மெய்யுணர்வு உருவமற்றது

27 அக்டோபர், 2012

பெங்களூரு இந்தியா



நம்மை யாராவது வேதனைப்படுத்தும் போது மனஅழுத்தமடைகிறோம் ?

எவ்வாறு பிறர் உங்களை வேதனை படுத்தமுடியும்? பிறரை வேதனைப் படுத்துபவர்கள் முட்டாள்கள். முட்டாள் மற்றும் மனநோய் உடைய ஒருவனைக் குறை கூறுவீர்களா என்ன? மாட்டீர்கள் அல்லவா? ஆகவே உங்களை துன்புறுத்துபவர்களை முட்டாள் அல்லது நோயுற்றவன் என்று கருதுங்கள், அப்போது வேதனையடைய மாட்டீர்கள்.சரியா? அனைவரும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்றால் அது  எவ்வாறு சாத்தியமாகும்? ஒவ்வொருவருக்கும்  ஆசைகள், பிரச்சினைகள் அறியாமை இவற்றுடன் கூடியதாக சிறிய மனம் இருக்கும். ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் அனுமதிக்காத வரையில், யாரும் நம்மை வேதனை படுத்தமுடியாது.

குருதேவ், சில சமயங்களில் என்னால் உங்களுடைய ஞானச் செய்தியினைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தங்களுடைய அன்பையும் ஞானத்தையும் ஒருங்கே பெற நான் என்ன செய்ய வேண்டும்?

எதைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கிறதோ அதைப் புரிந்து கொள்ளவே வேண்டாம். உங்கள் தலைக்கு மேல் அந்த விஷயம் இருந்தால், விட்டுவிடுங்கள். எது புரிகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருடைய புரிதல் அளவு ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் அன்பில் திளைத்திருக்க முழு ஈடுபாட்டுடன்  இருக்க எவ்விதத் திறமையும் தேவையில்லை. முழுமையான ஈடுபாடு என்பதில் அனைவருமே சமமாக திறன் படைத்தவர்கள். அதற்கென்று சிறப்புத் தகுதி  தேவையில்லை. 

ஞானம் என்னும்போது, ஆம், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான திறன் இருக்கின்றது. சிலருக்கு அதிகத் திறனும், சிலருக்குக் குறைந்த திறனும் உள்ளது. ஆனால் ஒருமைக்கும் ஈடுபாட்டிற்கும் இது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.  அதிக அறிவுத்திறன் இருந்தால் மட்டுமே கடவுள் உங்களை விரும்புவார் என்று கிடையாது. ஞானத்தின் நோக்கம்  உங்களுடைய ஆனந்தமே ஆகும். 

உங்களது அறிவினைத் தூய்மைப்படுத்த ஞானம் தேவை.
உங்கள் இதயத்தைத் தூய்மைப் படுத்த அன்பு தேவை
உங்களது கர்மத்தினைத் தூய்மைப் படுத்த தொண்டு தேவை.

இந்த மூன்றுமே ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

குருதேவ், நமது கவனம் வெளிப்புறமாக இருக்கும்போது பொறாமை அடைகிறோம். குருவை வெளிப்புறமாகவே கண்டால் அப்போதும் பொறாமையில் சிக்கிக் கொள்வோமா?

ஆம்.பல சமயங்களில் "பார், குருதேவ் அவனுக்கு மாலை தந்தார், எனக்கு எதுவும் தரவில்லை அல்லது அவனிடம் பேசினார் என்னிடம் பேசவில்லை. அல்லது குருதேவ், என்னைப் பார்த்து சிரிக்கவில்லை என் மீது கோபமாக இருக்கிறாரா?” என்றெல்லாம்  எண்ணுகிறோம். நான் ஏன் கோபப்பட வேண்டும்?  நீங்கள் ஒரு தவறு செய்தால் நான் ஏன் கோபப்பட வேண்டும்? யாராவது தவறு செய்தால் அவர்களே அதற்குறிய  பலனைப் பெறுவார்கள். குரு கோபம் கொண்டுள்ளார் அல்லது அலட்சியப்படுத்துகிறார் என்றெல்லாம் எண்ணாதீர்கள். கிடையாது. வெளிப்புறத் தோற்றங்களும் நடத்தையும் அவ்வாறு தான் இருக்கும். வெளிப்புற நடத்தையை பார்க்காதீர்கள். உங்கள் கவனம் முழுவதும் உட்புறமாகவே செல்லட்டும். இறைவனுக்கு நீங்கள் மிக அன்பானவர் என்று உணருங்கள். நீங்கள் பிறரை விட எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. இந்த ஒரு கருத்து உங்கள் மனதில் பதிந்து விட்டால், பின்னர் பொறாமை உங்களை நெருங்காது.

என் கவனத்தை குரு தத்துவத்தில் பதிய வைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொருவரும் உங்களைச் சார்ந்தவர் என்று எண்ண வேண்டும்.பொறுமை வேண்டும். ஒரு நாளில் 2000 முதல் 3000 கேள்விகளை நான் கவனிக்க வேண்டும். நான் கவனிக்கின்றேனா இல்லையா? அத்தனைக்கும் நான் விடையளிக்கின்றேன். மேலும் நான் உற்சாகத்துடன் கவனிக்கின்றேன். ஆகவே மனதில் ஸ்திரத்தன்மை கூர்மையான  அறிவு, மிருதுவான இதயம் ஆகிய இந்த மூன்றும்  வாழ்க்கையில் முக்கியமானவை ஆகும். இந்த மூன்றையும் இழந்து விடாதீர்கள். இழந்தது போலத் தோன்றினாலும், அவை எங்கோ மறைந்திருக்கின்றன காணாமல் போகவில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள். 

பார்வதியைப் போன்று தேவியின் ஒரு வடிவமே சதி. பார்வதி சிவபெருமானின் துணைவியாகி விட்டபோது, ஏன் சதி  சுய உணர்தலை அடைந்தாள்?

தேவி, ஒரே ஒரு வடிவினைக் கொண்டவர் அல்ல. பல உருவங்கள் உண்டு. அதனால்தான் லீலா என்று அறியப்படுகிறாள். வெவ்வேறு விஷயங்களைக் கற்பிப்பதற்கு வெவ்வேறு உருவங்களில் வெளிப்படுவது அவளது லீலை. இந்த அளவு புரிந்து கொள்ளுங்கள் போதும்.

ஒரு பக்தனுக்கு  உருவவழிபாடு சிறந்ததா உருவமற்ற வழிபாடு முக்கியமா?

முதலில் உங்களுக்கு உருவம் உள்ளதா என்று கூறுங்கள்? சரி, உருவம் உள்ளதா? எங்கே அது? உங்கள் மனதின் உருவம் என்ன? உங்கள் உடலுக்கு வடிவம் உள்ளது, ஆனால் மனதிற்கு வடிவம் கிடையாது. ஆனால் இரண்டும் இணைந்ததே நீங்கள் அல்லவா? உருவமுள்ள உடலும் உருவமற்ற மனமும் நீங்கள்தான். ஆகவே நீங்கள் உருவம் அருவம் இரண்டின் இணைப்பு .அதே போன்று இந்த படைப்பு முழுவதும், அருவமான இறைமையின் உருவமே ஆகும். மெய்யுணர்வு உருவமற்றது மற்றும் பகிரங்கமான படைப்பு உருவமுள்ளது. 

அதனால் தான் நமது நாட்டில் பசுக்கள் கூட வழிபாடு செய்யப்பட்டு, புனிதமானவையாகக் கருதப் படுகின்றன. அரசமரம் புனிதமானதாகக் கருதப் படுகிறது. ஏனெனில் இறைமை ஒவ்வொன்றிலும் குடி கொண்டுள்ளது.  பகவத் கீதையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மரங்களில் நான் அரசமரம் என்று கூறுகிறார் அல்லவா? அதே போன்று, "பூதானாம் சேதனாகாஸ்" நானே மெய்யுணர்வு என்று கூறுகிறார். "ஜீவனம் சர்வ பூதேஷு " அதாவது உயிருள்ள அனைத்திலும் நானே மெய்யுணர்வு என்றும் கூறுகிறார். கோபியர் கூட உருவ வழிபாட்டிலிருந்து, உருவற்ற  வழிபாட்டிற்கு சென்று விட்டனர். இது அவர்களுக்கு இயல்பாகவே நிகழ்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணரை அனைத்திலும் எல்லா இடங்களிலும் காணத் துவங்கினர். ஒரு கணம் கூட அவரைக் காணாது வாழ முடியவில்லை. இதுவே பக்தியின் உச்சம்.

பக்தி எப்போதுமே உருவத்தில் துவங்கி உருவமற்றதில் முடியும். பழங்கால முறைப்படி,முதலில் பாதங்கள் அடுத்து, உருவச்சிலை பின்னர் சாலிக்ராமம் பின்னர் யந்திரம் என்று வழிபாடு செய்யப் பட்டது. உருவச்சிலையினை விட யந்திரமே முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்பட்டது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு யந்திரமும் மந்திரமும் இருந்தன. வழிபாட்டு முறை தந்திரம் என்று அறியப்பட்டது. யந்திரம் பதிக்கப்பட்ட பின்னரே சிலைக்கு ஆன்மீக பலம் ஏற்படுகிறது. மந்திரம் இல்லாமல் யந்திரத்திற்கு பலம் இல்லை. அருட் தொண்டரின்றி, மந்திரத்திற்குப் பயன் இல்லை. யாரிடமிருந்தாவது மந்திரத்தைப் பெற்றால்,வேலை செய்யாது. புனிதமான பாரம்பரிய முறை மற்றும் சமயச் சடங்குகள் மூலமாகவே மந்திரம் பெறப்பட வேண்டும். ஆகவே அனைத்துக்கும் அதனதன் முக்கியத்துவம் இருக்கின்றது.

மஹா என்றால் என்ன? எவ்வாறு மஹா தத்துவத்தை கண்டறிவது?

முதலில் மனம் நுண்ணியதாக வேண்டும். பின்னர் அறிவு கூர்மையாக வேண்டும். இவ்வாறு நிகழும்போது, அகந்தை கரைந்து விடும். அகந்தை கரையும் போது, மஹா தத்துவம் தானாகவே தெரியும். மஹா தத்துவத்தை அறிய, அகந்தை முற்றிலும் மறைந்து கரைந்து விட வேண்டும். அதை அடைபவர்கள் மஹாத்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

எனக்கு மூன்று கேள்விகள் உள்ளன. கடவுள் மெய்யுணர்வாக ஒவ்வொருவரிடமும் இருக்கும் பட்சத்தில் ஏன் நம்மிடம் தேடிக் கொண்டிருக்கின்றோம்? ஏன் கடவுள் மாயை என்பதை உருவாக்கினார்? ஏன் உலகில் தவறுகள் நிகழ விடுகின்றார்?

நல்ல கேள்வி கேட்கின்றீர்கள்.எதுவுமே அமைதியாக நடப்பதை கடவுள் விரும்புவதில்லை. ஏதேனும் குழப்பம் இருந்தால் தான்,கடவுள் அவதாரம் எடுத்து வரமுடியும். எல்லாமே விளையாட்டுத் தான். இதே போன்று ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். ஏன் மக்கள் கால் பந்து அல்லது கிரிகெட் விளையாடுகிறார்கள்? 11 பேர் ஒரு புறமும் 11 பேர் மற்றொரு புறமும் நின்று கொண்டு ஒரே பந்தை தட்டுகின்றார்கள் ? இதனால் என்ன பயன்? அது ஒரு அனுபவம் அல்லது கேளிக்கை. கடவுளுக்கும் இதுவெல்லாம் ஒரு கேளிக்கை அனுபவம்.

கண் திருஷ்டி போன்ற வைதீக மூட நம்பிக்கைகள் எவ்வளவு தூரம் பொருத்தமானவை? அவை சரியா தவறா?

எண்ணங்களின் உலகம் மிகவும் நுட்பமானது. இவற்றுக்கெல்லாம் சில பலன்கள் உண்டு, அந்தப் பலன்களை நீக்கவும் எளிய வழிகள் உண்டு. இவையனைத்துமே அதிர்வலைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். இந்த அதிரவலைகள் எங்கும் உண்டு. உலகம் முழுமையுமே அதிர்வலைகள் தாம். ஒவ்வொரு பொருளும் அதிர்வலையே.சில எதிர்மறையான சில அதிர்வலைகள் உங்களை அணுகும்போது நீங்கள் சற்று அசௌகர்யமாக உணரலாம். உங்களை ஒருவர் திட்டும்போது, உங்கள் மனம் அலைபாய்ந்தோ கவனம் இழந்தோ இருப்பதில்லை. அல்லவா? இது போன்று உங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றதா? நமது முன்னோர்களால் ஒரு எளிய தீர்வு கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது. சிறிது உப்பு எடுத்து, உடலைச் சுற்றி வீசினாலோ தூவிநாலோ இத்தகைய எதிர்மறை அதிர்வலைகள் விலகும் என்பதாகும். வெளி நாடுகளில் கூட, மக்கள் சற்று வேதனை அடைந்தால் ,கடலுக்கு அருகாமையில் சென்று அமர்ந்திருப்பர். ஏன் என்று தெரியுமா? 

கடலிலிருந்து வரும் உப்புக் காற்று மெய்யுணர்வைத் தூய்மைப் படுத்தி ஆற்றலுள்ளதாக்குகிறது. அதனால் தான் கடற்கரையில் அமரும்போது அவர்கள் சற்று நன்றாக உணருகின்றார்கள். உப்பும் நீரும் பயன்படுத்தி உங்கள் நுண்ணிய சக்திவெளியினைத் தூய்மைப் படுத்திக் கொள்ளலாம். இதை விட வேறெதுவும் தேவையில்லை. 

கோவில்களில் குழந்தைகளைத் தலைகீழாக பிடிப்பது அல்லது ஒரு நிமிஷ நேரம் குழந்தையை மணலில் புதைப்பது போன்ற பல மூட நம்பிக்கைகள் உள்ளன. இவையனைத்தும் தவறு. நமது சமுதாயத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகள் எந்த புனித நூலிலும் எழுதப் படவில்லை. எது தவறாகத் தோன்றுகிறதோ, அறிவினால் ஏற்றுக் கொள்ளப் படவில்லையோ நடைமுறைக்கு தவறு என்று தோன்றுவதோ அச்செயலைச் செய்யக்கூடாது என்றே அவை,  தெளிவாகக் கூறுகின்றன. சநாதன தர்மா (ஹிந்து சமயத்திற்கு மற்றொரு பெயர்) இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிரானது. ஆனால் இத்தகைய மூட நம்பிக்கைகள் எல்லா சமயங்களிலும் ஊடுருவி விட்டன. இவற்றை அகற்றி விட்டு நல்ல வழக்கங்களையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜைன  சமயத்தில் ஹோமங்கள் செய்யக் கூடாது ஏனெனில் பல உயிர் பொருட்களை ஹோமத் தீ கொல்கின்றது என்று கூறப்படுகிறது.நான் இங்கு பல ஹோமங்களில் கலந்து கொண்டிருக்கின்றேன். அவை சொல்லொண்ணாத வகையில் மிக நன்றாக இருந்திருக்கின்றன. எவ்வாறு நான் ஜைன புனித நூல்கள் கூறுவதைப் புரிந்து கொள்வது?

ஜைன சமயத்தின் முக்கிய சாராம்சம் தியானமே ஆகும். இரண்டாவது அஹிம்சை. இரண்டுமே ஒன்றோடொன்று இணைந்தவையாகும். சமயங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் மலர்ந்திருக்கின்றன. காலத்திற்கும் இடத்திற்கும் உகந்த முறையில் அவை கூறப் பட்டிருக்கின்றன. நெருப்பு உருவாக்க பாலைவனத்தில் மரங்கள் இருக்காது; மரங்கள் போதுமான அளவு இல்லையெனில் அந்தக் காலத்தில் பாரம்பரிய யாகங்கள் செய்வதற்கு உகந்த இடமாக அது இருந்திருக்காது. 

ஜைன சமயத்தில் நீரைக் குடிப்பதற்கு முன்னர் அதைத் துணியில் வடிகட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. அது அறிவியல் ரீதியானது. ஆனால் இன்று மக்கள் என்ன செய்கிறார்கள்? வடிகட்டுவதற்காக குழாயின் வாயில் ஒரு துணியினைக் கட்டி விடுகிறார்கள். நான் சூரத் சென்றிருந்தபோது,ஒரு ஜைன குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அவர்கள் வீட்டில் எல்லாக் குழாய்களிலும் துணி கட்டப்பட்டிருந்தது. ஆனால் அத்துணிகள் மிக அழுக்காக இருந்தமையால், குழாயைத் திறக்கும் போது நீருடன் அந்த அழுக்கும் சேர்ந்து வந்து கொண்டிருந்தது. புனித நூல்களில் நீரினை வடிகட்ட துணியினை கட்டுவதற்கான நோக்கம் என்று கூறப்படுவது வேறு, ஆனால் நாம் அதை வேறு விதமாக புரிந்து கொண்டு நல்ல நீரினைக் கூட மேலும் அழுக்காக்கி விடுகின்றோம். சில சமயங்களில் அஹிம்சை என்பதை மிக அதிகமாக நீட்டி இழுக்கின்றோம். 

அதே போன்று மக்கள் ஹோமங்களையும் வேறு விதமாக எடுத்துக் கொள்கின்றனர். அதிகமாக செலவு செய்து தேவையில்லாதவற்றை எல்லாம் ஹோமத்தீயில் இடுகின்றனர். ஒவ்வொரு பாரம்பரியத்திலும் ஒவ்வொரு விஷயம் சிறப்பு மிக்கதாக இருக்கின்றது. ஜைன சமயத்திலும் இந்த ஒரு ஐதீகம் அல்ல பல ஐதீகங்கள் உள்ளன. குறிப்பிட்ட ஜைன ஐதீகப்படி ஹவன் (யக்ஞத்தின் வேறொரு பெயர்) என்பதைச் செய்கின்றார்கள். புத்த சமயத்திலும் இது செய்யப்பட்டிருக்கின்றது.
ஜைன சமயத்தில், ச்தனக்வசி (ஒரு ஜைன பிரிவில் ஆத்மா உருவற்றது என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவ வழிபாடும் புறக்கணிக்கப்பட்டுள்ளது) மூர்த்திபூஜக் (உருவ வழிபாடு செய்யும் ஒரு ஜைனப் பிரிவு) போன்ற சில வேறுபாடுகளும் உள்ளன. சிலர் உருவ வழிபாடு செய்கின்றனர், சிலர் செய்வதில்லை. எனவே பல கருத்துக்கள் உள்ளன. சில ஜைன பாரம்பரியங்களில் சிலைகளே கிடையாது. ஆனால் திகம்பர் ச்வேதம்பர் போன்றவற்றில், அவர்களது வழிபாட்டு சடங்குகள் வேறு விதமானவை. ஆனால் முக்கியமான சாரம் தியானம் ஆகும்.

ய்ஞயங்கள் ஒரு தனிமதிப்புள்ள நுண்ணிய அதிர்வலையினை  உருவாக்குவதற்காகவே செய்யப் படுகின்றன. சில ஜைன ஐதீகங்களின் படி, வாயைத் துணி கொண்டு மூடாமல் பேசக்கூடாது. சில ஜைனப் பிரிவுகள் மின்சாரத்தை பயன்படுத்த மாட்டார்கள். மைக், மின்விளக்குகள் போன்ற எதையும் பயன்படுத்தக் கூடாது. இவையெல்லாம் மிக அதிகமானவை என்றே நான் கூறுவேன். ஜைன தீர்த்தங்கரர்கள் என்ன கூறினார்களோ அவற்றின் உண்மையான பொருளைத் தாண்டி செல்பவை இவை என்றே கருதுகிறேன். 

இவையெல்லாம் சீர்திருத்தப் பட வேண்டும். சில ஜைன முனிவர்கள் ஏற்கனவே சீர்திருத்தங்களை துவங்கிவிட்டனர். அவர்கள் கார்களிலும், விமானங்களிலும் செல்லத் துவங்கி விட்டனர். பழங்காலத்தில், எந்த வாகனத்திலும் செல்லக்கூடாது ஏனெனில் வாகனங்கள் விலங்குகளால் இழுக்கப்பட்டன, விலங்குகளை வதை செய்வது போன்றதாகும்,என்பதால் அவ்வாறு கூறப்பட்டது. அது உண்மையே ஆகும். ஆனால் இன்று வாகனங்கள் விலங்குகளால் இழுக்கப் படவில்லை. பெட்ரோல் மூலமே ஓடுகின்றன. இந்த அளவு விவேகத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.