தலைகீழான மரம்...


அக்டோபர் 10 – பெங்களூரு - இந்தியா



கே: குருதேவ்! பகவத் கீதை பதினைந்தாவது அத்தியாயத்தில் தலைகீழான மரம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. தாங்கள் தயவு செய்து அதன் முக்கியத்துவத்தை விவரித்துக் கூற முடியுமா?

குருதேவ்: நமது தோற்றுவாய் தெய்வீகமானது என்பதன் குறியீடுதான் அது. விழிப்புணர்வுதான் வேர்கள். மனம் மற்றும் மனம் சார்ந்த பரிவாரங்கள் அனைத்தும் கிளைகளைப் போன்றவை. பல்வேறு விதமான சந்தங்கள், உணர்ச்சிகள் அனைத்தும் இலைகளைப் போன்றவை.அவை நிலைத்து நிற்பவை அல்ல, உதிர்ந்து விடும். நீங்கள் இலைகளின் மீதே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தால் வேர்களுக்கு நீரூற்ற மறந்து விடுவீர்கள்.மரம் நிலைத்திருக்காது.




'அச்வத்தம் ஏனம் ஸு- விருதா-மூலம் அசந்கா-சச்த்ரென திர்தென சித்த்வா’  (பகவத் கீதை - அத்தியாயம் 15, செய்யுள் 3)

பல்வேறு விதமான உணர்ச்சிகள், மற்றும் பல்வேறு விதமான வாழ்வு நிலைகள் ஆகிய யாவும், நீங்கள் இல்லை. இதை உணர்ந்து கிளைகளிருந்து  விட்டு விலகித்தூரமாக உணர்ந்து உங்களை மீட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாம் வெளி நிலையிலேயே மூழ்கி வேர்களை மறந்து விடுவோம். இதுதான் உட்கருத்து.

மரத்தில் வேண்டாதவற்றை நீக்கி விட வேண்டும். இல்லையெனில் அது அங்குமிங்குமாக வளர்ந்து விடும். களை நீக்கி நமது தோற்றுவாய் வேர்கள் மேல்நிலையில் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆதி சங்கராசார்யார் இதை மிக அழகாகக் கூறியுள்ளார். "சுரமந்திர் தருமூல நிவாசாபூதலமஜினம் வாசா ஸர்வபரிக்ரஹ போக த்யாக கஸ்ய சுகம் ந கரோதி விராக"

மோக்ஷமே என்னுடைய மூல இடமாகும். நான் இளைப்பாறுவதற்காக சில நாட்களுக்கே இங்கு வந்துள்ளேன். இது என் இடமல்ல."என்று கூறுகிறார். இது என்னுடைய இடம் அல்ல, சில காலத்திற்கே இங்கு வந்துள்ளேன்  என்கிற எண்ணமே உங்களுக்குள் ஒரு இடைவெளித் தொலைவை ஏற்படுத்துகிறது.

இந்த உலகம் ஒரு மாற்றுப்பயணியர் ஓய்வறையாகும்.இரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் ஓய்வறைகள் உள்ளன. அத்தகைய ஓய்வறைகளில் என்ன செய்கிறீர்கள்? உங்கள் பெட்டிகளை வைத்துவிட்டு உணவருந்துகிறீர்கள்; கழிப்பறையை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உங்கள் பெட்டிகளைத் திறந்து உங்கள் துணிமணிகளை அங்கு அடுக்குவதில்லை. அவைகள் உங்கள் பெட்டிகளிலேயே அடுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.

அது போல இந்த உலக வாழ்கை மாற்றுப்பயணியர் ஓய்வறையாகும். இது உங்கள் வீடு என்று தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள்.

கே: அஷ்ட லட்சுமிகளில் ஒன்று விஜயலட்சுமி. எந்த முயற்சியும் வெற்றி பெறத் தேவையான சக்தி அளிக்கும் விஜயலட்சுமி மிக அவசியம் என்று தாங்கள் கூறி உள்ளீர்கள். இதை மேலும் விவரித்துக் கூற முடியுமா?

குருதேவ்: எட்டு லக்ஷ்மிகளையும் பற்றி ஏற்கனவே பல தடவைகள் கூறியுள்ளேன். அறிவாளிகள் எந்த விஷயத்தையும் அதிகமாக விவரிக்காமல் சுருக்கமாக அதன் சாரம்சத்தை மட்டுமே எடுத்துக் கூறுவார்.

அல்பாக்ஷரம் அசந்டிக்ஹ்தம் சார -வத் விச்வதோ முகம் - அல்பாக்ஷரம் என்றால் சில வார்த்தைகள். சூத்திரங்கள் அவ்வாறே, சில வார்த்தைகளில் பல் வேறு கோணங்களிலிருந்தும் கருத்து சாராம்சத்தை எடுத்துக் கூறுபவை. அறிவாளிகள் சில வார்த்தைகளிலேயே தொடர்பு கொள்வர். அறிவு குறைந்தோரே தேவையில்லாமல் அதிகமாக விவரித்துப் பேசிக் கொண்டிருப்பர். சில புத்தகங்களில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கும். அதை ஒரே வரியில் தெரிவித்து விடலாம். அவ்வளவு தான்!

ஹேயம் துக்கம் அனாகதம் - அதுதான் ! ததா ட்ரஸ்துஹ் ஸ்வரூபே வச்தனம் ! முடிந்து விட்டது

கே: அன்பு மயமான நிலையில் இருப்பதென்பது ஞானம் அல்லது முக்தி அடைந்த நிலையை விட உயர்வானதா?

குருதேவ்: இந்நிலையடைவதற்கு வெகு முன்னமே மேலானது கீழானது என்பது போன்ற பாகுபாடுகள் எல்லாம் மறைந்துவிடும். மேலானது கீழானது என்று எதுவுமில்லை. ஏற்றத் தாழ்வைக் காட்டும் ஏணி மறைந்து விடும்.  நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் அகண்ட வெளியில் இருப்பதாக சற்றே கற்பனை செய்து கொள்ளுங்கள். மேலே கீழே என்பது எல்லாம் எங்கே? கிழக்கு மேற்கு என்பதெல்லாம் எங்கே? ஒன்றுமே இல்லை. மேலானது கீழானது என்று எதுவுமில்லை. 

கே: குருதேவ், உணர்ச்சிகள் எங்கிருந்து உருவாகின்றன? உடலிலிருந்தா அல்லது மனதிலிருந்தா?

குருதேவ்: உணர்ச்சிகள் மனதில் உண்டாகின்றன. ஆனால் அவற்றை ஒத்த சுரப்பிகள்  அல்லது உணர்வுகள் உடலிலும் உண்டாகின்றன. எனவே உடல் மனம் இரண்டும் சேர்ந்தே  உணர்ச்சிகள் எழுகின்றன.

உங்களுடைய அண்ணீரகச் சுரப்பி (adrenal gland) மிக வேகமாக வேலை செய்யத் துவங்கினால்  நீங்கள் பயம், நடுக்கம், படபடப்பு ஆகியவற்றை உணர்வீர்கள். அத்தகைய உணர்வுகள்  உங்களுக்கு உண்டாகும்.

வெவ்வேறு  சுரப்பிகளும் அவற்றில் சுரக்கும் திரவங்களும் வெவ்வேறு விதமான உணர்வுகளை உண்டாக்குகின்றன.  இது அது என்றில்லை.  எல்லாம் இணைந்தே உணர்ச்சிகளை உண்டாக்குகின்றன.

கே: என் மகன் ஐந்து ஆண்டுகளாக இரு மனக் குழப்பத்தினால் (bipolar) பாதிக்கப் பட்டிருக்கின்றான். அவன் எனக்கு ஒரே மகன். அவன் வலியினால் அவதிப்படும் ஒவ்வொரு  நொடியும் நானும் துன்பப்படுகின்றேன். இதற்கு முன் நான் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக இருந்தேன். ஆனால் இப்பொழுது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அதற்கென மருந்து  எடுத்துக் கொள்கின்றேன்.

குருஜி, தீவிரமான மன அழுத்தம் மற்றும் அது போன்ற தீர்க்க இயலாத வியாதிகள் இனி இருக்காது என்ற வாக்குறுதியை நீங்கள் அளிக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். 

குருதேவ்: உங்கள் வேதனை எனக்குப் புரிகின்றது. சில நேரங்களில் சிறிதளவு மன அழுத்தம்  ஏற்பட்டு அதற்கென மிக அதிக அளவினாலான மருந்துகள் அளிக்கப்பட்டு நிலைமை மிகவும் மோசமாகிவிடுகின்றது. அவ்வாறு நிகழ்வதை நான் பார்த்திருக்கின்றேன். 

சிறிய அளவு மன அழுத்தம் தீவிரமானதாக மாறி லிதியம் எடுக்கும் அளவிற்க்குச் சென்று விடுகின்றது. இந்த விஷயத்தில் மருத்துவத் துறையே மிகவும் குழப்பம் அடைந்துள்ளது.  எனவேதான் மன ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. 

இங்கே உள்ள நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகள் உங்கள் நண்பர்களது குழந்தைகள் என்று எல்லோரையும் வாழும் கலையின் Art Excel, YES,  YES +  போன்ற பயிற்சிகளில் சேருங்கள். எப்படியாவது அவர்களை மூச்சுப்பயிற்சியும் தியானமும் செய்ய வையுங்கள். 

முதலில் மனதில் சிறு அழுத்தம் இருக்கும். அது பிறகு மேலும் மேலும் வளர்ந்து நம் மூளையின் எல்லா இணைப்புகளையும் பாதிக்கும் அளவிற்கு மிகப் பெரியதாகி விடுகின்றது.  எனவே, ஆரம்ப நிலையிலேயே நாம் இதனை  கவனிக்க வேண்டும். குணப்படுத்துவதைவிட  வியாதி வராமல் தடுப்பதே சிறந்தது. மன அழுத்தம் வராமல் தடுப்பதற்கு உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம். அவர்களது  எதிர்மறை எண்ணங்கள் ,    தீய எண்ணங்களை எப்படி கையாளுவது என்பதை அவர்களுக்குக் கற்றுத் தருவது மிக முக்கியம்.

கே: குருதேவ், ஞானம் தேடுபவர்களுக்கு நல்ல நட்பு என்பதன் முக்கியத்துவம் என்ன?  அவ்வாறு நல்ல நட்பு கிடைக்காத போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? 

குருதேவ்: உங்களுடன் பழகுபவர்களிடம் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு நீங்கள் பலமானவர் என்று நீங்கள் நினைத்தால் அவர்களை உங்களைப்போல மாற்றுங்கள். நீங்கள் அத்தனை பலசாலி இல்லையென்றால் தீயவர்களிடமிருந்து தூர விலகிச் சென்று விடுங்கள்.  தீயவர்களை விட்டு விலகிச் செல்லும் உரிமையும் சுதந்திரமும் உங்களுக்கு இருக்கின்றது. 

கே:  குருதேவ், அரசமரம் வீட்டில் இருப்பது புனிதமானதா?

குருதேவ்:  ஆம். அது மிகவும் நல்லது. மிக புனிதமானது. வீட்டின் எதிரில் அரச மரம் இருப்பது என்பது இறைவனே அங்கே நின்று கொண்டிருப்பது போன்றது. 

பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்,"மரங்களில் நான் அஷ்வத்தா"(போதி மரம் அல்லது அரச மரம்) அரச மரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது ஏனென்றால் அது ஒரு நாளின் 24 மணி நேரமும் பிராணவாயுவை மட்டுமே வெளியிடுகின்றது. ஆகவே உங்கள் வீட்டின் எதிரில் அரச மரம் இருப்பது மிகவும் நல்லது.

வீட்டின் எதிரில் புளியமரம் இருப்பது அவ்வளவு நல்லதில்லை என்று சொல்பவர்கள் இருக்கின்றார்கள். அந்த மரத்தில் எந்த விதமான அதிர்வுகள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி உங்கள் வீட்டின் எதிரில் புளியமரம் இருந்தால் அதனை வெட்ட வேண்டாம். அதனைச் சுற்றி வேறு மரங்களை நட்டு வையுங்கள். 

கே: உங்களிடமிருந்து எவ்வளவோ ஞானம் பெற்றிருந்தாலும் என்னால் அவற்றை வாழ்க்கையில் கடைபிடிக்க முடியவில்லை.

குருதேவ்: அவற்றின்படி ஓரளவு வாழ முடிந்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே. அது போதும்.  நீங்கள் அங்குலம் அங்குலமாக மேலே சென்று விடுவீர்கள்.