குப்பைத் தொட்டியில் ஒரு வைரம்

27 ஜூலை 2013 – போன் வட கரோலினா


வாழ்கை ஒரு கொண்டாட்டம். ஒவ்வொரு நாளும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் விட்டுவிடாமல், கொண்டாடி நன்றியுடன் இருங்கள். கொண்டாட்டம் எவ்வாறு நிகழும்? கொண்டாட்டம் என்பது மலர்களையும் பலூன்களையும் வைத்து மட்டும் நிகழாது, அது உள்ளிருந்து நிகழ வேண்டும். கொண்டாட்டம் நிகழ, என்னன்ன தகுதிகள், நிலைமைகள் தேவை என்று தெரியுமா? அதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறீர்களா? இது கேட்ச் 22 போன்றது. 

கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்,மகிழ்ச்சியாக இருந்தால் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் பயத்துடன் இருக்கும் போது கொண்டாட முடியாது. அன்பும் சார்புணர்வும் வேண்டும். ஆம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி உணவு, பசியுடன் இருந்தால் கொண்டாட முடியாது. கவனியுங்கள்! உணவைப் பரிமாற்றம் செய்து கொள்பவர்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா? கொண்டாடுகிறார்களா? அவர்கள் முகத்தை கவனியுங்கள். பின்னர் தூய்மையாக உணருதல் தேவை. நீங்கள் தூய்மையாக உணரும் போது கொண்டாடலாம்.அழுக்காக உணரும்போது கொண்டாட முடியுமா?

நீங்கள் கழிவு நீர் அமைப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் "வாருங்கள் நாம் கொண்டாடலாம்" என்றால் நீங்கள் "இல்லை, நான் அழுக்காக இருக்கின்றேன். குளித்து விட்டு வருகிறேன், பிறகு கொண்டாடலாம்" என்று கூறுவீர்கள் அல்லவா?. ஆகவே கொண்டாட்டத்திற்கு என்ன தேவை? தூய்மையாக உணருவது - சுத்தம். நீங்கள்  உள்ளும் புறமும் தூய்மையாக எப்போது உணருகிறீர்களோ அப்போது தான்  கொண்டாட்டம். தங்களை கொடிய பாவம் செய்தர்வர்களாக எண்ணுபவர்களால் கொண்டாட முடியாது. ஏனெனில் அப்பாவமும், குற்ற உணர்வும் அவர்களைத் தின்று விடும். ஆகவே, உள்ளும் புறமும் தூய்மை உணர்வு தேவை.
இந்த குருபூர்ணிமா தினத்தில், நீங்கள் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன். நீங்கள் ஒரு வைரம். ஒருவேளை அது குப்பைத் தொட்டியில் இருக்கின்றது. 

நீங்கள் உங்களைத்  தூய்மையற்றவ்ராக எண்ணும் போது நீங்கள் ஒரு வைரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு வைரம் தூய்மையற்றதாக இருக்க முடியாது. ஒரு வேளை அது குப்பைத் தொட்டியில் கிடக்கலாம். குப்பைத் தொட்டியிலுள்ள வைரத்தைத் தூர எரிந்து விடுவீர்களா? இல்லை அதை எடுத்து சுத்தப்படுத்துவீர்கள். நீங்கள் செய்யும் பயிற்சிகள் எல்லாம் சுத்தப்படுத்தும் முறை தான்.

வைரத்தை சுத்தப்படுத்த எவ்வளவு நேரமாகும்? அதை மிகக் கடினமாக அழுத்தித் தேய்க்க வேண்டுமா?  இல்லை.சிறிது தண்ணீர், சிறிதளவு சோப்பு இருந்தால் போதும். அது போன்று "சோஹம்! சோஹம்! "அவ்வளவுதான்.வைரம் மீண்டும் சுத்தமாகி விட்டது. நீங்கள் "நித்ய சுத்தோஹம்" "நான் எப்போதும் தூய்மையானவன்" என்பதை அறிந்து கொண்டால் உங்கள் வாழ்வில், கொண்டாட்டம் என்பது எப்போதுமே இல்லாமல் போகாது. உள்ளார்ந்த அக நிலையில்இயல்பாகவே நாம் தூய்மையானவர்கள். எந்த க்ஷணத்தில் இத் தூய்மையை உணர்ந்து, இதய தூய்மையை அறிந்து கொண்டு இப்பிரபஞ்சத்தில் யாருக்கும் தீமையை நினைக்காமல் இருக்கின்றீர்களோ அப்போது நீங்களே அன்பு எனப்படுவதாக இருக்கின்றீர்கள். எப்போது நீங்கள் தூய்மையாகவும், அன்பாகவும் உணருகின்றீர்களோ அப்போது நீங்கள் மலருகின்றீர்கள் விழிப்புணர்வு உங்களுக்குள் ஏற்படுகின்றது.

நீங்கள் எப்போதுமே தூய்மையானவர். மௌனம் தான் தூய்மையின் நறுமணம். மௌனமும், தான் தூய்மையானவர் என்று உணறுதலுமே கொண்டாட்டம் மௌனத்தின் வழியாக வரும் கொண்டாட்டம் உள்ளிருந்து வருவதால் மிகுந்த நிலைநிறுத்தப்பட்ட ஒன்று. நீங்கள் தண்ணீரும் சோப்பும் (வாழும்கலை பயிற்சிகள்) கொண்டு வைரத்தை சுத்தப்படுத்தி விட்டதால், வைரம் இப்போது பிரகாசிக்கின்றது.அதுவே கொண்டாட்டம். உங்களிடம் உள்ள ஒவ்வொன்றும்,மெய்யானது, உங்களது புன்சிரிப்பும் மெய்யானது. சிலரது புன்முறுவலைப் பார்த்திருக்கிறீர்களா? அது உள்ளிருந்து வருவதில்லை. அது ஒப்பனைப் புன்முறுவல். சிலர் நல் வரவு கூறுவார்கள், அது ஒப்பனை நல்வரவு! சிலர் மிக்க நன்றி என்பார்கள், அது ஒப்பனை நன்றி. வெளிப்புறமாகக் கூறுவது. மனதில் மௌனம் இல்லை. மனதினுள் கொந்தளிப்பும், தூய்மையின்மையும், குற்ற உணர்வும் கொதித்துக் கொண்டு இருக்கின்றன. மனித வாழ்கை கொண்டாட்டத்திற்குறியது. நமக்குள் வீணாக சேகரித்து வைத்திருக்கும் அனைத்தையும் விட்டு விடலாம்.

நாம் குப்பையை நகைப்பெட்டியில் வைத்திருக்கிறோம். குப்பைத் தொட்டியில் நகைப் பெட்டியல்ல நகைபெட்டியில் குப்பையை வைத்திருக்கிறோம். அதை அப்புறப்படுத்த வேண்டும். நீங்கள் தான் உண்மையான அன்பு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நாம் பாவம் செய்தவர்கள், குற்றமுள்ளவர்கள் என்றே வரையறுக்கப்பட்டு விட்டதால், நம் மீதே நாம் கடினமாக இருக்கின்றோம். அவ்வாறு நம்மைக் கடினப்படுத்திக் கொள்ளுவதால், நமக்கு பரிசாக அளிக்கப்பட்ட, நம்மிடம் உள்ள நல்ல பண்புகள் மற்றும் குணங்களை நாம் அடையாளங்கண்டு கொள்வதில்லை. இந்த பூமிக்கு வந்துள்ள நாம்  ஒவ்வொருவரும், பல அழகான குணங்களுடன் வந்துள்ளோம். ஆனால் அதை அடையாளங்கண்டு கொள்வதில்லை.

குரு பூர்ணிமா என்பது உங்களது  அழகை நீங்கள் அடையாளம் அறிந்து கொள்ளும் கொண்டாட்டம். எப்போது இந்த அழகை உணர்ந்து, உங்களுக்கு அளிக்கப்பட பரிசுகளை அடையாளங் காண்கிறீர்களோ, அப்போது நீங்கள் மிகுந்த நன்றியை உணருவீர்கள். இத்தகைய நன்றியறிதலை,குரு பாரம் பரியத்திற்கு செலுத்தி வெளிப்படுத்துதலே, குரு பூர்ணிமா. அது உண்மையான ஒரு கொண்டாட்டம்.

நாம் இப்போது மௌனத்திலிருந்து ( வாழும்கலை முது நிலை தியானம் - மௌனம் பயிற்சி) வெளி வந்து விட்டோம். ஆயினும் மௌனமாகவே இருந்து கொண்டு இருக்கின்றோம். இப்போது நீங்கள் ஒரு வைரம் என்று உணருங்கள், அது குப்பைத் தொட்டியில் இருக்கலாம். பரவாயில்லை.
அதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது, கோபப்படக்கூடாது, இப்போது செய்வதையெல்லாம் செய்யக் கூடாது என்பதெல்லாம் இல்லை. எப்போதும் நல்லவராகவே இருக்க வேண்டும், பிறரை இகழக் கூடாது என்பதெல்லாம் கூட இல்லை! எல்லாமே செய்யலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்கிறீர்களோ அவற்றையெல்லாம் செய்யலாம்!

ஆயினும், உங்களது செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் நீங்கள் என்று உணருங்கள். உங்கள் சூழ்நிலைகள்,சுற்றுப்புறம், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்ச்சிப்போக்குகள் இவற்றுக்கெல்லாம் மேம்பட்டவர்  நீங்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் எண்ணிக் கொண்டிருப்பதை விட நீங்கள் மேம்பட்டவர். மீண்டும் மீண்டும், "நான் ஒரு வைரம். துரதிருஷ்ட வசமாக குப்பைத் தொட்டியில் விழுந்து விட்டேன்.அதிலிருந்து எழுந்து கொண்டிருக்கிறேன். என்னை சுத்தபடுத்திக் கொண்டு இருக்கின்றேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள். அத்தகைய சுத்தப்படுத்துதல் ஓராண்டுக்கொரு முறையாக இருக் கலாம், ஆண்டுக்கு இரு முறையாக இருக்கலாம், அப்போது நீங்கள் "உங்களுக்குள் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நீங்கள் அல்ல என்று உணருவீர்கள். நீங்கள் எப்போதுமே தூய்மையானவர். இதை நம்புவது கடினமாக இருக்கின்றதா? நீங்கள் தூய்மையானவர் அற்புதமானவர், தெரிந்து கொள்வதற்காகவே, சுதர்சன் க்ரியா மற்றும் பல பயிற்சிகள் செய்கின்றோம்.உங்களில் எத்தனை பேர் நீங்கள் அற்புதமான வைரம் என்பதை நம்ப கஷ்டப்படுகின்றீர்கள்? (சிலர் கை தூக்குகிறார்கள்)

அப்படியா? அப்படியானால் நீங்கள் இன்னும் இரு முதிர்நிலை தியான  வகுப்புகள் செய்ய வேண்டும். இன்னும் ஒன்று செய்தால் கூடப் போதும். எத்தனை பேர் இதை உணர்ந்து கொண்டீர்கள்? (சிலர் கை தூக்குகின்றார்கள்) ஓ! பரவாயில்லை. சில பேராவது நான் கூறுவது என்ன என்று உணர்ந்து கொண்டீர்கள். நல்லது.

குருபூஜையின் ஆரம்பத்தில் இந்த மந்திரத்தைக் கூறுகின்றோம்.

"அப்வித்ரப் பவித்ரோவா சர்வா வஸ்தாங்கதோபிவா யஸ்மரித்  புண்டரீகாக்ஷம் சபஹ்ய அப்யந்தர சுசிஹி

தூய்மையானவரானாலும், தூய்மையற்றவரானாலும், எப்படி இருந்தாலும் (மிகக் கீழான சாக்கடையில்  வீழ்ந்து விட்டாலும்) தாமரை மலர் போன்ற இப்பிறவியை எண்ணிக் கொள்ளுங்கள். (தாமரை மலர் களிமண்ணில் பிறந்தாலும் அம்மலர், அக்களிமண்ணில் ஒட்டிக் கொள்வதில்லை). இப்பிறவி தாமரை மலர் போன்று மலர்கின்றது (புண்டரிகா என்றால் தாமரை போன்று மலர்தல்). இப்பிறவி என்பது ஒரு சாட்சி. சாட்சி என்பதை உணர்ந்து கொண்டால், அந்த உணருதலே  வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் தூய்மை ஆக்கும்.

ய ஸ்மரீத் புண்டரீகாக்ஷம் என்பது தாமரை மலர் போன்ற கண்கள் உடையவனை நினைவில் கொள்வது என்பது அல்ல. இங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.ஆக்ஷம் (கண்) என்பது சாட்சி என்பதுவும் ஆகும். புண்டரிகா (தாமரை) என்பது களிமண்ணால் கறைபடாமலும், தீண்டப்படாமலும் மலருதல் என்றும் ஆகும். ஆகவே, விழிப்புணர்வு நிலை மலரும் போது, அது எதனாலும் தீண்டப்படாமலும், கறை படாமலும் மலருகின்றது. அதே சமயம் அது சாட்சியாக இருக்கின்றது. அதுதான் விழிப்பூட்டப்பட்ட விழிப்புணர்வு நிலை. இத்தகைய விழிப்பூட்டப்பட்ட விழிப்புணர்வு நிலையை நினைவில் கொள்ளுவதே உங்களைத் தூய்மையானவராக ஆக்குகின்றது. இத்தகைய ஞானமடைந்த ஆசான்களுடன் நீங்கள் தொடர்புடையவராக உணரும் போதும் திடீரென்று தூய்மை மலருகின்றது. நீங்கள் விரும்பும் ஒருவரை நினைவு கூரும்போது உங்களில் அன்பு தூண்டப்படுகின்றது. உங்களது எதிரியையோ, விரும்பாத ஒருவரையோ நினைக்கும் போது, உங்களுக்குள் இனிமையற்ற உணர்வு உண்டாகிறது. உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் கிளர்ச்சி ஏற்படுகின்றது. அது போன்று விழிப்புணர்வை அடைந்த ஞானிகளை பற்றிச் சிந்திக்கும் போது உங்களில் தூய்மை மலருவதை உணருகின்றீர்கள்.

பேராசையும், புகழார்வமும் கொண்ட ஒருவரைப் பற்றி எண்ணினால் அது போன்ற அதிர்வலைகள் உங்களில் ஏற்படுவதை உணருவீர்கள். அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட ஒருவரைப் பற்றி எண்ணினால், அதே அதிர்வலைகளை உணருவீர்கள் உங்கள் விழிப்புணர்வு நிலையில் அதே மகிழ்ச்சி பிடித்துக் கொள்ளும். ஏன் யாரையும் வெறுக்கக் கூடாது? ஏனெனில் யாரை வெறுக்கின்றீர்களோ அவர் உங்கள் விழிப்புணர்வு நிலையில் பெரும் இடத்தைப் பிடித்துக் கொள்ளுவார்.

நீங்கள் யாரைப் பற்றி அதிகம் எண்ணுகின்றீர்களோ அவரது குணங்களை நீங்கள் உங்களில் உள் ஈர்த்துக் கொள்ளுவீர்கள். மேல்நிலையிலுள்ள,சாட்சி விழிப்புணர்வு மலர்ந்த ஒருவரை நினைத்துக் கொண்டால் உங்களிலும் உங்களைச் சுற்றியும் தூய்மை ஏற்படுவதை உணரலாம். இது அறிவியல் பூர்வமான உண்மை. தியானத்திற்கு ஏன் புத்தரின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியுமா? புத்தர் உடலை விட்டு நீங்கிய பின்னர், அவரது திருவுருவச் சிலைகள் ஏற்படுத்தப் பட்டன. புத்தரின் சிலை முன்னர் அமர்ந்து தியானம் செய்யும்போது புத்தரைப் போன்றே ஆகி விடுவீர்கள். கண்களை மூடி நீங்கள் அங்கு அமரும்போது அவரைப் போன்றே அசைவின்மையை உணருவீர்கள். புத்தரின் சிலைகளை அமைப்பதற்கு இதுவே மூல காரணம். இப்போது பெரிய, விலைமதிப்புள்ள சிலைகளை எங்கும் அமைப்பது என்பது நாகரீகமாகி விட்டது.

இங்கு முக்கியத்துவம் சிலைக்கு அல்ல. அச்சிலை போன்று புன்முறுவலுடன் அசைவின்றி நீங்கள் அமர்ந்திருப்பது தான் முக்கியம். தேவையில்லாமல் நீங்கள் இறுக்கப் பிடித்துக் கொண்டிருப்ப தையெல்லாம் விட்டு விட்டு உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள்." எப்போதும் தூய்மையான வைரம்"  என்று உணர்ந்து கொள்ளுங்கள். அக்குணங்களை உங்களுள் உள்ளீர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருவருடைய விழிப்புணர்வும் வளமான நற்குணங்களுடன் கூடியதாகும்.இவற்றை வெளியே எங்கிருந்தும் நீங்கள் கடனாகப் பெற வேண்டாம். உங்களுள்ளேயே அவை நிறைந்திருக்கின்றன. சற்றே அவற்றுக்கு ஊட்டமளிக்க வேண்டும், அவ்வளவு தான்.ஒரு தாமரை மலர் போன்று- எல்லா இதழ்களும் இருக்கின்றன, மலர்ந்து, இதழ் விரித்து தனது சீர்மையை காட்ட வேண்டும். அது போன்று எல்லா குணங்களும் எல்லோரிடமும் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், குருபூர்ணிமா தினத்தன்று இத்தகைய அழகிய பண்புகளை உள்ளீர்த்து கொள்ளுகிறீர்கள் என்பதை நினைவு கூர்ந்து நன்றியுணர்வுடன் இருங்கள். அதிக நன்றியுணர்வுடன் இருந்தால் அதிக அருள் உங்கள் வாழ்வில் பெருகும். எனவே, மௌனம், தூய்மை, பகிர்ந்து கொள்ளல் இவற்றால் கொண்டாட்டம் என்பது ஏற்படும். தொண்டுக் குழுவில் உள்ளவர்கள், அத்தொண்டினால் ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். பகிர்ந்து கொள்ளுதலின் போது ஏற்படும் மகிழ்ச்சி வித்தியாசமானது. அது கொண்டாட்டம். வேறு ஏதேனும் இருக்கின்றதா? கூறுங்கள்.அதையும் சேர்த்து  கொள்ளுவோம்.


(அரங்கத்திலுள்ளவர்கள் ஆம்! கடவுளுடன் கூட சேர்ந்து கொண்டாட்டம் என்று கூறுகிறார்கள்)