மிகவும் விரும்பும் மாற்றம்

ஜூலை 1, 2013   ஜெனீவா, சுவிட்சர்லாந்து


மேன்மையானவரே, என் அன்புக்கினியவர்களே, அவையோர்களே! Dr.டெனிஸ் பிரவுன் கூறியது போல, நெருக்கடி மக்களிடமிருந்து மிகச் சிறந்ததையும் மிக மோசமானதையும் வெளிப்படுத்தும்.
ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தியாவில் ஒரு நெருக்கடி. நெருக்கடியின் போது, மக்களில் சிலர் மற்றவர்களை காப்பாற்ற உடனே களத்தில் இறங்கியதையும், மக்களில் வேறு சிலர் ஒரு குவளை தண்ணீரைக் கூட சுய லாபத்திற்குப் பயன்படுத்தியதையும் பார்த்தோம்.

இத்தகைய நெருக்கடியான நேரத்தில் தான் நாம் நீதிநெறியை அது உண்மையானதா அல்லது வெளிப்பூச்சா என்று எடைபோட முடியும். நீதிநெறி வெளிப்பூச்சாக இருக்கக் கூடாது, அது உண்மையாக வர வேண்டும். ஒருவர் எப்படி உண்மையான நீதிநெறியை மக்களிடம் ஏற்படுத்துவது அல்லது எப்படி உண்மையாகவே நீதிநெறியோடு இருக்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது?

ஒரு நிகழ்ச்சியைக் கூற விரும்புகிறேன். ஒரு வங்கியில் தொல்லை கொடுக்கும் ஒரு ஊழல் பேர்வழி இருந்தார், அவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார். அவரிடம் பேச வேண்டி அவரை என்னிடம் அனுப்புமாறு சொன்னேன். அவரிடம் நான் கேட்டேன், ‘உங்களுடையா கார் ஓட்டுனர் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா அல்லது அவர் ஏமாற்றலாமா?’ அவர் பதிலுரைத்தார், ‘என்னுடைய ஓட்டுனர் என்னை ஏமாற்ற நான் விரும்ப மாட்டேன், இது தெரிந்தது தானே.’ பிறகு நான் கேட்டேன், ‘உங்களுடன் பணி செய்பவர் உங்களை ஏமாற்றினால் நீங்கள் பாராட்டுவீர்களா?’

அவர் கூறினார், ‘இல்லை, என்னுடன் பணி செய்பவரோ அல்லது என் நண்பரோ என்னை ஏமாற்றுவதை நான் விரும்ப மாட்டேன்.’ நான் சொன்னேன், ‘பாருங்கள், உங்கள் மேலதிகாரி உங்களிடம் நேர்மையற்று நடக்க நீங்கள் விரும்பவில்லை. உங்கள் கீழே வேலை செய்பவர்கள் உங்களிடம் நேர்மையற்று நடக்க உங்களுக்கு விருப்பமில்லை. உங்களுடன் பணி செய்பவர்கள் யாரும் உங்களிடம் நேர்மையற்று நடக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரிடமும் நேர்மையை எதிர்பார்க்கிறீர்கள், எல்லோரும் நாணயமாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்; நீங்கள் எப்படி?’

அது அவரை உட்கார்ந்து யோசிக்க வைத்தது, ’ஆம், என் வீட்டில் உள்ள வேலைக்காரர் கூட என்னை ஏமாற்றக் கூடாது என்று விரும்புகிறேன், என்னுடைய கார் ஓட்டுனர் என்னை ஏமாற்றக் கூடாது என்று விரும்புகிறேன், நான் சார்ந்து இருக்கும் என்னுடன் பணி செய்பவர்கள் என்னிடம் நேர்மையற்று நடக்கக் கூடாது என்று விரும்புகிறேன்; பிறகு நான் ஏன் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும்?’ இதற்கு முன்பு இதைப் பற்றி அவர் இந்த விதமாக யோசித்ததே இல்லை; இது அவரை யோசிக்க வைத்தது, மறுமுறை யோசிக்க வைத்தது.

‘என்னுடைய நடத்தை என்னைச் சுற்றி இருக்கும் அவ்வளவு பேரையும் பாதிக்கிறது; மற்றவர்களுடைய நடத்தையால் நான் பாதிக்கப்படுகிறேன்; மற்றவர்கள் எனக்குச் செய்யக் கூடாது என்று நான் நினைப்பதை, நான் ஏன் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்?’’

இது தான் நீதிநெறியின் அடிப்படை.

இந்த விழிப்புணர்வு உள்ளிருந்து எழுந்தால், பிறகு வாழ்கை வேறு ஒரு வித்தியாசமான சூழலில் இருக்கும். நன்றாகக் கண்ணுக்குத் தெரியக்கூடிய மாற்றம் ஏற்படும். சமீபத்தில் இமாலயப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமியின் போது எந்த தொண்டரிடமும் போய் ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லவில்லை. நான் ஏதும் சொல்லாமலேயே, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செயலில் இறங்கியே விட்டார்கள். இதை தான் நான் நீதிநெறி என்பேன், உங்கள் உள்ளத்தில் இருந்து எழும் உணர்வு. இதை கல்வித் துறையில் புகுத்தினால், ஒருவருடைய கவனத்தையும் விழிப்புணர்வையும் அவருடைய போக்கின் மீதும் நடத்தையின் மீதும் கொண்டு வந்துவிட்டால், நம் சமூகத்தில் கடலளவு மாற்றத்தை நாம் காணலாம்.

நீங்கள் எபோதாவது சிறைக்குச் சென்றிருந்தால், அதாவது பார்ப்பதற்குச் சென்றிருந்தால்; சிறையிலிருப்பவர்களிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியிருந்தால், அவர்கள் நல்லவர்கள் என்று கண்டு கொண்டிருப்பீர்கள். குற்றவாளிகள் என்று நிந்திக்கப்பட்ட இவர்களுக்குள், ஒரு நல்ல மனிதர் ஒளிந்திருக்கிறார், நீதி நெறியும் பரிவும் உள்ள ஒருவரும் கூட அவர்களுக்குள் ஒளிந்திருக்கிறார். அந்த மனிதர் வெளியே வந்து மலராகப் பூக்க வேண்டும். நான் சிறைகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள ஆயிரக் கணக்கானவர்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு உணர்ச்சியின் வேகத்தில், தங்கள் கட்டுப்பாட்டிலே தாங்கள் இல்லாத அந்தச் சமயத்தில் குற்றங்கள் இழைத்ததாகவும், அதற்காக பின்னர் வருந்துவதாகவும் கூறினார்கள்.

ஊழலிலும் குற்றச் செயல்கள் செய்வதிலும் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு நாம் எப்படி உதவ முடியும்? இது முடியும் என்றே நினைக்கிறேன். அவர்கள் தங்கள் மனதையும் உணர்சிகளையும் எப்படிக் கையாள்வது என்று கற்றுத் தந்தால் அது மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். அவர்கள் சொல்கிறார்கள், ‘பள்ளியிலோ அல்லது வீட்டிலோ வாழ்கை பற்றிய ஒரு விசாலமான பார்வையை யாரும் எங்களுக்குத் தரவில்லை. எங்களுடைய மனதையும் உணர்சிகளையும் நாங்கள் கையாள வேண்டும் என்று எப்போதும் யாரும் சொல்லவில்லை.’ உள்ளே தூய்மை செயய்வதான ஒரு உணர்வு நீதி நெறியை ஏற்படுத்தும்.

மன அழுத்தமும் வன்முறை உணர்வும் ஒரு தனிப்பட்ட மனிதருக்கு ஏற்படுவதை தடுக்க வேண்டும். இத்தகைய குணங்களை தடுத்திருந்தால், அறியாமையினாலோ அல்லது கடினமான குடும்பச் சூழலினாலோ இத்தகைய குணங்கள் பெற்றிருப்பவரை, தகுந்த ஆலோசனை மூலமாகவோ அல்லது அதற்கான நுட்பங்களை கற்பிப்பதன் மூலமோ இந்த குணங்களை சமாளிக்க வைத்திருந்தால், அவர்களிடமிருந்து மிகச் சிறந்த நீதி நெறிகளை வெளியே கொண்டு வரலாம் என்பது உறுதி.

அந்தச் சீர்திருத்தக் கூடங்களில் இருப்பவர்களை இப்படி மாற்றமடைய வைத்தால், சாதாரண மக்கள் தங்கள் வாழ்வில் நீதி நெறிகளை உணர்ந்து அதன்படி வாழ்வது அவ்வளவு கடினமல்ல என்பது உறுதி. மேம்பட்ட நீதி நெறிகளும் பரிவு உணர்ச்சியும் கொண்ட சமுதாயம் எதிர்கால சந்ததிகளுக்கு இருக்காது என்று நம்ப எந்தக் காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்போதைய நிலைமை மிக மோசமாகத் தான் இருக்கிறது; குற்றங்களும் வன்முறையும் எங்கும் நிரம்பியிருக்கிறது.

கடந்த வருடம், அமெரிக்காவில் மட்டும் சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) குற்றச் செயல்கள் பதிவாகியிருக்கிறது. உலகம் முழுதும் பார்த்தீர்களானால், 7 பில்லியன் (700 கோடி) மக்கள் இருக்கிறார்கள்; சில பில்லியன் குற்றச் செயல்கள் நிச்சயம் நடந்திருக்கும் என்று கருதுகிறேன். தொழிலில் மட்டுமல்லாமல், சமூகத்தில் மற்றும் மக்கள் சமுதாயத்தில் நீதி நெறிகளை திரும்ப ஏற்படுத்த நாம் நம் கவனத்தை செலுத்த வேண்டியச் சரியான தருணம் இது. அரசியல், தொழில், மதம் மற்றும் மக்கள் சமுதாயம் என நம் சமுதாயத்தின் நான்கு தூண்களாய் உள்ள இவை எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். நம் மனித சமுதாயத்தின் இந்த நான்கு விதமான பகுதிகளிலும் நீதிநெறி ஊடுருவாவிட்டால், நாம் மிகவும் விரும்பும் மாற்றம் ஏற்படுவதைக் காண இயலாது. 

நீதிநெறிகள் கற்றுத் தரப்பட வேண்டும், முறையாக வளர்க்கப்பட வேண்டும், ஊட்டமளிக்கப்பட வேண்டும் என்பதை, நான் அழுத்தம் திருத்தமாக மறுபடி கூறுகிறேன். ஏற்கனவே இதற்கான விதை ஒவ்வொரு மனிதருள்ளும் இருக்கிறது, இது ஏற்கனவே இருக்கிறது, அதற்குச் சற்றே ஊட்டமளிக்க வேண்டும் – அரசியலில், தொழிலில், மத அமைப்புகளில் மற்றும் மக்கள் சமுதாயத்தில். இந்த நான்கு நிறுவனங்களும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தால், வரும் நூற்றாண்டில் நாம் நிச்சயம் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த சில வார்த்தைகளுடன், இன்றைய சூழலில் முக்கிய தலைப்பாகிய ‘தொழிலில் நீதிநெறி’ பற்றி அலச வந்துள்ள அனைவருக்கும், அமைப்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களனைவருக்கும் மிக்க நன்றி.