எதிர்மறை எண்ணங்களை கையாளுதல்....

 28 – அக்டோபர் – 2012 – பெங்களுரு - இந்தியா



தெய்வீகத்தன்மையை  ஆழமான ஓய்வில் (தியானம்) தான்  உணர முடியும். ஆழ்ந்த ஓய்வுக்கு தடைகள் என்ன தெரியுமா? மனதில் உள்ள அதிக ஆசையும்  பொறாமையுமே. மனம் முழுவதும் அதீத  ஆசையும், பொறாமையும் இருந்தால், அமைதிக்கு சாத்தியமில்லை. அமைதி இல்லை என்றால், ஆன்மீக எல்லையை அடைய முடியாது. அதனால் தான் நாம்  மனதில் அதிக பற்றும், பொறாமையும் இல்லாமல் இருக்கவேண்டும். 

அதை எப்படி செய்வது? எனக்கு ஒருவரிடமிருந்தும் எதுவும் தேவையில்லை', இதைத்தான் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

நமக்கு மற்றவர்களிடம் இருந்து எந்த தேவையும் இல்லாத போது, நம் அதீத ஆசையும் இல்லாமல்  போய்விடும். ஆசை இல்லாத போது, வெறுப்பும் இருக்காது. ஒருவரையும்   கெட்டவர்கள் என  நினைக்க வேண்டாம். இவ்வுலகில் ஒருவரும்  கெட்டவர்கள்  அல்ல. தவறான செயல் செய்தால்  அது அவர்கள் அறியாமையால் அல்லது விழிப்புணர்வு இல்லாததாலோ அல்லது அவர்கள் மனம் புண்பட்டு இருப்பதால் தான்.  எனவே, ஒருவரைப் பற்றியும் தவறான எண்ணம்  கொள்ளவேண்டாம்.

கே: குருதேவ், நீங்கள் இப்போது ஒருவரைப் பற்றியும் தவறாக  எண்ணவேண்டாம் என்றீர்கள். ஆனால் மற்றவர்கள் நம்மை தவறாக நடத்தினால் எப்படி நடந்து கொள்வது?

குருதேவ்: மற்றவர்கள் உங்கள் மேல் தவறான கருத்து கொண்டால் அது அவர்கள்  பிரச்சனை,   உங்களுடையது அல்ல. நீங்கள் யாரையும் தவறாக எண்ண  வேண்டாம். இப்படி செய்வதால், உங்கள் மனம் தெளிவாக, அமைதியாக, புத்திகூர்மையோடு இருக்கும். இல்லையென்றால் நீங்கள் யாரை தவறாக  நினைக்கிறீர்களோ அவர்களின்  நினைவு உங்கள்  மனதில் ஒரு  பேய் போல் முற்றுகையிடத் தொடங்கும். அவ்வகை எண்ணங்கள் உங்கள் மனதில் வரும்போது  மனம்  படைப்பாற்றலை  இழந்துவிடும். 

கே: பிறர் நமக்கு உண்மையாகவே தவறு இழைத்தால் என்ன செய்வது?

குருதேவ்: யாரேனும் உங்களுக்கு  தவறு இழைத்தால், எதற்காக  உங்களுக்கு அதைச் செய்தார்கள் என்று  யோசியுங்கள். அவர்கள்  ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் ஒரு முட்டாளையோ அல்லது மனநலம் சரியில்லாத தவறாக நினைப்பீர்களா? இல்லை. மனநலம் சரியில்லாதவர் ஏதேனும் கூறினால், அவர்கள்  வார்த்தையை  ஒரு பொருட்டாக  எடுத்துக் கொள்வோமா? இல்லையே. அவர்கள் மனநலம் சரியில்லதவர்கள் என்று  நினைத்து விட்டு  விட்டு விடுவோம். யாரேனும் உங்களை தவறாக கூறினால் அதேபோல் நினைத்து விடுங்கள். மனம்  பதட்டமடைந்த ஒருவர்  தவறாக  ஏதேனும் கூறினால், நீங்கள்  ஏன்  பதட்டமடைய வேண்டும்? 

கே: நாம் அமைதியாக இருக்க பிறரிடம் இருந்து எதிர்பார்த்தலை தவிர்க்க வேண்டும். ஆனால் தினப்படி வாழ்வில் நம் வீடு அல்லது அலுவலகம்,பலவித மக்கள் பல வேலை செய்கிறார்கள். அவர்கள் அதை சரிவர செய்யவில்லை என்றால், பிரச்சனை  வருகிறது. எல்லோரும் அவர்கள் வேலையை  சரிவர  செய்யவேண்டும். இதற்கு  வழி காட்டுங்கள்?

குருதேவ்: ஒருவர் அவர் வேலையை சரியாக செய்யவில்லை  என்றால், நாம் அதை எடுத்துகூற  வேண்டும். நம் அதிகாரத்தை உபயோகிக்க வேண்டும். வேலை செய்யாமல்   சோம்பேறியாக  இருந்தால், நாம்  சும்மா இருக்க முடியாது. அவர்களின்  கடமையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் மீது நமக்கு வெறுப்போ அல்லது பொறாமையோ இருந்தால், அவர்களிடம் நாம்  விழிப்புணர்வை  கொண்டு வர இயலாது. அது நம்மை கோபமடைய செய்யும். 

கே:  காரணம், விளைவு என்பதன் அர்த்தம் என்ன?

குருதேவ்: காரணம்,விளைவு என்பது காரணம் மற்றும் காரியம்  என்பதாகும். பசு காரணம் என்றால், பால் அதன் காரியம்.பால் இருக்கிறது என்றால் அது  பசுவினால் தான். பசுவிற்கு காரணம் புல். புல்லிற்கு காரணம் பூமி. பூமிக்கு காரணம் சூரியன். இது போல் ஒவ்வொரு   நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு.  பரமகாரணம் அதாவது இந்த எல்லா  காரணத்திற்கும் காரணம் தெய்வீகம். அதனால் தான்  நாம், 'தஸ்மை  நமஹ - பரமகாரண  காரணா' என்கிறோம். எல்லா காரணத்திற்கும்  காரணம் சிவன்.  

கே: குருதேவ், 'ஆசமநீயம் சமர்பயாமி'. தண்ணீர் 'அப என்று  கூறப்படுகிறது, ஆனால் நாம்   அதை ஏன் 'ஆசமநீயம்' என்கிறோம்?. 

குருதேவ்: ஆம். தண்ணீர் 'ஆசமநீயம்' என்றும் கூறப்படும். இது பழங்காலமாக நடைமுறையில் உள்ள  பழக்கம். எதையும் தொடங்கும் சமயமும், முடியும் தருணமும் ஆசமநீயம்  வழங்கப் படுகிறது. இது நாம் செய்யும் அபிமந்தரா ஆகும்.

(மந்திரம் சொல்லி நீர்விடுதல். அதாவது நீங்கள் ஒரு சிறு பானையில் நீர்  எடுத்து அதன்  மேல் உங்கள் கையை வைத்த பிறகு மந்திரம் கூறுவது. இந்த மந்திரங்கள் நீரால்  ஈர்க்கப்பட்டு விடும்.) மந்திரம் சொல்லி பின் அதை அர்பணிக்கிறோம்.இது சாதாரண குடிநீர் அல்ல. நீர்,மந்திர அலைகளால் சக்தி வாய்ந்ததாகிறது. வீட்டிற்கு விருந்தினர்  வந்தால் அவர்களுக்கு கால்கள் சுத்தம் செய்ய நீர் கொடுப்பது, (பாத்யம்) பிறகு கைகள் சுத்தம் செய்ய  நீர் கொடுப்பது (அர்க்கியம்), பிறகு  அவர்கள் தாகத்தை தணிக்க நீர் கொடுப்பது (ஆசமநீயம்).இந்து மூன்று  முறைகளையும், பழங்காலத்திலிருந்து பின்பற்றுகிறோம். யாரேனும் நம் வீட்டிற்கு வந்தால், 'நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்' என்று கேட்போம் இல்லையா? கொஞ்சம் பழரசம், பால், தேநீர், காபி அல்லது குடிநீர்  என்று ஏதேனும் அருந்த தருவீர்கள் இல்லையா? அது போல் தான்  முன் காலத்தில்  பாத்யம்,  அர்க்ஹ்யம், ஆசமநீயம் என்பதும். பாத்யம் என்றால் வரும் விருந்தினரின் கால்களை  வாசலில் சுத்தம் செய்வது,  வெளியில் உள்ள தூசி வீட்டில் வராமல் இருக்கவும், அர்க்ஹ்யம் என்பது கைகளை சுத்தம் செய்வதும் ஆகும். ஆசமநீயம் என்பது குடிக்க நீர் கொடுப்பது, மேலும் பிற காரியங்கள் செய்யலாம் என்ற அறிகுறி. 

கே: 'பஞ்சாமிர்தம் அபிஷேகம்' (ஹிந்து வழிபாட்டில் ஐந்து உணவுப் பண்டங்களை கலந்து தருவது) என்பதன் முக்கியத்துவம்  என்ன? ஏன் இந்த பொருட்கள் மட்டும் சேர்க்கப்படுகின்றன?

குருதேவ்:  இந்த ஐந்தும் அமுதம் போன்றது: பால்,தயிர், தேன், வெல்லம் மற்றும் நெய். இப்போது வெல்லத்திற்கு பதில் சில சமயம் சர்க்கரை உபயோகிக்கிறார்கள். ஐந்து தேவதைகள் அதில் இருக்கிறார்கள். சாவித்திரி சக்கரையிலும் (வெல்லத்திலும்),விஷ்வேதேவா தேனிலும், சூரியன் நெய்யிலும்,வாயு தயிரிலும், சோமா பாலிலும் இருக்கிறார்கள். இவற்றை அபிஷேகமாக நாம் வழங்கும் போது, அதன் நோக்கம் இந்த தெய்வ குணங்கள் நம்மில் மலரட்டும் என்று தான்.   

நாம் அனைவர் மனதிலும் அமைதி நிலவட்டும். அனைவர் மனதிலும் மகிழ்ச்சி மலரட்டும். மக்கள் வாழ்வில் பலம், தைரியம் மற்றும் நீண்ட ஆயுளும் பெருகட்டும். மக்கள் வாழ்வில் திருப்தியும், சுபிக்ஷமும் இருக்கட்டும். வாழ்வில் ஒளி பெருகட்டும். காற்றும், ஆறுகளும் இனிமையாக  இருக்கட்டும்.இரவும் பகலும் இனிமையாக இருக்கவும். ஒவ்வொரு மண் துகள்களும் இனிமையாக இருக்கட்டும். ஆகாசம்,தேவதைகள் மற்றும் பித்ருகளிடம் இருந்துநாம் இனிமையான தன்மை பெறுவோம்.

நம் சொல்லும், எண்ணமும் இனிமையாக இருக்கட்டும். நம் சமூகம் நமக்கு  இனிமை தரட்டும்.
வனஸ்பதி(காடுகளின் தலைவன்) நமக்கு இனிமை தரட்டும். சூரியன் நம் வாழ்வில் ஒளி வீசட்டும். நம் வாழ்வு முழுவதும் பிறருக்கு இனிமை தரட்டும். கூட்டு  உணர்வுகளுக்கு  நாம் இனிமை தருவோம்.  

கே: முடிவற்ற, அசைக்க முடியாத பக்திக்கு எங்களை வழி காட்டுங்கள்?

குருதேவ்: உங்களிடம் அசைக்க முடியாத பக்தி இருப்பதாக நினையுங்கள். நாரத  முனி பக்தி சூத்திரத்தில்,'பக்தி என்பது அடைவதற்கான ஒரு பொருள் அல்ல, நம் சந்தேகங்களை விட்டு  விட்டாலே, பக்தி  இருப்பதை உணரலாம்' என்கிறார். 

கே: நாம் சட்டம் படித்தால் வழக்கறிர் ஆகவும், முயற்சியால் பொறியியல் படித்தால் பொறியாளர் ஆகவும் சாத்தியம் உள்ளது. ஆனால் நாம் சாதனா தினமும் செய்து, ஆன்மீக பாதையில் இருந்தாலும் நாம் மோக்ஷம் அடைவோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லையே? 

குருதேவ்: நிச்சயம் உத்தரவாதம் உண்டு. பகவத் கீதையில் அர்ஜுனன் இதே கேள்வியை கிருஷ்ண பகவானிடம் கேட்க அதற்கு அவர், நஹி கல்யாண-கிருத் கச்சித் துர்கதிம் தத கச்சதி' (அதிகாரம் 6.வரி 40) என்கிறார். ஆன்மீக பாதையில் நடப்பவர் என்றுமே முன்னேறி கொண்டே தான் இருப்பார்.

கே: பல ஞானிகள், அவர்கள் ஞானம் அடைந்தாலும், அவர்கள் நேரிடையாக யாருக்கும் அதை வழங்காமல் அதை அடையும் வழியை மட்டுமே பிறருக்கு உபதேசித்தார்கள். ஏன் கடவுள் நேரிடையாக அனைவருக்கும் ஞானம் வழங்குவது இல்லை? அதற்கு  சம்ஸ்காரம் (வாசனா) அவசியமாகிறதா?  

குருதேவ்: சம்ஸ்காரம் அவசியம் தான். நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்றால் எங்கோ என்றோ நீங்கள் இதில் ஈடுபாடு கொண்டு இருக்கிறீர்கள் என்று  அர்த்தம். அந்த ஆர்வம் இல்லாமல்,  இங்கு வந்திருக்க முடியாது இல்லையா? 

எனவே சம்ஸ்காரம் கொஞ்சம் தேவை தான். ஆனால் அது மட்டுமே போதுமானது அல்ல. வாழ்வில் சம்ஸ்காரம், கிருபை, வாய்ப்பு அனைத்தும் தேவை. அதோடு கூட சுயமுயற்சியும்  தேவை. நீங்கள் சத்சங்கம் வரவேண்டும் என்று எண்ணி உறங்கிக்கொண்டு இருந்தால், அது பலனளிக்குமா? எனவே சுயமுயற்சி, சம்ஸ்காரம், வாய்ப்பு மற்றும் கடவுள் அருள் இவை அனைத்தும் தேவை. 

கே: தொடர்ந்து யோகா,சாதனா செய்பவர்களுக்கும் வலிப்பு  நோயின்  தாக்கம் இருக்குமா?

குருதேவ்: அது அவர் நாள்தோறும்  என்ன உணவு உண்கிறார், அருந்துகிறார் என்பதையும் பொறுத்தது. உண்ணும் முறை,நீர் அருந்தும் முறை   மற்றும் பழக்க வழக்கங்கள்    முறையாக இல்லையென்றால்  வருவதற்கு  வாய்ப்பு  உள்ளது. நரம்பு மண்டலத்தில்  அதிகமான அழுத்தம்   இருந்தால்,அத்தகைய தாக்கல்கள் வர  வாய்ப்பு  உள்ளது. ஒருவர் ஆரோக்யமான வாழ்வு வாழ்ந்தால், அது தாக்காது.