மன்னிக்காமல், மகிழ்ச்சியுடன் உங்களால் இருக்க முடியுமா?

27 ஜூலை – 2013 போன், வட கரோலினா



கே: குருதேவ்! நான் மிகவும் விரும்பும் ஒருவர் என்னைத் துன்புறுத்தி விட்டார். அவரை மன்னிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: எத்தனை விருப்பத் தேர்வுகள் உங்கள் முன்னிலையில் இருக்கின்றன? ஒன்று அவரை மன்னிக்காமல் இருப்பது. மன்னிப்பது மிகவும் கடினமாக இருந்தால் மன்னிக்க வேண்டாம். என்னுடைய அக்கறை என்னவென்றால், நீங்கள் மகிழ்ச்சியாக மனஅமைதியுடன் இருக்கின்றீர்களா? மன்னிக்க முடியாமல் நீங்கள் மகிழ்ச்சியாக திருப்தி மற்றும் மன அமைதியுடன் இருக்கின்றீர்களா? அப்படியானால் விட்டு விடுங்கள்.

இத்தகைய மனிதர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். நிறைய  முட்கள்  இருக்கின்றன. உங்கள் காலில் குத்துவது தான் முள்ளின் இயல்பு. குத்திய  முள்ளை எடுத்து  தூர எரிந்து விட்டு உங்கள் பாதையில் நடந்து செல்லுங்கள். அந்த முள்ளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு," ஏன் என் காலில் குத்தினாய்? அவ்வாறு செய்தது தவறான செயல்.என்னால் உன்னை மன்னிக்க முடியாது" என்றெல்லாம்  கேட்டுக் கொண்டிருக்க முடியாது.

அம்முள் உங்களிடம்" ஹே ! அது என் இயல்பு. குத்துவது தான் என் வேலை.அதைத் தவிர எதுவும் செய்ய முடியாது. என்னிடம் ஏன் குத்தினாய் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாய். அது தான் என் இயல்பு. நான் இருக்கும் வழியில் வந்தாய், ஒரே வழியில் நாம் சந்தித்து கொண்டோம்." என்று தான் கூறும். எனவே, அதை விட்டு முன்னேறிச் செல்ல வேண்டும் அல்லது அதை துரத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

உங்களுக்கு குழி பறித்த ஒருவரை நீங்கள் ஏன் துரத்திச் செல்ல வேண்டும்? உங்களை வீழ்த்த எண்ணும் ஒருவரை பற்றி நீங்கள் ஏன் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்? அவரைத் தூர எரிந்து விடுங்கள். உங்கள் வாழ்விலிருந்து அவரை அகற்றி விடுங்கள். உங்களால்  மன்னிக்க இயலவில்லை என்றால், அவரை முடித்து விடுங்கள். ஒரு துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக் கொன்று விட்டால், உங்கள் கதை முடிந்து விடும். சிறைக்குச் சென்று விடுவீர்கள். அப்படித்தான் நிறையப் பேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

புத்திசாலியான ஒருவர் இப்படிப்பட்டவர்களை பற்றிச் சிந்திப்பதை நிறுத்தி விடுவார். அல்லது, கருணையுடன்,"என்ன அறியாமையில் இருக்கின்றார். சிறு துளி கூட அறிவின்றி இருக்கின்றார் .ஒருவரை புண்படுத்தினால், அது பத்து மடங்கு அவருக்கே திரும்ப போகின்றது. மிக அதிகமாக கஷ்டப்பட போகின்றார். இதை அறியாமல் இருக்கின்றார், இது அவரது இயல்பு என்று கூறுவார். இவர்கள் முட்டாள்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு இருப்பது  அவர்களது இயல்பு. அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது பற்றித் தெரியாமலேயே இருக்கின்றார்கள்.

நீங்கள்,“இவர்களோடு எந்தத் தொடர்பும் எனக்கு தேவையில்லை, இவர்களைப் பற்றி நினைப்பதற்கே எனக்கு நேரமில்லை என்று கூறிக் கொள்ளுங்கள். மாற்றாக எப்போதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பரந்த மனம் உள்ளவராக இருந்தால், அறியாமையால் இவ்வாறு செய்து விட்டார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். பேராசை, பொறாமை இவற்றின் காரணமாக செய்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கருணையுடன் இருங்கள். இது புரிகின்றதா?

கே: குருதேவ்! நான் மிகவும் வருத்தமாக இருக்கின்றேன். மறுபடியும், தங்களை விட்டு உடல் அளவில் வெகு தூரம் தள்ளி இருக்க போகின்றேன். இந்தப் பிரிவாற்றாமையிலிருந்து  எப்படி வெளி வருவது?

குருதேவ்: இல்லை! இல்லை! நான் காற்று, சூரியன், சந்திரன் போன்றவன். நீங்கள் என்னில் ஒரு பகுதி. நான் உங்களில் ஒரு பகுதி.சமுதாயத்திற்காக ஏதாவது செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். உங்களிடம் என்ன இருக்கின்றதோ, அதை உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு கொடுங்கள். கண்ணீர்கள் துடைக்கப்பட வேண்டும். உங்களைப் பற்றியே எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிராதீர்கள். நிறையப் பேர் துயருடன் இருக்கின்றார்கள். அவர்களது துயரைக் குறைக்க நாம் ஏதாவது செய்யலாம். அல்லவா? நாம் மகிழ்ச்சி அலைகளை உருவாக்க வேண்டும்.நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் வீட்டுக் கீழ்தளத்திலோ அல்லது எங்கு இடம் இருக்கின்றதோ, அங்கு உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை அழைத்து, பாஸ்திரிகா, சிறிது உடற்பயிற்சிகள், ஆட்டம், பாட்டு இவற்றுக்குப் பின் 10-15 நிமிஷங்கள் தியானம் செய்யுங்கள். எத்தனயோ தியான ஒலி நாடாக்கள் இருக்கின்றன. இவற்றை நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தி, உங்கள் இடத்தில் தியானம் செய்யலாம் அல்லது, ஒரு ஆசிரியரை  அழையுங்கள். அவர் முன்னுரை தருவார். கொண்டாட்ட அலைகளையும், மகிழ்ச்சி அலைகளையும் நீங்கள் உருவாக்கலாம்.

கே: குருதேவ்! ஆன்மீகப் பயிற்சியில் மூன்று நிலைகளைப் பற்றி எடுத்துக் கூற முடியுமா?

குருதேவ்: ஆம் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை அன்வ உபாயா. இதில், பிராணாயமம், தியானம், மந்திரங்களைப் பண்ணிசைத்தல், பயிற்சிகள், யோகா ஆகியவை அடங்கும்.
இரண்டாவது நிலைசக்த உபாயா. இது மேலும் நுட்பமானது. பயிற்சிகளுக்குப் பிறகு நீங்கள் உணரும் அசைவற்ற நிலை. இது அக நிலை. இதில் நீங்கள் செய்வது எதுவுமில்லை. யாரும் எதுவும் செய்வ தில்லை.தானாகவே நிகழ்கின்றது. சக்த உபாயத்தை உள்ளிருந்து உணருகின்றீர்கள்.
மூன்றாவது, சாம்பவ உபாயா. இது சக்த உபாயத்திற்க்கும் ஒரு படி அப்பாற்பட்டது. விழிப்புணர்வும், அடையாளங்கண்டு கொள்வதும் ஆகும். இது திடீரென்றே நிகழ்கின்றது. எந்தவிதமான தடய குறிப்போமுயற்சியோ, கிடையாதுதானாகவே நிகழ்கின்றது.

நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள், சூரிய அஸ்தமனத்தைக் காண்கிறீர்கள், திடீரென்று ஏதோ ஒன்று உங்களுள் நிகழ்ந்து, ஏதோ ஒன்று திறந்து கொள்கின்றது, யாரையோ சந்திக்கின்றீர்கள் திடீரென்று ஆனந்தம் ஏற்படுவதை உணருகின்றீர்கள். தியானம் செய்யும் போதோ, உறங்கும் போதோ, ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, திடீரென்று ஒரு விழிப்புணர்வு உங்களுள் மலர்கின்றது. அது தான் சாம்பவ உபாயா. அது அசீர்வாதத்தினாலேயோ, அருளுளினாலேயோ அல்லது அன்பினாலேயோ ஏற்படுகின்றது. முதல் நிலையாகிய அன்வ உபாயா என்பது தவிர்க்க முடியாதது. இரண்டாவது நிலையாகிய சக்த உபாயா கண்கூடான இயக்கம். மூன்றாவதாகிய சாம்பவ உபாயா என்பது கிடைத்தற்கரிய  பெரும் பேறு.

கே: குருதேவ்! இந்தக் கேள்வி, ஆர்ட் எச்செல் பயிற்சி பெறும் குழந்தைகளில்  ஒருவரிடம் இருந்து வந்துள்ளது. பிரபலமாகவும், முக்கியமானவருமாக இருப்பது எப்படி இருக்கின்றது?

குருதேவ்: நான் ஒரு குழந்தையாக இருக்க விரும்புகின்றேன். எப்போதுமே அப்படி இருக்க விரும்பு கின்றேன். ஒரு குழந்தையின் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. வளரவே மறுக்கத் தோன்று கிறது. ஒவ்வொருவரும் இவ்வாறு வளர மறுக்க வேண்டும். பிரபலமாவது போன்ற எண்ணங்கள் அற்று களங்கமில்லாத ஒரு  குழந்தையின் சிறு உலகில், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

கே: குருதேவ்! எவ்வாறு உடலின் மீதுள்ள பற்றை விடுவது. நான் உடலில் உள்ளேன், உடல் நானல்ல என்று உணருவது மிகவும் கடினமாக இருக்கின்றதே?

குருதேவ்: நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். சற்றுப் பொறுத்திருங்கள். உடலே உங்களை விட்டு நீங்கி விடும், நீங்கள் உடலை விட வேண்டாம். உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள்.உங்களுக்கு , தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு அதிக ஓய்வு  நேரம் இருப்பதாக எண்ணுகிறேன். அதை விட்டு விட்டு ஏதாவது செய்யுங்கள். இவ்வுலகத்திற்க்கும் மக்களுக்கும் நீங்கள் தேவையானவராக இருக்கின்றீர்கள். ஒவ்வொருவருக்கும் சில திறமைகள் இருக்கின்றன. இத்திறமைகள் நமக்காகவே அன்று.ஒரு பாடகனுக்கு அமைந்த நல்ல குரல் குளியல் அறையில் பாடுவதற்கு அல்ல, மற்றவரை மகிழ்விப்பதற்காகவே. ஒரு எழுத்தாளனுக்கு அமைந்த மொழித்திறன் தனக்குத் தானே கடிதம் எழுதிப் படித்துக் கொள்ளுவதற்காக அல்ல, பிறரின் அறிவைத் தூண்டி மகிழ்விப்பதற்காகவே.

அது போன்று உங்களுக்கு நகைச்சுவைத் திறன் இருந்தால், அது தனக்குத் தானே சிரித்து கொண்டிருக்க முடியாது, அத்திறன் உங்களுக்குப் பயன்படுவதற்காக அன்று, பிறருக்காகவே. உங்களிக்கப்பட்ட திறமைகள் எல்லாமே, உங்களுக்காக அன்று, பிறருக்குப் பயன்படவே அளிக்கப் பட்டுள்ளன. ஒரு திறமையும் அறிவும் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர், தனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது, வேறொரு அறுவை சிகிச்சை வைத்தியரிடம் தான் செல்ல வேண்டும்.

கே: குருதேவ்! இதுவரை என் வாழ்க்கையில் நான் ஞானம் பற்றிக் கற்றுக் கொண்டும், ஆராய்ந்து கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்திருக்கின்றேன். வாழும் கலைக்கு வந்த பின், இதைப் பற்றி யோசிப்பது, ஆராய்வது ஆகிவற்றை நிறுத்தி விட்டு, தியானம் செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டேன். அதை என்னால்  செய்ய முடியவில்லை தயவு செய்து உதவுங்கள்.

குருதேவ்: பாருங்கள்! இங்கே நாங்களும் சிந்திக்கிறோம், ஆராய்கிறோம். ஆராயுங்கள், ஆனால் மிக அதிகமாக ஒரு சாதனத்தை உபயோகித்தால் அதற்கு பழுது பார்க்கும் நேரம் தேவைப்படும். அதிகத் தூரம் ஓட்டிய பிறகு, உங்கள் காரைப் பழுதுப் பட்டறைக்கு அனுப்புவீர்கள் அல்லவா? அது போன்று மனதைப் பழுதுப் பட்டறைக்கு அனுப்புவது தான் தியானம். ஆராயும் மனதுக்கு அதிக வேலை கொடுத்தால் அது பழுதடைந்து விடும். ஆகவே நீங்கள் சமன்வயப் படுத்த வேண்டும். உங்கள் அறிவுத் திறன் என்னும் சாதனத்தை  பழுது பார்ப்பது தான் தியானம்.அதை ஒதுக்கி விடாதீர்கள்.
ஆராய்ச்சி செய்யாதீர்கள், உங்கள் அறிவுத் திறனை பூட்டி விடுங்கள்என்று கூறவில்லை. 

இல்லவே இல்லை. அறிவுத் திறனை அதிக பட்சம் உபயோகிக்க வேண்டும், அவ்வப்போது பழுது பார்த்துக் கொள்ள வேண்டும்.

கே: குருதேவ்! கர்ம விதிப்படி, ஒருவர் செய்த முன்வினைப் பயன்படி எல்லாமே முன்னரே தீர்மானிக்கப் பட்டுவிட்டன. ஈர்ப்பு விதியானது, விழிப்புணர்வுடனோ, அல்லாமலோ, உங்களது அனுபவங்களை நீங்களே உருவாக்குகிறீர்கள் என்கின்றது. எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவு செய்து விளக்கிக் கூறுங்கள்

குருதேவ்: சில கர்மாக்களை உங்களால் அழிக்க முடியும், சில கர்மாக்களை உங்களால் அழிக்க முடியாது. அவை கட்டுப்பாடற்ற நெடுஞ்சாலையிலுள்ள வெளியேறும் வழி போன்றது. குறிப்பிட்ட அந்த வெளியேறும் வழிகளில் மட்டுமே நீங்கள் வெளியேறிச் செல்ல முடியும். அவற்றை தவற விட்டால் நேராக அடுத்த வெளியேறும் வழி வரை உங்கள் வாகனத்தைச் செலுத்தித் தான் வெளியேற முடியும். வாழ்கையும் அது போலத்தான். நீங்கள் பல விருப்பத் தேர்வுகளைச் செய்ய முடியும். பல திருப்பு முனைகளில் நீங்கள் திரும்ப முடியும். ஆனால் அவற்றைத் தவற விட்டால், அடுத்த திருப்பு முனை வரும் வரை காத்திருக்க வேண்டும். கவலைப் படாதீர்கள். பல திருப்பு முனைகள் வரும். இரண்டு திருப்பு முனைகளுக்கு நடுவில் இருக்கும் போது உதவியற்று  உணருகின்றீர்கள் அது தான் விதிப்பயன்.

கே: குருதேவ்! வாழ்கையே மாயம்  என்று எண்ணுகின்றேன் வாழ்வில் எதையாவது நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? நமது பிறப்பையும், இறப்பையும் நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? தயவு செய்து விளக்கிக் கூறுங்கள்.

குருதேவ்: ஆம் நம்மால் சிலவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.எதையுமே கட்டுப்படுத்த முடியாதெனில் இக் கேள்வி ஏன் கேட்கப்படுகின்றதுவாழ்கை என்பது இஷ்டம் மற்றும் ஊழ் என்னும் இவையிரண்டும் சேர்ந்த அழகான இணைப்பு. சிலவற்றை விரும்பிச் செய்யலாம், சிலவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இதைப் பற்றி "மௌனம் ஒரு கொண்டாட்டம்" மற்றும் சில புத்தகங்களில் எழுதி இருக்கிறேன். அந்தப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்.