வாழ்கையும், அதன்- சவால்களும்

7 - அக்டோபர் - 2012 - பெங்களுர் - இந்தியா





கே: நாம் எப்படி ஆன்மீக வாழ்வையும், பொருள் வாழ்வையும் சமன் செய்வது?

குருதேவ்: உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா? அதை எப்படி கீழே விழாமல் சமன் செய்து ஓட்டுகிறீர்கள்? அப்படியே உங்கள் வாழ்க்கையிலும் சமன் செய்யுங்கள். இரண்டையும் உங்கள் வாழ்வில் ஒன்றாகவே எடுத்துச் செல்லுங்கள்.

ஆன்மீகத்தில் நீங்கள் அதிக அளவு ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வீட்டுக் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றே நான் கூறுவேன். நீங்கள் பொருள் வாழ்வில் அதிகம் மூழ்கி உங்கள் ஆரோக்கியத்தை புறம் தள்ளினால், நீங்கள் அந்தச் சேற்றிலிருந்து விடுபட்டு ஆன்மீக பயிற்சிகள் ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் கூறுவேன்.

நீங்கள் தொலைக்காட்சி பார்க்கும்போது, ‘முதலில் பார்த்து விடுகிறேன் அப்புறம் கேட்க ஆரம்பிக்கிறேன்.’ என்று கூற முடியுமா? சிலர் கூறுகிறார்கள், ‘நான் முதலில் உலகாய செயல்களை முடித்துக் கொண்டு ஆன்மீகத்திற்கு வருகிறேன்’. நான் சொல்கிறேன், அப்படி நடப்பதே இல்லை. இரண்டும் ஒன்றாகவே நடக்க வேண்டும். வாழ்க்கைக்கு இரண்டுமே தேவை. மன அமைதி, அன்பு மற்றும் ஆனந்தம் ஆகியவை வாழ்க்கைக்கு தேவை, மேலும் நம் பொறுப்புகளையும் நிறைவேற்றி வர வேண்டும்.

கே: குருதேவ், சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் பற்றி சிறிது கூறுங்களேன்?

குருதேவ்: கடவுள் துகள் கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால், இந்த முழு பிரபஞ்சமும் ஒரே பொருளால் செய்யப்பட்டது, அந்த ஒரு பொருள் பல் வேறு வடிவங்களாய் ஆகிவிட்டது என்பதே.

வேதாந்தமும் அதையேதான் கூறுகிறது. அந்தக் காலத்தில், இந்த முழு பிரபஞ்சமும் ஒரே உணர்வால் செய்யப்பட்டது என்று கூறினார்கள். அந்த ஒரு உணர்வு பல்வேறு வடிவங்களாய் பரிணமிக்கிறது. கோதுமை என்ற ஒரு பொருளில் ரொட்டி, பிரட், சமோசா, ஹல்வா எல்லாம் செய்வது போலத்தான் இதுவும்.

இந்தப் பிரபஞ்சம் பலப்பல வேற்றுமைகளைக் கொண்டது, ஆனாலும், இது செய்யப்பட்டது ஒரே துடிப்பில், ஒரே உணர்வில், இதைதான் அவர்கள் கடவுள் துகள் என்கிறார்கள். இந்த ஒன்றிலிருந்து தான் படைப்பின் பல்வேறு வடிவங்கள் வந்தன.


கே: மனம் சந்தேகங்கள் நிறைந்து அல்லது தாழ்ச்சியாய் இருக்கும்போது, எதிர்வரும் பயங்கள் எல்லாம் உண்மை அல்ல என்று என்னை நானே ஒத்துக் கொள்ள வைப்பது எப்படி?


குருதேவ்: மனம் சந்தேகங்கள் நிறைந்து அல்லது தாழ்ச்சியாய் இருந்தால், பிராண சக்தியின் அளவு குறைந்துவிட்டது என்று பொருள். பிராணனின் அளவு குறையும் போது சந்தேகங்கள் எழுகின்றன, நாம் துயரம் கொள்கிறோம். எனவே, இதற்குத் தீர்வு பிராணனின் அளவை அதிகரிப்பதுதான். பிராணாயாமம், சரியான உணவு, உடற்பயிற்சி, பாடுதல் மற்றும் உண்ணா நோன்பு இவை மூலம் பிராணனின் அளவை அதிகரிக்கலாம்.

சில நாட்கள் பழங்கள் மட்டுமே உண்டு வரலாம். பசி இல்லையென்றாலும் உணவை நாம் உள்ளே தள்ளிக் கொண்டேயிருக்கிறோம்.


கே: விசாலாக்ஷி மண்டபம் மிக அழகாயிருக்கிறது. இதைப்பார்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது. இதைப்பற்றி இன்னும் சிறிது கூறமுடியுமா? இது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைக்கப் பட்டதா?


குருதேவ்: இது எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சிறு வரைவை காண்பித்தேன் அவ்வளவு தான். மற்றபடி இதில் கட்டிடக் கலை ஏதும் இல்லை. ஆம், இதை வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் பார்த்தபோது இது வாஸ்து முறைகளின் படி சரியாகவே இருக்கிறது என்று கூறினார்கள். 


கே: அந்தக் காலத்தில், முனிவர்கள் தியானம் செய்யும் போது விலங்குகளின் தோல் மீது அமர்ந்தார்கள். ஆனால், நாம் சுதர்ஷனக் க்ரியா செய்யும்போது தோல் பொருட்களை எடுத்துவிடும்படி கேட்டுக் கொள்கிறார்கள். இது ஏன்?

குருதேவ்: அந்தக் காலத்தில், மான் தோல் மட்டுமே உபயோகித்தார்கள். மேலும், இயற்கையாய் இறந்துபோன மானின் தோலை மட்டுமே எடுத்தார்கள். அப்போது நுரை மெத்தைகள் கிடையாது, எனவே மான் தோலை உபயோகித்தார்கள். இறந்துபோன தோலை உபயோகிக்காமல் இருப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது. நீங்கள் ஆசிரியர் பயிற்சியில் அவைகளை கற்றுக் கொள்ளலாம்.

கே: என்னுடைய இருபத்திநான்கு வயது மகன் மனத் தாழ்ச்சி கொண்டு சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டான். அவனை இன்னும் நன்றாக புரிந்துகொண்டு அவனை நான் காப்பாற்றவில்லையே என்ற எண்ணம் என்னை வாட்டுகிறது.

குருதேவ்: கர்நாடகாவிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவருடைய ஆயுள் அவ்வளவுதான். அதைப் பற்றி வருத்தப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

சங்கீதம் (கானம்), ஞானம் மற்றும் தியானம் இருக்கும் இந்தப் பாதைக்கு மற்ற இளைஞர்களை கொண்டுவந்து அவர்கள் வாழ்வில் புது ஒளி ஏற்றுங்கள்.


கே: என்னுடைய கணவரின் நுரையீரலில் கட்டி இருப்பதாகவும் அது புற்று நோயாய் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


குருதேவ்: அவரை பிராணாயாமம் செய்யச் சொல்லுங்கள். மேலும் அவர் சக்தி சொட்டு மருந்தை உபயோகிக்கட்டும். சக்தி சொட்டு மருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை தரும். சக்தி சொட்டு மருந்தை ஒரு மூன்று புற்று நோயாளிகளுக்குத் தந்ததில், 48  மணி நேரத்தில் புற்று நோய் செல்கள் 40 சதவீதம் குறைந்துவிட்டதாக ஒரு புற்று நோய் சிறப்பு மருத்துவர் ஒருவர் நேற்று கூறினார்.

இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்ய இருக்கிறார்கள். இதை உடனடியாக நாம் அறிவிக்க முடியாது. ஆனால் இதன் பயன் மிகுந்த ஊக்கமளிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
பலர் இதனால் பயனடைந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் இதை உபயோகிக்க வேண்டும்.


கே: குருதேவ், படிப்பைத்தாண்டி ஒரு மாணவனுக்கு என்னவெல்லாம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது?

குருதேவ்: அடிப்படை முக்கியத்துவம் கற்றுக்கொள்ளும் மனோ நிலையும் நன்றாகப் படிப்பதுமே. இரண்டாவதாக உங்களுக்கான ஒரு இலட்சியப் பார்வையும் நாட்டுக்காக ஒரு இலட்சியப் பார்வையும் இருக்க வேண்டும்.


கே: இவ்வுலகை விட்டு நீங்கிய ஆத்மாக்களிடம் பேச முடியுமா?


குருதேவ்: முதலில், உயிரோடு வாழ்பவர்களிடம் தொடர்பிலிருங்கள்! இதுவே மிக பெரிய வேலை! இந்தியாவில் பல மொழிகள் இருப்பதால் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதே கடினமாய் இருக்கிறது. ஆம், இறந்தவர்களின் ஆத்மாவோடு பேசுவதற்குச் சில வழிகள் இருக்கிறது. தியானம் செய்து வாருங்கள், அந்த வழியும் திறந்து கொள்ளும்.