ஆற்றல் திறனின் ஏழு சக்ரங்கள்

26 ஜூலை 2013 - போன், வடக்கு கரோலினா,



கே: குருதேவ்! பாலியல் ஆற்றலும் தியான ஆற்றலும் ஒன்றே தானா?

குருதேவ்: ஆம் இரண்டுமே உடலிலுள்ள ஒரே ஆற்றல் ஆனால் வெவ்வேறு வடிவங்களில் சக்கரங்களில் வெளிப்படுத்த படுகின்றது. பாலியல் ஆற்றல்,அன்பாற்றல்அறிவாற்றல்,கூர்மை உணர்வுவிழிப்புணர்வுகோபம் இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. நீங்கள் ஏழு சக்கரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது, ஒரே ஆற்றல் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்படுவது. முதல் சக்கரம் முதுகுத் தண்டின் அடிப்பக்கத்தில் உள்ளது. இதில் வெளிப்படும் ஆற்றல் உற்சாகம் அல்லது சோம்பலாக வெளிப்படுகின்றது

இதே ஆற்றல் இரண்டாவது சக்கரத்திற்கு வரும் போதுபாலியல் அல்லது படைப்பாற்றலாக வெளிப்படுகிறது. அதே ஆற்றல்சற்றே மேலெழும்பி, மூன்றாவது சக்கரமான தொப்புளில் வரும் போதுநான்கு விதமான உணர்ச்சிகளுடையதாக வெளிப்படுகின்றது - பேராசை பொறாமைதாராள மனப்பான்மை மற்றும் மகிழ்ச்சி. இந்த நான்கு உணர்வுகளும் வயிற்றுப் பகுதியுடன் உருவகப் படுத்தப்படுகின்றன. பொறாமை உணர்வை வயிற்றுப் பகுதியில் உணருகின்றோம். தாராள மனப்பான்மையும் பெரிய வயிற்றுடன் உருப்படுத்திக் காட்டப்படுகின்றது. உதாரணமாக ஸாண்டகிளாஸ் மகிழ்ச்சியும் பெரிய வயிற்றுடன் உருவகப்படுத்தி காட்டப்படுகின்றது. கணேசா மற்றும் சிரிக்கும் புத்தர்.

அதே ஆற்றல்நான்காவது சக்கரமான இதயப் பகுதிக்கு வரும் போது, மூன்று விதமான உணர்வுகளாக வெளிப்படுகின்றது. அன்பு, வெறுப்பு மற்றும் பயம். அதே ஆற்றல் மேல் நோக்கி நகர்ந்து ஐந்தாவது சக்கரமான தொண்டைக்கு வரும் போது துக்கம் மற்றும் நன்றியுணர்வாக உருவகப் படுத்தப்படுகின்றது. துக்கம் ஏற்படும் போது தொண்டை அடைத்துக் கொள்கின்றது. அது போலவே நன்றியுணர்வு மிகும் போது தொண்டை அடைத்துக் கொள்கின்றது. அதே ஆற்றல் ஆறாவது சக்கரமான இரு புருவ மத்திக்குச் செல்லும் போது, கோபம் மற்றும் எச்சரிக்கை உணர்வாக உருவகப் படுத்தபபடுகின்றது. கோபம், எச்சரிக்கை உணர்வு, அறிவு திறன், விவேகம் ஆகியவை மூன்றாவது கண் மையத்துடன் தொடர்புடையவை.

அதே ஆற்றல் ஏழாவது சக்கரமான உச்சந்தலைக்கு செல்லும் போது பேரின்பமாக வெளிப் படுகின்றது. அதனால் தான், புனிதமான இடங்களில் ஏற்படும் அனுபவத்தின் போது மனம்  உச்சந்தலையில் கவனமாக சென்று பேரின்பமாக உணரப்படுகின்றது. எனவே, மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் நகரும் ஆற்றல், வாழ்க்கையில் உணர்ச்சிகளாக உணரப்படுகின்றது.

கே: குருதேவ்! எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்பது பற்றிக் கற்க விரும்புகின்றேன். அதைப் பற்றிச் சிறிது கூற முடியுமா?

குருதேவ்: பிரார்த்தனை என்பது இயல்பாக ஏற்படக் கூடிய ஒரு விஷயம். இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழுகின்றது. ஒன்று, நீங்கள் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கும் போது, உங்கள் நன்றியறிதலை காண்பிக்கும் போது ஏற்படுகிறது. மற்றொன்று முற்றிலும் நிராதரவான நிலையில்உதவியை வேண்டும் போது ஏற்படுகின்றது.

பிரார்த்தனை தானாகவே எழுகின்றது,அதை நீங்கள் வளர்த்துக்கொள்ள முடியாது. அதிக பட்சமாக என்ன செய்யலாம் என்றால், வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து, எங்கிருந்து,எப்படி இந்நிலைக்கு வந்திருக்கிறீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். மற்றொன்று, உலகில் மற்றவர்களைப் பாருங்கள். அவர்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள், நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய மெல்லிய விழிப்புணர்வு உங்களை பக்தியுள்ளவராகவும், நன்றியுள்ளவராகவும் ஆக்கும்.
பிரார்த்தனை என்பது ஆரம்பம், தியானம் என்பது அதன் உச்சநிலை. கிடைத்தவற்றுக்கெல்லாம் நன்றி கூறுவது பிரார்த்தனை. தியானம் என்பது கடவுள் கூறுவதை கவனிக்கும் நிலையை அடைவது. 

பிரார்த்தனையின் முதிர்ந்த நிலையே தியானம். பிரார்த்தனைக்கு எதிராக நான் உங்களை அதைரியப்படுத்தவில்லை. பிரார்த்தனை என்பது தியானத்திற்கு முன்பு நிகழ வேண்டியது. பிரார்த்தனைக்குப் பின்னர், அமைதியாக அமர்ந்து தியானம் செய்யுங்கள்.

கே: நல்ல நேர்மறை அதிர்வுகள் உள்ள இடங்களிலும், பிரார்த்தனை செய்யும் நேரங்களிலும் கூட அச்சம் தரும் எண்ணங்களும் தீய எண்ணங்களும் உண்டாவது ஏன் என்று எனக்கு வியப்பாக உள்ளது. தயவு செய்து விளக்கம் கூறி உதவுங்கள்.

குருதேவ்: கவலைப்படாதீர்கள். எண்ணங்கள் வெறும் எண்ணங்களே. இது போன்ற எண்ணங்கள் வருகின்றன என்ற விழிப்புணர்வு உங்களுக்கு இருக்கும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள்.   ஏனென்றால் இது போன்ற எண்ணங்கள் வரும் போகும். எதிர்மறை எண்ணங்கள் பல காரணங்களால் வருகின்றன.

1. உடலில் நல்ல இரத்த ஓட்டம் இல்லாமை. சீரான மூச்சின்மை, மூளைக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காமை.

2. நல்ல குடல் இயக்கம் இல்லாமை, மலச்சிக்கல் இருக்கும் போது எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உண்டாவதை காணலாம்.

3. பிராண வாய்வுக் குறைவு. இவற்றிற்கான தீர்வுகளாகப் பின் வருவனவற்றை செய்யலாம்.

1. இரத்த ஓட்டத்தை சீராக்குங்கள். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யுங்கள். பாடுங்கள். ஆடுங்கள், யோகாசனப் பயிற்ச்சிகள், தியானம், பிராணாயாமம் போன்றவை  செய்தல் நல்ல பலன் தரும். 

2. வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யுங்கள். ஸ்ரீ ஸ்ரீ யோகா இரண்டாவது நிலை பயிற்சியில் நாம் குடிக்கும் தண்ணீர் மூலம் நம் உடல் முழுவதையும் சுத்தம் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம். குஞ்சல் என்னும் முறை நம் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதிகளை சுத்தம் செய்ய உதவுகின்றது. சங்க பிரக்ஷலன் என்ற முறை வாயிலிருந்து குதம் வரை நம் உணவுப் பாதையை சுத்தம் செய்ய உதவுகின்றது. இந்த பயிற்ச்சியை நீங்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். 

நீங்கள் நிறைய தண்ணீர் குடித்துவிட்டு சில குறிப்பிட்ட பயிற்சிகளை செய்யும்போது தண்ணீர் உங்கள் உடலைச் சுத்தம் செய்து உடலிலிருந்து கழிவுகளையெல்லாம் வெளியேற்றி விடுகின்றது. இதனால் தான் யோகிகள் பண்டை காலத்திலிருந்து இத்தகைய கிரியாக்களை அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.இவை மக்கள் தீய எண்ணங்களை நீக்க உதவி செய்யும்.

3. நல்லவர்களுடன் தொடர்பு கொண்டிருங்கள். பிறரது நட்பும், தொடர்பும் கூட உங்கள் பிராண சக்தியை குறைக்கக் கூடும். மேற் சொன்னவற்றை எல்லாம் நீங்கள் கடைபிடித்த பின்னரும் கூட உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுகின்றன என்றால் பொருட்படுத்தாதீர்கள். எப்படி வருகின்றனவோ அப்படியே அவை மறைந்தும் போய்விடும். அவற்றை கண்டு நீங்கள் அச்சம் கொண்டால் அவை உங்களிடமே தங்கி விடும். நீங்கள் அச்சம் கொள்ளவில்லை என்றால் உங்களை விட்டு விலகிச் சென்று விடும். 

கே: குருதேவ், அனைத்திற்கும் சாட்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நாம் சொல்வதன் உண்மையான பொருள் என்ன? பங்கேற்பது பார்வையாளனாக இருப்பது இரண்டையும் சமநிலைப்படுத்தி நாம் சரியாக செயல்படுவது எப்படி? 

குருதேவ்: சாட்சி பாவனையில் இருப்பதென்பது நீங்கள் ஒரு நெடுஞ்சாலையின் அருகில் நின்று கொண்டு கடந்து செல்கின்ற சீருந்து வண்டிகளைப் பார்ப்பது அல்லது உணவு பரிமாறப்படும் அறையில் மற்றவர்கள் உணவருந்துவதை பார்ப்பது போன்றதே. நிகழ்வதில் பங்கேற்காமல் அதை வெறுமனே கவனித்து கொண்டிருத்தல் என்பதே இதன் பொருள். இது போன்றே, உங்களுக்குள் வரும் எண்ணங்களை வெறுமனே கவனித்துக் கொண்டு அவற்றில் பங்கேற்காமல் இருத்தல் வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பித்து பிடித்தவர் போலாகி விடுவீர்கள்.

கே: குருதேவ், மானுட வளர்ச்சியில் செயற்கை அறிவின் பங்கு என்ன? ஒருமை (ஒரு ஆளுமை) விரைவில் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ஒரு காலகட்டத்தில் செயற்கை அறிவு மானுட அறிவை மிஞ்சி விடும் என்றும் இந்த கிரகத்தையே ஆளக்கூடும் என்று சொல்லப்படுகின்றதே, நாம் இது குறித்து கவலை கொள்ள வேண்டுமா?

குருதேவ்: இல்லை. நீங்கள் இதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ள வேண்டாம். என்னுடைய கவலை எல்லாம் மக்கள் ஏன் தங்கள் அறிவை பயன்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பது தான். ஒவ்வொருவருக்கும் அறிவாற்றல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை பயன்படுத்தாதது தான் மிகப்பெரிய பிரச்சினை. 
 
கே: குருதேவ்! உள்ளுயிர்த்தன்மைக்கும் நிகழ் காலத்திற்கும், சக்தி வாய்ந்த மறைமுகமான தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா?

குருதேவ்: ஆம்! உள்ளுயிர்த்தன்மைதான் எப்போதும் உள்ளது. இதுதான் உங்கள் நிகழ்காலம்.

கே: குருதேவ், அனைத்தும் இறைவன் செயல் என்றால், மனிதன் எவ்வாறு செயல்களுக்கும் செயலின் விளைவுகளுக்கும் பொறுப்பாக முடியும்? 

குருதேவ்: ஒரு செயலைச் செய்தலும் அதன் பலனை அனுபவித்தலும் ஒன்றோடொன்று இணைந்து செல்பவை. செயலை செய்பவர் நீங்கள் இல்லையென்றால் அதன் பலனை அனுபவிப்பவரும் நீங்கள் இல்லை."செய்பவன் நானில்லை. இறைவன் என்னை அதிக உணவை சாப்பிட வைத்தான். ஆனால் நான் வயிற்று வலியை அனுபவிக்கின்றேன்" என்று நீங்கள் சொல்ல முடியாது. நான் சொல்கின்றேன், "கடவுள் தான் வயிற்று வலியை அனுபவிக்கின்றார். நடுவில் நீ எங்கே வந்தாய்? நீ சாப்பிட்டிருந்தால் உனக்கு வயிறு வலிக்கும்.  அப்படியில்லாமல் இறைவன் சாப்பிட்டிருந்தால் வயிற்று வலியும் இறைவனுக்கே. வயிற்று வலியால் துன்பப்படுவது நீங்கள் இல்லை இறைவனே. நான் சொல்வது புரிகின்றதா?"

இந்தத் தத்துவத்தை நாம் முழுவதும் தவறாக புரிந்து கொண்டுள்ளோம் என்று நினைக்கின்றேன். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சுதந்திரம் உள்ளது. சில விஷயங்கள் அவன் சக்திக்கு அப்பாற்பட்டவை. விருப்பப்படி செய்யக்கூடியது, விதிக்கப்பட்டது என்ற இரண்டும் கலந்ததே வாழ்க்கை. சில விஷயங்கள் உங்கள் கட்டுபாட்டில் உள்ளன. சில உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. என் கையில் எதுவும் இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது, அதே போல் எல்லாம் என் கட்டுப்பாட்டில் உள்ளதென்றும் நீங்கள் சொல்ல முடியாது. இரண்டுமே தவறு.

உதாரணத்திற்கு, மழை வருமா, இல்லையா என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனாலும் மழை பெய்யும் போது அதில் நனைவதா இல்லையா என்பது உங்கள் கட்டுபாட்டில் உள்ளது. மழை பெய்வதென்பது விதி. ஆனால் அதில் நனையாமல் இருப்பதென்று முடிவெடுப்பது உங்கள் மதி. மழையில் நனையாத கோட் அணிந்தோ அல்லது குடை பிடித்துக்கொண்டோ நாம் மழையில் நனையாமல் இருக்கலாம்.  

கே: குருதேவ், ஞானம் பெறவேண்டுமென்ற ஆசையே அதற்குத் தடையாகுமா? ஞானம் பெற வேண்டுமென்ற ஆசை தவறானதா?

குருதேவ்: இல்லை. அது தடையாக இருக்க முடியாது. ஆனால் ஞானம் பெற வேண்டுமென்ற அதீத ஆசையும் ஜுர வேகமும் தடையாக இருக்கலாம். ஞானம் பெற வேண்டுமென்ற ஆசை இருப்பது தவறில்லை. அந்த ஆசை ஏற்கெனவே இருந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்?