 

சில யோகப் பயிற்சிகளுக்கு மிகவும் கட்டுபாடான வாழ்க்கை முறை தேவைப்படுகின்றது.  அதிகாலை 5 மணிக்கு விழித்தெழுந்து தியானம் செய்ய வேண்டும். உணவு, ஓய்வு , தியானத்திற்கான நேரம் போன்றவைகளுக்கென விதிமுறைகள் உள்ளன. வாழும் கலைப் பயிற்சியில் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதனால் அவை சுலபமாக இருக்கின்றன.

கே: பரமஹம்ச யோகானந்தரின் கிரியா யோகாவினை வாழும் கலைப் பயிற்சியோடு ஒப்பிட்டு கூற முடியுமா? 

குருதேவ்: கிரியா யோகப்பயிற்சி முறையில் நம் உடலின் பல்வேறு சக்கரங்களில் தியானம் செய்யும் பயிற்சிகள் நிறைய உள்ளன.
   
கே: நீங்கள் சொல்வதிலிருந்து தியானம் என்பது மனதின் ஒரு நிலை என்று தெரிகின்றது.  நான் அந்த நிலையில் இருந்திருக்கின்றேனா என்று தெரிந்து கொள்வது எப்படி? 

குருதேவ்: அது சிறிது  நேரம் நன்கு உறங்கி எழுவதைப் போன்றது. நன்றாக உறங்கி எழும்போது உங்களுக்கே தெரியும் இல்லையா? நீங்கள் உணவு உண்டவுடன் நாம் உண்டோம் என்று உங்களுக்கே தெரியும் இல்லையா? அதே போல்தான், நீங்கள் உங்களுக்குள் ஓய்வாகவும் அமைதியாகவும் உணர்வீர்கள். இதை விளக்குவது மிகவும் கடினம். மிக நன்றாகவும் இனிமையாகவும் உணர்வீர்கள். உள்ளிருந்து ஒரு இனிமையான உணர்வு தோன்றும்.முழுவதும் சுகமான ஒரு நிலையில் இருப்பீர்கள். 

கே: நான் உண்மையாகவே அதிக முயற்சி செய்கின்றேன். ஆனாலும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட முடியவில்லை. 

குருதேவ்: அதுதான் பிரச்சினை. எதிர்மறை எண்ணங்கள் வரும்போது அவற்றை பின்தொடர்ந்து துரத்திச் செல்லாதீர்கள். நீங்கள் அவற்றை துரத்தினால் அவை ஒரு பெரும் படையுடன் திரும்பி வரும். அவற்றோடு கை குலுக்குங்கள். "வாருங்கள்; என்னோடு வந்து அமருங்கள்" என்று சொல்லுங்கள். அவை மறைந்துவிடும். இது போன்ற காரணங்களுக்காக தான் தியானம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. தியானம் செய்யும்போது, எதிர்மறை எண்ணங்கள் மட்டுமின்றி எல்லா விதமான எண்ணங்களையும் கையாளுவது எப்படி என்று கற்றுக் கொள்கின்றோம். தியானம் செய்வதை உறக்கம் மற்றும் பகல் கனவிலிருந்து பிரித்தறிவது எப்படி? மூன்று நாள் வாழும் கலைப் பயிற்சியில் இவையெல்லாம் விளக்கப்படுகின்றன.

கே: யோக நிலையில் காற்றில் மிதப்பதென்பது வெறும் கற்பனையா அல்லது உண்மையிலேயே அவ்வாறு நிகழ்கின்றதா? அதனால் உண்டாகும் பயன்கள் யாவை? 

குருதேவ்: உண்மையில்  நான் யாரையும் மிதக்கும் நிலையில் பார்த்ததில்லை.நிச்சயமாக உடலில் குலுக்கல் அல்லது அதிர்வுகள் உண்டாகலாம். உடல் நிலத்திலிருந்து குதித்து மேலேழும்பலாம். சற்று அதிக நேர தியானத்திற்குப் பிறகு இவ்வாறு நிகழலாம்.  உடனே உங்கள் உடல் மிக இலேசாகிவிட்டதை போல் உணர்வீர்கள், ஒவ்வொரு தியானத்தின் போதும் இவ்வாறு நிகழும். 

கே: உடலுக்கு உறக்கம் அவசியமா? தியானம் உறக்கத்திற்கு மாற்றாக அமையுமா?

குருதேவ்: உங்கள் உடலுக்கு உறக்கம் நிச்சயம் தேவை. நீங்கள் உறக்கம் இல்லாமல் உடல் தானாகவே எடுத்துக் கொள்ளும். ஒரு குறிப்பிட்ட நேர உறக்கத்திற்குப் பிறகு ஆழ்ந்த தியான நிலை உண்டாகும். முதலில் நீங்கள் இழந்துவிட்ட உறக்கத்தை சரி செய்ய வேண்டும். கடன் தீர்க்கப்பட்ட பிறகே லாபம் உண்டாகும்.

கே: தியானம் மக்களை வன்முறை அற்றவர்களாக மாற்ற  முடியுமா? சிறையில் அடைக்கப்பட்ட மக்களுக்கு தியானம் உதவுமா?

குருதேவ்: நாங்கள் உலகெங்கும் சிறைச்சாலைகளில் நம்முடைய வாழும் கலை பயிற்சி திட்டங்களை நடத்தி வருகின்றோம். நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி வலைதளத்தில் சென்று பார்த்தால், அந்த கைதிகளின் அனுபவங்களைப் படிக்கலாம். வாழும்கலை பயிற்சி அவர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அறியலாம். உலகெங்கிலும் ஏறக்குறைய 4,00,000 சிறைக்கைதிகள் இந்த பயிற்சியினை செய்துள்ளனர். அவர்களது எதிர்மறை மனநிலை முழுவதுமாக மாறியுள்ளது. குற்றவாளி மனப்பான்மையிலிருந்து அவர்கள் கருணை நிறைந்த மனநிலைக்கு மாறியுள்ளனர். நாங்கள் இப்பயிற்சியினை சவாலான மாணவர்களால் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ள பள்ளிகளில் நடத்தி வருகின்றோம். இது அவர்களுக்கு மிகவும் உதவி செய்துள்ளது. சிகாகோவில் ஒரு பகுதியின் பள்ளிகளில் ஏறக்குறைய 260 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த இடத்தில் குழந்தைகளுக்கு பயிற்சி கற்பிக்கப்பட்ட பிறகு சிறிது காலத்திலேயே வன்முறைச் சம்பவங்கள் 62 ஆக குறைந்துள்ளன. பயிற்சியின் பலன் தெளிவாகத் தெரிகின்றது. தியானப்பயிற்சி மக்களை உள்மனதிலிருந்து வன்முறை அற்றவர்களாக மாற்றக்கூடியது என்பது தெளிவாக விளங்குகின்றது. 

கே: வலிப்பு நோய் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யலாமா?

குருதேவ்: வலிப்பு நோய் உள்ள பலர் நல்ல பலனடைந்திருந்தாலும், அவர்கள் பிராணாயாமம் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வலிப்பு நோய் உள்ளவர்களா என்று முதலில் கேட்டறிந்து கொண்ட பிறகு, அப்படி இருந்தால், அவர்களை நிதானமாக பயிற்சி செய்யும்படி  சொல்வோம். ஆரம்பத்தில் வழக்கமான பயிற்சிகளைச் செய்வதற்கு முன்பு சில எளிமையான மூச்சுப் பயிற்சிகளை அவர்கள் செய்வார்கள். எளிமையான தியானப் பயிற்சியை பொறுத்தவரை அது ஓய்வும் மன அமைதியும் தருவது. எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இருந்தாலும்,முதனிலை தியான பயிற்சி செய்வதற்கு அதிகமான தாங்கும் சக்தி வேண்டும். அது வெவ்வேறு சக்தி மையங்களையும் சக்கரங்களையும் தூண்டிவிடக் கூடியது.  

நம்  வாழும் கலைப் பயிற்சி செய்து மனநிலை பாதிக்கப்பட்ட யாரையும் நான் பார்த்ததில்லை. இருந்தாலும், ஏற்கெனவே schizophrenic நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே அவர்கள் முதுநிலை தியான பயிற்சி  செய்வதை தவிர்க்கச் சொல்கின்றோம். ஆரம்பப் பயிற்சி, எளிமையான தியானப் பயிற்சி, யோகாசனம், எளிய மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மட்டும் செய்யச் சொல்கின்றோம்.

மக்கள்  பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்ய வேண்டாம் என்றும் நாங்கள் சொல்கின்றோம். பயிற்சிகள் செய்வது மிக நன்றாக இருப்பதாக மக்கள் உணர்வதாலும்  அவை சுவாரஸ்யமாகவும் மேலும் செய்யும் படி தூண்டக் கூடியவைகளாகவும்  இருப்பதனாலும் மக்கள் அளவுக்கு அதிகமாக பயிற்சிகள் செய்ய முனைகின்றனர். 6 - 8 மணி நேரம் வரை தியானம் செய்ய தொடங்குகின்றனர். இங்கு தான் பிரச்சினை உருவாகின்றது. அளவாக பயிற்சி செய்ய வழி காட்டுவதற்காகத் தான் சிறந்த பயிற்சியாளரும் முறையான பயிற்சியும் தேவைப்படுகின்றது. எதையுமே அளவுக்கதிகமாக செய்வது நல்லதில்லை. அது ஒரே நேரத்தில் மிக அதிகமாக வைட்டமின் சாப்பிடுவது போன்றது அது ஒருவரை சமநிலையை இழக்கச் செய்து விடும். ஒருவர் 20 அல்லது 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை தியானம் செய்வதென்பது பாதுகாப்பானது.  அதற்கு மேலும் தியானம் செய்யும் போது மக்கள் உண்மை நிலையின் தொடர்பை இழந்து விடுகின்றனர். அளவுக்கதிகமாக செய்தால் அவ்வாறு நிகழும். 

கே: தியானத்திற்கும் மெய்யுணர்தலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தியானம் என்பது மெய்யுணர்வை நோக்கிச் செல்லும் செயல்முறையா? 

குருதேவ்: ஆம். தியானம் ஒரு செயல்முறை. மெய்யுணர்தல் என்பது அதன் விளைவு. நீங்கள் என்னை ஒரு கேள்வி கேட்கின்றீர்கள். நான் உங்களுக்கு பதில் அளிக்கின்றேன். நீங்கள் பதிலைக் கேட்கின்றீர்கள். அதனை உங்களுக்குள்ளே ஆமோதித்து, ஆம் என்று சொல்லி தலையை ஆட்டுகின்றீர்கள். அதுவே மெய்யுணர்வு. 

கே: இந்தியா இவ்வளவு முரண்பாடுகளைக் கொண்டிருப்பது ஏன்? 

குருதேவ்: இந்தியா முரண்பாடுகள் நிறைந்தது. பனிமலைகளும் இருக்கும், பாலைவனங்களும் இருக்கும். அதேபோல் வாழ்வில் இருவேறு முனைகளின் உச்ச நிலைகளும் இருக்கும். மிகவும் அமைதியான மனங்களைக் காணும் அதே நேரத்தில் பெரிதும் குழப்பமடைந்திருக்கும் மனங்களையும் காணலாம்.இந்தியா மணலும் சர்க்கரையும் கலந்த ஒரு கலவை போன்றது. நீங்கள் அடக்கமாக  ஒரு எறும்பு போல் சர்க்கரையைப் பிரித்தெடுக்க வேண்டும். நம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையின் சமீபத்திய வளர்ச்சியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். உங்களில் யாராவது ஒருவர் சொல்லுங்கள். 80 அல்லது 90 கிலோ எடையுள்ள மனித உடலை அழிக்க எவ்வளவு விஷம் தேவை? ஒரு துளி விஷம் போதும் இல்லையா? நம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையினர் அம்ருத பெல்லி என்னும் மூலிகை மற்றும் சில ஆயுர்வேத மூலிகைகளிலிருந்து வடிகட்டி தூய்மைப்படுத்தப்பட்ட நீரை அறிமுகப்படுத்தியுள்ளனர். சக்தி துளிகள் என்றழைக்கப்படும் இவை நம் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. மும்பையிலிருக்கும் டாட்டா மெமோரியல் கேன்சர் மருத்துவமனை இந்த சக்தித் துளிகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிக்கை வெளியிடப்படும். இந்த சக்தி துளிகள் 48 மணி நேரத்தில் உடலிலுள்ள புற்றுநோய் அணுக்களை 40% குறைக்கக்கூடியவை என்று கண்டுபிடித்துள்ளனர். கீமோதெரபி என்னும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் பலருக்கு இது பக்க விளைவுகள் எதுவுமின்றி மிகவும் உதவியாக இருக்கின்றது. உடலிலுள்ள புற்றுநோய் அணுக்களை குறைப்பதுடன்  வலியையும் குறைத்து மக்களுக்கு பல வழிகளில் உதவி புரிகின்றது.   

கே: ஒருவர் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கேற்ப தனது சமயோசித சிந்தனையை மேம்படுத்திக்கொள்வது எப்படி?

குருதேவ்: சில மூச்சு பயிற்சிகள், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை நம் சமயோசித சிந்தனையை வளர்த்துக்கொள்ள உதவும். காலையிலும் மாலையிலும் பிராணாயாமம் செய்வது உங்களை உண்மையிலேயே புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.  நான் தினமும் ஏறக்குறைய 19 மணி நீரம் வேலை செகின்றேன். நீண்ட தூரம் பயணம் செய்கின்றேன். நான் சோர்வாகத் தெரிகின்றேனா? பயிற்சிகள் நிச்சயம் பயனளிக்கும். 

கே: அலோபதி மருத்துவமும் அத்துறையிலுள்ள மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களுடன் ஒருங்கிணைவது பற்றி தங்கள் கருத்தினைக் கூறுங்கள் குருதேவ்.

குருதேவ்: இந்த ஒருங்கிணைப்பிற்காக வேலை செய்வதெற்கென இந்திய அரசாங்கம் ஆயுஷ் என்றொரு நிறுவனத்தை அமைத்துள்ளது. இந்த இரண்டு மருத்துவத் துறைகளும் சேர்ந்து வேலை செய்தால் பல சாதனைகள் செய்யலாம். இந்த உலகம் பல நன்மைகளை அடையும்.