நீ ஏன் கவலைப்படுகிறாய்?

20 - ஜூலை - 2013 - மாண்ட்ரியால், கனடா. பகுதி 2



கே: குருதேவா! ப்ரம்ம ஞானம் என்றால் என்ன?

குருதேவர்: இதுதான் ப்ரம்ம ஞானம் (உயர்வான ஞானம்). நாம் இப்போது பேசுவது எல்லாமே ப்ரம்ம ஞானம் தான். நீ சொன்னதெல்லாம் எப்போதும் நிலையானதல்ல.எப்போதும் இருக்காது. உண்மை மட்டும் தான் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் மூன்றிலும் நிலைத்து எப்போதும் மாறாமல் இருக்கும். உண்மை அல்லாதது என்ன? நேற்று இருந்தது. இன்று இல்லை. அது உண்மை அல்ல. இன்று என்ன இருக்கிறதோ, நாளை அது இருக்கப் போவதில்லை. அது உண்மை அல்ல. காலத்தால் மாற்றம் இல்லாததையே உண்மை என்று சொல்லலாம்.

ஆதி சங்கரரைப் பார்த்து “உண்மை என்றால் என்ன ?” என்று கேட்டதற்கு, அவர், “யத்……தத் சத்யம்” என்று விடையளித்தார். அதன் பொருள் வருமாறு.

“எது காலத்தால் அழியாததோ, மாற்றம் அடையாததோ, கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் எல்லாவற்றிலும் மாறாமல் இருக்கிறதோ அதுவே “உண்மை”. அதைத் தவிர காலத்தால் மாற்றம் அடையும் எல்லாமே “மாயை” எனப்படும். மாயை நிரந்தரமாக இருக்காது. சில காலம் மட்டுமே இருப்பது,மாறுவது மாயை.

நீ அமர்ந்திருக்கும் போது என்ன நடக்கிறது? வேண்டாத எண்ணங்கள் ஒரு நீர்க்குமிழி போல் மனதில் எழுகின்றன. நீ அந்த நீர்க்குமிழிக்குள் இருக்கிறாய்.அதில் வருங்காலத்தைப் பற்றித் திட்டமிடுகிறாய். வருங்காலத்தை பற்றிய எண்ணங்கள் எழுகின்றன. எதையோ நினைத்து ஏங்குகிறாய். அல்லது கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றி வருந்துகிறாய். கடந்த கால நிகழ்வுகள் ஒரு படம் போல் மனதில் வருகிறது. இதை எப்படி சமாளிக்கலாம்?

முதலாவது: விவேகம் (நிலையானது மற்றும் நிலையில்லாதது என்பதைப் பிரித்துப் பார்க்கும் அறிவு). இவ்வுலகில் நாம் காணும் எல்லாமே நிலையற்றது, மாறக் கூடியவை என்று அறிவது விவேகம் எனப்படும். நீ இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்று தெரியும் போது, உன் காதலன், உன் காதலி,கௌரவம், மரியாதை, பணம் மற்றும் உன்னிடம் இருக்கும் பொருள்களால் என்ன கிடைக்கப் போகிறது.எல்லாவற்றையும் விட்டு ஒரு நாள் இறக்கப் போகிறோம். எதுவும் நிலையானதில்லை. எல்லாம் நிலையற்றது.

இந்த உண்மை உனக்குத் தெரியும்போது, ஆழ் மனதில் அது பதிந்து உன் மனம், நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் ஒரு சாட்சி போல் பார்க்கத் தொடங்கும். நான் ஏன் இதற்காகக் கவலைப் பட வேண்டும் என்ற ஞானம் பிறக்கும். நிலையற்றவைகளுக்காக மனதால் அலை கழிக்கப்படுவதை போன்ற முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை என்ற தெளிவு பிறக்கும். இதுதான் விவேகம்.

இரண்டாவது: வைராக்கியம். திரும்பத் திரும்ப அதனால் என்ன? அதனால் என்ன? என்று கேள். இது அப்படிதான் இருக்கிறது. அதனால் என்ன? வைராக்கியம் உனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது உன்னை மேலும் துல்லியமாக்குகிறது. உள்ளுக்குள் நீ விடுபட்டதை உணரலாம். நிலையற்ற பொருள்களைப் பற்றி / உறவுகளைப் பற்றி விவேகம் உனக்கு தெளிவூட்டுகிறது. உன்னை (ஆன்மீக வழியில்) வளரச் செய்கிறது. சின்ன மனதின் குறும்புகளில் சிக்காமல் நிலையான பரம்பொருளை நாடச் செய்கிறது.

கே: குருதேவா! சிறிய மனம் எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கும்போது, அதை உணர முடிகிறது. ஆனால் அதிலிருந்து விடுபட்டு சிறிய மனத்தை வெல்வது மிகக் கடினமாக இருக்கிறது. இந்த மாதிரி சமயங்களில் எப்படி எதிர்மறைச் செயல்களிலிருந்து விடுபட முடியும்?

குருதேவர்: உன் முயற்சியால் எதை அடைந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட வயது / கால அளவு தான் இருக்கும். முயற்சி இல்லாமல் நீ அடைவதற்கு வயதோ / கால வரையரையோ கிடையாது.
நீ கேட்ட கேள்விக்கு விடை மேல் கூறியவற்றில் மறைந்திருக்கிறது. நீ தோண்டி எடுக்கலாம். ஒரு சூத்திரம் தந்திருக்கிறேன். முயற்சியால் நீ எதைப் பெற்றாலும் அது குறுகிய காலத்துக்கே உன்னோடு இருக்கும். நிரந்தரமாக இருக்க முடியாது. முயற்சியைக் கைவிட்டு அடைவது, வலியில்லாமல் கிடைக்கும். காலவரையரையின்றி உன்னோடு நிரந்தரமாக இருக்கும்.

கே: நான் வேலை செய்யும் இடத்தில் மிகத் திறமை வாய்ந்தவர்களை / வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை அறிவேன். ஆனால் அவர்கள் யோக சாதனை மற்றும் தியானம் செய்வதில்லை. செயல் திறமைக்கு யோக சாதனை  அவசியமா? யோக சாதனை ஒருவரின் திறமையை எப்படி மேம்படுத்துகிறது?

குருதேவர்: ஒவ்வொரு குழந்தையும் ஒரு யோகி. குழந்தை எல்லா விதமான யோக ஆசனங்களையும் செய்கிறது. ஒரு யோகியின் எல்லா குணங்களும் குழந்தையிடம் உண்டு. இப்போது நீ இந்த மனிதர் நற்செயல் எதுவும் புரிவதில்லை என்று சொல்கிறாய். இருந்தாலும் அவருக்கு எப்படி வாழ்வில் எல்லாமே நன்றாக நடக்கிறது என்று கேட்கிறாய்? உனக்கெப்படித் தெரியும்? அவர் கடந்த காலத்தில் நற்செயல் செய்திருக்கக் கூடும். முந்தைய பிறவியில் யோகியாக இருந்திருக்கக் கூடும். அதன் நற்பலன்களை தற்போது அனுபவிக்கிறார்.

யோக சாதனை என்பது ஒரு சில ஆசனங்களை செய்வது மட்டுமல்ல. அது ஒருவருடைய மன நிலையைப் பொறுத்தது. உன்னை உன் ஆத்மாவுடன், என்றும் நிலையான உண்மையுடன், இப் ப்ரபஞ்சத்தின் பெரிய மனதுடன் இணைப்பதே யோக சாதனைகள் தான். சிறிய மனம் பெரிய மனதுடன் சேர்ந்து விடும் போது ஆனந்தம் பெருகும். அப்படிச் செய்யாமல் இருக்க வழிதேட வேண்டிய அவசியம் இல்லை.யோக சாதனை செய்யாமலே திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் திறமையை மட்டும் வளர்த்துக் கொள். யோக சாதனையால் செயல் திறமை தானாகவே அதிகரிக்கும். மௌனம் எல்லாத் திறமைகளுக்கும் தாய் போன்றது. சற்று நேரம் மௌனம் காப்பதால், உன் திறமைகள் மேலும் மேலும் அதிகரிக்கும்.

கே: கடந்த சில மாதங்களாக யோக சாதனைகள், சத்சங்கம் மற்றும் சேவை செய்வது பெரிய போராட்டமாக இருக்கிறது. முதல் முறை செய்தது போல் செய்ய முயற்சி செய்தாலும், அது கடினமாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட உணர்வைத் தாண்டிச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: மனதை வருத்திக் கொள்ளாதே. எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓய்வாக இரு. ஏன் போராடுகிறாய்? ஏற்கனவே மற்ற விஷயங்களுக்காகப் போராட வேண்டியிருக்கிறது. யோக சாதனை செய்யவும் போராடுகிறாய். சரி! எல்லாவற்றையும் நிறுத்தி விடு. ஒரு நாள் நீயாகவே யோக சாதனை செய்ய வேண்டும் என்று உனக்குத் தோன்றும். நீ பட்டினியாக இருந்து உணவுக்கு ஏங்குவது போல் / தாகத்தால் தவித்து நீர் கிடைக்காதா என்று அலைவது போல் இருக்கும். அப்போது யோக சாதனையின் அவசியத்தை நீ உணர்வாய். அதே போல உன் உடலும் மனமும் சோர்வாக இருக்கும் போது, ஓய்வு  எடுக்கத் தோன்றும். ஆழ் மனதில் ஞானத்தை அடையும் ஏக்கமிருக்கும். மனம் ஜுரவேகத்தில் இருக்கும் போது, ஓடி ஓடி அலையும் போது, ஓய்வு எடுத்தால் தேவலாம், ஆழ்ந்த ஓய்வு தேவை என்று தோன்றும். அப்போது தானாகவே யோக சாதனைகள் செய்யத் துவங்குவாய்.

கபீர் தாசரின் அழகான குறள் ஒன்று இருக்கிறது. “மக்கள் துன்பப்படும் போது இறைவனை வேண்டுகிறார்கள். ஆனால் இன்பமாயிருக்கும் போது இறைவனை நினைப்பதில்லை. இன்பமான காலத்திலும் இறைவனை மறக்காதவர்களை துன்பம் எப்படி அணுக முடியும்? மனத்தின் போக்கை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். மக்களின் போக்கை நினைத்தும் ஆச்சரியமாக இருக்கிறது. “ என்று கபீர்தாசர் சொன்னார்.

எல்லா சமயங்களிலும் இறைவனை நினைத்து நன்றியோடு வணங்குவாயானால், உன் உடலும் மனமும் வலுவாக இருக்கும். அப்படியில்லாவிட்டால், நீ துன்பப்படும் போது அது அவசியமாக இருக்கும். அப்போது இறைவனிடம் வேண்டிக் கொள். அது உனக்குத் தேவையாக இருக்கும்.

கே: குருதேவா ! நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். ஆனால் என் அன்புக்கு இடையூறு வரும் என்று ஐயமாக இருக்கிறது. வாழும் கலைப் பயிற்சிக்கு அதிகமானவர்களைக் கொண்டுவர முடியும் என்றும் நம்பிக்கையின்றி இருக்கிறேன். நம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

குருதேவர்: விஞ்ஞானம் மூலம் ஐயத்தைப் போக்கலாம். நீ ஒரு விஞ்ஞானியாக இருந்தால், நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியாது. நிலைமையை அறிந்து செயல்படுவாய். மேலும் அறிய முற்படுவாய். ஞானத்தைப் பற்றிய தேடுதலும், விஞ்ஞானியின் தேடுதலும் ஒன்றே தான். நம்பிக்கை இல்லாதவர் ஞானம் தேடுபவருக்கும் விஞ்ஞானிக்கும் நடுவில் இருப்பவர். ஒரு விஞ்ஞானியாகவும் இருக்க மாட்டார். ஒரு ஆன்மிக நாட்டமுடையவராகவும் இருக்க மாட்டார். இரண்டுங்கெட்டான் நிலையில் தொங்குபவராக இருப்பார். பழுத்த பழமாகவும் இல்லை. ஒரு மொட்டாகவும் இருப்பதில்லை. நடுவில் எங்கோ இருக்கிறார். இதை நீ புரிந்து கொண்டு மேலே செல்ல வேண்டும்.
ஐயம் / நம்பிக்கையின்மை சில சமயம் இருந்தால் பரவாயில்லை. நீண்ட நாள் தொடர்ந்தால் தோல்வி மனப்பான்மையோடு வாழ்க்கை எந்த ருசியும் இல்லாமல் போய்விடும். நான் சொல்வது அதுதான்.

கே: குருதேவா! நம் மனதுக்கும் சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

குருதேவர்: சக்கரங்கள் உடலில் சில பகுதிகளில் இருக்கின்றன. மனம் என்பது ஒரு சக்தி. எண்ணங்களும் சக்தி தான். மனத்தை (சக்தியை சக்கரங்களில் திருப்பினால் அவை ஒழுங்கு படுத்தப்படுகின்றன. இயக்கம் சரியாக்கப் படும். மறைந்திருக்கும் சக்தி வெளிப்பட்டு நன்மையளிக்கும்.

கே: சக்தி கிரியா செய்யும் போது நான் அன்பு என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன். மௌனப் பயிற்சியின் போது நான் வெற்றிடம் / காலியிடம் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன். இந்த இரண்டு அனுபவங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

குருதேவர்: அனுபவத்தை உணர்ந்தவன் நீ. (அந்த அனுபவத்தை உன்னுள் உணர்ந்தவர் யார் என்று அறிந்துகொள்). அனுபவங்கள் வந்து போகக் கூடியவை.

கே: சில வாரங்களுக்கு முன் என் தோழி ஒரு விபத்தில் தன் தாயை இழந்து விட்டாள். அவள் மனம் உடைந்திருக்கிறாள். நம் அன்புக்குரியவரை, அதுவும் பெற்றோரின் இழப்பைத் தாங்கிக் கொள்ள என்ன செய்யலாம் என்று சொல்வீர்களா?

குருதேவர்: பேசுவதில் உதவி இல்லை. அமைதியாக நீ அங்கிருப்பது, உன் மௌனம், ஒரு நல்ல அமைதியான அதிர்வலைகளை உருவாக்கி, அவருடைய மனக்கஷ்டத்தைக் குறைப்பதற்கு உதவும். “ஐயோ பாவம்! உனக்கு இப்படி நடந்து விட்டதே” என்றெல்லாம் சொல்லாதே. அது உதவாது. நீ அங்கிருப்பதும்,உன் மனமார்ந்த பிரார்த்தனையும் உதவும்.

கே: கடந்த 3 நாட்களும், நாள் கணிதப் படி மிகவும் முக்கியமான நாட்கள் என்று ஒருவர் சொன்னார். அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குவீர்களா?

குருதேவர்: நீ தான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். நீ அது முக்கியம் என்று நினைத்தால், அது முக்கியத்துவம் வாய்ந்ததாகி விடும். இது முக்கியமான நாள், அது முக்கியமான நாள் என்று ஜோதிடர்கள் சொல்வது வழக்கம். ஏனென்றால் நீ அந்த நாட்களில் மிக்க கவனத்தோடு இருப்பாய். அவர்கள் ஒரு நல்ல காரியத்தையே செய்கிறார்கள். நீ இங்கு இருக்கும் போது, கவனமாக தற்சமயத்தில் இருப்பது அவசியம்.