இன்றைய தேவைகள் அன்பும் மன்னிக்கும் குணமும்

3 ஏப்ரல் 2013 அட்லாண்டா, ஜியார்ஜியா, அமெரிக்கா

க்ரௌன் ஃபோரம் ஶ்ரீ ஶ்ரீயுடன்,


ஓம் சாந்தி சாந்தி சாந்தி (இறைவன் நம் ஒவ்வொருவருக்கும், மற்றும் அகில உலகுக்கும் அமைதியைக் கொடுக்கட்டும்)

பெரு மதிப்புக்குரிய பேராசிரியர் டாக்டர் லாரென்ஸ் கார்ட்டர் அவர்களே, தலைவர் ஜான் வில்ஸன் அவர்களே, அருள் மிகு பிஷப் டாக்டர் பார்பரா கிங் அவர்களே, அருள் மிகு டான் ஸ்ட்ரிக்ட்லாண்ட் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களே, மற்றும் சபையில் அமர்ந்திருக்கும் தாய்மார்களே, கனவான்களே, இன்று உங்கள் முன்னிலையில் அன்பு மற்றும் மன்னிக்கும் குணத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த குணங்களைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இவை மேன்மையான குணங்களாகும். இக்குணங்கள் மனித சமுதாயம் செம்மையாக வாழ அடிப்படையானவை. அன்பு மற்றும் மன்னிக்கும் குணத்தைப் பற்றி உங்கள் முன்னிலையில் தகுந்த அளவு பேச விரும்புகிறேன்.

அன்பை மறைக்க முடியாது. உங்களால் அன்பை மறைக்கவும் முடியாது. அதை வெளிப்படுத்தவும் முடியாது. அது கண்களில், சிரிப்பில், நடையுடை பாவனைகளில் தெரிந்து விடும். அன்பை எப்போதும் மறைக்க முடியாது. அதே சமயம் அதை முற்றிலும் விவரிக்கவும் முடியாது. இந்தப் பிரச்சினையை உலகத்தில் எல்லாக் காதலர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அன்பை எவ்வளவு காட்டினாலும், விரும்பிய அளவு காட்ட முடிய வில்லையே என்ற குறை இருக்கும். இது தான் அன்பின் இயல்பு.

அதே போல் நீங்கள் உண்மையைத் தவிர்க்க முடியாது. அதற்கு நிச்சயமான விளக்கமும் கொடுக்க முடியாது. அழகை நாம் சொந்தம் கொண்டாட முடியாது. அதைக் கைவிடவும் முடியாது. வாழ்க்கை என்பது உண்மை, அன்பு மற்றும் அழகு இந்த மூன்றும் சேர்ந்தது. ஆனால் நம் அனுபவமே வேறாக இருக்கிறது. வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் நாம் அன்பை அனுபவிப்பதில்லை. நாம் வெறுப்பு, பொறாமை, பேராசை, ஆணவம் முதலிய எதிர்மறை குணங்களையும் சந்திக்கிறோம். குழந்தையாகப் பிறந்த போது நாம் எல்லோரும் தூய்மையான அன்பு உடையவர்களாக இருந்தோம். வளர வளர என்ன ஆயிற்று? கள்ளமில்லாத தன்மையை எங்கு தொலைத்தோம்? நமக்கு என்ன ஆகி விட்டது?

எதிர்மறைக் குணங்களின் ஆழத்தில் சென்று பார்த்தால், அங்கும் அன்பு இருப்பது புரியும்.
நாம் பூரணமான விளைவை எதிர்பார்த்து அப்படி நடக்காத போது கோபப்படுகிறோம். எதிலும் பரிபூரணமான விளைவை விரும்புபவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை. நாம் விரும்பியபடி நடக்கா விட்டால் கோபப்படுகிறோம்.அதே போல் பேராசை என்பது என்ன? பொருள்கள் மக்களை விட முக்கியம் என்று எண்ணும் போது அது பேராசையாக மாறுகிறது. ஒருவர் மேல் நாம் வைத்திருக்கும் அன்பு அவருடைய நலனை விட அதிகமாக இருந்தால் அது பொறாமை ஆகிறது. உங்களையே அதிகமாக விரும்பினால் அது ஆணவம் எனப்படும். ஞானத்தோடு கூடிய அன்பு ஒருவரை நடுநிலையில் வைத்து தெய்வீக குணங்களைத் தரும். இங்கு கூடியிருக்கும் அனைத்து குருமார்களும் இதையே சொல்வார்கள்.

நாம் அன்பு செலுத்துவது எப்படி என்று கற்கத் தேவையில்லை. அன்பு நம் இயல்பாகும். நம் உடல் அமினோ அமிலங்களால், புரோட்டின்களால், கார்போஹைட்ரேட்களால் ஆனது போல நம் ஆத்மா அன்பால் ஆனது. நாமே அன்பு. அன்பு என்பது மன எழுச்சி அல்ல. ஒரு விதமான உணர்ச்சி வசப்படும் நிலை அல்ல. அன்பு நம் இயல்பு. இறைவன் நமக்கு அளித்த அன்பை அதே நிலையில் வைத்திருக்க ஞானம் அவசியம். உலகில் உள்ள புனித நூல்கள் அனைத்தும் இதையே சொல்கின்றன. இந்து மதத்தின் பழைய நூல்களில் இறைவனின் இயல்பை “அஸ்தி, பாத்தி, ப்ரீதி” என்று விவரிக்கிறார்கள். இறைவன் என்பது “இருப்பது, ப்ரகாசமானது, அன்பானது” என்று இதன் பொருளாகும்.

இறைவன் எப்போதும் இருப்பவர். ப்ரகாசமானவர். அன்பே உருவானவர். ஒரே ஒரு இறைவன் தான் இருக்கிறார். பலர் அல்ல. பொதுவாக இந்து மதத்தில் பல கடவுள்கள் இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி அல்ல. ஒரே கடவுள் பல விதமான உடை அலங்காரங்களில், பல வடிவங்களில் நமக்குக் காட்சி அளிக்கிறார். கடவுள் ஒருவரே. உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கோதுமை ஒன்று தான். அதில் பல விதமான பண்டங்கள் செய்கிறோம். இப்பண்டங்கள் கோதுமையின் பல விதமான வெளிப்பாடுகள் என்று சொல்லலாம். அதே போல ஒரே கடவுளின் பல வித ரூபங்களை இந்துக்கள் வழிபடுகிறார்கள்.

அன்பே கடவுள். அதே போல் நாமும் அன்பின் வடிவமானவர்கள். இந்த ஞானத்தை எங்கோ இழந்து விட்டோம்.. கள்ளமற்ற தன்மையை இழந்து விட்டோம். அதனால் தான் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. நம் வளர்ச்சிக்காக, பிரார்த்தனையின் ஆழத்துக்குச் செல்ல, ஐந்து நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு, ஐந்து விதமான அனுபவங்களைப் பெறுவது அவசியம்.

முதல் அனுபவம்:

ஒரு நாள் சிறைச் சாலைக்குச் சென்று நேரத்தைச் செலவிடவேண்டும். குற்றம் செய்து விட்டு சிறைக்கு செல்ல வேண்டாம். ஒரு நாள் அங்கு போய் சிறைக் கைதிகளோடு பேசிவிட்டு வாருங்கள். சமூகத்தால் வெறுக்கப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டிருக்கும் இக் கைதிகளிடம் பேசும் போது, ஒவ்வொரு கைதிக்குள்ளும் ஒரு அழகான நல்ல மனிதன் இருப்பதை காணலாம். நீங்கள் அந்த க்ஷணத்தில் அவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதை உணரலாம்.

ஒவ்வொரு குற்றவாளிக்குள்ளும் ஒரு உதவிக்காகக் கதறும் ஒரு மனிதன் இருப்பான். உன் பார்வையை விரித்து நோக்கும் போது குற்றவாளியின் பலிகடா போன்ற நிலையையும் காணலாம். ஆதரவற்ற அந்த மனிதனைப் பார்க்கும் போது அவனை மன்னிக்கத் தேவை இல்லை. மன்னிப்பு நிகழும். இதயத்தில் கருணை பொங்கும்.

சரியான ஞானம் இல்லாததால், தவறான கல்வியால், தவறான போதனைகளால், உணர்ச்சி வசப்படுவதால், உணர்ச்சிகளை, கோபத்தை அடக்கத் தெரியாததால், மனக் குழப்பத்தால் குற்றம் நிகழ்கிறது. கட்டுப்படுத்த முடியாத மன எழுச்சியால் செய்யும் காரியம் குற்றத்தில் முடியும். ஞானம் ஒன்று தான் இந்த மன எழுச்சிகளை கட்டுக்குள் வைக்க உதவும். காரியம் செய்யும் முன் உன் சிந்தனையைத் தூண்டி இது சரியல்ல என்று சொல்லி குற்றம் நிகழ்வதைத் தடுக்கும்.முதலில் காரியம் செய்து விட்டு பின்னால் யோசிப்பது குற்றம் நடக்க ஏதுவாகிறது. சிலர் தவறான கொள்கைகள் வைத்திருப்பதால் (மதவெறி) குற்றம் செய்கிறார்கள். பலர் தன்னையறியாமலேயே குற்றம் செய்து விடுகிறார்கள். இந்த இரண்டு நிலைகளிலிருந்து குற்றம் நடக்கிறது. அல்லது தவறு நடக்கிறது. அறியாமையால், மகிழ்ச்சியின்மையால், உள்ளே இருக்கும் தெய்வத் தன்மையோடு இணையாததால் மக்கள் தவறு செய்கிறார்கள். யார் ஒருவர் மகிழ்ச்சி, திருப்தி மற்றும் அன்பாக இருக்கிறாரோ, அவர் யாருக்கும் தீங்கு செய்யமாட்டார். அப்படி நடப்பது சாத்தியமல்ல.

ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைக்கிறார் என்றால் அவருக்குள் ஒரு ஆழமான காயம் இருக்கிறது, அதைக் குணப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதனால் சிறைச்சாலையில் ஒரு நாள் கழிப்பது ஒரு நல்ல அனுபவமாகும். நம் பார்வையை விரிவாக்கி, சிறைக் கைதிகள் மேல் கருணை காட்ட வேண்டும், அவர்கள் நம் மன்னிப்புக்கு பாத்திரமானவர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும். பிறரை மன்னிப்பது நமக்கு எளிதாகி விடும்.

இரண்டாவது அனுபவம்:

ஒரு நாள் ஒரு மருத்துவமனையில் நம் நேரத்தைக் கழிக்கலாம். நோயாளிகளைப் பார்க்கும் போது, ஆரோக்கியமான உனக்கு கடவுளிடம் நன்றியுணர்வு ஏற்படும். கருணையும் நன்றியுணர்வும் பெருக்கெடுக்கும்.

மூன்றாவது அனுபவம்:

ஒரு பள்ளி ஆசிரியராக ஒரு நாள் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் கழிக்க வேண்டும். நீங்கள் கற்றுக் கொடுப்பதை அவர்கள் எளிதில் கற்க மாட்டார்கள். உங்களுக்கு மிகவும் பொறுமை தேவை. அவர்களின் குறையை உணர்ந்து, அவர்களை ஏற்றுக் கொண்டு திரும்பத் திரும்ப அவர்களுக்குப் புரியும்படி செய்ய வேண்டும்.

நமக்குப் பொறுமை இருந்தால் அவர்களுக்குப் புரிய வைக்கலாம். ஒரு பள்ளி ஆசிரியராக இருப்பதும் பெரிய சோதனை தான். ஜெர்மனியில் 40% ஆசிரியர்கள் மனச் சிதைவால்  வாடுவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். பள்ளிக்குச் சென்று மன அழுத்தம் உடைய முகங்களைப் பார்க்க வேண்டும். நாள் முழுதும் அப்படிப் பார்த்து விட்டு வீடு திரும்பும் போது அவர்களும் மன அழுத்தத்தால் அவதியுறுவார்கள்.

உங்களிடம் உள்ளதையே நீங்கள் மற்றவருக்குக் கொடுக்க முடியும். நீங்கள் மகிழ்ச்சியோடு இருந்தால், மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடியும். நீங்கள் அன்பானவராக இருந்தால் மற்றவர்களிடம் அன்பு செலுத்த முடியும். நீங்கள் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுக்கும் அந்த பாதிப்பை ஏற்படுத்துவீர்கள். இது மிகவும் துர்பாக்கியமான நிலையாகும். நம் மனத்தையும், மன எழுச்சிகளையும் கையாளும் திறமை நம்மிடம் இல்லை. நீங்கள் ஒரு நாள் பள்ளி ஆசிரியராக இருக்கும் அனுபவம் உங்களுக்கு மிகவும் பொறுமையையும், முட்டாள் தனத்தை சகித்துகொள்ளும் மனநிலையையும் கொடுத்து, அன்போடு கற்றுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்கும். ஆசிரியர் என்பவர் நிபந்தனை இன்றி அன்பு செலுத்துபவர்.
ஒரு முறை யாரோ என்னிடம் கேட்டார். இப்படிச் செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? ஏன் பல தேசங்களுக்குச் சென்று இரவு பகலாக மக்களிடம் பேசுகிறீர்கள். மூச்சுப் பயிற்சி முகாம்கள் நடத்துகிறீர்கள். உங்களுக்கு என்ன கிடைக்கிறது? என்று கேட்டார். ““பை” யின் வாழ்க்கை என்ற திரைப் படத்தைப் பார்த்தீர்களா?” என்று நான் அவரைக் கேட்டேன். “ஆம்” என்று சொன்னார்.

“படத்தைப் பார்த்த பின், யாரையாவது அழைத்து இது ஒரு நல்ல திரைப்படம்” என்று சொன்னீர்களா?” என்று கேட்டேன். “ஆம். பல நண்பர்களை (தொலைபேசியில்) அழைத்து, இது ஒரு நல்ல திரைப்படம். நீங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்” என்றார். “படத்தை எடுத்தவர் உங்களுக்கு ஏதாவது ஊக்கத் தொகை கொடுத்தாரா?” என்று கேட்டேன். “இல்லை” என்றார்.
மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது தான் மகிழ்ச்சியின் இயல்பு என்று நான் சொன்னேன். நீ மகிழ்ச்சியாக இருக்க உனக்கு ஒரு வழி தெரியும் போது, அதை மற்றவர்களுக்குச் சொல்வதில், பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சி அடைவாய். நான் செய்வதும் அதுவே. பகிர்ந்து கொள்வதும் மற்றவர்களின் நன்மையை வேண்டுவதுமே என் நோக்கம்.

நான்காவது அனுபவம்:

ஒரு நாள் மனநோய் மருத்துவ மனைக்குச் சென்று மன நோயால் பாதிக்கபட்டவர்களுடன் நேரத்தைக் கழிப்பது. உங்களைச் சுற்றி நடக்கும் அர்த்தமில்லாத பேச்சு வார்த்தைகளைக் கேளுங்கள். உலகமே இப்படித்தான் என்று உங்களுக்குத் தோன்றும். ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு திசையில் பேசுகிறார்கள். இதை நீ புரிந்து கொண்டால், மற்றவர்கள் உன்னை ஒரு இயந்திரம் போல் உபயோகிக்க அனுமதிக்க மாட்டாய். உன் பொத்தான்களை அழுத்த விடமாட்டாய். உள்ளுக்குள் உன் பலம் அதிகரித்திருப்பதை உணர்வாய். யாராவது உன்னைப் பற்றி கேவலமாகப் பேசினாலும் உனக்கு பாதிப்பு இருக்காது. மற்றவர்களின் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நிற்பாய். அவர்களின் குற்றச் சாட்டுகளில் உண்மை இருந்தால், அதை ஏற்றுக் கொள்வாய். அதே போல தேவையான போது மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு உகந்த கருத்துக்களைச் சொல்ல முன் வருவாய்.

இந்த ஒரு நாள் அனுபவத்துக்குப் பின், மக்களின் அர்த்தமற்ற பேச்சுக்களைக் கேட்டபின், நீ உண்மையான குற்றச்சாட்டை ஏற்க மறுக்க மாட்டாய்.அதேபோல மற்றவரின் முன்னேற்றத்துக்காக அவர்களின் குறைகளை எடுத்துச் சொல்லத் தயங்க மாட்டாய்.

ஐந்தாவது அனுபவம்:

ஒரு விவசாயியுடன் ஒரு நாள் முழுதும் அவர் நிலத்தில் வேலை செய்ய வேண்டும். அதன் பின் இந்த பூமியைக் காப்பதன் முக்கியத்துவத்தை உணர்வாய். சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உன் மனத்தில் பதியும். இந்த பூமியையும், சுற்றுச் சூழலையும் நாம் காக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். அப்படிச் செய்யாவிட்டால், வரும் சந்ததியினருக்கு ஒரு மாசில்லாத சுற்றுச் சூழலையும், இயற்கை வளம் மிக்க நிலத்தையும் விட்டுச் செல்ல முடியாது.
வரும் சந்ததியினருக்கு நல்ல வாழ்க்கை அவசியம். சுவாசிக்கத் தகுந்த தூய்மையான காற்று வேண்டும். குடிக்க மற்றும் வேறு உபயோகத்துக்குத் தூய்மையான நீர் அவசியம். இயற்கை வளம் மிக்க நிலமும் வேண்டும்.

விவசாய நிலத்துக்கு கேடு விளைவிக்கும் செயற்கை உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளை உபயோகித்து விளைந்த உணவுப் பண்டங்களை உண்பதால் நம் ஆரோக்கியம் கெட்டு நோய்வாய்ப் படுகிறோம். செயற்கை உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளை அதிக அளவில் உபயோகிப்பதால், நோய்களும் அதிகரித்து வருகின்றன. நிலமும் தன் வளத்தை இழக்கிறது.

அமெரிக்காவில் உள்ள தேசிய உணவு ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, இன்றைக்கு விளையும் வாழைப் பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்து, 1930, 40 ம் ஆண்டுகளில் விளைந்த வாழைப் பழத்தில் இருந்த ஊட்டச்சத்தை விட மிகவும் குறைவாக இருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஏனென்றால் நாம் செயற்கை உரம் மற்றும் கிருமி நாசினிகளால் நிலத்தின் சத்துக்களை வீணடித்து விட்டோம்.

நில வளத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். நிலத்தை நேசிப்பது, மக்களை நேசிப்பது மற்றும் கடவுளை நேசிப்பதற்குச் சமமாகும். இது ஒரு காசின் இரண்டு பக்கங்கள் போல இருக்கிறது. நான் கடவுளை நேசிக்கிறேன். ஆனால் மக்களைப் பற்றிய அக்கரை இல்லை என்று சொல்வதில் அர்த்தம் கிடையாது. அன்பைக் கேட்டுப் பெற முயன்றால் அது அழிந்து விடும். உறவுகளில் பொதுவாக இப்படி நடப்பதுண்டு. நாம் வெகு சீக்கிரம் காதல் வயப் படுகிறோம். சீக்கிரமே அந்தக் காதல் தோல்வி அடைகிறது. இது நாம் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதைப் போல் இருக்கிறது. அன்பில் நிபந்தனை விதித்து கேட்டுப் பெற முயன்றால் அது அழிந்து விடும்.

இங்கிருக்கும் கணவன்,மனைவியருக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். உங்கள் துணைவர் (துணைவி) உங்களிடம் அன்பு செலுத்துவது குறைந்து விட்டதாக நீங்கள் நினைக்கும் போது, “உண்மையாகவே என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்காதீர்கள். “ஏன் என்னை இவ்வளவு அதிகமாக நேசிக்கிறாய்?” என்று கேளுங்கள். அவர் உன்னை விரும்பாமல் இருந்தாலும் உன் மேல் அன்பு அதிகரிக்கும். நீ ஒருவரை நேசிப்பதை நிரூபிப்பது மிகவும் கடினம். மனதில் பெரிய சுமையாகி விடும். அன்பை முழுதும் வெளிப்படுத்த முடியாது.

நான் உலகில் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். கீழை நாடுகளில் கணவன் மனைவி ஒருவர் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவது கிடையாது. வாய்விட்டு சொல்வதும் கிடையாது. மேலை நாடுகளில் அன்பை அடிக்கடி வெளிப்படுத்துவார்கள். தன் துணைவரை, துணைவியை அடிக்கொரு தரம் “தேனே! தேனே!” என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. (சர்க்கரை வியாதி வந்து விடும்!) கீழை நாடுகளில் சில கணவர்கள் தங்கள் மனைவியிடம் வாழ்நாள் முழுதும் “உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்வதே இல்லை.

இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள பாதையில் செல்ல வேண்டும். இரண்டிலும் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அன்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அதே சமயம் அதை மறைக்கவும் வேண்டியிருக்கும். வாய் மொழியால் அன்பை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதை உன் செயல்கள் மற்றும் உணர்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தலாம். ஒரு விதையை மிக ஆழத்தில் விதைத்தால் அது முளைக்காது. நிலத்தின் மேல் பரப்பில் வைத்தாலும் அது முளைக்காது. நிலத்தின் மேல் பரப்பிலிருந்து சற்று தோண்டி விட்டு விதையை விதைத்து நீர் விட்டால் அது முளை விட்டு வளர்ந்து அழகான செடியாகும்.
அன்பை வெளிப்படுத்துவது தேவை தான். உள்ளுக்குள் வைத்துக் கொள்வது சிறந்தது. அது நம் செயல்கள் மூலம் வெளிப்படட்டும். நான் சிறுவனாக இருந்த போது ஒரு சட்டை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்றேன். அவரிடம் தையல் மெஷின் இல்லை. கையாலேயே தைப்பது அவர் வழக்கம். அவர் தையல் ஊசியை தன் தொப்பியில் சொருகி வைத்திருந்தார். கத்தரிக்கோலை கால் அடியில் வைத்திருந்தார். அவரிடமிருந்து நான் கற்றது இது தான்.எது நறுக்குகிறதோ, இணைப்பைத் துண்டிக்கிறதோ, அதை நம் காலின் கீழ் வைத்திருக்க வேண்டும்.எது இணைக்கிறதோ, துண்டுகளை ஒன்று சேர்க்கிறதோ அதை மரியாதையோடு தலையில் வைக்க வேண்டும். மக்களைப் பிரிக்கும் தீய சக்திகளை காலின் கீழ் வைக்க வேண்டும். மக்களை ஒன்று சேர்க்கும் நல்ல சக்திகளுக்கு மரியாதை தர வேண்டும். ஒரு தையல் காரரிடமிருந்து நான் இந்தப் பாடத்தைக் கற்றேன். உலகம் முழுதும் அன்பான அனுபவங்கள் நிறைந்திருக்கும். அவைகளைப் பார்த்து நாமும் கற்று நம் வாழ்க்கையில் அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உன் வாழ்க்கைத் துணைவரிடமிருந்து (துணைவியிடமிருந்து) அன்பைக் கேட்டுப் பெற முயலாதே. நிபந்தனை விதிக்காதே. அவரிடம் எப்போதும் அன்பு செலுத்துகிறய் என்பதை அவர் உணர வேண்டும். இங்கு குழுமியிருக்கும் மரியாதைக்குரிய பாதிரிகள் தங்கள் பிரார்த்தனையை நிகழ்த்தும் போது, இறைவனின் நிபந்தனையற்ற அன்பை நமக்கு உணர்த்துகிறார்கள். அவர் நம்மைச் சேர்ந்தவர் என்று நாம் அறிகிறோம். இது ஒரு மிக உயர்ந்த (போற்றக் கூடிய) செயல். அவர்களின் நற்குணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. அன்பும் மன்னிக்கும் குணமும் இணைந்து செயல்படும். மன்னிக்கும் குணம் கருணையாக வெகு எளிதில் மாறும்.

நீங்கள் வளர்க்கும் பிரியமான நாய்க்குட்டி, நீங்கள் வீட்டுக்குத் திரும்பியதும் தன் அன்பை எப்படிக் காட்டுகிறது என்று அனுபவித்திருப்பீர்கள். அதே அன்பைத் தான் ப்ரபஞ்சத்தில் உள்ள மரங்களும், இயற்கையும் வெளிப்படுத்துகின்றன.


நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நான் உங்களில் ஒருவன். எல்லாம் வல்ல இறைவன் உங்களை வாழ்த்தி நன்மை அளிக்கட்டும்.