திருமணம் செய்து கொள்ள முடிவு

ஜூலை 18, 2013 - மாண்ட்ரியல், கனடா

கே: என் ஆசைகள் மீதும் கனவுகள் மீதும், உதாரணமாக எனக்கென ஒரு குடும்பம் என்று எவ்வளவு தூரம் அவை மீது பற்று வைத்திருக்கிறேன் என்று உணர்கிறேன். அதை அடைய நான் பற்றின்மையை பயில வேண்டுமா என்ன? ஆன்மீகப் பாதைக்கு நம் எல்லா ஆசைகளின் மீதும் பற்றின்மை வேண்டுமா?

குருதேவ்: உங்களுக்கு பல ஆசைகள் இருந்தால் அது பிரச்சினை. அது சிதறி இருக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு ஆசை மீது உங்கள் கவனத்தை குவியுங்கள். நீங்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? ஏன் இதுவரை செய்து கொள்ளவில்லை. நீங்கள் மிக அரிதாக இருப்பவற்றை எதிர்பார்க்கிறீர்களா? நேரம் வரும்போது மேலே செல்லாமல், பின்னர் உங்களுக்கு யாரும் கிடைக்கவில்லை என்று வருந்துகிறீர்களா?

ஒருமுறை அறுபது வயதான ஒரு மனிதர் என்னிடம் வந்து சொன்னார், ‘குருதேவ், நான் எனக்கு ஆத்மார்த்தமான துணையைத் தேடிக் கொண்டிருக்கிறேன், ஆனால் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.’ நான் சொன்னேன், ‘இன்னும் 15 வருடங்கள் பொறுத்திருந்தால் நீங்கள் சொர்கத்திலே உங்கள் இணையை பார்க்கலாம்’.

மிகவும் நுணுக்கி நுணுக்கி பார்த்திருக்க வேண்டாம். ஒரு நல்லவரை பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர் நல்லவராகவே இல்லாமல் போனாலும், அவர்களை மாற்ற முடியும், அவரை மேலும் நல்லவராக்க முடியும்!

இந்தியாவின் ஷேக்ஸ்பியரைப் பற்றிய கதையை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் பெயர் காளிதாசர், அவர் சமஸ்க்ருத இலக்கியத்தில் மிகச் சிறந்த சில படைப்புகளை இயற்றியிருப்பதால் அவரை இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கின்றனர். சமஸ்க்ருதம் கற்க விரும்புபவர்கள் காளிதாசரை தவிர்க்க முடியாது. அவர் எப்படி காளிதாசர் ஆனார் என்பது மிக சுவாரசியம்.

ஒரு மாமன்னர் இருந்தார், இந்தியாவின் மிகப் பிரபலமான சக்ரவர்த்தி அவர். அவருக்கு ஒரு மகள் இருந்தாள், அவள் மிக அழகானவள். மிக புத்திசாலியான அவள், சாமர்த்தியசாலியாகவும் அனைத்தையும் கசடறக் கற்றவளாகவும் இருந்தாள். அவளுக்கு இணையான கணவரை தேர்ந்தெடுப்பது மன்னருக்கு மிகக் கடினமாக இருந்தது, ஏனென்றால் அவள் தானே உரையாடி ஒருவர் தகுதியானவர் தானா என்று சோதித்து அறிந்துகொள்ளாமல் எதுவும் நடக்காது. பாருங்கள், இந்தியாவில், பண்டைய நாட்களில் பெண்களுக்கு எல்லாவித வலிமையும் இருந்தது! பெண்களே ஆண்களை தேர்தெடுத்தார்கள், சீதா தேவி தன் சுயம்வரத்தில் தேர்ந்தெடுத்தது போல. சுயம்வரம் என்பது பெண்கள் தாம் திருமணம் செய்துகொள்ள தனக்கு இணையான ஆணை தேர்ந்தெடுக்கும் ஒரு சடங்கு.

எனவே, பல்வேறு தேசங்களிலிருந்து இளவரசர்கள் அழைக்கப்பட்டனர் என்று கதை போகிறது. அவளது அறிவையும் அழகையும் கேள்விப்பட்டு பல இடங்களிலிருந்து இளவரசர்கள் குவிந்தனர். யாருமே பதிலளிக்க முடியாத கேள்விகளை கேட்டுவிடுவாளோ என்று பயந்தனர். வருடங்கள் பல ஓடியபடி இருந்தது, அவள் வருபவர் அனைவரையும் சோதித்துவிட்டு, வேண்டாம் என்று புறக்கணித்துவிட்டாள். மன்னனுக்கு சிறிது மன வருத்தம், ஆனால் பிரதம மந்திரிக்கோ பெரும் எரிச்சல். அவள் பிரதம மந்திரியை கேலி செய்திருக்கலாம், கதைப்படி அவருக்கு இளவரசி மேல் எரிச்சல். ‘இந்தப் பிடாரிக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்து அவளை அடக்க வேண்டும்.’ என்று பிரதம மந்திரி நினைத்தார்.

அவர் ஒரு முறை காட்டு வழியாகச் சென்றபோது, மரம் வெட்டும் ஒருவன் மரக்கிளை மீது அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார்! உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவனைப் பார்த்து சொன்னார், ‘ஏய், நீ கீழே வா!” அவன் கீழே வந்தவடன் அவர் சொன்னார், ‘நீ என்னுடன் வந்துவிடு.’

அந்த மரம் வெட்டி அதற்கு சம்மதித்தான். மெளனமாக இருந்து எல்லாக் கேள்விக்கும் சைகைகளை கொண்டே பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மரம் வெட்டிக்கு நல்ல அழகான ஆடைகள் அணிவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். இளவரசியிடம் சென்று,உங்களுக்காக உண்மையிலேயே புத்திசாலியான ஒருவனை நான் ழைத்து வந்திருக்கிறேன்.” என்றார். “சரி, நான் அவருக்காக மூன்று கேள்விகள் கேட்கிறேன்.” என்றாள் இளவரசி. அவள் அவனிடம், உலகத்தின் உண்மையென்ன என்று கேட்டதற்கு அவன் தன்னுடைய ஆட்காட்டி விரலைக் காட்டி பதில் கூறினான். பிறகு அவள், இந்த படைப்புக்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று கேட்டதற்கு அவன் தன்னுடைய கைகளால் இரண்டு என்று காட்டினான்.

மூன்றாவது கேள்வியும் அவ்வாறே சென்றது, அவளுக்கு நல்ல திருப்தி. எனவே அவனை திருமணமும் செய்துகொண்டாள். திருமணம் நடந்த பிறகு, அவனுக்கு அரிச்சுவடி கூட எழுத முடியாது என்பதைத் தெரிந்துகொண்டாள். காட்டிலே வெறும் மரத்தை வெட்டுகிறவன். தான் ஏமாற்றபட்ட்டத்தை உணர்ந்தாள், ஆனால் அந்த நாட்களில் ஒரு முறை திருமணம் நடந்துவிட்டால் அவ்வளவுதான். ஐந்து பூதங்களை சாட்சியாக வைத்து நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள் பிறகு அந்தத் திருமணம் தான் வாழ்கை முழுதும்.

இப்போது அவள் மிகவும் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தாள். கோவிலுக்குச் சென்று தாய் பராசக்தி முன் அழுதாள். தான் எவ்வளவு கர்வமான செயல்களைச் செய்தோம் என்பதை உணர்ந்தாள். யாராவது மேலானவராக, தன்னையும் வெல்லக் கூடிய ஒருவர் வேண்டும் என்று முயன்றதால் பலரை நிராகரித்து பலருக்கு வேதனைத் தந்தாள். ஆனால் இப்போது நடந்தது என்ன. தான் வித்தியாசமாக தோற்கடிக்கப் படவேண்டும் என்று விரும்பினாள் ஆனால் இப்போது வேறு விதமாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறாள். அவள் ஆழ்ந்த தியானத்திற்கு சென்றாள்.

அப்போது பயந்து நடுங்கியபடி உட்கார்திருந்த அந்த மரம் வெட்டியிடம் தாய் பராசத்தி தோன்றி, அவனுடைய நாக்கை நீட்டச் சொன்னாள் என்று சொல்லப்படுகிறது. அவன் தன் நாக்கை நீட்ட, அதில் ‘ஓம்’ என்று எழுதினாள். இந்த அனுபவத்தினால் உடனடியாக அவன் ‘ஸ்மாலய டன்டேகம்’ கவிதையைப் பாடத் தொடங்கினான், அப்போதிலிருந்து காளிதாசர் என்றும் அழைக்கப்பட்டான். அவ்வளவு ஆழ்ந்த விவரிப்போடும், அவ்வளவு அறிவுடனும், அவ்வளவு சிலேடையாகவும் ஆகச் சிறந்த இலக்கியங்களை மற்றும் அற்புதமான கவிதைகளை காளிதாசர் எழுதினார். அவ்வளவு அழகானதாக அவை கருதப்படுகிறது.

எனவே, உங்களுக்கு சமமாக உள்ளவாராக கிடைக்கவில்லை என்றால், நான் சொல்கிறேன், உங்களால் அவரை மாற்ற முடியும்! இந்தக் கதையை உங்களுக்குச் சொன்னதின் காரணம் இதுதான். இந்தத் திறனில் நம்பிக்கை வைத்து மேலே செல்லுங்கள். சில வருடங்களில் இது நடக்கவில்லையென்றால், உங்களுக்கு உங்கள் வழி, அவருக்கு அவர் வழி.

கே: அன்பு குருதேவ், மூக்கின் மீது கவனம் குவிப்பதின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: மெய்யுணர்வின் கட்டுப்பாட்டு மையமான ஆக்ஞை சக்கரம் மூக்கிற்கு சற்று மேலே உள்ளது. புருவங்களுக்கு மையத்தில் உள்ள இந்த கட்டுப்பாட்டு மையம் மனதிற்கு விழிப்புணர்வை தருகிறது. எனவே, கவனத்தை உங்கள் மூக்கின் மீது வைப்பது ஒரு ஆரம்பம், உங்கள் மூளையின் முன் பகுதியை சமன் செய்து ஓய்வு நிலையில் அதை சுறுசுறுப்பாக ஆக்க உதவுகிறது.

உங்களுக்கு புலன் உணர்வுகளால் அனுபவம் ஏற்படுபோது, உங்கள் தலையின் பின் பகுதி பெரும்பாலும் இயங்குகிறது. நீங்கள் எச்சரிக்கையாய் இல்லாத போது, மிகவும் விழிப்பாய் இல்லாதபோது உங்கள் தலையின் பின்பகுதி இங்குகிறது. உங்கள் மூளையின் முன் பகுதி இயங்கும்போது, கவனமும் எண்ணக் குவிப்பும் இருக்கிறது, விழிப்புணர்வின் தரமும் மாறுகிறது. இது ஒரு பண்டைய நுட்பம்.

நமக்கு மூன்று பரிமாணங்கள் இருக்கிறது உடல், சுவாசம் மற்றும் மனம். ஒவ்வொன்றுக்கும் ஒரு இலயம் உண்டு, ஆனால் எல்லாம் இணைந்திருக்கிறது. இந்த கவனம் இந்த மூன்று பரிமாணத்திற்கும் ஒத்திசைவு ஏற்படுத்துகிறது.

கே: சுய முயற்சி பற்றி அதிகம் பேசுகிறது யோக வசிஷ்டா, ஆனால் நீங்களோ தளர்வாய் இருக்கச் சொல்கிறீர்கள். எதை எப்போது பிரயோகிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆன்மீகத்தில் எப்போது முயற்சியில் ஈடுபடுவது எப்போது தளர்வடைவது?

குருதேவ்: பிரவ்ரித்தி மாற்றி நிவ்ரித்தி என்று இரண்டு விஷயங்கள் உள்ளன (செயல் மற்றும் ஓய்வு). செயலில் இருக்கும்போது, முயற்சி தேவை, ஓய்வில் இருக்கும்போது, தளர்வடைவது தேவை. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே செல்லும். ஆனால் நாம் மாற்றியே செய்கிறோம். ஓய்வாய் இருக்கும் போது, சிந்திக்கிறோம், செயல்பட விரும்புகிறோம், செயலில் இருக்கும் போது சொல்கிறோம், ‘கடவுள் விரும்பினால் நடக்கும்’. இப்படி ஒருவர் செய்யக்கூடாது.

நீங்கள் செயலில் இருக்கும் போது உங்கள் 100% முயற்சியை அதிலே அளிக்க வேண்டும், சுயமாய் முயற்சி செய்ய வேண்டும். அதைச் செய்த பிறகு, உட்கார்ந்து அதை நடக்க விடுங்கள். வைத்திய சாலைக்கு செல்ல முயற்சி செய்கிறீர்கள், அங்கு சென்று சிகிச்சை மேசை மீது படுத்தபின், சிகிச்சை செய்பவர் மற்றவற்றை பார்த்துக் கொள்வார். அதைப் போலவே தியானம் செய்ய முயற்சி செய்து வந்து அமர்கிறீர்கள், தியானத்திற்கு வந்து  அமர்ந்தபின் முயற்சி ஏதும் தேவையில்லை. நீங்கள் நன்கு கவனித்துக் கொள்ளப்படுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இரயிலைப் பிடிக்க வேண்டியிருந்தால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு நான் இரயிலைப் பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முயற்சி செய்து இரயிலைப் பிடித்துவிட்டால், இரயில் பெட்டிக்குள் அங்கும் இங்கும் போய்வருவதால் உங்களை அது இன்னும் துரிதமாக எல்லாம் கூட்டிச் செல்லாது. இரயிலினுள் சென்றுவிட்டால் நீங்கள் அமர்ந்து ஓய்வாய் இருக்க வேண்டும்.  எனவே முயற்சியும் முயற்சியின்மையும் வேண்டும்.

கே: முன்னோர்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த உடம்பை விட்டு வேறு உலகிற்குச் சென்ற பின்னும் அவர்கள் இன்பதுன்பத்தை உணர்வார்களா?

குருதேவ்: நீங்கள் தியானம் செய்து ஞானத்தில் ஆழும்போது, அந்த ஞானம் அவர்களுக்கும் செல்கிறது. இந்தியாவில் தர்ப்பணம் என்ற ஒரு அழகான சடங்கு இருக்கிறது. தர்ப்பணம் என்றால் நிறைவேற்றுவது, திருப்திபடுத்துவது. காலம் சென்ற முன்னோர்களின் திருப்திக்காகவும் நிறைவுக்காகவும் அவருடைய மகனோ அல்லது மகளோ பிரார்த்தனை செய்வார்கள். தண்ணீரும் எள்ளும் எடுத்துக்கொண்டு அவர்கள் சொல்வார்கள், ‘திருப்யதி, த்ருப்யதி, த்ருப்யதி’. த்ருப்யதி என்றால் நிறைவு.

அந்தச் சடங்கின் பொருள் என்னவென்றால், ‘உங்கள் மனதில் சிறு ஆசைகள் இருந்திருக்கலாம், அவைகள் இந்த எள்ளைப் போன்றது. அவற்றை அப்படியே விட்டுவிட்டு நிறைவாய் மேலே செல்லுங்கள். இந்தச் சிறிய விஷயங்களினால் கவலை கொள்ளாதீர்கள், அவற்றை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்’. இதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள். யோக வசிஷ்டா நூலைப் படிப்பது, அந்த ஞானத்திலே இருப்பது போன்றவையே மற்ற உலகங்களின் மீது சூட்சுமமான ஒளியை பரப்பும். நீங்கள் மகிழ்வோடும் திருப்தியோடும் இருப்பதால், நீங்கள் பக்தியில் இருப்பதால், நீங்கள் ஞானத்தில் இருப்பதால், அவர்கள் நிறைவை அடைகிறார்கள். அந்த நேர்மறையான அதிர்வுகள் மற்ற தளங்களை அடைந்து அவர்களையும் தொடுகிறது. அதற்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. சில நேரங்களில் தியானத்தின் பலனை தாம் பெறுவதில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் அதன் பலனின் ஓரு பகுதி வேறு எங்கோ உபயோகமாகிறது. வேறு யாரோ அதை அனுபவிக்கிறார்கள். எனவே, அது பரவாயில்லை.

கே: சைவ உணவை உண்ணுபவர்கள் கூட தாவரங்களைக் கொன்று தான் சாபிடுகிறார்கள் என்று அசைவ உணவு உண்ணும் சிலர் சொல்கிறார்கள். விலங்குகளின் நரம்பு மண்டலம் தாவரங்களின் நரம்பு மண்டலங்களை விட வித்தியாசமானது என்று நான் அவர்களுக்கு பதில் சொல்கிறேன். வேறு ஏதாவது சொல்வதற்கு உள்ளதா?

குருதேவ்: ஒருவர் ஏன் மரக்கறி உணவு சாப்பிட வேண்டும் என்று இணையத்தில் நீங்கள் தேட வேண்டும். நூற்றுக்கணக்கான இணைய தளங்கள் இதைப் பற்றி இருக்கிறது. அதை படித்து அதில் ஏதேனும் நல்லவை இருந்தால் எனக்குச் சொல்லுங்கள். இந்தத் தலைமுறை மிகவும் அதிர்ஷ்டசாலிகள்; எந்த ஞானத்தையும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தங்கள் விரல் நுனியில் பெற முடிகிறது! முந்தைய தலைமுறையில், நாங்கள் பள்ளிக்குச் செல்லும்போது, நூலகத்திற்குச் சென்று தேட வேண்டும். இன்று எந்த நூலகமும் தேவையில்லை.

அந்த நாட்களில் கூகுள் இல்லை, ஒவ்வொரு அட்டவணையாக தேட வேண்டும், மேலும் எல்லா புத்தகங்களும் எங்கள் நூலகத்தில் இல்லை. 20 – 30 வருடங்களுக்கு முன்பு, அளவான ஞானமே கிடைத்தது. ஆனால் இப்போது நீங்கள் அதிர்ஷ்டசாலிகள், இந்த தலைமுறை எல்லாவற்றையும் விரல் நுனியில் பெறுகிறது.