உங்கள் கடந்த காலத்திலிருந்து நீங்கள் விடுபடுகின்றீர்கள்....

ஜூலை 17, 2013 -  மொண்ட்ரியல் கனடா



கே:  குருதேவ்! தாங்கள், நம்மைத் துன்புறுத்தியவர்களையும், ஏமாற்றியவர்களையும் மன்னிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினீர்கள். என்னை பொறுத்தவறையில் மிகக் கடினமானது  என்னவென்றால், நான் பிறரைத் துன்புறுத்தியதாலும், ஏமாற்றியதாலும்  ஏற்படும் குற்ற உணர்வை அகற்றி என்னை நானே மன்னித்துக் கொள்ள முடியாதது தான்.

குருதேவ்: நீங்கள் சில பாவங்கள் செய்து விட்டதாகக் கருதினால் அவற்றை என்னிடம் கொடுத்து விடுங்கள், நான் அவற்றைக் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப் படாதீர்கள். உங்கள் கடந்த காலத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள். அதற்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. உங்கள் கடந்த காலத்திலிருந்து நீங்கள் விடுபடுகின்றீர்கள். அதை மறந்து விடுங்கள். எதிர்க் காலத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள். வருங்காலம் என்பது உங்களுக்காக புதியதாக ஒரு தாம்பாளத்தில் இருக்கின்றதுஆகவேகடந்த காலம் எனும் மேற் போர்வையை அகற்றுங்கள். புதியவராக,உறையற்றவராக அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லுங்கள். புரிகிறதாஉங்களுக்குத் தெரியுமா?எப்போதுமே,ஒரு மாணவன் குருவிடம் வரும் போது,அவன் புதுப் பிறவி எடுத்தார் போன்று ஒரு வேறு பெயர் அளிக்கப்படும். 

அது இரண்டாவது பிறவி. இதுவரை நீங்கள் என்ன குற்றம் செய்திருந்தாலும், அதை  அகந்தையால் செய்தீர்கள், மோகத்தினால் செய்தீர்கள், பேராசையால் செய்தீர்கள், ஆத்திரத்தால் செய்தீர்கள்இந்த நான்கும் தான் நரகத்திற்கான நான்கு கதவுகள். மோகம், பேராசைஅகந்தை, ஆத்திரம் இந்த நான்கின் காரணமாகவே தவறு செய்திருப்பீர்கள். அவற்றை விட்டு விடுங்கள். இந்த நொடியில், நீங்கள் களங்கமற்றவர். இந்த நொடியிலுள்ள உங்கள் களங்கமற்ற தன்மையின் மீது நம்பிக்கை வையுங்கள். இதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கடந்த காலத்தை என்னிடம் கொடுத்து விட்டு, இந்த நொடியில் உள்ள உங்கள் களங்கமற்ற தன்மையின் மீது நம்பிக்கை வைத்து, உற்சாகமாக முன்னேறிச் செல்லுங்கள்.

ஹிந்துக்களின் புராணமாகிய மகாபாரதத்திலுள்ள பகவத் கீதையில், இதையே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகின்றார்." அர்ஜுனா! உன் பாவங்களிலிருந்து நீ விடுபட முயற்சிக்கின்றாய். அது இயலாத காரியம். நான் உன்னை உன் பாவங்களிலிருந்து விடுவிக்கின்றேன். உன் மனதை என்னிடம் வீழ்த்தி விடு. நான் உன் பாவங்களை கவனித்துக் கொள்கின்றேன். உன் கடந்த காலத்தைப் பற்றி நீ துன்பப்படாதே "

நானும் அதையே கூறுகின்றேன். கடந்த காலத்தை பற்றி துன்பப்படாமல், அதை விட்டு விட்டு,நகர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.

கே: பாவம் (தீயசெயல்) என்பதற்கும், நெறியற்ற செயல் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? நெறி என்பதை யார் நிர்ணயிக்கின்றார்கள் ?

குருதேவ்: தீமை என்பது உங்களைத்  தொந்தரவு செய்து குற்ற உணர்வை ஏற்படுத்துவது. எதுவொன்று உங்களுக்கும், பிறருக்கும் வலியை ஏற்படுத்துகின்றதோ, அதுவே தீமை என்பது. உங்களுக்கும், பிறர் அனைவருக்கும் எது மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்துகின்றதோ அது நன்மை எனப்படுவது.

தீமை செய்வது என்பது உங்களது இயல்பல்ல. அது தோலின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் தூசியைப போன்றது. கழுவிக் குளித்தால் அது போய்விடும். தீயது தான் உங்கள் இயல்பு என்று எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள். அது தவறான கருத்து. புரிகிறதா?

கே: இந்த வழியில் வந்து சேவையில் ஈடுபடும் போது, ஒரு குடும்பம், சார்புணர்வு, ஏற்றுக் கொள்ளப்படல் ஆகியவற்றை காண்கிறோம் என்று தாங்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் என் அனுபவம் அவ்வாறு அமையவில்லை. நான் இங்கு சார்ந்தவனில்லை என்றே உணருகிறேன். எனக்குப் புரியவில்லை. என்னிடம் ஏதேனும் குறைபாடு உள்ளதா?

குருதேவ்: மற்றவர்களிடமிருந்து விலகி தொலைவாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்குள்ளேயே  நிலை கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவும் நல்லது. இல்லையெனில், உங்களைச் சுற்றி இருப்பவர்களால் பிடிக்கப்பட்டு விடுவீர்கள். உங்களில் எத்தனை பேருக்கு நல்ல நண்பர்கள் திடீரென்று நட்ப்பில்லாமல் ஆகி இருக்கிறார்கள்? (பலர் கை தூக்குகிறார்கள்) பாருங்கள் அதிகம் பேர்!

உங்களில் எத்தனை பேருக்கு நீங்கள் எதிர்பாராமல் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள்?எங்கிருந்தோ, நீங்கள் அவர்களுக்கு எதுவும் செய்திருக்காத போதிலும்,உங்களுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள்? (பலர் கை தூக்குகிறார்கள்) பாருங்கள்! ஏன் நீங்கள் எவ்வளவோ உதவி செய்த நண்பர், திடீரென்று விரோதியாகிறார், ஏன் நீங்கள் இதுவரை  எதுவுமே செய்திராத யாரோ ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்பதை உங்களால் விளக்கிக் கூற முடியாது. தர்க்க ரீதியாக எந்தக் காரணமும் இல்லை.நண்பர்கள், எதிரிகள் ஆகியோர், கர்மா என்னும் தனி வேறுபட்ட தளத்திலிருந்து இயங்குகிறார்கள்.அவர்கள் அனைவரையும் ஒரே கூடையில் போடுங்கள்.

உங்களுக்கு நல்ல காலமாக இருந்தால், மோசமான எதிரியும் நட்புடன் இருப்பான், உங்களுக்குக் கெட்ட காலமாக இருந்தால், நண்பனும் விரோதி போன்று செயல்படுவான். ஆகவே காலத்திற்கு தலை வணங்குங்கள். 'காலயா தஸ்மை நமஹாகாலத்தின் விளையாட்டு என்றொரு முதுமொழி உள்ளது. உங்களிடம் சில குறைபாடுகள் உள்ளதாக எண்ணிக்கொண்டு பிறரிடம் ஒட்டிக் கொண்டால், துன்பம் அடைவீர்கள். பிறரிடம் ஒட்டுதல் இல்லாமல் தனித்திருந்தால் அப்போதும்  துன்பம் அடைவீர்கள். பிறர் உங்களைப் பாராட்டி நன்றியறிதலை தெரிவிக்காதிருப்பதற்கு வருந்துவீர்கள். இதற்கு தான், உட்புறமாகத் திரும்பி, உங்களின் மெய்யுருவைக் காணுங்கள்; அதுதான் பிரபஞ்சத்தின் உண்மை என்று கூறுகின்றேன்.

இப்பிரபஞ்சம்கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றது. இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் இருக்கும். நமது வாழ்கை மிகக் குறுகியது இன்னும் சில ஆண்டுகள் இருந்து பின்னர் மறைவோம். நாம் வாழ்ந்திருக்கும் வரை நல்ல செயல்களைச் செய்வோம். அவை நிச்சயம் நமக்கு நன்மையைத் தரும். அதில் சந்தேகமே இல்லை. பிறருக்குத் தொண்டு செய்து, அவர்களுக்கு நல்லவற்றையே எண்ணி வாழ்த்தினால் உங்களுக்கு நன்மை விளையாமல் போகுமா? சாத்தியமே இல்லை. நீங்கள் ஒரு மேப்பில் மரக் கன்றை நட்டால், அது மேப்பில் மரமாக தான் வளரும். அது சய்பிரஸ் மரமாக வளராது. அந்த நிச்சய நிலையை நீங்கள் மனதில் நிலை நாட்டிக் கொள்ள வேண்டும்.

நான் நல்லதே செய்கின்றேன் ஏனெனில் நல்லதற்ற எதையும்  என்னால் செய்ய முடியாது அது எனது இயல்பு. ஆகவே நான் செய்கின்றேன்.  ஓ! யாரும் என்னை அறிந்து கொள்ள வில்லை, யாரும் எனக்கு நன்றி கூறவில்லை என்றெல்லாம் எண்ணாதீர்கள். இயற்கை உங்களை அறிந்து கொள்ளும். இறைமை உங்களை அறிந்து கொள்ளும். நன்றாகக் கூர்ந்து பார்த்தால், தொண்டு மற்றும் நல்ல பணிகள் செய்பவர்கள் அனைவராலும் விரும்ப படுவதைக் காண்பீர்கள் நீங்கள் பிறரால் விரும்பப்படவில்லை என்று எண்ணினால் அது உண்மையல்ல. அது உங்கள் கற்பனை. சிலசமயங்களில் நாம் பிறரிடம் கடினமாக இருக்கின்றோம், சில சமயங்களில் நம் மீதே நாம் கடுமையாக இருக்கின்றோம். நீங்கள் உங்கள் மீது  கடினமாக இருந்தால் அது பிரச்சினை. பிறர் மீது கடுமையாக இருந்தால் அதுவும் பிரச்சினை தான். ஆகவே விழித்தெழுங்கள். ஓய்வெடுங்கள். தியானம் செய்யுங்கள். உங்கள் மனம் புத்துணர்வு பெறும் போது,  உங்கள் பார்வையும் தெளிவாகும்.

கே: நம்பிக்கை குறைவாகி, என்னால் ஆன்மீகப் பயிற்சிகளை சரிவரச் செய்ய முடிவதில்லை. என்ன செய்வது?

குருதேவ்: ஒன்றுமில்லை என்று உணருங்கள், அவ்வளவு தான். வாழ்கை எப்படி இருந்தாலும் நீங்கள் தாம் சிலுவையை சுமந்தாக வேண்டும். அந்த உணருதலே ஒரு சிறந்த மெய்யறிவு. அதுவே உங்களுக்குப் பலத்தை அளிக்கும். ஒரு நிலைமையிலிருந்து வெளியேறி  நீங்கள் தப்பியோட நினைத்தால், உங்கள் மனம் வெளிப்புறமாகவே இருக்கும், ஏனெனில்,  அது செயலில் ஈடுபட்டிருக்கின்றது.  ஆனால், எப்போது வேறு வழியில்லை என்று மனம் ஆழ்ந்த ஓய்வில் இருக்கின்றதோ, அப்போது எதையாவது செய்ய வேண்டும் என்னும் உணர்வை விடுத்து, மனம் உடனடியாக அமைதியுறும்.

கே: ஒருவர் ஞானம் அடையும் போது , நேற்று தாங்கள் கூறிய காலம், உணவு, மக்கள் தொடர்பு, ஆகிய மூன்றின் தாக்கத்திலிருந்து விடுபட முடியுமா?

குருதேவ்: ஆம், பெருமளவுக்கு .95 சதவீதம்வரையில், ஆயினும் உடல்கூறு இருப்பதால் 5 சதவீதம் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும்.

கே: பல ஆண்டுகளாக இந்த ஆன்மீகப் பாதையில் இருந்து, தெளிவடைந்த போதிலும், இவ்வுலகில் சிக்கிக் கொள்ளும் போது ,  இது உண்மை போன்றே தோன்றுகிறதே ! இது உண்மையானதா?  அல்லது ஏதேனும் முயற்சி எடுக்க வேண்டுமா?

குருதேவ்: ஆம். மனம் மாயையில் சிக்கிக் கொள்கின்றது. மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு மனதை மாயையிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் இது எல்லாமே மாயை என்றுணருங்கள். மனதை உட்புறமாகத் திருப்புங்கள். இது மிகவும் சுவாரஸ்யமானது. மனம் என்பது பிரமாதமான ஒன்று.

கே: தங்களைப் பின்பற்றுவதா? அல்லது தாங்கள் கூறுவதைப் பின்பற்றுவதா? எது அதிக முக்கியம்?

குருதேவ்: நான் கூறுவது தான். நான் எது உங்களுக்கு முக்கியம் என்பதை நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நான் கூறப்போவதில்லை. என் பின்னாலேயே ஓடி வருவது, நான் கூறுவதை பின்பற்றுவது ஆகாது. இயல்பாக இருங்கள்.உங்களுக்கு என்னுடன் வர வேண்டும் போலிருந்தால் வாருங்கள், அதில் என்ன பிரச்சினை? ஏன் பின்தங்கி அமர வேண்டும்? குருதேவ் கூறுவதை பின்பற்ற வேண்டும் என்பதற்காக? அப்போது உங்கள் மனம்," எல்லோரும் போய்விட்டார்கள், நான் மட்டும் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறும்.உங்கள் மனம், 'நான் போக வேண்டும், எல்லோரும் சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்நான் மட்டும் குருதேவின் சொற்களை பின்பற்றி இங்கு உட்கார்ந்திருக்கிறேன்' என்று கூறும். உங்கள் மனமே உங்களுடன் சண்டையிடும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

நீங்கள் எழுந்து நடக்க விரும்பினால் எழுந்து நடங்கள். மற்றவர்கள் சிரித்துக் கொண்டிருந்தால் அவர் களுடன் இனைந்து சிரித்து மகிழுங்கள். உங்களுக்கு அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்று தோன்றி னால் தியானம் செய்யுங்கள். மௌனம் கடைப்பிடிக்கும் போது மௌனமாக இருங்கள். இது மிக முக்கியம். கவலைப்படாதீர்கள். உங்களை சந்திப்பேன். மௌனத்தில் இருப்பவர்களை நிச்சயமாகச் சந்திப்பேன். உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள்!

கே: மிக்க அன்புள்ள குருதேவ்! உணர்ச்சிகளும்,பிராண சக்தியும் வாழ்வின் ஏழு அடுக்குகளில் எங்கு பொருந்துகின்றன? அந்த ஏழு அடுக்குகளும் எவ்வாறு பஞ்ச கோஷங்களுடன்  தொடர்பு டையதாக இருக்கின்றன?

குருதேவ்:உணர்ச்சிகளை எங்கே  பொறுத்த விரும்புகின்றீர்கள்?  மனம் என்பது உணர்ச்சிகள், அறிவு என்பது எண்ணங்கள். அன்பு என்பது நமது இயல்பு. அது உணர்ச்சியல்ல. பக்தி என்பது அன்பின் ஒரு தனிச்சுவை. வாழ்கை என்பது சிக்கலானது. அதை ஒரு கட்டமைப்பாக பொறுத்த முடியாது. அது ஒரு மென்மையான புரிதல்.

கே: மரத்திற்கு ஆத்மா  இருக்கின்றதா? அல்லது ஒவ்வொரு இலைக்கும் ஆத்மா இருக்கின்றதா? மலைக்கு நிறைய ஆத்மாக்கள்  இருக்கின்றனவா? எத்தனை?

குருதேவ்: ஒவ்வொரு உயிர்ஜீவனுக்கும் ஒரு ஆத்மா உள்ளது. எறும்புக்கு ஒரு ஆத்மா , மனித உடலுக்கு ஒரு ஆத்மா, மரத்திற்கு ஒரு ஆத்மா.

கே: ஏன் சில சமயங்களில்  ரத்த அழுத்தம், தினமும் செய்யும் சுதர்சன்க்ரியா, மாலை நேரத் தியானம், திரிபலா ( ஆயுர்வேத மருந்து)  இவற்றுக்கும் மீறி இயல்புக்கு அதிகமாகவே இருக்கின்றது?

குருதேவ்: நீங்கள் சரியாக உடற்பயிற்சி செய்கிறீர்களா? யோகா செய்கிறீர்களா? உணவுப்பழக்கம் சரியாக இருக்கிறதா? கவலைப்படுகிறீர்களா? ஏதேனும் கருத்துக்களை மனதில் பிடித்து வைத்துக் கொண்டிருக் கிறீர்களா?  ஏதேனும் ஆசைகளால் அலைக்கழிக்கப்பட்டு, இப்போதே நிறைவேற வேண்டும் என்று பொறுமை  யின்றி இருக்கிறீர்களா?

நீங்கள் க்ரியா செய்து வந்தாலும், இப்போதே கிடைக்க வேண்டும் என்று ஆசைகளால் அலைக்கழிக்க பட்டீர்களானால் ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகமாகவே இருக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களால் எரிச்சல் அடைந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இவை எதுவுமே இல்லை, அமைதி யாகவே இருந்தும், உயர் ரத்த அழுத்தம் இருந்தால்,  நீங்கள் ஒரு வைத்தியரை அணுக வேண்டும்.

திரிபலா ரத்த அழுத்தத்திற்குரிய மருந்து அல்ல. அதற்கு சர்பகந்தா என்றொரு மூலிகை மருந்து இருக்கின்றது. வேறெதுவுமே உதவவில்லை, ரத்த அழுத்தம் அதிகமாகவே இருக்கின்றது என்றால் சர்பகந்தா உதவும். ஆயினும் நீங்கள் டாக்டரை அணுக வேண்டும். ஆழ்ந்த தியானம் உதவும். வயது, பழக்க வழக்கங்கள், பரம்பரைக் கூறுகள் இவற்றாலும் உயர் ரத்த அழுத்தம் இருக்கக் கூடும். சுதர்சனக் க்ரியா, தியானம் இவற்றை பயிற்சி செய்து வந்த போதிலும், இத்தகைய உடற் கூறுகளினால் ரத்த அழுத்தம் அதிகமாகக் கூடும்.

நீங்கள் சுதர்சன்க் க்ரியாவை நிறுத்திப் பாருங்கள், இரத்த அழுத்தம் எவ்வளவு கூடுகிறது என்று. இப் பயிற்சிகளும் மருந்தும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயனற்றவை என்று முடிவு எடுக்காதீர்கள். அது தவறான முடிவு. அது ஆழ்ந்த நீரில், உயிர்க்காப்பு மிதவை ஆடையை களைந்தெரிவது போன்றதாகும்.


எப்போதுமே, தற்போதைய நிலைக்கு ஏதேனும் ஒன்றைக் காரணமாகச் சுட்டிக் காட்டி அது உங்களுக்குப் பயனளிக்கவில்லை என்று கூறுவது சுலபம். உங்களுக்கு உதவ வில்லையென்றால் செய்யாதீர்கள் எல்லாப் பயிற்சிகளையும் நிறுத்தி விட்டு உங்கள் இரத்த அழுத்தம் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். இயல்பாக இருக்கிறதா அல்லது அதிகமாகிறதா என்று கவனித்து என்னிடம் கூறுங்கள். ஒரு வாரத்திற்கு அனைத்துப் பயிற்சிகளையும் நிறுத்தி, உங்கள் இரத்த அழுத்தம் இயல்பாகி விட்டால், எங்களுக்கு அது ஒரு கண்டுபிடிப்பு. நான் அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பயிற்சிகள் அனைத்தையும்  செய்து கொண்டு, அப்படியும், சற்று அதிகமாக இருந்தால்,  அதற்கு வேறு மருந்து எடுத்துக் கொள்ளப் பாருங்கள்.