குருவுடன், ஆன்மீகப் பாதையில்


9 அக்டோபர் – 2012 – பெங்களூர் - இந்தியா



கே: உபநிஷதங்களில் யாகத்தின் போது சமித்து அர்ப்பணம் பற்றிச் சொல்லப் படுகிறது. இது எதற்காக என்று தயவு செய்து சொல்வீர்களா?

குருதேவர்: மரத்தின் காய்ந்த குச்சிகளில் தீ சுலபமாகப் பிடித்துக் கொள்ளூம்.ஆத்ம ஞானத்தைப் பிடித்துக் கொள்ளும் பக்குவத்தில் ஞானம் தேடுபவர் இருப்பதை இது குறிக்கிறது.இந்தச் சடங்குக்கு மற்ற அர்த்தங்களும் உண்டு.ஒன்று கவனமாக இருப்பது. இரண்டாவது தன் 100 சதவிகிதத்தைச் தர தயாராக இருப்பது.

காய்ந்த குச்சியை தீயில் இடும்போது அது முழுவதும் எரிந்து விடும். அதில் ஒன்றும் எரிவதற்கு மீதி இருக்காது. (சாம்பல் மட்டும் தான் இருக்கும்).அதேபோல் ஞானம் தேடுபவர் 100 சதவிகிதத்துடன் கவனமாக இருந்து ஞானம் பெறத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது. சமித்து என்பது “திட சித்தத்தோடு (குருவிடம்) செல் என்பதைக் குறிக்கிறது.

மாணவர் திட சித்தத்தையும் எதையும் தாங்க வல்லவராகவும் இருக்க வேண்டும். சிறிது கஷ்டம் வந்தால் ஓடிவிடும் மாணவரால் ஒன்றையும் படிக்க முடியாது.பொதுவாக முதல் ஆண்டு மருத்துவம் அல்லது பொறியியல் கல்வி முடிந்தவுடன் சில மாணவர்கள் மேலே படிக்க விரும்பாமல் (பாடம் கடினமாக இருப்பதால்) ஓடிவிட முயல்வார்கள். எத்தனை பொறியியல், மருத்துவ மாணவர்கள் படிக்க மிகவும் கடினமாக இருப்பதாக உணர்கிறீர்கள். ஏனென்றால் அது உங்களுக்குக் கடினமாகத் தோன்றுகிறது.

ஆனால் முயன்று படிக்க வேண்டும். இந்தக் கடினமான நேரத்தைத் தாங்கிக் கொண்டு படிக்க வேண்டும். சமித்து அர்ப்பணம் என்பது ஒரு சமப் பார்வையையும், எதையும் தாங்கும் குணத்தையும் குறிக்கிறது. “குருவிடம் செல்லும் போது வெறும் கையோடு போகாதே, ஏதாவது எடுத்துச் செல்” என்று பழங்காலத்தில் சொல்வார்கள்.

குரு உனக்கு ஞானம் தருவதற்கு பதிலாக நீ சமித்து எடுத்துப் போகவேண்டும். ஞானம் என்ற ஆற்றிலிருந்து சிறிது ஞானம் பெற ஏதாவது ஒன்றை மாற்றாக அளிக்க வேண்டும். ஒன்று போய் மற்றொன்று வருகிறது. சமித்து அர்ப்பணத்துக்கு இப்படி பல விளக்கங்கள் சொல்லலாம்.
தீவிர பக்தி, உற்சாகத்துடன் தன்னை முற்றிலும் ஒப்படைத்து குருவிடம் ஞானம் பெறுவதற்காகச் செல்ல வேண்டும். எந்த வித கடினமான சூழ்நிலையையும் எதிர் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

“நீ மாணவனாக இருந்தால் உனக்கு ஒரு சுகமும் இல்லை” என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் சுகபோகத்தை விரும்புவராக இருந்தால் ஞானம் பெற முடியாது. எனவே மாணவர்கள் கடினமான பாதையில் சென்று ஞானம் பெறவேண்டும்.நீ சுகவாசியாக இருக்க விரும்பினால், நீ நன்கு படிக்க முடியாது. “படிப்பது என்பதற்கு ஆங்கிலத்தில் “ குறிக்கோளுடன் இருப்பது, சுகபோகத்தின் பின் ஓடாமல் இருப்பது, எந்தக் கடினமான சூழ்நிலையையும் எதிர் கொள்வது”, என்று சொல்வார்கள்.

கே: புராணங்களில் இந்திரன் செய்த பாவங்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். அக்னி பகவான், வருண பகவான் அல்லது வாயு பகவான் அல்லது மற்ற தேவர்கள் பாவம் செய்ததாக ஒன்றும் இல்லை. கணபதியின் உருவத்திற்கான கதை போல இதற்கு ஏதாவது முக்கிய காரணம் அல்லது கற்க வேண்டிய பாடம் உண்டா? ஆன்மீக நோக்கில் இதன் கருத்து என்ன?

குருதேவர்: இந்திரன் என்றால் கூட்ட மனப்பான்மையைக் குறிக்கும். கூட்ட மனப்பான்மை என்று சொல்வது என்ன? பலரின் மனம் ஒரே மனம் போல் இயங்கினால் எப்படி இருக்கும்? அந்தக் கூட்டத்தின் கலவையான கூட்ட மனப்பான்மைக்குப் பெயர் இந்திரன். இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அதன் அர்த்தம் ஒருவரின் மேல் எல்லா இடங்களிலும் ஆயிரம் கண்கள் என்பதல்ல. இந்திரன் அந்த 500 பேரின் கூட்ட மனப்பான்மைக்கு ஒரு உதாரணம்.
அதனால் தான் ஒரு ஆத்ம ஞானி பிறக்கும் போது இந்திரனுக்கு தன்னை யாரோ அவமதிப்பது போல் தோன்றுகிறது. ஏனென்றால் ஆத்ம ஞானியின் முன் கூட்ட மனப்பான்மை இருக்க முடியாது. ஒரு ஆத்ம ஞானி கூட்ட மனப்பான்மை வளர்வதை அனுமதிக்க மாட்டார். நான் சொல்வது விளங்குகிறதா? தன் இந்திரியங்களை மற்றவர்களின் மனத்தில் புகுத்தி “உங்கள் மனதில் எண்ணுங்கள்! விழித்தெழுங்கள்! ஒவ்வொருவரும் எண்ண வேண்டும்!” என்று இந்திரன் சொல்கிறான்.

யாராவது ஒரு ரிஷி அல்லது ஆத்மஞானி தியானம் செய்யும் போது இந்திரன் பயப்படுகிறான். கூட்டம், எல்லோருடைய கலப்பு எண்ணங்கள், கூட்ட மனப்பான்மையை இந்திரன் என்று சொல்கிறோம். இந்திரன் என்பது எங்கோ தேவலோகத்தில் அமர்ந்திருக்கும் மனிதன் அல்ல. இந்திரன் இந்த இடத்தில் தற்சமயம் இருக்கிறான்.

நாம் எப்படி 5 பொருட்களால் (பஞ்ச பூதங்களான பூமி, நீர், அக்னி, காற்று மற்றும் வெற்றிடம்) ஆனவர்களோ, அதே போல் இந்திரன் ஒரு கூட்டத்தின் ஆத்மாவைக் குறிக்கிறான். கூட்ட மனப்பான்மையில் என்ன நடக்கிறது? “நம் தலைவரை யாரோ தாக்கியிருக்கிறாகள்” என்று யாராவது சொல்வார். கூட்டத்தினர் உணர்ச்சி வசப்பட்டு பஸ்களை எரிக்கிறார்கள். சிலைகளை உடைக்கிறார்கள் - - - - என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி கூட்டம் சென்று கொண்டிருக்கிறது.  கூட்டம் அழிவை நோக்கி மக்களைத் தாக்கி, உயிர் மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்துகிறது. 
இது தான் கூட்ட மனப் பான்மை என்பது. ஞானம் இருக்கும் இடத்தில், அறிவும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படும் போது கூட்ட மனப்பான்மை நிலைத்திருக்காது.

கே: குருதேவா! மக்களுக்கு நன்மை செய்த ஆத்ம ஞானிகள் மிகவும் வருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அது ஏன்?

குருதேவர்: ஆத்மாவுக்கு அல்லது மனத்துக்கு ஒரு வருத்தமும் கிடையாது. உடலுக்குத் தான் அந்தக் கட்டுப்பாடு. நீ உன் உடலை மிக அதிகமாக நீட்டினால், உடல் அதைத் தாங்க வேண்டும். சளி, இருமல் மற்ற நோய்கள் உடலைப் பாதிக்கும். ஒரு ஞானியின் உடல் நம்பிக்கை மற்றும் அன்பால் ஆனது. நம்பிககையும் அன்பும் உடைந்தால் மட்டுமே உடல் பாதிக்கப் படும்.
பழங்காலத்தில் ஞானிகள், புத்திமான்கள், தங்களிடம் நெருங்கியவர்களைக் கடிந்து கொள்வது வழக்கம். பக்கத்தில் இருப்பவர்களின் மனத்தில் கோபம் மற்றும் தீய எண்ணம் வரும்போது அது 
அவர்களைப் பாதிப்பதால் அவர்கள் அப்படிக் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது.

உதாரணத்துக்கு உன் வீட்டின் உள்ளே இருப்பவரின் தீய எண்ணத்தினால் நீ அதிகம் பாதிப்புக்குள்ளாவாய். தெருவில் செல்லும் மனிதரின் தீய எண்ணத்தினால் அவ்வளவு பாதிப்பு வராது. வீட்டுக்கு வெளியே உள்ள குப்பையின் நாற்றம் வீட்டின் உள்ளே இருக்கும் குப்பையைவிட குறைவாக இருக்கும். அதே போல் மனத்தின் தீய எண்ணங்கள் ஒருவரைப் பாதிக்கிறது.எனவே, நம் முன்னோர்கள் சீல குணத்துக்கு அதி முக்கியத்துவம் அளித்தார்கள். ஒருவருக்கு ஆறு வகையான செல்வங்கள் தேவை.

ஆறு செல்வங்கள்
·         ஸமா (அமைதி அல்லது மன அமைதி)
·         தமா (சுய கட்டுப்பாடு அல்லது இந்திரியங்களை அடக்குவது)
·         உபரதி (மன நிறைவு அல்லது பூரண திருப்தி)
·         திதீக்ஷா (எதையும் தாங்கும் சக்தி)
·         ஷ்ரத்தா (இறைவனிடம் நம்பிக்கை)
·         ஸமாதானா (சமநிலையான பார்வை மற்றும் மனதில் ஒரு குறிக்கோளுடன் இருப்பது)

இந்த 6 நற்குணங்களும் இல்லாவிட்டால் ஒருவர் முமூம்க்ஷு (மோட்சத்தை அடைய விரும்புபவர்) ஆக முடியாது.ஒருவர் முமூக்ஷுவாக இல்லாவிட்டால் ஆத்ம ஞானம் அடைய முடியாது.
எனவே, ஒருவர் முமூக்ஷுத்வம் அடைய, விவேகம் (நல்லது கெட்டது இரண்டையும் பகுத்து 
அறியும் திறன்), வைராக்கியம் (பற்றற்று இருப்பது) மற்றும் மேற் சொல்லப் பட்ட 6 செல்வங்களைப் பெறுவது அவசியம். இவைகளை அடைந்த பின்பே, அவர்களுக்கு சிஷ்யர், மாணாக்கர் அல்லது பக்தர் என்ற பதவி கிடைக்கும்.

இவைகள் இல்லாவிட்டால் ஒரு பைத்தியக்காரர் படகில் செல்வது போல் ஆகும். அவர் படகில் செல்லும் போது எழுந்து நடனம் ஆட ஆரம்பித்தால் அவர் படகுடன் மூழ்கி விடுவார். அவருடன் இருக்கும் பயணிகளும் மூழ்கி விடுவார்கள்.அதனால் தான், மகான் புத்தரும் “சீலமும், சமநோக்கும், தியானமும், பிரஞ்ஞையும் (இறைவனைப் பற்றிய அறிவு) ஒரு சீடனுக்கு அவசியம் என்று சொன்னார். ஒரு சீடர் அஹிம்சை (பிராணிகளைத் துன்புறுத்தாமை), சமநோக்கு, தியானத்தில் ஈடுபட்டு சமாதி நிலையை உணர்தல் முதலிய நற்குணங்களைப் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் ப்ரஞ்ஞாவான் (ஆத்ம ஞானி) ஆகலாம்.

கே: குருதேவா! எங்களைப் பற்றில்லாமல் இருக்கச் சொல்கிறீர்கள். உங்கள் மீது பற்றில்லாமல் எப்படி இருக்க முடியும்? நான் உங்களிடம் அன்பாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அந்த அன்பும் பாசமும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

குருதேவர்: இந்த அன்பும் பாசமும் உன்னை மற்ற தேவையில்லாத பொருட்களிடமிருந்து விடுவித்தால் அது சரிதான். அது உன்னை ஒருமுகப்படுத்தினால் நல்லது. அதனால் உனக்கு பொறாமை, கோபம், பேராசை மற்றும் எதிர்மறை மனச் சலனங்கள் வரக் காரணமானால் நீ அதைத் தவிர்க்க வழி தேடுவது நல்லது. உன் மனத்தின் ஆழத்துக்குப் போய், தியானம் செய்து அதை அறிந்து கொள்.

எந்த ஒரு பற்றும் உன்னை ஆன்மீகத்தின் மேல் நிலைக்குச் செல்ல அல்லது ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக இருந்தால் அது சரி. அந்த பற்று உன்னைத் தாழ்த்துவதற்கான அறிகுறி இருந்தால் அதை விட்டு ஞானப் பாதையில் திரும்பி வரவேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், நம் ஆத்மாவைப் பார்க்க வேண்டும். நாம் எதையோ குறை சொன்னால், அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது என்று அர்த்தமாகும்.

பொதுவாக ஒரு மிகவும் கெட்டவரைப் பார்த்தால் நீ அவரை விட்டு அகன்று விடுவாய். ஆனால் அவரை வெறுக்கும் போது, அவருடன் ஒரு பிரிக்க முடியாத ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது என்று அர்த்தம். நீ அவருடன் இருக்க விரும்புகிறாய். அதனால் தான் அவரை வெறுக்கிறாய்.மனம் என்பது மிகவும் சிக்கலானது. அதனால் தான் நான் சொல்கிறேன். உனக்கு வேறு பொழுது போக்குக்கு அவசியம் இல்லை. மனம் என்பதே நல்ல பொழுது போக்குக்கான ஒன்று தான். (டி.வி சானல்களில் உள்ளது போல் பல நிகழ்ச்சிகள் தற்சமயம் மனத்தில் நடைபெறுகின்றன.)

மனத்தின் சுழற்சியில் அகப்பட்ட ஒருவரிடம் கோபம் கொள்ளக் கூடாது. அவர் உன் கருணைக்குப் பாத்திரமாக இருக்கிறார்.பொதுவாக நீ என்ன செய்கிறாய்? யாராவது எதிர்மறைக் குணமுடையவராக இருந்து உனக்கு எதிரியாக இருந்தால் அவர் மீது உனக்குக் கோபம் வரும். அவர்கள் சுதந்திரமாக அப்படி நடந்து கொள்வதாக நினைக்கிறாய்.

நான் வேறு மாதிரி பார்க்கிறேன். அவர்கள் மேல் மிகவும் கருணை வருகிறது. அவர்கள் தங்களின் மனச் சுழற்சியில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் தெரிந்து செய்வதில்லை என்று அவர்களின் செயல்களே தெளிவாகக் காட்டுகிறது. மேலும் இப்படிப் பட்ட மனிதர்கள் ஏதாவது காரியம் திட்டப்படி சரியாக நடக்கவில்லை என்றால் மகிழ்ச்சி அடைவார்கள். ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, மழை வந்து தடங்கல் ஏற்பட்டால் “நல்லது! இயற்கைக்கே சம்மதமில்லை. மழை வந்து இந்த நிகழ்ச்சியை நடத்த விட வில்லை.” என்று சொல்வார்கள். நிகழ்ச்சி தடைப்பட்டதில் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு தவறான மனநிலையாகும்.
நீ பார்க்கும் பார்வை எதிர் கோணத்தில் இருக்க வேண்டும். இவ்வளவு மழை இருக்கும்போது கூட பலர் வந்து அமர்ந்து தியானம் செய்கிறார்கள். நிகழ்ச்சி தொடர்கிறது என்று மகிழ்ச்சி அடைய வேண்டும்.

ஆனால் ஆழ் மனத்தில் எதிர் மறை எண்ணம் உடைய ஒருவர் நிகழ்ச்சிக்குத் தடை ஏற்படும் போது தான் மகிழ்ச்சி அடைவார். இது ஒரு வேடிக்கையான புதிர். இது ஒரு நோய்வாய்ப் பட்ட மனத்தைக் காட்டுகிறது. இப்படிப் பட்டவர்கள் உலகில் எங்குமே யாருக்குமே நன்மை ஏற்படுவதைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அப்படிப் பட்டவர்களிடம் நீங்கள் கருணை காட்டுங்கள்.

கே: குருதேவா! நாம் காலணிகளைத் தொலைத்து விட்டால், யாரோ நம் காலணிகளை திருடி விட்டால், நம்முடைய கெட்ட கர்மங்களை அவர் எடுத்துச் சென்று விட்டார் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

குருதேவர்: அவை மிகவும் விலையுயர்ந்த ஷூக்களாக இருந்தால், அப்படி நினைக்கலாம். உனக்கு அன்று இரவு நிம்மதியாகத் தூக்கம் வரும். ஆனால் அது மிகவும் விலை குறைந்த செருப்பாக இருந்தால்- - - - (குருதேவர் இல்லை என்று தலையை அசைக்கிறார்).எதற்காக இப்படிச் சொல்லப் பட்டது என்று கவனியுங்கள். இது மக்களைத் தற்சமயத்தில் இருக்கச் சொல்வது. கடந்து போனதை எண்ணி, அதையே நினைத்து தற்சமயத்தைக் கெடுக்காதே. எது நடந்ததோ, அது நடந்து விட்டது! அது முடிந்தது! நீ ஒரு போக்கு வரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டாய். அது முடிந்து விட்டது! நீ வீட்டுக்குப் போன பின்னும், இரண்டு மணி நேரம் அதைப் பற்றிப் பேசி, வேறு வழியில் வந்திருக்கலாமோ என்று பேசுவது சரியல்ல. ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் நேரம் கழியும்.

நம் முன்னோர்கள், அப்படிப் பட்ட பெரிய எண்ணங்களுடையவர்களாக இருந்தார்கள். எனவே உன்னிடம், கெட்டவை நடக்கும் போது, “நட்சத்திரங்கள் காரணமாக இப்படி நடக்கிறது” என்று சொன்னார்கள். நீ நட்சத்திரங்களின் மீது கோபத்தைக் காட்ட முடியாது. உன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் கோபம் அடைவதை விட்டு, “எல்லாம் என் கர்மவினை, என் நட்சத்திரம் ( என் பிறந்த நேரம்), எனக்கு இப்படி நடக்கிறது” என்கிறாய்.

ஆகவே, ஒரு அளவுக்கு அந்த நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டு, மன அமைதி அடைகிறாய். கசப்பில்லாமல், வாழ்க்கையில் முன்னேற அப்படிப்பட்ட மனநிலை உதவுகிறது.இந்தியாவின் கலாசாரத்தில் இது ஒரு அழகான கருத்து. இந்தியாவில் கெடுதல் வரும்போது அதை மேலும் கசப்பாக்காமல், அதையே நினைத்து மனம் வருந்தாமல் வாழ்க்கையைத் தொடர பல வழி முறைகள் உள்ளன. உலகம் இப்படிப் பட்ட வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். நம் கலாசாரத்தில், நம் இரத்தத்தில் இப்படிப்பட்ட குணம் இருக்கிறது. கெடுதல் வரும்போது அதைத் தாங்கிக் கொண்டு, அதையே நினைத்து வருந்தாமல் நாம் மேலே செல்கிறோம்.

நீ 50 வருடங்களுக்கு முன் எனக்கு தீங்கிழைத்தாய். இன்றும் நீ என் பகைவன் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட பகை உணர்ச்சியையும், வன்மத்தையும் தங்கள் மனதில், இதயத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கு இந்தியாவில், பகைமை, வன்மை குணத்தை நாம் வளர்ப்பதில்லை.

கே: சமுதாயத்தில், ஊழல் ஆன்மீக வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது என்று சொல்கிறீர்கள். ஆனால் ஆன்மீக வளர்ச்சி அடையாத மேல் நாடுகளில் ஊழல் என்பது மிகவும் குறைவாக உள்ளது. சீன தேசத்தின் ஆன்மீக நிலை மிகக் குறைந்திருந்த போதிலும், வளர்ச்சிப் பணிகள் இந்தியாவை விட மிக நல்ல முறையில் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

குருதேவர்: இந்தியா நம் முன்னோர்களின் ஆன்மிக நிலையால் இன்றும் நடத்திச் செல்லப் படுகிறது. சமையல் அறையில் சமைத்த பொருள்கள் தீர்ந்த பின்பும் (பாத்திரங்கள் காலியாக இருந்த போதிலும்) வாசம் இருப்பதைப் போல் எல்லாம் நடந்து வருகிறது. நீ சமையல் அறையில் சென்று பஜ்ஜி, போண்டாவின் வாசத்தை நுகர்கிறாய். பஜ்ஜி, போண்டா இன்று பாத்திரத்தில் இருப்பதாக எண்ண வேண்டாம். ஆகவே நம் ஆன்மீகம் முன்னோர்கள் விட்டுச் சென்றது. அவர்கள் நிறைய நிறைய போண்டாக்கள் செய்தார்கள். எல்லோரும் சாப்பிட்டு விட்டார்கள்.

இந்தியா ஆன்மீகத்தின் உச்ச நிலையில் இருந்தது. ஆனால், இன்று, கடந்த 20 வருடங்களாக, சமுதாயம் பொறுப்பில்லாமல் மிகவும் தாழ்ந்து விட்டது. ஒருவருக்கொருவர் சேர்ந்தவர் என்ற உணர்ச்சி இல்லாமல் போய் விட்டது. அரசியலில் நேர்மை இல்லை. அது நம் நாட்டை பாதிக்கிறது.
பொது மனிதன் நேர்மையாக இருந்தாலும், அரசியல் தலைவர்களின் நேர்மையின்மையால் ஊழல் ஊடுருவி விட்டது. “யதா ராஜா ததா ப்ரஜா” என்று ஒரு பழமொழி உள்ளது.

“யதா ப்ரஜா ததா ராஜா” என்று சொல்லப் படவில்லை. நேர்மை மேலிருந்து கீழே பரவ வேண்டும். மேலிடத்தில் ஊழல் இருக்கும் போது அது எல்லா மட்டங்களிலும் ஊடுருவிப் பரவுகிறது.
இந்தியா இன்று வரை ஓரளவுக்கு ஒரே நாடாகச் செயல் படுகிறது. இது நமக்கு ஆன்மீகத்தின் மீதிருக்கும் ஈடுபாட்டால், நல்ல மனிதர்கள் இன்னும் அறிவுடன் செயல் படுவதால், மக்களை ஒன்றாக ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாவிட்டால் இந்தியா என்றோ தனித்தனி சிறு நாடுகளாக உடைந்து போயிருக்கும்.

கே: ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதற்கு, எளிமை,இயல்பாக இருப்பது,முதலிய நற்குணங்களை, முயற்சி செய்து நாம் வளர்க்க வேண்டுமா? அல்லது அவை தானாகவே வளருமா?

குருதேவர்: நற்குணங்களை வளர்க்க எந்த முயற்சியும் தேவையில்லை. நற்குணங்கள் உன்னுள் தானாகவே மலரும். ஒரு மொட்டு தானாகவே மலராக மலர்வதைப் போல, நற்குணங்கள் உன்னுள் தானாகவே மலரும். நீ செய்ய வேண்டியது மூடியை எடுத்து விடுவது தான்.

ஒரு மொட்டின் மீது மூடியை வைத்தால், அதனால் எப்படி இதழ் விரித்து மலர முடியும்? மூடியை எடுத்துவிட்டால் அது மலரும். நற்குணங்களும் அப்படித்தான்.முயற்சியால் மட்டுமே வளர்க்க முடியாது. ஆழ்ந்த ஓய்வின் மூலம் அதாவது தியானத்தின் மூலம் அது நிகழ்கிறது. நீ மன அழுத்தமில்லாமல் இருக்கும் போது, ஓய்வோடு உன் ஆத்மாவோடு இணைந்திருக்கும் போது, நற்குணங்கள் இயல்பாகவே உன்னுள் மலரும்.

கே: குருதேவா! வேலை செய்யும் இடத்தில், அடிக்கடி, வேலையை முடிப்பதற்கான காரியங்கள் பல இருப்பதால், மனம் சஞ்சலத்துக்குள்ளாகி எப்படிச் செய்து முடிப்பது என்று தெரியவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் என்ன செய்யலாம்?

குருதேவர்: செய்ய வேண்டிய காரியங்களுக்கு பட்டியல் இடு.முன் செய்யவேண்டிய காரியங்களைக் குறித்துக் கொள். அப்படிப்பட்ட காரியங்களின் நடுவே தியானம் செய்வதற்கான நேரத்தையும் ஒதுக்கி அதை ஒரு காரியமாகப் பட்டியலில் சேர்த்துக் கொள். நீ விரும்புவதெல்லாம் நல்லபடி நடக்கும் என்று நம்ப வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கையோடு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்.

“யார் ஒருவர் தன் மனத்தையும் புத்தியையும் என் மீது வைத்திருக்கிறாரோ, நான் அவரிடமிருந்து விலகுவதில்லை. அவரும் என்னிடமிருந்து விலகுவதில்லை” என்பது பகவான் கிருஷ்ணர் கொடுத்த வாக்கு. இதை நினைவில் வைத்துக்கொள்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் தியானம் செய்ய சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும். இறைவன் கட்டாயமாக நம் பிரார்த்தனைகளை ஏற்று, நன்மை செய்வார். உண்மையில், தியானம் செய்வதால், நாம் இறைவனிடம் கேட்பதற்கு யோக்யதை உள்ளவராகலாம்.நிறைய தியானம் செய்து வேண்டிய அளவு புள்ளிகள் (புண்ணியம்) சேர்ந்தவுடன், நாம் அதை உபயோகித்து வேண்டியதைப் பெறலாம்.சேவை செய்யும் போது உனக்கு புள்ளிகள் (புண்ணியம்) சேரும். அது உனக்கு நன்மையைத் தரும்.

நான் வெளியில் சத்சங்கத்துக்குச் செல்லும் போது, பலர் என்னிடம் வந்து தாங்கள் செய்த தியானத்துக்கு நன்மை வேண்டுகிறார்கள். சத்சங்கத்தை முடித்து என் அறைக்குச் சென்ற பின்பும், இரவு 11, 12 மணி வரை என்னைப் பார்ப்பதற்காக வருகிறார்கள். “இந்த மக்கள் இவ்வளவு சேவை செய்திருக்கிறார்கள். உங்கள் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக வந்திருக்கிறார்கள். குருதேவா! தயவு செய்து அவர்களைப் பார்க்க வேண்டும்” என்பார்கள்.நான் சரி, என்று சொல்லி அவர்களைப் பார்க்க வருவேன். அவர்கள் அவ்வளவு சேவை செய்திருக்கும் போது, நான் அவர்களைப் பார்க்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. இதே போல் நாம் நம் புள்ளிகளை அதிகரித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஒரு பக்தன் இறைவனை வேண்டி,தன் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார். இறைவனுக்கு தன் பக்தனின் பிரார்த்தனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு விகல்பம் இல்லை. அதே போல் நாம் இவ்வுலகத்தை வெல்லலாம்.நாம் நற்காரியங்கள் செய்யும் போது, எப்படி நம்மிடம் வெறுப்பை காட்ட முடியும்? நற்காரியம் செய்பவரை யாராவது வெறுப்பார்களா? அப்படி நடக்கவே முடியாது. பொதுவாக, நாம் நம் சுகமான வட்டத்துக்குள்,நம்முடைய சுகத்துக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, நமக்கு எது விருப்பமோ, அதை மட்டும் செய்து வருகிறோம். பிறகு ஏன் நம்மை மற்றவர்கள் விரும்புவார்கள்?

கே: தர்மத்தின் 10 குணங்களைப் பற்றிப் பேசினீர்கள். இக் குணங்களை எப்படி வளர்த்து இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவது என்று தயவு செய்து சொல்வீர்களா?

குருதேவர்: நாம் செய்வதை திருத்தமாகச் செய்யலாம்.மனதில் தெளிவில்லாத போது, மன அழுத்தத்தினால் அதர்மம் தலை தூக்கும்.மனம் ஒரு நிலைப்படாத போது, இதயத்தில் காயம் பட்டிருக்கும் போது அதர்மம் நிகழும்.எனவே, ஞானமும் அறிவும் உன்னை தர்ம வழியில் செலுத்தும்.

கே: உயிர் உடலை விட்டுப் போகச் செய்வது எது? எப்போது உயிர் உடலில் வரும் என்று நிர்ணயிப்பது எது?

குருதேவர்: சரி நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீ ஏன் உன் உடைகளை மாற்றுகிறாய்? உன் உடையை மாற்ற வைப்பது எது? ஏன் ஒரே உடையை வாழ்நாள் முழுதும் போடுவதில்லை? நீ உடை மாற்றக் காரணம் அது பழசாகியோ, கிழிந்தோ விடுவதால் தான். இல்லையா? உனக்கு விடை கிடைத்து விட்டதா!

கே: மேரு மலை எங்குள்ளது? அதன் சிறப்பு என்ன?

குருதேவர்: மேருமலை என்பது நுண்மையான சக்தியடங்கிய மலை. மேரு மலை என்பதற்கு ஒரு இடமோ உருவமோ கிடையாது.

கே: குருதேவா! எனக்கு 21 வயது ஆகிறது. பல பெண்கள் என்னிடம் காதல் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் காதல் என்னிடம் இருக்கும் குரு சக்தியின் மேல் தான் என்று என் ஆசிரியர் சொல்கிறார். இதை நான் எப்படிக் கையாள வேண்டும்.

குருதேவர்: முடிவு எடுக்க 21 என்பது மிகவும் குறைவான வயது. உனக்குத் தேர்ந்தெடுக்க பல விகல்பங்கள் இருக்கின்றன. ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து நீயே தேர்ந்தெடுக்கலாம். சரியா. பார்! யாரும் உன்னை விரும்பாவிட்டாலும் பிரச்சினை தான். பலர் உன்னை விரும்பினாலும் அதை பிரச்சினையாகப் பார்க்கிறாய். வாழ்க்கை என்பது ஒவ்வொரு கட்டத்திலும் போருக்கான அழைப்பு போல் தான்.

எது வந்தாலும், எப்படி இருந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு உற்சாகமாக இரு. எனவே உன் மீது அவர்களுக்கு இருக்கும் காதலை உற்சாகமாக ஏற்றுக் கொள். இப்போதைக்கு தூரமாக இரு. அப் பெண்களிடம் நீ இன்னும் வளரவில்லை. சிறுகுழந்தையாக இருப்பதாகச் சொல். இரண்டு மூன்று ஆண்டுகள் கழியட்டும்.