சலனமற்று இருங்கள்

ஜூலை 21, 2013 - மாண்ட்ரியல், கனடா


கே: குருதேவ், பல தடவைகளில் மனித ஆன்மா விடுதலை பெற 10 முதல் 20 லட்சம்  வருடங்கள் ஆகின்றன என்று சொல்லப்படுகிறதே. தினமும் சுதர்சன கிரியா மற்றும் தியானம் செய்வதன் மூலம் இந்த விடுதலையை ஒரு பிறவியிலேயே பெற முடியும் என்பது உண்மையா?

குருதேவ்: அனைத்துமே சில விசித்திரமான கர்ம வினைப்படி நடைபெறுகிறது. நீங்கள் அறிந்திராத இதனை உங்கள் கண்களை விரித்துப் பார்க்க வேண்டும். இவ்வுலகில் அனைத்து செல்வங்களும் தேவையான அளவு உள்ளன. ஆனால் கர்ம வினைப் பயன் இல்லாதவர்கள் அதனைப் பெற இயலாது' என்று ஒரு முதுமொழி கூறுகின்றது. எனவே உங்களுக்கு ஏதாகிலும் கிடைப்பதோ கிடைக்காமல் போவதோ கர்ம வினைப்படியே நடைபெறுகின்றது. 

அங்கீகாரம், பணம், பதவி, உறவுகள் மற்றும் உடல் நலம் அனைத்துமே படைப்பின் சில   விதிகளைப் பொறுத்தே அமைகின்றன. உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால், உங்களுடைய மோசமான எதிரி கூட உங்களுக்கு உதவுவார்கள். மாறாக நேரம் கெட்டதாக இருந்தால் உங்களுடைய நல்ல நண்பனும் உங்களுக்கு எதிரி ஆகிவிடுவான். இவை யாவுமே ஒரு விசித்திரமான கர்ம வினைப்படி நடைபெறுகின்றன. அறிவுடைய ஒருவன் இவற்றில் எல்லாம் சிக்கி விடுவதில்லை. அவன் தொடர்ந்து தன் முயற்சிகளை செய்து மேற்கொண்டு செல்கின்றான். நீங்கள் தேவையான முயற்சிகளை எல்லாம் செய்து பின்னர் விட்டுவிட வேண்டும்.  

மகாபாரதப் போரை தடுத்து நிறுத்த கிருஷ்ணர் மூன்று முறை சென்றார். சிலர் அவரிடம், கண்டிப்பாக போர் நடைபெறும்  என்று தெரிந்தும் எதனால் மூன்று முறை சமாதான முயற்ச்சியில் ஈடுபட்டீர்கள்?' என்று கேட்டனர். 'மூன்று முறையும் உங்கள் சமாதான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது என்றாலும் நீங்கள் ஏன் சென்றீர்கள்?' என கேட்டனர். மிகச் சரியான கேள்வி. அதற்கு கிருஷ்ணர் என்ன பதில் கூறினார் தெரியுமா? சமாதான பேச்சிற்கு சென்றிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஏன் செல்லவில்லை என்றும் கேள்வி எழும்" என கூறினார். 

உங்களுக்கு உங்கள் கர்ம வினைப்படி கடமை உள்ளது. நீங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். ஒரு வேளை அமைதிப் பேச்சு வார்த்தை வெற்றி பெற்றிருந்தால், மகாபாரதம் முடிந்து போயிருக்கும். பகவத் கீதையே வந்திருக்காது. அமரத்துவம் வாய்ந்த தெய்வீகமான பகவத் கீதை ஒருபோதும் கிடைத்திருக்காது. ஆக, பாரதப்போர் நடக்க வேண்டும் என்றும் பகவத் கீதை வர வேண்டும் என்றும் தெரிந்திருந்தும் கிருஷ்ண பகவான் அமைதிப் பேச்சு வார்த்தைக்குச் சென்றார். ஏனென்றால் இதுவே நம் தர்மம். நம் இயல்பு. நாம் நம் முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். அவற்றின் விளைவுகள் அல்லது முடிவுகளில் பற்றற்று இருக்க வேண்டும். 

நான் என்ன சொல்கிறேன் என்று புரிகின்றதா? அது மிகவும் நுண்ணியது. ஏனென்றால் நம் மனம் ஏதாவது ஒரு ரூபத்தில் மாயையில் சிக்கிக் கொள்கின்றது. நேற்று உங்களில் சிலர் இந்த சுவற்றில் சில படங்கள் வரைந்தீர்கள். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் இந்த சுவற்றில் புதிய வண்ண அடிக்க வேண்டும். எனவே இந்தப் படங்கள் மேல் வேறு வண்ணங்கள் அல்லது படங்கள் வந்து விடும். அது போலவே, உங்கள் தோட்டத்தில் நீங்கள் ஏதாவது பயிர் வளர்க்கும் போது கூடவே களைகளும் வளரும்.  நீங்கள் களைகளை பறித்து விடுவீர்கள். களைகள் மீண்டும் வளரும் போது 'இப்போது தானே களை பறித்தேன் மறுபடியும் வந்து விட்டதே‘என்று சொல்ல முடியாது. இது தான் இயற்கை.

உடலின் இயல்பு அழுக்காவது தான். ஒரு முறை குளித்த பின் நான் ஒரு வருடத்திற்கு குளித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. மறுபடியும் மறுபடியும் நாம் குளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதே போல் நமது மனத்தையும் ஞானத்திற்குள் நிலைத்திடச் செய்ய வேண்டும். நமது மனம் விவேகம், வைராக்கியம், சுய கட்டுப்பாடு, மற்றும் மன நிறைவு ஆகிய நான்கிலிருந்தும் மிக சுலபமாக நழுவிச் சென்று விடும். பிறகு அது விடுதலை பெற விரும்பும்!! எனவே நாம் நமது மனதை மறுபடியும் ஞானத்திலேயே நிலைத்திருக்க செய்ய வேண்டும். அப்போது திடீரென எல்லா ஞானமும் ஏற்கெனவே உங்களிடம் இருப்பது தெரிய வரும். 

உள்மனம் ஞானத்திலிருந்து நழுவி செல்லும் போது, அதுவும் மற்றொரு நிலை என்பதை உணர வேண்டும். இவை எல்லாம் அறிந்தும் நீ மாயையில் சிக்கிக்கொள்ளும் போது நீ அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.அதுவும் இயற்கையின் ஒரு பாகமே. ஞானத்தை உபயோகிக்கவில்லை என்றோ, பிறரிடத்திலோ அல்லது உன்னிடத்திலோதான் தவறு என்றோ நினைக்க வேண்டாம். நீண்ட காலமாக இத்தகைய போக்கு நம்முடைய வாழ்விலும் சமூகத்திலும் இருந்து வருகின்றது. இதிலிருந்து நாம் முறிவு பெற வேண்டும். பல சமயங்களில் நாம் வெளியே வந்துவிடுகின்றோம். சில சமயங்களில் அகப்பட்டு விடுகின்றோம்.  இல்லையா? விடுபட்டு வெளிவந்து இருப்பவற்றை அவ்வாறே பார்க்க வேண்டும். 

இந்த கணத்தில் இதமான நிகழ்வுகள் ஏற்படுகின்றனவோ அல்லது இதமில்லாத நிகழ்வுகள் ஏற்படுகின்றனவோ நான் அதற்கு ஓர் பார்வையாளனாக, சாட்சியாக உள்ளேன். உன்னுடைய மனம் அதற்குள் பிடிபடாமல் இருப்பின் அதுவும் அந்த நிகழ்ச்சியின் பாகமே. நான் அதற்கும் ஒரு சாட்சியாகவே உள்ளேன். இப்படித் தான் நீங்கள் அந்தச் சூழ்நிலையில் இருந்து மேலே வர வேண்டும். யோக சூத்திரங்களை அளித்த பதஞ்சலி மகரிஷி "நீ நீண்ட காலம் மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் ஞானம் அறியும் பயிற்சிகளை செய்ய வேண்டும். உன்னுடைய முழு வாழ்க்கையும் ஒரு பயிற்சியே. இந்த பயிற்சியை முழு மதிப்போடு நீ செய்யும் போது இந்த ஞானம் உனக்குள் ஆழமாக பதிந்து விடுகின்றது" என்று கூறியுள்ளார்.

கே: குருதேவ், இதுவரையில் நாம் தியானம் செய்யும் போது நம்முள் உட்புறமாக செல்வதற்கென கண்களை மூடி வைத்திருந்தோம். தற்போது தியானத்தின் போது கண்களை  சிறிது திறந்து வைத்துக் கொள்வதின் காரணம் என்ன?

குருதேவ்: பல சமயங்களில் நாம் கண்கள் மூடி இருக்கும்போது ஒரு கனவுலகத்திற்கோ அல்லது மனதிற்கு பிடித்த கற்பனை உலகத்திற்கோ அல்லது சில சமயங்களில் தூக்கத்திற்கோ சென்று விடும் போக்கு ஏற்படும். இது யோகிகளால் மனோ ராஜ்ஜியம் என்று கூறப்படுகின்றது. 

மனோ ராஜ்ஜியம் என்ற நிலையில் மனம் தனக்கென்று ஒரு ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்கி, அந்த ராஜ்யத்திற்குள்ளேயே மகிழ்ச்சியிலோ அல்லது முரண்பாட்டிலோ வட்டமிடுகின்றது. நீங்கள் உங்கள் மனதுடனே அமர்ந்து சில நிகழ்சிகளை பற்றி நினைத்துக் கொண்டோ அல்லது அவற்றை உருவாக்கியோ மகிழ்கின்றீர்கள் அல்லது துன்புறுகின்றீர்கள். ஒன்று, இந்த உலகம் முழுவதும் உங்களுக்கு எதிராக இருப்பதாக நினைக்கின்றீர்கள். உலகிலுள்ள அனைவரும், உங்கள் மாமியார், மாமனார், கணவர், நண்பர் ஆகிய அனைவரும் உங்களை எதிர்க்கத் தயாராக இருப்பதாக நினைக்கின்றீர்கள் அல்லது உங்கள் மனம் யாரையாவது எப்படி கவர்வது, சமாதானப்படுத்துவது அல்லது நம்ப வைப்பது என்று சிந்திக்கின்றது. இது போன்ற சிந்தனைகள் உங்கள் மனதில் சுழன்று கொண்டிருக்கும். மனோ ராஜ்ஜியத்தில் திளைக்கும் மனம் தியானத்தின் போது மேலும் சிக்குண்டு விடுகின்றது. கண்களை சிறிது திறந்து வைத்து செய்யும் தியானத்தில் மனோ ராஜ்யத்திற்கு தள்ளப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மாறுபட்ட தன்மையுடைய தியானம் ஏற்பட துவங்குகின்றது. 

கே: நான் என் குடும்பத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழும் கலை பயிற்சியின் அனுபவத்தை பெற முடிகின்றது. இந்த நிலையை நான் எப்படி சரி செய்வது என்று தயவு செய்து சொல்லுங்கள், குருதேவ். 

குருதேவ்: சில நேரங்களில் சில இடங்களில் சிலர் மற்றவர்களை விட அதிகமாக உங்களை சோதிக்கின்றனர். அதுவும் உங்களுக்கு ஒரு தவம், சாதனா, மற்றும் ஒரு தேர்வு. நீங்கள் அதிலிருந்து விலகிச் செல்லக் கூடாது. உங்களுக்கான தேர்வு நடக்குமிடம் அதுவே. அது ஒரு தேர்வு மற்றும் உங்களுக்கு ஒரு பயிற்சியும் கூட. நீங்கள் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஞானத்தின் மூன்றாவது தூண் ஆகும். இது உங்களுக்குத் தேவையான அளவு சக்தியை அளிக்கக் கூடியது. 

கே: குருதேவ், சக்தி கிரியாவின் பயன்கள் என்ன? அது உடலளவில் பலன் தருவதா அல்லது மனதிலும் பாதிப்பை என்படுத்தக் கூடியதா?


குருதேவ்: இரண்டுமே. உங்கள் ஆன்மாவிற்கு பலன் தருகின்ற எதுவுமே நிச்சயம் உங்கள் உடலுக்கும் பலனளிக்கும். உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அது உங்கள் மனதிலும் நிச்சயம் பிரதிபலிக்கும்.