மதத்திலிருந்து ஆன்மீகத்திற்கு

ஜூலை – 30 – 2013 - பேட் ஆண்டோகஸ்ட் - ஜெர்மனி



கே: மதம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு தடையாக இருப்பதனால் என்னால் முன்னேற முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: கவலைப்பட வேண்டாம். மதத்திலிருந்து ஆண்மீகத்திற்கு செல்லுங்கள். நீங்கள் ஒரு ஆன்மீகவாதி என்பதே போதும். ஒவ்வொரு மதத்திலும் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எல்லா மதங்களிலிருந்தும் கொஞ்சம் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து செல்லுங்கள். எதிலும் தடைப்பட்டு நிற்க வேண்டாம்.  

நீங்கள் அனுமதிக்காத வரையில் எதுவுமே தடையாக இருக்க முடியாது. தடையாக இருப்பது நீங்கள் தான், உங்கள் மனம் தான். கடவுளுக்கு எதிராக பாவம் செய்வதாக ஒரு குற்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுவதே காரணம். ஆன்மீகத்திலிருப்பது எப்படி ஒரு பாவமாக முடியும்? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது, அன்பாக இருப்பது, உலகில் நல்லனவற்றையே செய்வது, சலனமற்று அமைதியாகவும் பக்தியுடனும் இருப்பது எவ்வாறு பாவமாகும்? 

பாவம் செய்து விடுவோம் என்கின்ற குற்ற உணர்வும் பயமும் மக்களின் மனதில் திணிக்கப் பட்டுள்ளது. இதை செய்யாதீர்கள், அதை செய்யாதீர்கள் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்றெல்லாம் சொல்லப்படும் போது விரக்தியும் பலவீனமும் உண்டாகின்றது. நீங்கள் வைரம் போன்றவர்கள். அன்பு மற்றும் ஆனந்தத்தின் உள்ளுணர்வு. நீங்கள் யோகப்பயிற்சி மற்றும்   தியானம் செய்ததற்காக கடவுள் உங்கள் மீது கோபம் கொள்ளமாட்டார். கிழக்கத்திய நாடுகளின் செயல்கள் சாத்தானின்  செயல்கள். அவற்றால் கடவுள் உங்கள் மீது கோபம் கொள்வார் என்று மூடத்தனமான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவர் நேற்று என்னிடம் சொன்னார். "குருதேவ், என்னுடைய சக மாணவன் ஒருவன் மதம் மாறி ஞானஸ்நானம் பெற்று விட்டான். இப்பொழுதெல்லாம் அவன் என் வீட்டிற்கு வரும் போது இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட பிரசாதத்தினை சாப்பிட மறுக்கின்றான். கோவிலில் நடைபெறும் திருமணத்திற்கு அழைத்தால் என்னுடன் கோவிலுக்கு வர மறுக்கின்றான்.கோவிலுக்கு வந்தால் கிறிஸ்துவுக்கு துரோகம் செய்வதாக நினைக்கின்றான். இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவை கையால் தொடவும் மறுக்கின்றான். இது போன்ற தவறான மூடத்தனமான கருத்துக்கள் மூலமாக குற்ற உணர்வும் பயமும் மக்களிடம் உண்டாக்க படுகின்றது. இது மிகவும் தவறு. நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்.அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். இதனால் இறைவன் உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டார் என்று நான் உறுதி அளிக்கின்றேன். நீங்கள் நரகத்திற்கெல்லாம்  செல்ல மாட்டீர்கள். இது போன்ற தவறான கருத்துக்களை திணிக்கும் மனிதர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நம்பிக்கையோடு செயல்படுங்கள். 

கே: இது எனக்கேற்ற சரியான இடம் தானா? இயல்பான சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி செல்ல வழியில்லை. என்னை மிகவும் நேசிக்கும் என் கணவர் கூட என்னுடைய வாழும் கலைப் பயிற்சி செயல்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்குப் பித்து பிடித்துவிடுமென்று பயப்படுகின்றார். 

குருதேவ்: எல்லாவற்றையும் சமன்படுத்தி செல்லுங்கள். யாரையும் பயமுறுத்த வேண்டாம்.  மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். வாழ்க்கையில் அனைத்தையும் சமாளித்து சமன்படுத்தி செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இந்த வாழும் கலைப் பயிற்சி என்பது இயற்கைக்கு மாறானது அல்ல. மகிழ்ச்சியாக வாழ்வது, சலனமற்று அமைதியாக வாழ்வது, ஆனந்தத்தை எங்கும் பரப்புவதென்பது இயல்பானதே. நாம் நம்முடைய வெளிப்படுத்தும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  

கே: நான் ஏன் இங்கே இருக்கின்றேன்? இந்தப் பயிற்சியினை ஏன் செய்தேன்? நான் இயல்பாக இருக்கின்றேனா? 

குருதேவ்: இயல்பான தன்மைக்கு பல நிலைகள் உள்ளன. கீழ் நிலையிலிருந்து பார்க்கும் போது நீங்கள் இயல்பாக இல்லாதது போல் தோன்றலாம்.ஆனால் சற்று மேல் நிலையிலிருந்து பார்க்கும் போது நீங்கள் இயல்பானவர். அதற்கும் மேலான நிலையிலிருந்து பார்க்கும்போது நீங்கள் இயல்பானவராக இல்லாமலிருந்தால், நீங்கள் மேலும் முன்னேற வேண்டியது அவசியமாகின்றது. இயல்பாக இருப்பதென்பதன் பொருள் என்ன? அது நிலைகளுக்கேற்ப மாறுபடும். நீங்கள் ஏன் இங்கே இருக்கின்றீர்கள்? இந்தக் கேள்வியை நீங்கள் ஒரு பெரிய கோணத்திலிருந்து கேளுங்கள். நான் ஏன் இந்த பூமிக் கிரகத்தில் இருக்கின்றேன் என்ற கேள்வி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கேள்வியை உங்களிடமே விட்டு விடுகின்றேன். உங்களை நீங்களே மீண்டும் கேட்டு கொள்ளுங்கள். அது உங்களை பெரிய தத்துவ மேதையாக்கும்.    

கே: என் சக ஊழியர்கள் எப்போதும் ஏதோ ஒரு வகையில் என் சக்தியை எடுத்து சென்று விடுகின்றனர். அவ்வாறு சக்தியை இழக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு நிறைய சக்தியை கொடுங்கள். அவர்கள் எல்லோரும் உங்களிடமிருந்து எடுக்கக்கூடிய சக்தியை விட மிக அதிகமான சக்தி உங்களிடம் உள்ளது. சூரியனும் சந்திரனும் 'நீங்கள் என்னிடமிருந்து வெளிச்சத்தை கொண்டு சென்று விடுகின்றீர்கள்' என்று ஒருபோதும் சொல்வதில்லை. நீங்கள் சக்தியின் பிறப்பிடம். நான் உங்களுடன் இருக்கின்றேன். நான் உங்களுக்கு வற்றாமல் சக்தியை வழங்கிக் கொண்டிருக்கின்றேன். கவலைப்பட வேண்டாம். உங்கள் கவனத்தை அங்கே கொண்டு செல்ல வேண்டாம். உங்கள் கவனத்தை இங்கே என்னிடம் வைத்தால்  நீங்கள் அதிக சக்தியை பெறுவீர்கள். அப்படியில்லாமல் உங்கள் கவனத்தை அங்கே வைத்தால் உங்கள் சக்தியை இழந்துவிட்டது போல் உணர்வீர்கள்.

கே: நான் என்னுடைய கோபத்தை அடக்க வேண்டுமா அல்லது வெளிப்படுத்த வேண்டுமா?

குருதேவ்: கோபத்தை சில சமயங்களில் வெளிப்படுத்த வேண்டும். சில சமயங்களில் அடக்க வேண்டும். இதற்கு நேரிடையான ஒரே பதில் கிடையாது. எல்லா நேரங்களிலும் கோபத்தை வெளிப்படுத்த முடியாது. நீங்கள் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுவீர்கள். அதே சமயம் நீங்கள் எல்லா நேரங்களிலும் அடக்கி வைக்கவும் கூடாது. சில நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும், இல்லையென்றால் நீங்கள் வெடித்து விடக்கூடும். சரியான சமன்பாடு உங்களிடம் வேண்டும். கோபத்தை எப்போது வெளிப்படுத்துவது எப்போது அடக்குவது என்பதை அறிந்து கொள்வதே ஞானம். 

கே: ஏற்கெனவே இருமுறை தோல்வியுற்ற உறவுகளின் நினைவுடன் மறுபடியும் இன்னும் ஒரு உறவை தேடும் ஆசையிலிருந்து எவ்வாறு வெளிவருவது? கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்வியினால் மறுபடியும் ஒரு துணையை தேடும் எண்ணத்தில் எனக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்படுகின்றது.

குருதேவ்: நீங்கள் இரண்டு விஷயங்களை செய்யலாம். ஒன்று, உறவு முறை உங்களுக்கு ஏற்றதல்ல என எண்ணினால் ஒரு சிங்கத்தை போல தனியாகவே வாழலாம். இரண்டு, உங்களுக்கு உண்மையிலேயே உறவு தேவைப்படுகின்றது என எண்ணினால் மறுபடியும் முயற்சி செய்து வெற்றி கொள்ளலாம். நீங்கள் கல்லறை செல்லும்வரை முயற்சி செய்யலாம்.  வெற்றி பெற்றே ஆக வேண்டும் என உறுதியுடன் இருந்தால் சொர்க்கம் சென்ற பின்பும் முயற்சி செய்யலாம்.

இப்போது சந்தோஷமாக இருங்கள். உங்களது உறவுகள் சரியாக அமையவில்லை என்பதற்காக நீங்கள் உங்களை ஏன் மேலும் துன்பப்படுத்திக் கொள்ளுகின்றீர்கள்? அதற்குரிய வயதை கடந்து விடும் போது அதை விட மேம்பட்ட விஷயங்களில் கவனத்தை செலுத்தலாம். உறவு என்பது இடைப்பட்ட ஒரு சில வருடங்களுக்கே தேவைப்படும். உங்களுடைய வளர் இளம் பருவத்தில் உங்களுக்கு இத்தகைய உறவுகள் ஏதும் தேவைப்பட்டதில்லை.உங்களுக்கு எந்த தொல்லையும் இருந்ததில்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள். எழுவது வயதிற்குப் பின்பும் உங்களுக்கு அத்தகைய உறவுகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் சண்டை செய்வதற்காகவே இருக்கும். அதன் பிறகு உங்களுக்கு உறவு முறை ஏதும் இருக்காது. வெறும் தோழமை உறவாகவே இருக்கும் எனவே, அதைப் பற்றி அதிகம் நினைக்க வேண்டியது இல்லை. 

இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு ஒரு உறவுமுறை தேவைபடுகின்றது என்றால் நீங்கள் அதை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது முடியவில்லையென்றால் தொடர்ந்து தனியாகவே இருக்கலாம். மறுபடியும் தோன்றினால் மற்றொரு நபரிடம் முயற்சி செய்யலாம். அது நிறைவேறினால் நல்லது இல்லையென்றாலும் நல்லதே எப்படியிருந்தாலும் நல்லதே. 

கே: குருதேவ், இறந்தபின் உடல் உறுப்புகளை தானம் செய்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 

குருதேவ்: அது நல்லதே. நாம் நமது உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். நம்முடைய உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு உபயோகப்படும் போது நாம் மகிழ்ச்சி அடையலாம். கண்களையோ அல்லது மற்ற உடல் உறுப்புகளையோ தானம் செய்யலாம். நீங்கள் இங்கு இல்லையென்றாலும் உங்கள் கண்கள் வேறு யாராவது ஒருவருக்கு உதவி செய்து கொண்டிருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் ஞானத்தைக் கொடுத்தால் நீங்கள் இல்லாத போதும் அந்த ஞானம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். பல தலைமுறைகள் மக்கள் அந்த ஞானத்தை அனுபவிப்பார்கள். உடல் உறுப்புகள் ஞானத்தை போல பல வருடங்கள் இவ்வுலகில் இல்லா விடினும் குறுகிய காலம் அவைகள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். உயிரோடு இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ நாம் மற்றவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவியாக இருக்க முடியுமென்றால் நாம் அதை செய்வதே இந்த வாழ்க்கையின் நோக்கம் ஆகும். 
 
கே: உண்மையிலேயே நம்மால் மற்றொருவரை வெறுப்பதை நிறுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? 

குருதேவ்: வெறுப்பதை நிறுத்த வேண்டாம் வெறுப்பதை தொடரலாம். உங்களுக்கு எது சுலபம் எனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம். நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களை தொல்லை படுத்துகிறது என்றாலோ, அவ்வாறு செய்வது மிகவும் கடினமாகவும் உள்ளது என்றாலோ அதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்? மிகவும் கடினமான ஒன்றை செய்துவிட்டு துன்பகரமான நிலையில் நீங்கள் வாழ்வதில் என்ன பயன்? எது உங்களுக்கு சுலபமாக உள்ளதோ, எது உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதோ அதை மட்டும் செய்யலாம். நான் உங்களுடைய மகிழ்ச்சியை பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன். நீங்கள் மற்றொருவரை வெறுப்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் தருகிறது என்றால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அதை செய்யலாம்.

கே: உண்மையிலேயே நம்மால் மற்றொருவரை வெறுப்பதை நிறுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

குருதேவ்: வெறுப்பதை நிறுத்த வேண்டாம். வெறுப்பதை தொடரலாம். உங்களுக்கு எது சுலபம் எனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம். நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களை தொல்லை படுத்துகிறது என்றாலோ, அவ்வாறு செய்வது மிகவும் கடினமாகவும் உள்ளது என்றாலோ அதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்? மிகவும் கடினமான ஒன்றை செய்துவிட்டு துன்பகரமான நிலையில் நீங்கள் வாழ்வதில் என்ன பயன்? எது உங்களுக்கு சுலபமாக உள்ளதோ, உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதோ அதை மட்டும் செய்யலாம். நான் உங்களுடைய மகிழ்ச்சியை பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன். நீங்கள் மற்றொருவரை வெறுப்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் தருகிறது என்றால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அதை செய்யலாம்.

கே: என் மீதும் மற்றும் தெய்வீகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை அதிகமாக்கி கொள்வது எப்படி?

குருதேவ்: இதை மறந்துவிடுங்கள்.நம்பிக்கையை அதிகமாக்க முயற்சி எதுவும் செய்ய வேண்டாம். நம்பிக்கையை அதிகமாக்கச் செய்வது ஒரு தொல்லையே. உங்களுக்கு தேவையான அளவு நம்பிக்கை உள்ளது என அறியவும். உங்களிடம் எவ்வளவு பெரிய கோப்பை உள்ளதோ அதில் முழுவதுமாக உள்ளது. அதைவிட அதிகமாக உங்களால் வைத்துக் கொள்ள முடியாது. பல சமயங்களில் என்னிடம் ஆசீர்வாதம் கேட்கின்றனர். என்னுடைய ஆசீர்வாதங்கள் எப்போதுமே உள்ளதாக நான் அவர்களிடம் கூறுவேன். ஆனால் அதை பெற்றுக்கொள்ளும் உங்களுடைய திறனை பார்க்க வேண்டும். நீங்கள் என்னிடம் ஒரு சிறிய கோப்பையுடன் வந்து 10 லிட்டர் பால் வேண்டும் எனக் கேட்டால் என்னால் எப்படிக் கொடுக்க முடியும்? நீங்கள் 10 லிட்டர் கொள்ளக் கூடிய கோப்பையைக் கொண்டு வர வேண்டும். ஒரு தேநீர்க் கோப்பையில் உங்களால் 10 லிட்டர் பாலை எடுத்துச் செல்ல இயலாது. அதனால் உங்களுடைய கொள்ளளவை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். என்னிடம் தேவையான அளவு உள்ளது என நினைக்கும்போது அது தானாகவே கிடைத்து விடும். எனக்கு நம்பிக்கை இல்லையே எனக் கூற வேண்டாம். உங்களிடம் தேவையான அளவு உள்ளது.