நீங்கள் பயனுள்ளவரா அல்லது பயனற்றவரா?


15 ஜூலை 2013 - மொண்ட்ரியல் - கனடா,



கே: அன்பான குருதேவ்! அலுவலகப் பணிக்கு மாறாக, எவ்வாறு சேவை என்பது ஒருவரை ஆற்றல் மிகுந்தவராக ஆக்குகின்றது?

குருதேவ்: நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஏதாவது செய்து கொண்டே இருக்கின்றோம். ஏதாவது செய்யும் போது அதற்குப் பயனாக நமக்கு ஏதேனும் வேண்டும் என்று எதிர் பார்க்கின்றோம். அதே சமயம், ஏதாவது செய்யும் போது, அது பயனுள்ளதாக அமைந்து, அதிலிருந்து நமக்கு என்று எதுவும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் சேவை என்பது.எந்தப் பணி, பிரதிபலன் எதுவும் வேண்டாமல்,  உங்களை மகிழ்வித்துப்,பிறருக்குப் பயனுள்ளதாக அமைகின்றதோ, அதுவே சேவை. எந்தப் பணி உங்களுக்கென்று பயன் தேடாமல் மற்றவருக்கு, உங்களைப் பயனுள்ளவராக ஆக்குகின்றதோ  அதுவே சேவை. 

கே: சித்தி என்பதன் நோக்கம் என்ன?

குருதேவ்: உங்களுக்குத் தேவை என்று தோன்றும் முன்னரே, உங்களுக்கு தேவையானது கிடைப்பதுதான் சித்தி என்பது. ஒரு வேளை, நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பி, 70 வயது வரை யாரும் அமையவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? சித்தி இல்லை என்பது தான் பொருள்.ஒரு வேளை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் போது, உங்களிடம் 10 பேர் என்னைத் திருமணம் செய்து கொள் என்று கேட்டால் அதுதான் சித்தி.

இந்தியாவில் ஒரு பழமொழி உண்டு 'பல் இருக்கும் போது கொட்டைகள் இல்லை, கொட்டைகள்  இருக்கும் போது பல் இல்லை'. இது தான் சித்திக்குறைவு என்பது. விரும்புவது கிடைக்கின்றது ஆனால் மிகத் தாமதமாக. நீங்கள் தேவை என்று விரும்புவது  குறைவாக கிடைத்தாலும் அது சித்தி இல்லை என்பதுதான். ஒரு வேளை நீங்கள் கலிபோர்னியா செல்ல விரும்பி அதற்கு 1500 டாலர்கள் தேவை ஆனால் 1300டாலர்கள் தான் இருக்கின்றன என்றாலும் அது சித்தி இல்லை என்பது தான். எனவே, ஒன்றை விரும்பும் முன்னரே அதற்கு அதிகமாக கிடைத்தால் அது தான் சித்தி.

தேவைக்கு அதிகமாக தேவை எழும் முன்னரே கிடைக்கும் பொருள் என்பது தான் சித்தி.
தேவைக்கு அதிகம் என்பது பேராசை அல்ல, தேவையை விட அதிகமாக, தேவைக் காலத்திற்கு முன்னரே என்றுதான் பொருள்.

கே: தங்களுடைய முன்னிலையில் இருத்தல் என்பது மிகப் பிரமாதமாக இருக்கின்றது. இந்தத் தியானப் பயிற்சிகள் எல்லாம் ஏன் தேவைப்படுகின்றன? இவற்றை ஒழுங்காக முறைப்படி செய்ய வேண்டியது அவசியமா?

குருதேவ்:ஆம். அப்போதுதான் உங்களுக்கு செய்ய ஏதாவது இருக்கும், எனக்கும் செய்ய ஏதாவது இருக்கும்! இதில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலை சாந்நித்யா- முன்னிலையில் இருத்தலை உணருதல்.அடுத்தது சாமிப்யா - குரு அல்லது இறைமையுடன்  நெருக்கமாக உணருதல்.  அத்தகைய நெருக்கமான உணர்வு உங்களிடமிருந்து எழ வேண்டும். அடுத்தது சாருப்யா -ஒன்றிணைந்து உணருதல், உங்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அடுத்தது சாயுஜ்யா - தெய்வீகத்தில் கரைந்து விடுதல்.

கே: குருதேவ், வாழும் கலை நிறுவனம் சமயம் சார்ந்தது அல்ல, ஆன்மிகம் மட்டுமே சார்ந்தது என்றால் ஏன் கிருஷ்ணர் போன்ற ஹிந்துக் கடவுள்கள் பற்றிப் பஜனைப் பாட்டுக்கள் பாடுகின்றோம்?

குருதேவ்:  பாடுவது என்பது ஆன்மீகத்தின் ஒரு பகுதி. நாம் பாடும் பழமையான பண்ணிசைப்பு பாடல்கள்  என்பது மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அவற்றின் அதிர்வலைகள் உங்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே அது ஒரு வாழ்வியல் முறை.'ஓம் நமசிவாயா' என்பது ஒரு மந்திரம். இத்தகைய மந்திரங்களைப் பண்ணிசைப்பது ஆன்மீகத்தின் ஒரு பகுதி. நீங்கள் பிறந்தது முதல்- உங்களுக்குப் பெயர் சூட்டும் சடங்கு, உங்கள் திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு எல்லாமே சமய கோட்பாட்டின் படி  அமைகின்றன. ஆனால் ஆன்மிகம் என்பது வாழ்வை மேம்படுத்துவது. ஆகவே, யோகா, தியானம் அனைத்தும் பழைமையான மரபின் வழி பிறந்தவை, அவை ஒரு வாழ்வியல் வழி, சமயம் சார்ந்தது அல்ல.

ஹிந்துவான, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை ஒருவர், ஹிந்துமதம் என்பதன் சொற்பொருள் விளக்கம் என்ன என்று கேட்டார்.அதற்கு அவர்,' ஹிந்து சமயம் என்பதற்கு  சொற்பொருள் விளக்கம் கூற முடியாது, அது ஒரு வாழ்வியல் முறை' என்று கூறினார். பல்வேறு சமயங்கள் இருப்பதால், இந்த வாழ்வியல் முறையும்  ஒரு சமயம் என்றே அழைக்கப் படுகின்றது.ஆனால் உண்மையில், இது சமயம் கிடையாது, வாழ்வியல் முறையே ஆகும்.

ஆகவே, இந்தப் பண்ணிசைப்புக்கள், நமது வகைமுறையில், மனதில், விழிப்புணர்வு நிலையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.  பழைமையான பண்ணிசைப்புக்கள் விழிப்புணர்வின் ஆழ்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவேதான் 'ஓம்' எனும் மந்திரத்தை பண்ணிசைக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.இது கிருஷ்ணர் போன்றவர் பற்றியது அல்ல, மந்திரங்களின் மதிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

கே: குருதேவ், பேச்சில் பல வகைகள் இருப்பது போல் மௌனத்திலும் பல வகைகள் உள்ளனவா?

குருதேவ்:  வெறுமையில் பல வகைகள் உள்ளனவா என்ன? மௌனம் என்றால் மௌனம்.  வெறுமை என்றால் வெறுமை. ஒரு பாத்திரம் காலியாக இருந்தால், அது எந்த விதமான வெறுமை என்று நீங்கள் கேட்க  முடியாது.  ஆனால் அது நிரம்பியிருந்தால்  எதனால் நிரம்பியுள்ளது என்று கேட்கலாம்.

பேச்சில் நான்கு வகைகள் உள்ளன. அவை பர, பஷ்யந்தி, மத்யம, விகாரி என்பவை ஆகும்.  வைகாரி என்பது நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் மேலோட்டமான பேச்சு. பஷ்யந்தி என்பது  இதைவிட நுண்ணிய நிலை பேச்சு. இதற்கு மொழி இல்லை. அதிர்வுகள் மூலம் கருத்துக்களை பெறலாம். அவற்றை வார்த்தைப்படுத்த வேண்டியதில்லை. ஒரு குழந்தை நான் உங்களை நேசிக்கின்றேன் என்று சொல்வதில்லை. அதன் பார்வையிலேய நாம் அன்பை உணர்கின்றோம். அன்பும் பிற உணர்வுகளும் வார்த்தைகள் இல்லாமலே பரிமாறிக்கொள்ள படுகின்றன. பஷ்யந்தி என்பது மொழி என்று ஒன்று இல்லாமலே புரிந்து கொள்ளப்படுவது .

மத்யமா என்பது  மேலும் நுண்மையானது .வெளிப்படுத்த ஆரம்பிக்கும் முன்பே இடையில் ஊடகம் எதுவுமின்றி பரிமாற்றம் செய்யப்படுவது. வெளிப்படுத்தும் களத்திற்கு வருவதற்கு முன்பே ஏற்படும் உள்ளார்ந்த பரிமாற்றமே மத்யமா ஆகும். பஷ்யந்தியில் மொழி இல்லையென்றாலும் எதோ ஒரு ஊடகம் மூலமாக பரிமாற்றம் ஏற்படுகின்றது. ஆனால் மத்யமாவில் அந்த ஊடகமும் இல்லை.

மத்யமாவை விட மேலும் நுண்மையானது பர. மொழியும் இல்லை, வார்த்தைகளும் இல்லை;  உள்ளுணர்வில் புதைந்து கிடக்கும் ஞானம் தான் பர என்பதாகும். 

"சொர்கத்தின் சான்று" என்னும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் மொழியில்லாத தகவல் பரிமாற்றம் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.'கோமா' நிலையில் அவர் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அது. பரம்பொருளின் பெயர் 'ஓம்' என்று அவர் குறிப்பிடுகின்றார். இந்த புத்தகம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? மிகவும்  சுவாரஸ்யமானது. 

அது அமெரிக்காவில் ஓர் நரம்பியல் அறுவை நிபுணர் பற்றியது. அவர் கோமா நிலைக்கு சென்றதும் மக்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தனர். ஆனால் அவர் குணமாகி வந்து  அவரது அனுபவங்களை எழுதியுள்ளார். அவர் எவ்வாறு மற்றொரு உலகத்திற்கு சென்றார் என்று எழுதி இருக்கின்றார். இது உண்மையில் மிகவும் பிரமிப்பூட்டக்கூடிய ஒன்று. இந்து மதத்தின் பழமையான வேதாந்தத்திலும், வேத நூல்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருப்பதுவும் அதே தான். நான் பல ஆண்டுகளாக சொல்லி கொண்டிருப்பதை தான் அவர் சொல்கிறார். அன்பும் நேசமும் கொண்ட ஒரு ஒளி எங்கும் எதிலும் நிறைந்திருக்கின்றது. ஒளியின் பெயர் 'ஓம்' என்று சொல்லியிருக்கின்றார். மேலும் அவர் வேர்கள் மேல் நோக்கியும் கிளைகள் கீழே பரந்து விரிந்தும் உள்ள ஒரு தலைகீழ் மரத்தின் வழியாக சென்றதாகவும் அவர் சொல்கிறார்.   

வாழ்வின் மற்றொரு பக்கத்திற்கு செல்வதற்கு ஒருவர் வேர்களின் வழியாகச் செல்ல வேண்டும் என்று பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது. ஹிரன்ய கர்ப்பம் என்று நாம் சொல்லும் தங்க முட்டை பற்றியும் அவர் பேசியுள்ளார். மையத்திலிருப்பது  ஆன்மா என்றும் ஹிரன்ய கர்ப்பம் எனப்படும் தங்க முட்டை அதனைத் தனக்குள் கொண்டிருக்கும் சிப்பி என்றும் அவர் சொல்வதைத் தான் நாம் பகவத் கீதையில் படிக்கின்றோம்.

வார்த்தைகளும் மொழியுமில்லாத ஒரு தகல் தொடர்பு பற்றி அவர் சொல்லி இருப்பது தான் பஷ்யந்தி, பர, மத்யமா, விகாரி என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் பேச்சின்  வகைகள். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. 
  
கே: குருதேவ், உங்களுக்கு நெருக்கமாக உள்ள ஒருவர் பயம், அவரது கருத்துக்கள், அறிவு, அல்லது தலைக்கனம் போன்றவற்றில் சிக்குண்டிருப்பதை நீங்கள் அறிந்தால் அவர்களை   இதயத்தின் நிலைக்கு எவ்வாறு கொண்டு வருவீர்கள்?

குருதேவ்: கவலை வேண்டாம். அவர்கள் தானாகவே திரும்பி வருவார்கள். காலமும் இடமும் அதை செயல்படுத்தும். 'இந்த உலகத்தில் எல்லாம் இருக்கின்றது. பற்பல பரிசுகள் உள்ளன.  ஆனால் நல்ல கர்மப் பயன் இல்லாத ஒருவன் எதையுமே அடைய முடியாது' என்று இந்தியில் பழமொழி ஒன்று சொல்கின்றது.