விழித்தெழு!

21 ஜூலை 2013 மண்ட்ரியல், கனடா

கே: குருதேவ், நீங்கள் எங்களை இந்தப் பிறவியில் கண்டு பிடித்தீர்கள். நீங்கள் இந்தப் புவியில் வெகு அரிதாக அவதரிக்கிறீர்கள் அல்லது அப்படி நான் நினைக்கிறேன், அப்படி இருக்கையில் மற்ற பிறவிகளில் உங்களை நாங்கள் சந்திக்கும் வரை எங்களுக்கு என்ன ஆகும்? நாங்கள் கொஞ்சம் பின்னோக்கி சென்றுவிடுவோமா? எங்கள் ஞானம் தொடர்ந்து வளருமா?

குருதேவ்: பின்னோக்கிச் செல்வது என்பது இல்லை! இதை தான் நாம் குரு பூர்ணிமாவில் கொண்டாடுகிறோம் எவ்வளவு தூரம் நாம் வளர்ந்திருக்கிறோம், எப்படி நாம் பின்னோக்கி செல்லவில்லை என்று மொத்தமாக திரும்பி பார்க்கிறோம். நீங்கள் பத்தடி நடந்தால், எட்டடி பின்னோக்கிச் செல்வது போல தோன்றும், ஆனால் எல்லா பத்தடியும் அல்ல. மேலும், நீங்கள் எட்டடி என்று நினைப்பது உண்மையில் நான்கு-ஐந்து அடி அல்லது மூன்று -நான்கு அடி. ஆனால் கவலை வேண்டாம், நான் கவலை படுவதில்லை, நீங்களும் கவலை படவேண்டாம்! ஒன்று மட்டும் நாம் உறுதியாக்க வேண்டும்,‘விஷயங்கள் நடக்கிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் நான் என் மகிழ்ச்சியையாவது இழக்காமல் இருப்பேனாக! நான் மகிழ்ச்சியாக இருந்து கொள்கிறேன்!’ நீங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதால், நிச்சயமாக விஷயங்கள் மாறப் போவதில்லை. நீங்கள் ஒரு திட்டத்தில் அல்லது ஒரு வேலையில் ஈடுபடுகிறீர்கள், அது நடக்கவில்லை. நடக்கவில்லை என்ற காரணத்திற்காகவே; குறைந்த பட்சம் ஏற்கனவே இருப்பதை நீங்கள் இழந்து விடாதீர்கள். உங்களிடம் உள்ள மகிழ்ச்சியை இழந்து விடாதீர்கள்! இதை ஞாபகத்தில் கொண்டால் போதும்!

சாதனை செய்வது என்றால் என்ன தெரியுமா? நான் இறைவனுக்கு அருகிலிருக்கிறேன். பிரபஞ்சப் பேருணர்வுக்கு அருகிலிருக்கிறேன். மகா மனதோடு எனக்கு தொடர்பிருக்கிறது!’ இந்த தொடர்பே போதுமானது. இதை ஞாபகத்தில் கொண்டால், உங்கள் சாதனையில் நீங்கள் வெற்றி அடைந்தீர்கள்; நீங்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை!



நீங்கள் தியானத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை, தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். மனதிற்கும் உடலுக்கும் நலம் பயக்கும் தியானம், பிராணாயாமம் மற்றும் எல்லாவற்றையும் செய்து வாருங்கள். ஆனால் ஆன்மீக ரீதியில், இதைத் தெரிந்து கொண்டு, உங்கள் பக்கத்தில் அதை உணரவேண்டும். 

‘மகா மனதோடு நான் தொடர்பிலிருக்கிறேன். இறைவனோடு நான் தொடர்பிலிருக்கிறேன். என் ஆசார்யனோடு தொடர்பிலிருக்கிறேன். இவை எல்லாம் ஒன்று தான். என்னுடனேயே நான் தொடர்பிலிருக்கிறேன்’. சில விஷயங்களை மனம் ஏற்றுக் கொள்கிறது, சில விஷயங்களை அது ஏற்றுக் கொள்வதில்லை. ‘நான் சரி’, என்று சில நேரம் உங்கள் புத்தி நினைக்கலாம், அப்படியும் இருக்கலாம், கவலை வேண்டாம், அவை எல்லாவற்றையும் ஒரு பக்கம் தள்ளுங்கள். ஒரு அளவுக்குள் மட்டுப்பட்ட செயல் நிலைகளில், எப்போதும் ஒன்றை விட மேலான செயல்கள் இருக்கும். சில நேரம் இது மேலானதாய் இருக்கும் சில நேரம் அது மேலானதாய் இருக்கும். எல்லா செயல்களிலும் குற்றம் குறைகள் உண்டு, எல்லா செயல்களிலும் நன்மையையும் உண்டு. மிகச் சரியான செயல் என்று ஒன்று கூட இல்லை. இது அப்படி தோன்றுகிறது, ஆனால் தோற்றத்திற்கும் நிஜத்தில் இருப்பதற்கும் வித்தியாசம் மிக உண்டு! ‘உங்கள் முக்கிய நோக்கம் ஞானத்தை தக்க வைத்துக் கொள்வது, மேலும் அதை அப்படியே அடித்து பிடித்து வைத்துக் கொள்வது. எனவே அந்த மகிழ்ச்சியை விட்டு விடாதீர்கள்!’

செய்வதை விட சொல்வது சுலபம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் சொல்லலாம், ‘குருதேவ், உங்களுக்கு இது அவ்வளவு எளிது, ஆனால் எனக்கு எளிதல்ல, மிகக் கடினம்.’ இது எனக்கு நன்றாகவே தெரியும், ஆனாலும் குறைந்த பட்சம் உங்கள் மகிழ்ச்சியையாவது தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லத் தோன்றுவதை என்னால் தடுக்க முடியவில்லை!

உங்கள் உறவுகளை இழந்திருக்கலாம், ஆனால் உங்கள் புன்னகையை இழக்காதீர்கள்! ஆம், ஒரு உறவை இழந்துவிட்டீர்கள், கவலை வேண்டாம், 700 கோடி மக்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்! வேறு யாராவது வந்து உங்களை கண்டுபிடிப்பார்கள். நீங்கள் புன்னகையை வைத்திருந்தால், யாராவது ஒருவர் உங்கள் வாழ்வில் வருவார்கள். அப்படி அல்லாமல், மன அழுத்தம் கொண்டவரிடம் யார் வந்து நட்பு கொள்வார்கள்? நீங்கள் மன அழுத்தம் கொண்டவராகவோ அல்லது மன அழுத்தம் கொண்ட தோற்றத்தோடு இருந்தாலோ, உங்களால் வேறு ஒரு ஆண் நண்பரையோ அல்லது பெண் நண்பரையோ கண்டுபிடிக்க முடியாது. யாரும் உங்களைப் பார்க்க மாட்டார்கள், மேலும் துயரம் தோய்ந்த முகத்தைக் கண்டு யாரும் உங்களிடம் வர மாட்டார்கள்.

நீங்கள் துணையைத் தேடும் போது உங்களுக்குச் மிகச்சரியாக தேவைப்படுவது உற்சாகமும் புன்னகையும் தான். இப்போது, உங்களுக்கு வேலையில்லாமல் இருக்கலாம், அதனால் பரவாயில்லை. மன அழுத்தம் தந்த தோற்றத்தோடு துயரம் தோய்ந்த முகத்தோடு இருப்பவர்க்கு யார் வேலை தர விரும்புவாகர்கள்? இங்கு பாருங்கள், வாழ்கை தொடருவே செய்யும். நீங்கள் பட்டினி கிடந்து சாகப் போவதில்லை. ஒவ்வொன்றும் உங்களிடம் வரும்! 

நீங்கள் பிரபஞ்ச ஆன்மாவோடு, மகா மனதோடு  தொடர்பிலிருக்கிறீர்கள். நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள். ‘என்ன வந்தாலும் சரி, நான் நடக்கப் போகிறேன்! என் மடியில் வந்து விழும் வேலையை கண்டுபிடிக்கப் போகிறேன். அதை நான் நிச்சயம் தேடத்தான் வேண்டும்.’ இதை நீங்கள் செய்தால், பிறகு வாழும் கலை தன் நோக்கத்தில் வெற்றியடைந்து விட்டது! 

நீங்கள் வீட்டில் யாருடனாவது வாக்குவாதமோ அல்லது சண்டையோ என்று வைத்துக் கொள்வோம், பிறகு உங்கள் முகத்தில் புன்னகை திரும்ப வர நீண்ட நேரம் எடுத்து கொள்ளாதீர்கள். உங்கள் கைபேசியில் உள்ள ஒலி, காணொளி, புகைப்படக் கருவி வசதி போன்று அது இருக்க வேண்டும். உங்கள் கைபேசியை அதிக நேரம் புகைப்படக் கருவியாக வைத்திருப்பதில்லை, அதை சீக்கிரமே மாற்றிவிட முடிகிறது. சரி தானே? அதைப் போலவே, மனம் சண்டை போடும் நிலையிலிருந்து அடுத்த நிமிடம் மாற்றிவிட வேண்டும்!

சிலருக்கு இது ஒரு பெரிய விடுதலை – சண்டை போடுவதற்கு குருதேவ் அனுமதி கொடுத்து விட்டார்! நெஞ்சிலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கி விட்டது! கவலை வேண்டாம், சண்டை போட வேண்டுமென்றால், சண்டை போடுங்கள், ஆனால் திரும்ப வந்து புன்னகை செய்யுங்கள். மாறிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு அந்தத் திறன் இருக்கிறது! எப்போதும் ஆம் என்று சொல்லிக்கொண்டு, வலுவற்று, ஒரு கறிகாய் போல நீங்கள் இருப்பதை விரும்பவில்லை. நீங்கள் வலிமையும் புன்னகையும், உறுதியும் சூட்சுமமும், விவேகமும் உணர்வும், என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

மிகுந்த விவேகமிக்கவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் காரணமற்ற எதையும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. காரணமற்ற ஒன்றை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் உணர்வுகளை இழந்து விடுகிறீர்கள், சரி தானே?
உணர்வு பூர்வமானவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் விவேகிகளாய் இருப்பதில்லை. அவர்கள் பேசும் போது யாராவது கொட்டாவி விட்டால்கூட, ‘பார், நான் சொல்வதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை!’ என்று சொல்லும் அளவு உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். எங்கோ ஓரிடத்தில், கொட்டாவி விட்டது விவாகரத்துக்குக் காரணமாகி விட்டதாம் தெரியுமா?

அந்த மனைவி சொன்னாள், ‘நான் எப்போது என் கணவரிடம் பேசினாலும் அவர் கொட்டாவி விடத் தொடங்கிவிடுகிறார், அவருக்கு என்னிடம் ஆர்வமே இல்லை. என்னுடைய சுயமரியாதைக்கு செய்யப் படும் அவமானம். அவரிடம் பேசும் ஒவ்வொரு சமயமும், அவர் கொட்டாவி விட ஆரம்பிக்கிறார்.’ எனவே, மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருப்பவர்கள் விவேகிகளாய் இருப்பதில்லை. நீங்கள் உணர்வுடையவராய் அதே நேரம் விவேகமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், இப்போது திரும்பிச் சென்றவுடன், ‘ஓ, நான் விவேகமாய் இருக்கிறேன் ஆனால் உணர்வுபூர்வமாய் இல்லை,’ அல்லது ‘நான் உணர்வு பூர்வமாய் இருக்கிறேன் ஆனால் விவேகியாய் இல்லை’, என்று சொல்ல வேண்டாம்.

திரும்ப அந்தப் புலம்பல் பயணம் வேண்டாம். மனதில், பின்னால் எங்கோ ஒரு மூலையில் அதை வைத்துக் கொள்ளுங்கள்; அது அங்கேயே இருக்கும். எப்படி சுயத்தைப் பற்றிய ஞானத்தைப் பெறுவீர்கள்? இதை சமஸ்க்ருதத்தில் பிரத்யபிஜ்னா என்பார்கள். (எந்த மொழியிலும் இத்தகு இணையான வார்த்தை கிடையாது, அவ்வளவு அழகான வார்த்தை இது.)

பிரத்யபிஜ்னா என்றால் உணர்ந்துகொள்வது என்று பொருள். பிரத்யபிஜ்ன ஹ்ருதயம் என்பது இதயம் சுயத்தை உணர்ந்து கொண்ட நிலை. இவ்வளவு தான் ஞானம், இதற்கு மேல் எதுவும் இல்லை. இந்த சாமான நிலை, இந்த தியானம், நாம் பேசிய மூன்று விஷயங்களான பற்று,பற்றின்மை மற்றும் பரிவு. செய்வதால் வருவதில்லை ஞானம், மனப்பூர்வமாக உணரும் போதே வருவது.

உதாரணமாக, சிலர் தன் மூக்குக் கண்ணாடியை தன் தலையிலேயே மாட்டிக் கொண்டு கண்ணாடி எங்கே என்று தேடிக் கொண்டிருப்பார்கள். யாராவது ஒருவர் வந்து, ‘ஏய், இது இங்கே உன் தலையிலேயே இருக்கிறது!’ என்று சொல்வார்கள். பிறகே அவர் சொல்வார், ‘ஓ, ஆமாம்!’ எனவே, ஞானம் உடனடியாக தன் பலனைத் தருகிறது. நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை; எந்த வினைகளும் இடையில் இல்லை, எந்த செயல்களும் இடையில் இல்லை. நீங்கள் மூக்குக் கண்ணாடியைத் தேடிக் கொண்டிருந்தீர்கள், திடீரென்று அது அங்கேயே இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டீர்கள். மூக்குக் கண்ணாடியைப் பற்றிய ஞானம் அதனுடனேயே வருகிறது. அது உங்களுக்குக் கிடைத்த காரணம் அது 

ஏற்கனவே உங்களிடம் இருந்தது தான். ஞானத்திற்கும் அதை அடைவதற்கும் இடையே தூரம் எதுவும் இல்லை. தெளிவாக்கி விடுகிறேன். இப்போது உங்களுக்கு ஆப்பிள் பை என்ற தின்பண்டத்தைப் பற்றி தெரிந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆப்பிள் பை பற்றிய அறிவிற்கும் அதை அடைவதற்கும் இடையே தூரம் இருக்கிறது. அதாவது, அதை அடைவதற்கும் அதை உண்பதற்கும். ஆனால், மூக்குக் கண்ணாடி உங்களிடமேயே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே, அந்த அறிவே பலன் தான். அந்த அறிவு அதன் பலனை உடனேயே கொடுத்தும் விடுகிறது. அதற்கு இடையே எந்த செயலும் இல்லை.

குரு வாணி, ஞானத்தின் வார்த்தைகள், அப்படி என்றால் நீங்கள் அந்த வார்த்தைகளைக் (ஞானத்தை) கேளுங்கள், மற்றும் அது உடனடியாக உங்களுக்குக் கிடைத்து விடுகிறது. அதற்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்பது இல்லைபாருங்கள், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு எதுவும் தேவையில்லை. புரிகிறதா? பிராணாயாமம், சத்சங்கம், பஜனை, பக்தி; இவையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் இதுவரை சொல்லி வந்திருக்கிறேன். இப்போது நான் ஏதோ முற்றிலும் வித்தியாசமாக உங்களுக்குச் சொல்கிறேன்! என்ன? விழித்துக் கொள்ளுங்கள்!

எப்படி விழிப்பது? இது ஒரு கேள்வியல்ல. நான் சொல்வதை கேட்டுவிட்டீர்கள், நீங்கள் ஏற்கனவே விழித்துக் கொண்டீர்கள்! யாராவது தூங்கிகொண்டிருக்கிறார்கள், நீங்கள் சொல்கிறீர்கள், ‘ஹே, எழுந்திரு!’ நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்டால் அவர்கள் ஏற்கனவே எழுந்துவிட்டார்கள் என்று அர்த்தம் சரியா? அதுதான் இது, உடனடியாக! சித்தி, அதை அடைவது, மற்றும் அதைத் தெரிந்து கொள்வது இவற்றிற்கு இடையே எந்த இடைவெளியும் இல்லை. அவ்வளவு தான்! இப்போது பாருங்கள், உள்ளுக்குள்ளே அவ்வளவு நிம்மதியை இது உங்களுக்கு கொடுக்கிறது! திடீரென்று, நீங்கள் நினைக்கிறீர்கள், ‘நான் எதுவும் செய்யத் தேவையில்லை’. யாரோ ஒருவர் சொன்னார் நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்று, இப்போது நீங்கள் ஒப்பனை ஏதும் செய்யத் தேவையில்லை, நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள்; எளிமையாக அதை நீங்கள் நம்ப வேண்டும் அவ்வளவே.

இப்போது நீங்கள் சொல்லிக் கொண்டு போகலாம், ‘இல்லை, நான் அழகில்லை, என் மூக்கைப் பார் வளைந்து இருக்கிறது, என் புருவங்கள் சிறிதாய் இருக்கிறது. நான் என் கால்களை சீர் செய்ய வேண்டுமா கைகளை சீர் செய்ய வேண்டுமா? என் புருவங்களை எடுத்துவிட்டு எதையாவது செய்து நன்றாக இருக்கும்படி செய்யலாம்.’ நான் சொல்கிறேன், நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள்! அவ்வளவு தான் முடிந்தது! நீங்கள் எந்த ஒப்பனை சிகிச்சையும் செய்யத் தேவையில்லை!

நீங்கள் அழகில்லை என்று நினைத்துக் கொண்டு, அதனால் ஒப்பனை நிபுணரிடம் சென்று, முகப் பவுடர் போட்டு, உங்கள் கன்னம் சிவப்பாக அதற்கு மேல் இளஞ் சிவப்பு வண்ணம் தீட்டி, இங்கே கொஞ்சம் பச்சை நிறம், அங்கே கொஞ்சம் நீல நிறம் தடவி, கண்களுக்கு மேலே ஜிகினாத் துகள்களை ஒட்டினால் தான் நீங்கள் அழகாவீர்கள் என்று நினைத்தால் உங்களுக்கு நான் என்ன சொல்வது? சரி, செய்து கொள்ளுங்கள்! இது தான் மிகச் சரியாக மக்களின் மனங்களில் நடக்கிறது. யாராவது நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்று சொன்னாலும் கூட, அதை கண்டுகொள்ளாத அளவு செய்வதில் அவர்களுக்கு அவ்வளவு உறுதியான நம்பிக்கை. அவர்கள் சொல்கிறார்கள், ‘இல்லை, முதலில் நான் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்,பிறகு கழுத்துப்பட்டை அணிந்து பளபளப்பான விஷயங்களோடு பார்க்க நன்றாக இருக்க வேண்டும்.’


அதையெல்லாம் செய்து கொள்ள வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, பரவாயில்லை செய்யலாம். அருமையாக உணரவைக்கும், வெளியே மென்மை தரும் தயாரிப்புகள் இருந்து அதை நீங்கள் உபயோகிக்க விரும்பினால், உள்ளேயும் நீங்கள் அருமையாகவும் மென்மையாகவும் இருக்கிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.